கொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!

21 Nov 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை
20.11.2018
–—————————— ————–

தோழர்களே, ஊடக நண்பர்களே,

இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சிட்லிங் கிராமத்திலுள்ள சௌமியாவின் வீட்டில் நுழைந்து காவல் ஆய்வாளர் லட்சுமி சோதனை என்கிற பெயரில் அராஜகம் செய்துவருகிறார். எவ்வித அனுமதியும் இன்றி இரவு நேரத்தில் “எவ்வளவு பணம் உங்களுக்கு வந்தது?
யார் யார் பணம் கொடுத்தது, எங்கே பேங்க் புக்? பணம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?“ என கேள்வி மேல் கேள்வி கேட்டு பீரோவில் உள்ள துணிமணிகளை எல்லாம் கீழே தள்ளி ரவுடித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
“அம்மக்கள் எதுக்காக இப்போ சோதனை பண்றீங்க? யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது?“ எனக் கேட்ட சௌமியாவின் அம்மா, மாமாவை கீழே தள்ளியிருக்கிறார். அதனை போட்டோ எடுத்த இளைஞனிடம் இருந்து செல்போனை பறித்து தடயத்தை அழித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினை மேலும் மேலும் துன்புறுத்தும் காவல் அதிகாரி லட்சுமியை வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்த 6 நாட்களுக்கு முன்புகூட குடும்பத்தை விசாரிக்க அழைத்து வாக்குமூலத்தை பதிவுசெய்யும் போது, “காவல்துறை குறித்தும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் குறித்தும் எதுவும் சொல்லக்கூடாது“ என மிரட்டியிருக்கிறார். இன்றோ, வீடு புகுந்து விசாரணை என்கிற பெயரில் அத்துமீறியிருக்கிறார்.

 

சிட்லிங் கிராமத்தில் தலைவிரித்தாடும் காக்கிச்சட்டைகளின் அத்துமீறல், மக்கள் விரோத செயல், லஞ்ச லாவண்யம் கட்டப்பஞ்சாயத்து அனைத்தும் சௌமியாவின் கொலையில் அம்பலப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்று துணையாக நின்ற முத்துக்கிருஷ்ணன் மீது மக்கள் புகார் கொடுத்தத்தை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மாற்றாக, தற்போது பெண் காவல் ஆய்வாளர் லட்சுமி விசாரணைக்காக அமர்த்தப்பட்டுள்ளார். அக்குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து விசாரணை நடத்தி பெண்கள்மீது நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக நடப்பதற்கு மாறாக மக்கள் விரோத செயலில் ஈடுபடுவது என்பது காவல்துறையின் அட்டூழியத்தையே காட்டுகிறது.

தைரியத்துடன் உண்மையை வெளியில் சொல்லும் ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டுவதன் மூலம் தவறுக்கும் குற்றத்தை மூடி மறைக்கவுமே காவல்துறை முயற்சிக்கிறது. இச்செயல் அதிகார திமிர்தனத்தையே காட்டுகிறது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டும், பாதுகாப்பின்றியும் வாழ்ந்து வரும் அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு இச்செயல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சனநாயக சக்திகளே!
சமூக உணர்வாளர்களே!

சௌமியாவிற்கான நீதிக்கு துணை நிற்போம். அநீதியை முறியடிப்போம்!
தமிழக அரசே!

* பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை மறைக்க முயற்சிக்கும் காவல் ஆய்வாளர் லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பாலியல் கொலைக்குத் துணைபோன காவல் அதிகாரிகள், கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

* பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

 

ரமணி,
பொதுச்செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி
தமிழ்நாடு

9566087526

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW