உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி

15 May 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை

நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’.

இந்த பொறியமைவின் நோக்கம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மாறுதலுக்குட்பட்டுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி மாநிலங்களுக்கிடையேயான நீரைப் பகிர்ந்தளிப்பதே ஆகும். ஆனால், மத்திய அரசு முன்வைத்துள்ள பொறியமைவு அதை செய்வதற்குரிய அதிகாரமற்றதாக உள்ளது. வரைவுத் திட்டத்தில் அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றிய பகுதியில் பக்கம் 6 இல் மூன்றாவது பிரிவின் நான்காவது துணைப்பிரிவில் ( 3.iv) காவிரி வடிநிலப்பகுதியில் உள்ள முக்கியமான அணைகளான கேரளாவில் உள்ள பானாசுராகர், கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்னராஜசாகர், தமிழ்நாட்டில் உள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகியவை பொறியமைவின் வழிகாட்டுதலின் படி அந்தந்த மாநிலங்களால் இயக்கப்படும் என்று விவரிக்கின்றது. இதன் மூலம், மத்திய அரசு முன் வைத்துள்ள பொறியமைவிற்கு வழிகாட்டும் அதிகாரம் மட்டும்தான் உண்டே ஒழிய அணைகளைத் திறந்துவிடும் அதிகாரமில்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான், இதே பிரிவில் பதினான்காவது துணைப் பிரிவில் தீர்ப்பாயத்தின் முடிவை அமல்படுத்துவதில் எந்தவொரு மாநிலமாவது ஒத்துழைக்கவில்லை என்றால் மத்திய அரசின் துணையை இப்பொறியமைவு கோர வேண்டும் என்றும் பின்னர் மத்திய அரசின் முடிவே இறுதியானதென்றும் அதற்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்றும் விவரிக்கின்றது.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறியமைவு மத்திய அதிகாரமில்லாததால் மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற செயல்திட்டம் முன்வைக்கபடுகிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சரி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் சரி கர்நாடகம் மதித்ததே கிடையாது. எனவே, இப்படியொரு அதிகாரமற்ற பொறியமைவு ஏற்படுத்தினால் அதன் பணி என்பது அடாவடி செய்கிறது கர்நாடகம் என்று மத்திய அரசிடம் முறையிடுவதில் போய் முடியும். இதுவரை மத்திய அரசுகள் எப்படி கர்நாடகாவின் அடாவடித்தனத்திற்கு இணங்கிப்போயினவோ அதுப்போல் அப்போதும் நடக்கக் கூடும். மொத்தத்தில், காவிரித் தீர்ப்பாயத்தின் நீர்ப்பங்கீட்டுத் தீர்ப்பு காற்றில் பறக்கவிடப்படும்.

மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்ததை நாடே அறியும். மேலும் கடந்த மே 8 ஆம் நாள் அன்று கூட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தேவை நோக்கி மேலாணமை வாரியத்தால் கண்காணிக்கத் தானே முடியும், தண்ணீர் திறந்துவிடவா முடியும்’ என்று சொன்னார். எனவே, மேலாண்மை வாரியம் என்றால் அதன் பொருள் அதிகாரமுள்ள ஓர் அமைப்பு என்பதாகும். அத்தகைய ஓர் அமைப்பை ஏற்படுத்தும் மனத்திட்பம் இல்லாத்தால்தான் மத்திய அரசு காலத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது. ஒருவழியாக இப்போது தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. அதிகாரமற்ற பொறியமைவுக்கான வரைவை முன் வைத்ததன் மூலம் மத்திய அரசின் துரோக நிலை அம்பலமாகியுள்ளது.

செய்ய வேண்டியதை செய்வதற்கு அதிகாரமில்லாத செயற்திட்டத்தை முன்வைத்துவிட்டு அந்த பொறியமைவு, என்ன பயிர்கள் பயிரிட வேண்டும், நீர்ப் பயன்பாடு போன்றவற்றில் ஆலோசனை வழங்கும் என அதன் வரம்பில் வராததை உள்ளடக்கி இருக்கிறது மத்திய அரசு. மேலும் மத்திய அரசின் கட்டளைகளுக்கு அது கட்டாயம் இணங்க வேண்டும் என்றும் ஒரு பிரிவு உள்ளது. மொத்தத்தில் இந்த வரைவு தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.

காவிரித் தீர்ப்பாயம் ஏதோ ஒரு பொறியமைவு என்று குறிப்பிடவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போல் அமைக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பற்றி நீர் வளத்துறை பராமரிக்கும் வலைதளத்தில் இருக்கிறது. பக்ராநங்கல் அணை மற்றும் பியாஸ் அணையின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் செயல்படுத்த ஆகியவை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்திடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல் காவிரி வடிநிலத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டுப் பகுதிகளில் உள்ள எட்டு அணைகளும் இப்போது அமைக்கப்படக் கூடிய பொறியமைவிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட வேண்டும். அதுதான் அதிகாரமுள்ள செயற்திட்டமாகும். அப்படி ஒப்படைக்கப்பட்டும் ஏதாவது ஒரு மாநிலம் பொறியமைவின் செயற்திட்டத்தில் குறுக்கிட்டால் மேலாணமை வாரியம் மத்திய அரசின் துணையுடன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். இனி, இவ்விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுப்பதற்கென்று எதுவும் இல்லை. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்துவதே மேலாணமை வாரியம் ஆனாலும் சரி மத்திய அரசானாலும் அதன் கடமையாகும்.

காவிரித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட 1990 இல் இருந்து இன்றைக்கு வரை என 28 ஆண்டுகள் காத்துக்கிடக்கும் தமிழ்நாட்டின் மீது கரி பூசும் வேலையை மத்திய அரசு செய்திருக்கும் நேரத்தில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உருப்படாத வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டதையே வெற்றி என்று சொல்லி மக்களிடம் பொய்யான கருத்தை உருவாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பதவி சுகத்திற்காக உரிமைகள் ஒவ்வொன்றாய் அடகு வைததுக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் காவிரி சிக்கலிலும் கழுத்தறுப்பு வேலையை தொடங்கிவிட்டனர் போலும்.

இது வாரியமா? குழுவா? என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது நாம் மேலாண்மை வாரியம் என்று அழுத்தம் கொடுப்பதையே கேலி செய்யும் வேலையாகும். அமைப்பை அதிகாரமில்லாமல் உருவாக்கிவிட்டு அதற்குப் பட்டுத்துணிப் போர்த்தினாலென்ன? கிழிந்த துணியைப் போட்டால் என்ன? ஒரு கழுதையை துணியால் மூடி எடுத்து வந்து இதை நீங்கள் கழுதை என்றோ குதிரை என்றோ அழைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் எப்படியோ அப்படித் தான் இந்த செயற் திட்ட வரைவை முன்வைத்துவிட்டு அதன் பெயர் பற்றிய மத்திய அரசின் பே ச்சாகும்.

இந்த முன்வைப்பை தமிழக, ,கேரள, புதுவை அரசுகள் நிகாரிக்க வேண்டும். இதை கர்நாடகம் எப்படியும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும். உச்ச நீதிமன்றம் இந்த முன் வைப்பை நிராகரித்து தாமே காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். காவிரி வழக்கில் மத்திய அரசு தமிழர்களுக்கு இழைக்கும் துரோகப் படலத்தின் கடைசிப் பக்கங்கள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழக ஆட்சியாளர்களை நம்பிக் கொண்டிருந்தால் நாம் மோசம் போவது நிச்சயம். எனவே, நம்மை நம்பி, நமது எதிர்காலத்திற்காகப் பெருந்திரளாக போராட்டத்தில் இறங்க வேண்டிய நேரமிது என்று தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW