வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்

25 Aug 2018

 

முப்பத்தி மூன்று சகாக்களைக் கொண்ட புலிகேசிகளின் அமைச்சரவை, எட்டப்பர்களின் ஆட்சி, மணலையும் மலையையும்  திருடும் கொள்ளையர்களுக்கு குற்றவேல் புரியும் கூட்டம், டெல்லி எசமானர்களின் வீட்டுக்காவலர்கள் விரட்டிய பின்பும் “எதையும் தாங்கும் இதயம்“ என வசனம் பேசும் நாயினும் கீழாய் நக்கிப் பிழைக்கும் வாழ்வு. இந்த ஆட்சியின் கீழ் தமிழர் வாழும் இழிநிலையைக் கண்டிருந்தால் பாரதியும், பாரதிதாசனும், ”ஏ! தாழ்ந்த தமிழகமே, தன்மானம் உனக்கில்லையா?” என வெந்து தணிந்திருப்பார்கள்.

காலமாற்றம்! மொழிக்காக மாண்ட இனம் பிழைப்பு மட்டுமே வாழ்வு என வாழ்க்கையை மாற்றிய அரசியல் கூட்டத்தால் கதியற்று கிடக்கிறது. மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து முகநூலில்கூட கருத்து சொல்லக்கூடாது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் அரங்கக்கூட்டம் என அனைத்திற்கும் தடை. முன்னணித் தலைவர்களும் ஊழியர்களும் கைது, சிறை, குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவல் என அரங்கேறும் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை என அனைத்தையும் ஒடுக்கும்  சட்டவிரோத நடவடிக்கைகளை சட்ட- சனநாயக வடிவங்களின் ஊடாக சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள். தஞ்சாவூர் தலையாட்டி  பொம்மைகளை வருமான வரித்துறை வழியாக கட்டுப்படுத்தியும் மத்திய உளவுத்துறையின் வழியாக வழிநடத்தியும் தமிழகத்தில் சட்ட வடிவிலான அரை அவசரகால ஆட்சியை வெளிப்படையாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.

ஆபாச ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். கிழம் வெட்கம் ஏதுமின்றி ஊரை வலம் வருகிறது. எதிர்த்தால் 7 ஆண்டுகள் சிறை என அச்சுறுத்தல் விடுக்கிறது, யார் கொடுத்தது இந்த அதிகாரத்தையும் திமிர்த்தனத்தையும்? “ஆட்டுக்குத் தாடி எதற்கு? ஆளுநர் பதவி எதற்கு?” என்று கேட்ட தமிழ்நாட்டில் புலிகேசி ஆட்சியின் தினசரி செய்தித்தொடர்பாளர் அமைச்சர் ஜெயக்குமாரோ, ”ஆளுநர் ஊர்வலம் வருவதில் தவறு என்ன இருக்கிறது?” எனக் கேட்கிறார். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது? “20 ஆயிரம் போராட்டங்களை நீர்த்துப் போகசெய்துவிட்டேன், மன்னா!” என மோடி தர்பாரின் அரசவைப் புலவனைப்போல பல்லிளித்துக்கொண்டு மாண்புமிகு பழனிச்சாமி அறிக்கை வாசிக்கிறார், எதிர்க்கட்சி செயல்தலைவரோ பொறி உருண்டை பொன்னாரின் கருத்தான ‘தமிழகத்தில் மாவோயிஸ்டுகள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள் அச்சுறுத்தல்’ என்பதை சட்டமன்றத்தில் வழிமொழிகிறார். என்னே இழிநிலை, கேடுகெட்டத்தனம்!

மோடியின் ஊதுகுழலாக இருந்த தந்தி தொலைக்காட்சியும் பாண்டேவும் எடுத்த கருத்துக்கணிப்பே தமிழகத்தில் மோடியும் பாரதிய சனதாவும் ஒரு செல்லாப்பணம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அந்த சவத்தை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஊழல் மலிந்த பிழைப்புவாதிகள்தான் தூய்மைவாதப் பூச்சாண்டிக் காட்டும் அரைடவுசர் பாசிசக் கோமாளிகளைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.

அநீதியான நீட் தேர்வினால் தமிழகத்தின் பிள்ளைகளும் பெற்றோர்களும் உயிரிழந்திருக்கிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 14 பேர் பச்சைப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். படுகொலைக்கு உத்தரவிட்டது யார்? எனத் தெரியவில்லை. முதலமைச்சரோ, ”தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்கிறார். எட்டுவழிச்சாலையில் விவசாயிகளின் விளை நிலத்தையும் ஏறி மிதித்துசெல்ல இருக்கிறது இராணுவ கவச வாகனம். அடுக்கடுக்காய் அழிவுத்திட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எதிர்ப்புப் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. மத்திய அரசிற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் உகந்த தமிழகம் உருவாக்கப்படுகிறது. பினாமி அரசு சேவகம் செய்கிறது. எதிர்க்கட்சியோ அடையாளப் போராட்டங்களோடு வேடிக்கைப் பார்க்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

தி.மு.க.வைப் பாதுகாத்தால் சமூகநீதியையும் மாநில உரிமையையும் பாதுகாக்க முடியும் என்கிறார்கள் சிலர். இன்னும் ஒருபடி மேலே போய், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் திராவிட இயக்கத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்கிறார்கள் வேறு சிலர்.  இவர்களின் பகுத்தறிவு நமக்கு புல்லரிக்க வைக்கிறது. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் சந்தை நலனுக்காக அனைத்தும் அனைவரும்  விலைபேசப்படுகிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்காக காவிகள் ‘ஒற்றைத் தேசியம், ஒற்றை அரசு, ஒற்றை சந்தை, ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கல்வி, ஒற்றை இந்தியாவை’ கட்டியமைத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகங்களின் நடப்பு அரசியல் என்ன சொல்கிறது? காவிகளை வேண்டுமானால் எதிர்க்கலாம், கார்ப்பரேட்டுகளோடு கை கோர்க்கலாம், தவறு இல்லை என்கிறது. பிறகு எப்படி மாநில உரிமையையும் சமூக நீதியையும் பாதுகாக்க முடியும்? நாம் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கிறோம். கார்ப்பரேட்டுகளின் ஒற்றை இந்தியா நம்மை உயிரற்ற மரம் மட்டைகளைப் போல, அரைத்து பொடியாக்க விரும்புகிறது. எனவேதான் சொல்கிறோம், காவி கார்ப்பரேட்டு எதிர்ப்பு  அரசியலை பிரிக்காதீர்கள், ஒன்றிணையுங்கள்.

உடனடி எதிரியான பாரதீய சனதாவை  விரட்டியடிப்போம்! அதன் தமிழக அடிவருடிகளைத் தோற்கடிப்போம்! காவி கார்பபரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் என பரப்புரை இயக்கத்தின் ஊடாக அறைகூவல் விடுக்கிறோம்.

-பாலன், ஆசிரியர்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW