நவம்பர் 7, 2012 மறக்கமுடியுமா?
தருமபுரியில் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் கிராமங்கள் சாதி ஆதிக்க கும்பலால் எரிக்கப்பட்ட நாளை மறக்க முடியுமா?
ரஷ்ய புரட்சிக்கான கொண்டாட்ட நாளை கருப்பு நாளாக மாற்றியதை மறக்க முடியுமா?
6 ஆண்டுகளாக இன்றைய நாளை சாதி ஆதிக்க எதிர்ப்பு நாளாக நத்தம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி நினைவுகூருகின்றனர்.
ஆண்டைகளுக்கு எதிராக அனைத்து சாதி மக்களும் ஆர்ப்பரித்து செங்கொடி பின் அணிதிரண்டு சுயமரியாதையோடு வாழ்ந்த தருமபுரி உழைப்பாளி மக்களிடையே சாதி வெறியூட்டி பாமகவின் அரசியல் ஆதாயத்திற்காக அனைத்து கட்சியிலும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளும் கூட்டாக இணைந்து தலித் கிராமங்களை சூறையாடிய இந்நாளை மறக்கமுடியுமா?
பெரும் சதிவலையில் நாம் சிக்கப்போகிறோம் என்பதை உணராமல் “நம்மை எதற்கு அடிக்கப்போகிறார்கள்?“ என எதார்த்தமாக, எச்சரிக்கையின்றி ஏமாளியாக இருந்த எமது மக்களின் மனநிலையை மறக்கமுடியுமா? வீடு, உடைமைகளை இழந்து அனாதையாக வீதியில் நின்ற எம்மக்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலித் கிராமங்களும், முற்போக்கு இயக்கங்களும் கட்சிகளும் ஆதரவுக் கரம் நீட்டி குரல் கொடுத்த அந்நாளை மறக்கமுடியுமா? அரசின் நிவாரணம் வந்து சேர்வதற்கு முன்பே, ஒவ்வொரு தலித் கிராமங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருள், துணி, அரிசி, உடைகள், நிதி என நிவாரணம் கொடுத்து மூன்று கிராம மக்களையும் அரவணைத்ததை மறக்கமுடியுமா?
ஆதரவுக் கரம் பெருகவே, “தலித்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது“ என நினைத்த காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உளவுத்துறையும் மீண்டும் மீண்டும் 144 தடை உத்தரவிட்டு தடுப்பரண்களை உருவாக்கியதை மறக்கமுடியுமா? ஒடுக்கப்பட்டவர்களின் வலிமையை முறியடிக்க, செய்த சதிகளை மறக்க முடியுமா?
மறக்கச்சொல்கிறது நிர்வாகம். “வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி அதையே நியாபகப்படுத்துறீங்க? மறந்துகடந்துசெல்லுங்கள்“ என்கிறது.
ஆனால், இன்றுவரை தொடர்கிறது பாமகவின் பிரச்சாரம் ‘வீடுகளை அவர்களே உடைத்து எரித்துக்கொண்டார்கள்‘ என்று.
அண்மையில் சதி செய்தவர்களின் வாயிலிருந்தே உண்மை வெளியே வந்துவிட்டது.
இன்னும் சில உண்மைகள் வெளியே வரும்.
v திவ்யாவின் அப்பாவைக் கொன்றவர்கள் யார்?
v இளவரசனைக் கொன்றவர்கள் யார்?
v இளவரசனைக் கொன்ற கூலிப்படைக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்?
v அரசியல் புள்ளிகள் யார்? இதற்கு துணைபோனவர்கள் யார்?
நீதிமன்றமும் நிர்வாகமும் அரசும் இதனை மூடிமறைத்தாலும் நீதிக்கான எமது போராட்டம் தொடரும். அடிமை சங்கிலியில் கட்டப்பட்ட எமது மக்களின் போராட்டம் என்பது, நாளை வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான போராட்டமாகவும் அமையும்.
ரமணி
பொதுச்செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி
8508726919