உள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…

30 Jun 2018

30.6.1997 – மேலவளவு சாதி ஆதிக்க எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்ட நாள்.

மேல், கீழ் என்கிற சாதிய அடுக்கு உடையாமல், இறுக்கமாக இயங்கும்  இந்திய கிராமப்புற நிலவுடமை வட்டார அமைப்பில் சுயமரியாதையும், சம அதிகார அந்தஸ்தும் பட்டியலின மக்கள் அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது என்பதற்கான உதாரணமே மேலவளவு. கட்டாய சேவை செய்யும் சமூகக் கூட்டமாக மட்டுமே வாழ்ந்துவந்த அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்கள், அதிகாரத்திற்காகப் போட்டியிடுவது என்பது அன்றைக்கு எட்டாக்கனி. அதனை அரசு, நிர்வாக அமைப்பும் உறுதிசெய்தது. ஆனால் இன்று, பட்டியலின மக்களின் போராட்டம் என்பது, அரசியல், பொருளாதாரத்தில், கல்வி, வேலைவாய்ப்பு பண்பாட்டு வாழ்வியலில் சம அதிகாரத்திற்கான, சமூகத்தில் சமமான வளர்ச்சிக்கான போட்டி போராட்டமாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. அது கிராம வட்டார அதிகாரத்தை எதிர்கொண்டுவருகிறது. எழுச்சிப்பெற்ற சமூகமாக அரசியல் சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது. சாதி ஆதிக்க இறுக்கத்தை உடைக்கும் மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் வர்க்க, சாதிய தளங்களில் நடந்துவரும் பட்டியலின மக்களின் மீதான வன்முறைகள். இதனை உணர்த்துவதாக மேலவளவு படுகொலை நாளை நினைவுகூரவேண்டியிருக்கிறது.

சாதி ஆதிக்கம் இன்றும் தீவிரத்தன்மையுடன் வெளிப்பட்டு  வரும் தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளில் மதுரை மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தேர்தலில் கள்ளர் சாதி ஆதிக்கத் தடையைமீறி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஒடுக்கப்பட்ட சமூத்தைச் சேர்ந்த முருகேசன். ஊராட்சிமன்ற தலைவராக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாத சாதி ஆதிக்க சக்திகள் தொடர் மிரட்டல் விடுத்துவந்தனர். மதுரை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் முருகேசன் முறையிட்டு சூழலை விளக்கி பாதுகாப்புகோரி வந்தார். வழக்கம்போல் பொறுப்பற்ற முறையில் செயல்படும் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்கத் தவறியதால் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சாதி வெறி சக்திகளால் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்கள்.

இதன் எதிரொலிதான் அதே மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் பட்டியலின மக்களுக்கு போட்டியிட ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் போட்டியிட தடை பல ஆண்டுகள் நீடித்தன. இது இந்தியாவினுடைய பிரச்சனையாக மட்டுமல்ல, சர்வதேசமே திரும்பிப் பார்க்கும் சிக்கலாக பார்க்கப்பட்டது. போட்டியிட்டு வெற்றிபெற்றால் படுகொலையும் போட்டியிடக்கூடாது என படுகொலை-எச்சரிக்கையும் இன்றும்கூட நீடித்து வருகிறது. பட்டியலின மக்களின் வளர்ச்சியை சகிக்க முடியாத சாதி ஆதிக்க சக்திகள் சிவகங்கை மாவட்டம் கச்ச நத்தத்தில் நடத்திய படுகொலை சம்பவம் நிரூபித்துள்ளது. கச்சநத்தத்தில் வெட்டுபட்டு படுகாயத்தோடு தப்பித்த ஒருவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி ஆதிக்க அரசியலுக்கு எதிராக மட்டுமல்ல, சாதி ஒழிப்புக்காக களமாட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

மேலவளவு ஈகியருக்கு எமது வீரவணக்கத்துடன்

இரமணி

பொதுச்செயலாளர்,

சாதி ஒழிப்பு முன்னணி

9566087526

RELATED POST
1 comments
  1. திருமொழி /8 மணி நேர வேலைக்கானத் தொழிலாளர் இயக்கம் says:

    ஆதிக்க சாதியினர் எனக்குறிப்பிபிட வேண்டும் எனக் கருது கிறேன்.ஆதிக்க சாதியில் உள்ள சாதி ஆதிக்க வாதிகள் குறிப்பாக பொருளியல் மற்றும் அரசியல் ஆதிக்கம் கொண்ட சக்திகள் ஆதிக்க சா திஉணர்வில் உள்ள பெரும்பாலான உழைக்கும் மக்களிம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்
    அதற்கான பலப்பல வேலைத்திட்டங்களை நாம் முன்வைத்துச் செயல்படுவதுடன், சாரி ஆதிக்க நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளின் மீது குறிப்பிடத்தக்க அளவு” வன்முறையும் “பயன்படுத்தப்பட வேண்டும். அத்துன் ஆதி க்க சாதியிலும் ஒடுக்கப்பபட்ட சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களை ஒன்றினைப்பதற்கான வேலைத்திட்டம் வகுத்துச் செயல் படவேண்டும். இதுவே ஆதிக்க சாதி உணர்விலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கும் வழியாக அமையும்.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW