இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் !
(கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (7) – தஞ்சை அதிராமப்பட்டினம்)
காடு, பட்டினம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரையோரம் அடுத்தடுத்து வரும் ஊர்களை எல்லாம் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் எனப் பட்டினங்களில் கஜாப் புயலின் வேகத்தால் கடல் ஏறி வந்துவிட்டது. கரையோரம் வாழ்ந்த வீடுகள் நாசமடைந்துவிட்டன. மீனவர்கள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ”ஒரு நாளைக்கு இரண்டு வேலை சோறு போடுறாங்க..” என்று ஒருவர் சொல்லி முடிக்கும் முன்பே கரையூர் தெருவைச் சேர்ந்த அந்த இளைஞன், ”எத்தனை நாளைக்குப் போடுவாங்க…வாழ்நாள் முழுக்கப் போடுவாங்களா..போட்டு, வலை எல்லாம் போச்சு..” என்று கோபத்துடன் கேட்கிறார். சமவெளிப் பகுதியில் இருப்போருக்கு கஜா புயல் வீசியது மட்டும் தான். கடற்கரையோரவாசிகளுக்கோ கஜாப் புயலின் போது கடல் ஏறி வந்ததால் ஏற்பட்ட இழப்புகள் குறிப்பானவை.
அதிராமப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கரையோர ஊராட்சிகளில் உள்ள மீனவக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி புரிந்து கொள்ள அதிராமப்பட்டினத்தின் கடற்கரையில் இருந்து….
”லேசா காற்று அடிச்சுட்டுப் போயிடுச்சு.புயலே இல்லைன்னு பேப்பர்ல் கொடுத்திருக்காங்க..அரசாங்கம் நாகப்பட்டினத்தில் நிக்கிது” என்பவரின் முதல் கவலையெல்லாம் தாங்கள் இழந்து நிற்கிறோம் என்பது கூட அங்கீகரிக்கப்பட வில்லை என்பதே.
’படகெல்லாம் பிரண்டு கிடக்குது..வலை சேதம் அடைஞ்சிருச்சு..இங்க வரைக்கும் கடல் தண்ணீர் ஏறி வந்துருச்சு’ என்று அதிராமப்பட்டினத்தின் ஏரிப்புறாக்கரையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் பேசினார். அவரை சந்தித்த இடம் ஒரு தென்னந்தோப்பு. விழுந்து கிடக்கும் மரங்களில் இருந்து இளநீரை எடுத்து சேகரித்துக் கொண்டிருந்தார். இன்னும் 2 மாதத்திற்கு கடலுக்குப் போக முடியாது. அதுவரை இது போல ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டியது தான் என்றார்.
ஏரிப்புறாக் கரையில் மட்டும் சுமார் 500 இல் இருந்து 600 பைபர் படகுகள் இருந்தன. சராசரியாக ஒரு படகு அல்லது இரண்டு படகு வைத்திருப்பவர்கள் தான் உண்டு. வாரத்திற்கு நான்கு நாட்கள் கடலுக்குப் போவதுண்டு. புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகிய காரணங்கள் பொருட்டு கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிப்பு வந்தால் கடலுக்கு செல்ல மாட்டார்கள். ஒரு படகில் அதன் உரிமையாளரோடு சேர்த்து ஐந்து, ஆறு பேர் கடலுக்கு செல்வர். கடலில் பிடித்த மீன்களின் மொத்தத்தில் டீசல், சாப்பாடு செலவு எல்லாம் கழித்துக் கொண்டு எஞ்சியிருப்பதை படகில் போனவர்கள் ஒவ்வொருக்கு ஒரு பங்கு, படகுக்கு ஒரு பங்கு, வலைக்கு ஒரு பங்கு என பிரித்துக் கொள்வர். ஒரு படகும் வலையும் சேதம் அடைந்தால் அதைக் கொண்டு கடலுக்குப் போகக் கூடிய அந்த 5,6 பேர் கையேந்த வேண்டியவர்கள் ஆகிவிடுகின்றனர்.
சுனாமிக்குப் பிறகு முழுக்க முழுக்க பைபர் படகுக்கு மாறிவிட்டிருந்தனர். ஆறு நாட்டிகல் வரை தான் கடலில் சென்று மீன்பிடிக்க முடியும். அதுதான் இந்தியாவின் கடல் எல்லையாம், அதற்குப் பிறகு இலங்கையின் கடற்பகுதியாம். எல்லை மீறினால் இலங்கை கடற்படையால் துப்பாக்கியால் சுடப்படுவது, அடித்து அவமானப்படுத்தப்படுவது, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது, வலைகள் சேதப்படுத்தப்படுவது என இவையெல்லாம் சமவெளிவாழ் தமிழர்களுக்கும் அரசுக்கும் பழகிப்போன பத்திரிக்கை செய்திகள் என்பதால் அவர்கள் ஆறு நாட்டிக்கல் மைலுக்குள் மீன்பிடிக்க முயல்கின்றனர்.
படகுகள் எப்படி சேதம் அடைந்தன? புயல் காற்று வீசிய போது கடல் ஏறி வந்தது. கடலில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் இரயில் பாதை ஒன்றிருக்கிறது. அந்த மேட்டுப்பகுதி மட்டுமில்லை என்றால் கடல் ஊருக்குள் புகுந்து அதிராமப்பட்டினத்தில் கடலோரத் தெருக்களை விழுங்கி இருக்கும். அந்த துயரம் நடக்கவில்லை என்பது ஆறுதலானது. ஆனால், ஏறி வந்த கடல் படகுகளை உடைத்து என்ஜின்களைச் சேதப்படுத்தி, படகுகளைப் புரட்டிப் போட்டுவிட்டது, வலைகளை உருட்டிக் கொண்டு போய் சேறு சகதியுமாக, சிக்கலாக்கி வீசி எறிந்துவிட்டது. எங்கே தனது படகு, எங்கே தனது வலை என்று தேடி கண்டுபிடித்தவர்கள் உண்டு, இன்னும் தங்கள் படகு கண்ணிலேயே படவில்லை என்று கலங்கி நிற்பவர்களும் உண்டு.
உப்பளங்களுக்காக உள்ள கால்வாய்க்குள் படகுகள் மூழ்கி கிடக்கின்றன. கால்வாயை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்; பின்னர் படகுகளை வெளியில் எடுக்க வேண்டும். ரயில் பாதையில் இருந்து கடற்கரை வரையுள்ள சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு 42 மின்கம்பங்கள் உள்ளன. மீனவர்களால் மட்டுமே இந்த கால்வாயை சுத்தம் செய்துவிட முடியாது. அரசின் உதவி வேண்டும் என்று எதிர்ப்பார்கின்றனர் கீழ்கரையூர் மீனவர்கள். அடித்துச் செல்லப்பட்டு கிடக்கும் வலை மூட்டையை எடுத்து அதைப் பயன்படுத்த முடியுமா? என்று பார்க்கவே அஞ்சின்றனர். ஏனெனில், ”அவை சேறும் சகதியுமாக உள்ளன, முள் ஏறிக்கிடக்கின்றன. வெறும் கருவா முள்ளாக இருந்தால் கூடப் பரவாயில்லை, நைஸ் முள், கையில் ஏறுவதே தெரியாது ”என்கிறார் காளிமுத்து. எனவே, இப்போது சேதமடைந்த படகு, இஞ்சின், வலை என்பதற்கெல்லாம் அரசு இழப்பீடு கொடுத்தால்தான் அடுத்தக் கட்டமாக நகர முடியும் என்பதே நிலை.
ஒரு பைபர் படகு, இஞ்சின், வலை என கடலுக்குப் போக தயாராக வேண்டுமானால் சுமார் 8 இலட்சம் வரை தேவைப்படுகிறது. படகு மட்டும் 2 இலட்சம் வரும், இஞ்சின், பலவா எல்லாம் சேர்த்து 2.75 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரும். மீன் வலைகளோ பலவகை. நரம்பு வலை, நண்டு வலை, வாவல் மீன் வலை, இரால் வலை, கொண்டு மீன் வலை எனப் பலவகை வலைகள் உண்டாம். வலைச் செலவே 4 இலட்சம் வரை ஆகக்கூடும். இவையே கடல் தொழிலில் இருப்பவர்கள் கடலுக்கு செல்வதற்கு செய்ய வேண்டிய முதலீடு.
கடல் ஏறி வந்ததையும் அது கரையில் இருந்த படகுகளையும், வலைகளையும் என்ன செய்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அங்கே சென்று ஒருமுறைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆனால், எடப்பாடி அரசோ மீனவர்களுக்கென்று ஓர் இழப்பீட்டுத் தொகையை அறிவித்திருக்கிறது. முழு சேதம் அடைந்த எப்.ஆர்.பி. படகு, வலைக்கு சேர்த்து 85000 ரூ, குறைந்த சேதத்திற்கு 30,000 ரூ ! முற்றும் முழுதாக சேதம் அடைந்து கடல் ஏறிக் கிடக்கும் நிலையில் கவலையே இன்றி இப்படி ஓர் அறிவிப்பு அரசிடம் இருந்து வருகிறது.
இதற்கு முன்பு படகு, இஞ்சின், வலை சேதம் அடையும் போது காப்பீட்டு தொகை எதுவும் பெற்றுள்ளனரா? என்பதற்கு எவரிடமும் தெளிவான பதில் இல்லை. படகு, வலை வாங்குவதன் பொருட்டு வங்கிக் கடன் ஏதேனும் அரசு வழங்கியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதே அவர்களின் பதில். அப்படி என்றால் என்ன செய்வீர்கள்? என்றால் ஏரிக்புறாக்கரையினர் சொல்லிய விவரங்கள் இன்னொரு சோகம். ”இங்கே பத்து ரூபாய் வட்டிக்கு கடன் தருவார்கள். அதை வாங்குவதற்கே அச்சமாய் இருக்கும். சிறிது தவணை தள்ளிப் போனாலும் வீட்டுக்கு வந்து வாய்க்கு வந்ததைப் பேசி அவமானப்படுத்திவிடுவார்கள்” என்றார் ஏரிபுறாகரையைச் சேர்ந்த உமர் ஹர்த்தா.
இங்கே 2500 கூப்பன் (ரேசன் கார்டு) இருக்கிறது. ஆனால், கடன் கொடுக்கும் அளவுக்கு யாரும் இல்லை. எனவே படகு வாங்குவதற்கு மல்லிப்பட்டினத்தில் கடன் வாங்குவோம். வலை வாங்குவதற்கு அதிராமப்படினத்தில் உள்ள முஸ்லிம் மால்களில் வாங்குவோம்” என்றார் கரையூர் தெரு காளிமுத்து. அரசின் மூலம் வங்கிக் கடன் பெற்றுள்ளதாக அவர்கள் எதுவும் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து மீட்கும் பொருட்டு 36 மாதங்கள் தவணையுடன் 3000 ரூ வட்டிக் கட்டும் வகையில் ஒன்றரை இலட்சம் ரூபாய் கடன் பெறும் திட்டம் ஒன்றை சொசைட்டி அறிமுகப்படுத்தியதாகவும் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் தீன்சா சொன்னார்.
”என்ன செய்யப் போகிறோம்? என்று தெரியவில்லை. அரசு அறிவித்திருக்கும் இழப்பீட்டு தொகையை வைத்து மீண்டும் நாங்கள் தொழில் தொடங்க முடியாது. எங்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அரசு அதிகாரியோ, அமைச்சர்களோ யாரும் வந்துகூட பார்க்கவில்லை. ஊரே பாதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு கடைசியில்தான் வருவார்கள். மீனவர்கள் என்றால் அலட்சியமாக நினைக்கிறார்களோ” என்றொருவர் வெள்ளந்தியாக கேட்டார்.
மீனவர்கள் என்றால் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் எவ்வளவு அலட்சியம் என்பது புதிய விசயமா என்ன? நடுக்கடலில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதும் இலங்கை சிறைசாலையில் நம் மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பதும் ஓக்கிப் புயலின் போது ஆட்சியாளர்கள் அணுகிய விதமும் எனப் அலட்சியத்தின் அடையாளங்களாக எத்தனை எத்தனை சான்று!
படகோட்டி, மீனவ நண்பன் எனத் திரைப்படங்களால் மீனவர்கள் இதயங் கவர்ந்த எம்.ஜி.ஆர்., அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதா, அவர் பெயரைச் சொல்லி எடப்பாடிப் பழனிச்சாமி என ஆட்சிகள் நடக்கும் நாட்டில் மீனவர்களின் நிலை இதுதான். பல்லாயிரம் கோடிகள் செலவில் கடற்படை கொண்ட இந்திய நாட்டில் கரையோரம் வாழும் மீனவர்கள் தங்களுடைய அரசு தங்களை அலட்சியப்படுத்துகிறதா? என்று கேட்பது எவ்வளவு கொடுமையானது.
சுனாமி ஏற்பட்டதால் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பட்டறிவின் அடையாளங்கள் எதுவும் இல்லை. கடற்கரையில் குடிசைகளில் வாழ்வோரை முகாம்களில் தங்க வைத்துவிட்டால் போதும் என்று கருதுகிறதா அரசு? தென்னை மரங்களையும் வயல்வெளிகளையும் புயலில் இருந்து பாதுகாக்க பெயர்த்தெடுக்க முடியாது. ஆனால், அசையும் பொருட்களான வலைகளையும் படகுகளையும் மதிப்புள்ள இஞ்சின்களையும் பாதுகாத்திருக்க முடியாதா? புயல், கடல் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து படகு, வலை, இஞ்சின்களைப் பாதுகாக்க கட்டமைப்பு வகைப்பட்ட ஏற்பாடுகளை அரசு செய்ய முடியாதா?
- இப்போதைய உடனடித் தேவை இழப்பீடு அறிவிப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பலதரப்பினரையும் அரசின் பிரதிநிதிகள் சந்தித்து முதலில் அவர்களுக்கு ஆறுதல் தரவேண்டும், நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
- ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் அளவிலான இழப்புக்கு ஏற்றாற் போல் படகு, இஞ்சின், வலை எனப் பிரித்து இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- இழப்பீட்டுக்கு அப்பால் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்பட வேண்டும்.
- குடிசை வீடுகளில் இருந்து வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.
- கடல் உள்ளே வந்ததால் கரையோரம் ஏற்பட்டிருக்கும் சேதங்களை குறிப்பாக வாய்க்காலைச் சரிசெய்து கடல்தொழிலை தொடங்க வழிசெய்வதற்கு மீன்வளத் துறை பொறுப்பேற்க வேண்டும்..
- சொந்தப் படகில்லாமல் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித் தொழிலில் இருப்போருக்கு இந்நிலைமை சீரடைந்து கஜாப் புயல் பாதித்த கரையோரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை மாதந்தோறும் ஓர் இழப்பீட்டு நீதி கொடுக்க வேண்டும்.
”மீனைக் கொடுக்காதே. மீன் பிடிக்க கற்றுக் கொடு” என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், மீனவர்களுக்கு யாரும் மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டியதில்லை. மீன் பிடிக்க தேவையான கருவிகளை தந்தாலே போதும். மக்களை இலவசங்களுக்கு அழையும் பிச்சைக்காரர்களாகவும் தங்களை எஜமானர்களாகவும் கருதுவதை நிறுத்திவிட்டு வாழ்வாதாரங்களுக்கு வழிசெய்ய வேண்டும் அரசு.
”அங்க முள்ளுப் பக்கத்தில இருக்கிற அந்த மூனு வலையையும் படம்புடிங்க..அப்பதான் தெரியும் கடல் ஏறி வந்து என்ன செஞ்சுட்டுப் போயிருக்குன்னு..எங்க ஊரு பேர சரியாப் போடுங்க..” என்றார் காளிமுத்து. அதிராமப்பட்டினத்தில் உள்ள மீனவ கிராமங்களின் கவலையெல்லாம் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதும் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதும் வெளியில் தெரியவில்லை என்பதற்கு இந்த வார்த்தைகளே போதுமானது.
மக்கள் முன்னணி ஊடகத்திற்காக
செந்தில், 9941931499
குறிப்பு : (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைமையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ளபல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள்முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணிசெய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்டஇலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும்உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய்முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)