வட அமெரிக்காவின் தற்காப்புவாதம் – அருண் நெடுஞ்செழியன்

26 Aug 2018

(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)

தற்காப்புவாத கொள்கையானது, வர்த்தகப் போர் அல்லது நாணயப் போருக்கு இட்டுச் செல்லுமானால்; உலக வர்த்தகம் சரியும்,முதலீடுகள் வெளியேறும். இப்போக்கு வளர்ந்துவருகிற அனைத்து நாடுகளில் உறுதியற்ற சூழலை உருவாக்கும் என முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் அமெரிக்க அதிபரின் தற்காப்புவாதக் கொள்கையின் அரசியல் பொருளாதார விளைவுகள் குறித்து கவலை கொள்கிறார்1. ட்ரம்ப்பின் தற்காப்புவாதக் கொள்கை, அது உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவையும்,அதன் நேச அணி நாடுகளின், அயலுறவுக் கொள்கைகளையும் உறுதியற்ற ஊசலாட்டப் போக்கிற்குள் தள்ளிவிட்டுள்ளதை அரவிந்த் சுப்பிரமணியம் போன்ற உலகின் அனைத்து தாராளவாத பொருளாதாரவாதிகளும் கலவரத்துடன் உற்று நோக்கி வருகின்றனர். தற்போதைய நெருக்கடிகளுக்கு தற்காப்புவாதம் தீர்வல்ல, வெறியூட்டல் தேசியவாதம் தீர்வல்ல  என இவர்களால்  சொல்ல முடிகிறதே தவிர மாற்றை சொல்ல முடிவதில்லை.ஆதம் ஸ்மித், ரிகார்டோவின் வாரிசுகளுக்கு இது போதாத காலம்தான். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக வர்த்தகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலகட்டமானது, திட்டவட்டமான அரசியல் பொருளாதார  உறவை தலைகீழாக்குவதோடு, ஒரு முடிவை நோக்கி தள்ளுவதை ,இவர்கள் கையறுநிலையில் இருந்து வேடிக்கை பார்த்துவருகின்றனர்!

வட அமெரிக்க வர்த்த ஒப்பந்தத்தை உலக வரலாற்றின்  மிக மோசமான ஒப்பந்தம் என வர்ணித்தது, ட்ரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது, காலநிலை மாற்றம் ஒரு ஏமாற்றுவித்தை என கூறி ஐநாவின் காலநிலைமாற்றம் குறித்த முன்னெடுப்பில் இருந்து விலகியது, சீன இறக்குமதி சரக்குகளுக்கு அதிக வரி விதிப்பு, வர்த்தகக் கட்டுப்பாடுகள்,வடகொரியாவுடன் வாய்ச்சண்டை வீராவேசம் பின்பு சமாதனம் மீண்டும் வாய்வீச்சு, தற்போது நேட்டோ நாடுகளில் இராணுவ ஒதுக்கீட்டை இருமடங்காக ஆக்க வேண்டும் என வற்புறுத்தி வருவது, குறிப்பாக ஜெர்மனிக்கு நெருக்கடி என பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய பழம் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுக்கும், சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற வளர்ந்து வருகிற நாடுகளுக்கும்  எதிராக அறிவிக்கப்படாத வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார். இந்தப் போரில் எந்தப் பக்கம் நிலை எடுப்பது என இந்திய ஆளும்வர்க்கம் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே,அதன் தலையில் இடியை இறக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

1

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஈரானுடன் (பிரான்சு,இங்கிலாந்து,ஜெர்மனி,சீனா,ரஷ்யா  உள்ளிட்ட ஆறு நாடுகளுடன் இணைந்து) அணு சக்தி உடன்படிக்கை மேற்கொண்டிருந்த அமெரிக்கா, அண்மையில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது. அதைத்தொடர்ந்து அந்நாடு  மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. மேலும், ஈரானின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெயைப்  பிற நாடுகள் வாங்கக் கூடாது எனவும் அழுத்தம் கொடுத்து வருகிறது.இதுவரை இந்த வர்த்தகப் போரில் பார்வையாளராக இருந்த  இந்தியாவை, ஈரான் விவகாரத்தில் நிலைப்பாடு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குள் அமெரிக்கா தள்ளியது.

இந்தியாவைப் பொறுத்தவரை உலக வர்த்தகத்தில் பெரும் பங்களிப்பு ஏதும் செய்யவில்லை; போலவே ஈரானின் பெரிய வர்த்தக பங்காளியுமாகவும் இல்லை. மேலும், ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்றால் சவுதி அரேபியாவில்  இருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ  இறக்குமதி செய்து கொள்ளலாம்.அதேநேரம் உலக வர்த்தகம் முழுவதும் அமெரிக்க டாலரில் நடைபெற்றுவரும்போது, அமெரிக்க எதிர்ப்பு முகாமான சீனாவுடன் வரலாற்று முரண் நிலவி வருகிற சூழலில், அமெரிக்காவின் கட்டளைக்கு பணிந்துவிடும் என்பதை எளிதாக  முன் அனுமானிக்கலாம்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரானிடம் இருந்து முற்றாக எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது என்ற முடிவுக்கு தயாராகுமாறும் மாற்று ஏற்பாட்டை செய்யுமாறும் இந்திய எண்ணெய் வளத்துறைக்கு கடிதம் சென்றுள்ளது. நயரா எனெர்ஜி, ரிலையன்ஸ் எனெர்ஜி, மிட்டல் எனெர்ஜி போன்ற தனியார் நிறுவனங்கள் ஈரானில் இருந்து மேற்கொண்டு வருகிற கச்சா எண்ணெய் இறக்குமதியை வேகமாக குறைத்து வருகின்றன2.. இந்நடவடிக்கைகளின் ஊடாக  அமெரிக்க விசுவாசத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ஆளும் வர்க்கமானது,அடுத்தாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருதினராக ட்ரம்ப் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளது. அமெரிக்காவின் கட்டளைக்கு 56 இன்ச் மார்புடைய மோடி அரசு பணிந்துவிட்டதால், ஈரானில் இந்தியாவில் மேற்கொண்டுவருகிற சப்பர் துறைமுக கட்டுமானப் பணி கேள்விக்குறியாகியுள்ளது. துறைமுகப் பணிக்கு இதுவரை செலவிடப்பட்டுள்ள  சுமார் அரை பில்லியன் டாலர்  முதலீட்டைக் கொடுங்கனவாக மறந்துவிடுவதைத் தவிர இந்திய அரசிற்கு வேறு போக்கிடமில்லை!

2

ஒருபுறத்தில் அமெரிக்க கட்டளைக்கு அடி பணிந்து நடந்தாலும், ரஷ்யாவுடனான ராணுவ உபகரண கொள்முதல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இதுவரை உறுதியான முடிவெடுக்க இயலாமல் ஊசலாட்டத்தோடு இந்திய அரசு தள்ளாடி வருகிறது. ஏனெனில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரானுக்கு எதிராக காட்சா(CAATSA) என்ற பெயரில் வர்த்தகத் தடையை சட்டப்பூர்வமான வகையில் டிரம்ப் கொண்டுவந்தார். இந்த சட்டத்தின் 231 ஆம் சரத்தின்படி, தடை விதிக்கப்பட்ட நாடுகளுடன் வர்த்தக உறவு மேற்கொண்டு வருகிற, குறிப்பாக ராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்கிற நாடுகளுக்கும் இத்தடையை நீட்டிக்க முடியும். இந்நிலையில் ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள  சுமார் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் உறுதியற்றதாகிவிட்டது3.

கடந்த ஜனவரி மாதத்தில் டாவோசில் நடந்த மாநட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி தற்காப்புவாத கொள்கை கவலையளிப்பதாக ட்ரம்ப் அரசின் மீதான தனது உச்சபட்ச எதிர்வினையைப்  பகிர்ந்துகொண்டார்.அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே இரும்பு, ஸ்டீல் இறக்குமதிக்கு அதிக வரி விதித்து உத்தரவிடுகிறார் ட்ரம்ப். இதில் இந்தியாவிற்கும் மறைமுக பாதிப்புண்டு. அதுபோல ஏற்றுமதி வர்த்தகத்திற்காக சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து பன்னாட்டு வர்த்தக நிறுவனத்திடம்  ட்ரம்ப் அரசு முறையிட்டது. இதிலும் இந்தியாவிற்கு சிக்கல் உண்டு. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிற ஹார்ட்லி டேவிட்சன் வண்டிக்கான இறக்குமதி வரியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா உதவவில்லை என ட்ரம்ப் அரசு அதிருப்தி தெரிவித்தது நினைவிருக்கலாம். இதுவரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக ட்ரம்ப்பின் கொள்கையால் மறைமுகமாகவோ அல்லது சொற்பமான பாதிப்பை எதிர்கொண்டு வந்த இந்தியா, தற்போது “அமெரிக்காவே முதன்மை” என்ற கொள்கை  நலனுக்கு உடன்படக் கோருகிற டிரம்ப்பின் கட்டளைக்கு  தனது அயலுறவு வர்த்தக் கொள்கையைப் பலிகொடுத்து பணிந்து நிற்பது  அம்பலமாகியுள்ளது.

3

இங்கிலாந்து முதலாளித்துவ சக்திகளின் குறிப்பிட்ட வளர்ச்சிப்போக்கில் தற்காப்புவதாக கொள்கையானது 19 ஆம்நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், முக்கிய விவாதப் பொருளாகியது..சரக்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையிலான இங்கிலாந்து தொழில் வளர்ச்சிக் கொள்கைக்கு, தற்காப்புவாத கொள்கையை முட்டுக்கட்டையாக அந்நாட்டு முதலாளித்துவ சக்திகள் கருதினார்கள். இந்தக் கருத்தின் அடிப்படையிலான அவர்களது இடையறாத போராட்டத்தால், தானியங்கள்  மற்றும் கச்சா பொருட்கள் இறக்குமதி வரி விதிப்பை இங்கிலாந்து அரசு குறைத்து, தற்காப்புவாதக் கொள்கையை  விலக்கியது.

முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப்போக்கில் சுதந்திர வர்த்தகம் தவிர்க்கமுடியாத வரலாற்று நிலைமையாக  மார்க்சம் எங்கெல்சும் கருதினார்கள். சுதந்திர வர்த்தகக் கொள்கையானது, முதலாளித்துவ சக்திகளின் வளார்ச்சிப் போக்கை துரிதப்படுத்துவதோடு, வர்க்க முரண்பாடுகளைக் கூர்மையாக்குவதையும் முன் உணர்ந்தனர். சுதந்திர வர்த்தக் கொள்கையானது, முதலாளியை உற்பத்தி பெருக்கத்திற்கும் தொழிலாளியை அதீத சுரண்டலுக்கும் உள்ளாக்குவதை உணர்ந்தவர்கள், பாட்டாளி வர்க்கப் புரட்சியை சுதந்திர வர்த்தகம் விரைவுபடுத்துவதன் அடிப்படையில், வர்த்தக சுதந்திரத்திற்கு ஆதரவாக இருந்தனர். இளம் முதலாளித்துவ நாடாக,கருவில் ஏகாதிபத்திய நாடாக உலக அரங்கிற்கு வந்திருந்த அமெரிக்க குடியரசானது, ஆரம்பத்தில் வர்த்தக தற்காப்புவாதக் கொள்கையில் நாட்டம் கொண்டிருக்க, இங்கிலாந்து உதாரணத்தை முன்வைத்து சுதந்திர வர்த்தகக் கொள்கைக்கு அமெரிக்கா மாறிச் செல்ல வேண்டும் என எங்கெல்ஸ் வாதிடுகிறார்4.

1847 ஆம் ஆன்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற, உலக சுதந்திர வர்த்தக மாநாட்டில் பங்கேற்று சுதந்திர வர்த்தகக் கேள்வி குறித்து மார்க்ஸ் ஆற்றிய உரையை, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்ட பிரசுரத்திற்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில்( 1888 ஆம் ஆண்டில் எழுதியது) தற்காப்புவாதத்திற்கும் சுதந்திர வர்த்தகத்திற்கும் இடையே அக்காலகட்டத்தில் நிகழ்ந்த போராட்டங்களை எங்கெல்ஸ் துல்லியப்படுத்தியிருப்பார். அமெரிக்க சிவில் யுத்தக் காலகட்டத்தில் தற்காப்புவாதக் கொள்கைப் போக்கை அமல் படுத்திவந்த அமெரிக்காவின் நிலைபாட்டை விமர்சித்திருப்பார். அமெரிக்க உள்நாட்டு சிவில் யுத்த காலகட்டத்தில், கப்பல் கட்டுமானத் துறையில் தற்காப்புவாதக் கொள்கையை அமலாக்கிய அமெரிக்காவின் முடிவால், அந்நாடு  சந்தித்த இழப்பை எங்கெல்ஸ் குறிப்பிட்டு காட்டுகிறார். மீண்டும் அதே தவறை அமெரிக்கா செய்ய வேண்டாம் என எழுதுகிறார். தற்காப்புவாத அமெரிக்கர் ஒருவரிடம் அவர் கூறிய மறுமொழியை மேற்கோள் காட்டுகிறார்.

“அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்திற்குள் நுழைந்துவிட்டால்,அடுத்த பத்தாண்டுகளில் இங்கிலாந்தை வீழ்த்தி விடும்” என்கிறார். (எங்கெல்சின் அனுமானம் பின்னர்  வரலாற்று உண்மையாகிவிட்டது)

மேலும் தற்காப்புவாதக் கொள்கை குறித்த மார்க்சின் கீழ்வரும்  கருத்தை முன்வைத்தே விமர்சனத்தை கட்டமைக்கிறார்.

“வர்த்தக தற்காப்புவாதமானது, செயற்கையான வகையில், உற்பத்தியாளர்களை உற்பத்தி செய்கிறது; சுதந்திர தொழிலாளியை சுரண்டுகிறது ;நாட்டின் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றிக் கொள்கிறது; இடைநிலையில் இருந்து நவீன உற்பத்தி வளர்ச்சிக்கு மாறிச் செல்கிற போக்கை பலவந்தமாக தடுக்கிறது” -மார்க்ஸ்

உலக வர்த்தகத்தில் பலவீனமாகிவருகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் வளர்ந்துவருகிற நாடுகளுக்கும் இடையிலான மூலதன முதலீடு, சந்தை போட்டிகள் அரசியல் போட்டியாக இன்று மாறியுள்ள சூழலில், சரக்கு ஏற்றுமதியால் சுமார் அரைநூற்றாண்டு காலத்திற்கு உலகின் பேட்டை ரவுடியாக கொடிகட்டி பரந்த அமெரிக்கா, சுதந்திர வர்த்தக பொருளாதாரத்தின் மைய நாடாக, உலக வர்த்தகத்தை தீர்மானித்த அமெரிக்கா, சுதந்திர வர்த்தகத்தால் உற்பத்தி பெருக்கம்,உபரி மதிப்பைப் பெருக்கிய அமெரிக்கா இன்று மீண்டும் சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு பிறகு  அதன் இரண்டாம் பதிப்பைத் தற்போது அரங்கேற்றுகிறது. முன்பு இளம் முதலாளித்துவ நாடாக உலக அரங்கிற்குள் வரும்போது, தற்காப்புவாத கொள்கைக்குள் சென்றது. இன்று சுதந்திர வர்த்தகத்தால் பலன்பெற்று ஊதிப் பெருகி, அதன் சொந்த நெருக்கடி சுழலில் சிக்கி மீண்டும் தற்காப்புவாதத்திற்குள் செல்கிறது.

எங்கெல்ஸ் குறிப்பிடுவதுபோல தற்காப்புவாதத்தை  அறிமுகப்படுத்துவது  எளிது. அதேநேரத்தில் அதை கட்டுப்படுத்தி சவாரி செய்வது எளிதானதல்ல.

https://www.thehindu.com/opinion/interview/the-costs-of-not-adhering-to-the-us-are-quite-stiff-arvind-subramanian/article24400734.ece

https://www.haaretz.com/middle-east-news/iran/india-cuts-iranian-oil-imports-in-june-ahead-of-u-s-sanctions-1.6266663

https://timesofindia.indiatimes.com/india/from-russia-to-iran-india-caught-in-crossfire-of-us-sanctions/articleshow/64256413.cms

https://www.marxists.org/archive/marx/works/1888/free-trade/index.htm

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW