எழுவரையும் விடுதலை செய் – அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
(மக்கள் முன்னணி இதழ் கட்டுரை)
18.02.2014 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கொலைத் தண்டனையை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக அமைச்சரவைக் கூடி விவாதித்து எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது.
19.02.2014 அன்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவு. அதில் மூன்று நாட்களில் எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான தகவலை மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார். எழுவரும் 24 நீண்ட ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில் விடுதலைக்கான முடிவை தமிழக அரசு எடுத்தது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் விடுதலை செய்வதற்கு முடிவெடுக்கப்படும் வழக்கை மத்தியப் புலனாய்வு துறை விசாரித்திருந்தால், மத்திய அரசிடம் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்று அச்சட்டம் கூறுவதை ஒட்டி, மத்திய அரசிற்கு தகவல் அளிப்பதாக அதில் கூறப்பட்டது.
ஜெயலலிதா அவர்கள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டதற்கு பதிலாக, அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டு இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. எழுவரும் உடனே விடுதலை அடைந்து இருப்பர். சொத்து குவிப்பு வழக்கை திறமையான வழக்குரைஞர்கள் மூலம் எதிர்கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் இறையாண்மை அதிகாரம் பற்றி தெரியாது என்று கொள்ளமுடியாது. எழுவரின் விடுதலையில் உண்மையான அக்கறையின்மையையே இது காட்டுகிறது.
உடனே காங்கிரசின் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, அந்த மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்வதற்கு தடை பெற்றுவிட்டது. மத்தியஅரசின் ஒப்புதல் (concurrence) இல்லாமல் மாநில அரசு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மத்தியப் புலனாய்வு துறை புலனாய்வு செய்த வழக்குகளில், குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலை செய்யமுடியாது என்ற வாதத்தை முன்வைத்தே தடைபெற்றது. அதாவது குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ள ஆலோசனை (consultation) என்பது ஒப்புதல் (concurrence) என்று வாதிட்டது மத்திய அரசு.
தடை கொடுத்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கில் முக்கியமான சட்டப் பிரச்னைகள் – அதிலும் குறிப்பாக மாநில அரசின் மத்திய அரசின் அதிகாரம் பற்றிய பிரச்னைகள் – எழுப்படுவதால், அந்த சட்ட பிரச்சனையை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து 25.04.2014 -ல் உத்தரவு போட்டது.
மேற்சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின்முன், தமிழக அரசின் சார்பில் வாதாடிய திரு. திவேதி அவர்கள், எழுவரும் 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று எடுத்த முடிவை மத்திய அரசு ஆட்சேபிக்க முடியாது என்றார். குறிப்பாக காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி கொலை வழக்கில் சதி செயலுக்காக ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், விடுதலை அளித்தது என்பதை சுட்டிக் காட்டினார். இருப்பினும் காங்கிரஸ் மத்திய அரசு எடுத்த கடும் நிலைப்பாட்டால் வழக்கு 5 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மேற்கூறியவாறு சென்றது.
இந்நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீண்ட விவாதங்களுக்குப் பின் 02.12.2015 அன்று சட்டப் பிரச்சனை சம்மந்தமாக தேதியிட்ட தீர்ப்பளித்தது. அதில் மாநில அரசு மத்திய அரசு புலனாய்வு செய்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மத்திய அரசின் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்பதை, மத்திய அரசின் ஒப்புதல் (Concurrence ) பெற வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை வியாக்யானம் செய்தது. இத்தீர்ப்பை வழங்கியது நீதிபதி திரு. இப்ராகிம் கலிபுல்லா அவர்கள்.
இருப்பினும் அத்தீர்ப்பில், மாநில அரசு அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று தெளிவாக கூறியிருந்தது.
மேற்சொன்ன சட்டப் பிரச்சனை சம்மந்தமான தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்க வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2014 ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பா.ஜ.க அரசுதான் அதற்கு பின்னர் மேற் சொன்ன வழக்கை நடத்தியது. அவர்களும் காங்கிரசின் வழியிலேயே சென்று , எழுவரின் விடுதலையை கடுமையாக எதிர்த்து வாதாடினர். மாநில அரசின் விடுதலை செய்வது என்ற முடிவிற்கு பா.ஜ.க. ஒப்புதல் அளித்திருந்தால், எழுவரும் விடுதலையாகி இருப்பர். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக வாதாடியும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூன்று பேர்கள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர் என்று கூறியும் பயனில்லை.
எனவே இன்று எழுவர் விடுதலை ஆகாமல் சிறையில் இருப்பதற்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசும், இப்போது ஆளும் பா.ஜ.க அரசும் காரணம். 1996-2001 மற்றும் 2006-2011 வரை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசும் எழுவர் விடுதலையில் ஒன்றும் செய்யவில்லை என்பது வரலாறு.
02.12.2015 தீர்ப்பிற்குப்பின், அத்தீர்ப்பு கூறியபடி ஜெயலலிதா அவர்கள் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரை விடுதலை செய்திருக்கலாம். 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதுகூட அவர் செய்யவில்லை. 02.12.2015 தீர்ப்பிற்குப்பின் 02.03.2016-ல் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மத்தியஅரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பிவிட்டு வாளாவிருந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வழக்கு விசாரணை தடா சட்டத்தின் கீழ் நடந்தது. தடா சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில், காவல் துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கப்படும். மற்ற குற்ற வழக்குகளில் இது சாட்சியமாகாது.
உச்ச நீதிமதின்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று 11.05.1999 தேதிய தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருந்தது. ஆனால் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம் மட்டுமே சாட்சியமாக இருந்த நிலையில் தண்டனையை ஏழு பேருக்கு அளித்தது. தடா சட்டம் பொருந்தாது என்று முடிவெடுத்ததால் மீண்டும் வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். இதுவும் குறைந்தபட்சம் எழுவரின் விடுதலைக்கு ஒரு காரணமாக கொள்ளலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய அமர்வுக்கு தலைமை ஏற்ற நீதிபதி திரு. கே.டி. தாமஸ் அவர்கள் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை இப்போது சுட்டிக் காண்பித்து எழுவரின் விடுதலையைக் கோரியுள்ளார். அவர், சோனியா காந்திக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், புலனாய்வில் பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காண்பித்து, சோனியா காந்தி அவர்களும், அவரது மகனும் மகளும் அரசுக்கு கடிதம் எழுதி எழுவரை விடுதலை செய்யுமாறு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கில், தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட திரு. ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் புலனாய்வு குறைபாடுகளுடன் கூடியது என்று மிக விரிவாக எழுதியுள்ளார். அரசியல் கட்சியின் பிரபலங்கள் புலனாய்வில் தவிர்க்கப்பட்டார்கள் என்றார். என்னுடன் கலந்துகொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்று கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்தவரும் வாக்குமூலங்களை குற்றவாளிகளிடம் இருந்து பெற்றவருமான திரு. தியாகராசன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து வாக்குமூலங்கள் சரியானபடி பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூன்று பேரை 16 ஆண்டுகளில் விடுதலை செய்தபோது மேற்சொன்ன மாதிரியான காரணிகள் ஏதும் இல்லை. ஆனால் மேற்சொன்ன பல காரணிகள் இருந்தும் எழுவரும் சிறையில் 27 ஆண்டுகளாக வாடுகின்றனர்.
02.12.2015 க்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்து மூன்று நீதிபதிகள் அமர்வு உடனே விசாரிக்க வேண்டும் என்று கூட தமிழக அரசு முயற்சி ஏதும் செய்யவில்லை. நீதிமன்றம் என்றாலே தாமதமான நீதிதான் என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது.
2 ஆண்டுகளுக்குப் பின்னர் 23.01.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. 19.02.2014 அன்று தமிழக அரசு மூன்று நாட்களில் எழுவரின் விடுதலை சம்மந்தமாக மத்திய அரசு அதன் கருத்தை தெரிவிக்கக் கோரி இருந்தது. 2018 இல் விசாரணைக்கு வந்த போதும் மத்திய அரசு அதன் கருத்தை தெரிவிக்கவில்லை. இப்போது சுமார் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எழுவரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தோடு மத்திய அரசின் கருத்து ஒத்துப்போகவில்லை எனக் கூறி ஜூன் 16 அன்று தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார். “முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தேசத்தில் நடைபெற்ற குற்றங்களுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு கொடூரமானது. எனவே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தொடர்புடைய 4 வெளிநாட்டு பிரஜைகளையும் மூன்று உள்நாட்டவரையும் விடுவிப்பது என்பது மிக மோசமன முன்னுதாரணமாவதோடு சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.” என்று கூறி இவர்களை விடுதலையை மறுப்பதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய செய்தி ஜுன் 20 அன்று நாளிதிழ்களில் வெளிவந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல் தமிழக அரசு அரசமைப்பு சட்டம் 161 இன் கீழ் உள்ள இறையாண்மை அதிகாரத்தின் படித்தான் விடுதலை செய்யவேண்டும். அதை இப்பொழுதே தமிழக அரசு செய்ய வேண்டும்.
(நியூஸ் 18 இணையதளத்தில் வந்த கட்டுரையின் சுருக்கம்
to put in a box :
எழுவரையும் விடுதலை செய்ய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161 ஐ பயன்படுத்த தடை ஏதும் உண்டா?
இல்லை. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் வரும் பிரிவுகளுக்கான தண்டனைகளை இவ்வெழுவரும் நிறைவேற்றிவிட்டனர். இப்போது எஞ்சியிருப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கீழ் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மட்டுமே. இது மாநில அரசின் அதிகார எல்லைக்குட்பட்டதே. மேலும், மரண தண்டனையைக் குறைக்கக் கோரும் சட்டப் பிரிவுகள் 161 மற்றும் 72 ஆகியவற்றின்கீழ் ஒரு முறைக்கு மேலும் கருணை மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு என்பதையும் மருராம், திரிவேணி பென், கிருஷ்டா கவுடா மற்றும் பூமைய்யா, கிருஷ்ணா வழக்குகள் எனப் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. எனவே, உறுப்பு 161 ஐ பயன்படுத்த தமிழக அரசுக்கு எந்த் தடையும் இல்லை.