புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?
கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம்
(கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும் உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது கொத்தமங்கலம் ஊராட்சி. கஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு முழுதும் பலியான பகுதிகளில் ஒன்று. கூடவே வெடித்தெழுந்த போராட்டத்தினால் எடப்பாடியின் கைது வேட்டைக்கு ஆளான ஊராட்சி.
சுமார் 3500 குடும்பங்கள்; சராசரியாக 2 ஏக்கர் நிலம்கொண்ட சிறுகுறு விவசாயிகளைப் பெருமளவும், கூலித் தொழிலாளர்களையும், மிகச் சொற்பமான பெரிய விவசாயிகளையும்( 5 ஏக்கருக்கும் மேல்) கொண்ட ஊராட்சி. தென்னை, மா, பலா, தேக்கு, புளியமரம் ஆகிய பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. தீர்மானகரமானது தென்னைப் பொருளாதாரம் ஆகும்.
”ஏழை எளிய மக்கள் என்று பார்க்காமல் ஒரே ராமம் தாட்டிருச்சுய்யா இந்த புயல்” என்று புயல் கரையைக் கடந்த பின்னும் அதன் அழிவுகள் பற்றிய பேச்சுகள் அப்படியே தொடர்கின்றன. முறிந்த தென்னை ஒன்றுக்கு 1100 ரூ இழப்பீடு என்று எடப்பாடி அரசு அறிவித்திருக்க, தென்னை அவர்தம் வாழ்க்கையின் அச்சாணி என்பதை ஆயிரம் வகைகளில் அவர்களால் விளக்கிச் சொல்ல முடியும்.
தென்னை மரம் என்பது எங்களுக்கு ஒரு வங்கிப் போல. ஆண்டுக்கு குறைந்தது 6 முறை காய்ப் பறிப்பார்கள். அந்த அளவுக்குப் பலன் தருவதற்கு தென்னைக்கு வயது 10 ஆகியிருக்க வேண்டும். அதற்குப் பின் ஐம்பது ஆண்டுகள் காய்த்து குலுங்கி எங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தது தென்னை. 1 வெட்டுக்கு எத்தனை ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனக் கேட்டு அதைப் பொறுத்து பெண்ணை அவருக்கு கட்டிக் கொடுக்கலாமா? என்று முடிவு செய்வார்களாம். ஐ.டி. துறையில் இருப்போர் ஆண்டுக்கு எத்தனை சி.டி.சி(CTC). என்று பேசிக் கொள்வது போல. விவசாயி செத்து சுடுகாடு செல்லும் போது, அவன் பெற்றெடுத்த பிள்ளைக்கு அடுத்து, அவன் நட்ட தென்னம்பிள்ளையும் வரும் என்று சொல்கிறார்கள். பெற்றோர் கண் முன்னாள் பிள்ளைகள் செத்தால் எப்படியோ அப்படி பாதியில் முறிந்தும், கொண்டையில் முறிந்தும், வேரொடு சாய்ந்தும், கொண்டை திருகிவிடப்பட்டும் தோப்பெங்கும் தென்னைகளைக் கண்ட கணவர் ‘சடசடன்னு’ இருக்கென்று சொல்லும் போது பதறிப் போனதாக சொல்கிறார் ஒருவர். இந்த பலா மரங்கள் தங்கை திருமணத்திற்கு ஆகும், இந்த தேக்கு மரம் மகன் திருமணத்திற்கு ஆகும் என்று இன்றைக்கு விழுந்துக் கிடக்கும் ஒவ்வொரு மரங்களுக்குப் பின்னாலும் விவசாயி செய்து முடிக்க வேண்டிய கடமைகளும் காரியங்களும் உள்ளன. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மகனுக்கும் மகளுக்கும் கட்டணம் எப்படிக் கட்டப்போகிறேன் என்று சொல்லும் போதே கண்ணீர் சிந்தினார் ஒரு விவசாயி.
தென்னைப் பொருளாதாரம் என்றால் தென்னைப் பயிரிட்ட விவசாயி மட்டுமல்ல குப்பை வைப்பவர், மருந்து வைப்பவர், நீர்ப் பாய்ச்சுபவர், காய் பறிப்பவர் என விட்டுவிட்டு வரும் வேலைகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள், பறித்த காய்களை வாங்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்கும் வியாபாரிகள், தென்னை மட்டைகளில் இருந்து கயிறு தயாரிப்போர், நாறு உரிப்போர் என சங்கிலித் தொடர்போல் தென்னை வாழ்வளிக்கும் சமூகப் பிரிவுகள் பற்பலவாகும்.
”ஒருநாளைக்கு எலுமிச்சைப் பறிச்சுட்டுப் போய் ஆலங்குடியில் வித்துட்டு வந்தா, அவர் வரும்போது 50 ரூ கொண்டு வருவார், இளநீர் கொண்டு போய் வித்துட்டு வந்தார் என்றால் நாலு காசு கொண்டு வருவார். இப்படி அன்றாடம் எங்களுக்கு வருமானம் தந்த மரமெல்லாம் ஒரு நாளில் ஒன்னுமில்லாம போச்சுய்யா” என்றார் ஒருவர்.
முற்றாக கொத்தமங்கலத்தின் விவசாயம் அழிந்து கிடக்கிறது. சரிந்து கிடக்கும் தென்னை மரங்களை, விவசாயியின் பார்வையில் பிணமாய் கிடக்கும் தென்னம் பிள்ளைகளை எப்படி அடக்கம் செய்து வயலை சுத்தம் செய்ய போகிறோமோ என்பது அவர்களது முதல் கவலை. பின்னரவில் வந்த புயல் எதிர்காலத்தையே இருட்டாக்கி விட்டது என்று கலங்கி நிற்கின்றனர். இன்றைக்கு வரை அழிவுகள் பற்றிய அரசாங்க கணக்கெடுப்பு நடக்கவில்லை.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருநூறில் இருந்து முன்னூறு அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் இப்போது ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறு அடியில் தான் கிடைக்கிறது. அத்தனை அடி ஆழத்தில் ஓர் ஆழ்துளைக் கிணறு அமைக்க விவசாயிக்கு 18 இலட்சம் வரை செலவு பிடிக்கிறது. இவற்றுக்கெல்லாம் சேர்த்து விவசாயி வாங்கிய கடன் வேறு கண் முன்னால் வந்து நிழலாடிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் காபந்து பண்ணாதுன்னு தெரியும் ஆனால் இயற்கையும் காபந்து பண்னாம கைவிட்டிருச்சே” என்றார் ஒருவர்.
கொத்தமங்கலத்திற்குள் வருபவர்களை எரிக்கப்பட்ட அரசு வாகனங்கள் வரவேற்றுக் கொண்டிருக்கின்றன. அவை மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், ஆர்.டி.ஓ, பி.டி.ஓ., காவல் இணைக் கண்பாணிப்பாளர் ஆகியோரின் வாகனங்கள். இப்படி நடக்க யார் காரணம் என கொத்தமங்கலத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட கூட்டியக்க விவசாயிகள் சங்க அமைப்பாளர் திரு ந.துரைராஜ் எடுத்துரைத்தார்.
நவம்பர் 16 ஆம் நாள் அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரை கஜா புயல் பேயாட்டம் போட்டது. ஒன்பது மணி அளவில்தான் புயல் காற்று நின்று எல்லோரும் வெளியில் வந்திருக்கின்றனர். அதுவரை வீட்டுக்குள்ளே இருந்துள்ளனர். அழிவின் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். வீழ்ந்த மரங்கள், இடிந்த வீடுகள், சாய்ந்த மின்கம்பங்கள், சிதைந்த மின்மாற்றிகள் என எங்கெங்கு காணினும் அழிவு! அழிவு! அழிவு! வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். வெளிச்சம் இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை. பின்னர், ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு ஊருக்குள்ளும் ஊருக்கு வரும் வழிகளிலும் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுவது என முடிவு செய்துள்ளனர். அடுத்த நாள் நவம்பர் 17 சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கே அந்த வேலையைத் தொடங்கிவிட்டனர். மதியம் 3 மணி அளவில் ஊருக்கு வரும் பாதைகளில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. மாலை 4 மணியளவில் வாட்ஸ்-அப் பில் வருகிறது அந்த செய்தி. ”தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிப்பு அதிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய பாதிப்பு இல்லை” என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அளித்திருந்த பேட்டி அது! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மொத்தமாய் அழிந்து கிடக்கையில் பெரிய பாதிப்பில்லை என ஆட்சியர் சொன்னது மக்களைக் கொதிநிலைக்கு தள்ளியது. ஏற்கெனவே தண்ணீர், உணவு இல்லாமல் துயர்நீக்கப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் இருந்ததால் ஊர் மத்தியில் கூட்டம் திரண்டபடி இருந்த நேரம் அது. எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டாற் போல் அந்த வாட்ஸ்-அப் செய்தி வந்துவிட்டது. இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கரும் புதுக்கோட்டையில் சில மரங்கள் தான் சாய்ந்துள்ளன என்று சொல்லி இருந்த செய்தியும் வந்தது.
4 மணியளவில் வட்டாட்சியர் ஊருக்குள் நுழைகிறார். அவர் வாகனத்தை மக்கள் மறிக்கின்றனர். இத்தனை அழிவுகள் நடந்திருக்க மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டைக்கு பாதிப்புகள் குறைவென்று எப்படி சொல்வார்? எனக் கேள்வி எழுப்புகின்றனர். சிறிது நேரத்தில் காவல் இணைக் கண்காணிப்பாளர் ஐயனாரும் வந்துவிட்டார். இங்கே தான் தொடங்கியது சிக்கல்.
சாலை மறியலில் இருந்தவர்களை ஒளிப்படம்(வீடியோ) எடுக்கச் சொல்கிறார் காவல் இணைக்கண்காணிப்பாளர். இது மக்களை மேலும் கொதிப்படையச் செய்கிறது. போதாக்குறைக்கு, ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டது போல் இந்தப் பக்கம் பத்து பேர், அந்தப் பக்கம் பத்து பேர் என்று சுட்டால்தான் சரிபடும்” என்று காவல் இணைக் கண்காணிப்பாளர் சொல்கிறார். புயலில் பாதிக்கப்பட்டு இருப்பதால் போராடுபவர்களை ஒளிப்படம் எடுப்பதும், ’சுடுவேன்’ என்று சொல்வதும் கொத்தமங்கலத்தை சினத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. அதற்குப் பிறகுதான் அரசு வாகனங்கள் எரிப்பு, காவல் இணைக் கண்காணிப்பாளர், வட்டாச்சியர் மீது தாக்குதல் என அடுத்தடுத்த வன்முறைகள் தொடர்கின்றன.
நவம்பர் 16 இல் புயலுக்கு உள்ளாகி நவம்பர் 17 அன்று அரசால் கைவிடப்பட்டு நவம்பர் 18 இல் அடியெடுத்து வைத்தவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. காலை 11 மணி அளவில் ஊருக்கு வேட்டைநாய்கள் போல் வந்த காவல்துறையினர் கண்ணில் பட்டோரை எல்லாம் கைது செய்தனர். பாதிப்பைக் கண்டு ஆறுதல் சொல்ல வெளியூர்காரர்கள், முந்தைய நாள் நிகழ்ச்சி நடந்தபோது அந்த இடத்திலேயே இல்லாதவர்கள், பெண்கள், சிறுவர்கள் எனக் வகைதொகையின்றி கைது செய்தனர். 75 ஆண்கள், 20 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு காவல் நிலையத்தில் நடத்திய போராட்டத்தினால் பெண்களும் சிறுவர்களும் விடுவிக்கப்படுகின்றனர். மீதம் 62 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படுகிறது 62 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நீதிபதியின் ஆணையினால் பிணைக் கிடைத்து வெளியில் உள்ளனர்.
கண்ணில்பட்டோரை எல்லாம் கைது செய்வதன் மூலம் முந்தைய நாள் நடந்தப் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த கொத்தமங்கலத்து மக்களையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அவர்களை அச்சுறுத்தி சிதறடிப்பதே அரசின் நோக்கம்.
உரிய இழப்பீடு, வங்கிக் கடன் ரத்து போன்ற எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருக்கும் இவர்களுக்கு கூடுதலாக வழக்கு சுமையும் இப்போது சேர்ந்துள்ளது. ஆனால், இங்கே நடத்தியப் போராட்டம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றும் அன்றைக்கு நடந்த போராட்டத்தின் பலனிது என்றும் பேசுகின்றனர்.
எங்கெங்கோ இருந்து துயர்நீக்கப் பொருட்கள் வந்துகொண்டிருக்க மக்கள் வரிப்பணத்தில் வாழும் இந்த அரசாங்கம் ஒரு மெழுகுவர்த்தியை மூன்று ரூபாய் என நியாய விலைக் கடையில் வெட்கமின்றி விற்கிறது. அதை பணம் வாங்காமல் கொடுக்க மாட்டார்களா? எனக் கொந்தளிக்கின்றனர்.
கொதிப்புகள் குறையவில்லை, இழப்புகளோ மிக அதிகம், உரிய இழப்பீடுகளுக்காக கொத்தமங்கலம் இந்த அரசாங்கத்தை எதிர்பார்த்திருக்கிறது. எதிர்பார்புகள் பொய்யானால் எதிர்ப்புகள் மெய்யாகும்!
மக்கள் முன்னணி ஊடகத்திற்காக
செந்தில், 9941931499