கொரோனாவிற்கு பிந்தைய உலக ஒழுங்கு

24 Apr 2020

கொரோனா தொற்று நாம் அறிந்த வரையில் உலகத்தின் அடிப்படை போக்கையே மாற்றக் கூடும், குறிப்பாக உலக ஒழுங்கு, அதன் அதிகார சமநிலை, தேசிய பாதுகாப்பு குறித்த பாரம்பரிய கருத்துக்கள், உலகமயமாக்கலின் எதிர்காலம் போன்றவைகளின் போக்குகள் பெருமளவு மாறக்கூடும். ஒரு புறம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த உலகம் மற்றொருபுறம் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத  ஒரு கொடிய வைரஸ். இவை இரண்டும் ஒருசேர இணைந்து மனித இனம் இது வரை எதிர்கொள்ளாத ஒரு சிக்கலில் நிறுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்து நாம் வெளிவருகையில், புதிய அரசியல் மற்றும் சமூக யதார்த்தங்களை  எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

நொறுங்கி விழும் உலக ஒழுங்கு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது சமகால உலக ஒழுங்கு மற்றும் அதன் நிறுவனங்களின் தோல்வி என்றே கொள்ளவேண்டும். சமகால உலக ஒழுங்கிற்கு ஐ.நா போன்ற நிறுவனங்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றியடைந்த நாடுகளால் நிறுவப்பட்டன.  அவை குறிப்பான அரசியல் மற்றும் இராணுவ சிக்கல்களை சமாளித்து இந்நாடுகளின் மேலாதிக்கத்தை நிறுவ உருவாக்கபட்ட நிறுவனங்களே ஒழிய ஒட்டுமொத்த மனித இனத்திற்கு சேவை செய்வதற்கன்று.

கொரோனா வைரஸ் தொற்று போன்ற ஒரு உலகளாவிய நெருக்கடிக் காலக்கட்டத்தில் உலகளாவிய இந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குறுகிய சொந்த தேசநலன் சார்ந்த செயல்பாடுகளும் அம்பலாமாகியுள்ளது. கொரோனா தொற்றைப் பற்றி விவாதிக்க ஐநா பாதுகாப்பு சபை நெடுநாள் எடுத்துக்கொண்டதே (அதுவும் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை) ஐநாவின் இருப்பினை கேள்விக்கு  உட்படுத்தியுள்ளது

 

கொரோனா வைரஸ் தொற்று உலகமயமாக்கலின் போக்கினை மாற்றுமா?  

பிராந்திய நிறுவனங்களும் பெரிதாக இந்த நெருக்கடியில் சிறப்பாக செயல்படவில்லை. பிரதமர் மோடி, சார்க் SAARC அமைப்பிற்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிறுவனங்களை ஒப்பிடுகையில் சற்று முற்போக்கான அமைப்பான ஐரோப்ப ஒன்றியமோ, ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவிய போது செய்வதறியாது நின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளோ சக உறுப்பு நாடுகளோடு இணைந்து பிராந்திய அளவில் இதை எதிர்கொள்வதற்கு பதில், தனியாக தங்கள் தேசிய அளவிலான தீர்வுகளையே தேடின. இதில் பிரஸ்ஸல்ஸ் தான் தோல்வியுற்றது.

இவை அனைத்தும் ஒரு ஆழமான பிரச்சனையை குறிக்கின்றன. உலகளாவிய நிறுவன கட்டமைப்புகள் பிரதிநிதித்துவம்அற்று இருக்கிறது, வல்லரசுகளின் கைகளில் வெறும் கைப்பாவையாக, போதிய நிதியின்றி வெறும் மேலோட்டமான பாதுகாப்பு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது. 1940’களின் உலகளாவிய நிறுவன கட்டமைப்பானது 2020’களில் மனித குலம் எதிர்கொள்ளும் சிக்கல்களை எதிர்கொள்ள பயனற்றது. உலக நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான ஒரு புதிய ஒப்பந்தம் தவிர வேறெதுவும் நம் எதிர்காலத்தை காப்பாற்ற முடியாது.

கொரோனா தொற்று சிக்கலில் இருந்து மேலும் வலுவாக வரக்கூடிய ஒரே நாடு சீனா. கொரோனா தொற்றை சீனா கட்டுபடுத்திவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளில் தொழில்துறை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் சீனாவிலோ மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இதை மேலும் தூரிதப்படுத்தியுள்ளது. உலகின் மிகப் பெரிய இராணுவ சக்தியான அமெரிக்கா வோ இந்த நெருக்கடி நிலையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்க, ஐரோப்ப ஒன்றியத்தின் உறுப்பினார்களோ தத்தமது நாட்டின் நெருக்கடியை சமாளிப்பதில் கவனம் செலுத்த, சீனாவோ தனது உற்பத்தி சக்தியை அதன் புவிசார் அரசியல் நன்மைக்காகப் பயன்படுத்துவது போல் உள்ளது. தேவைப்படும் நாடுகளுக்கு மருத்துவ உதவியையும் தனது மருத்துவ நிபுணத்துவத்தையும் வழங்க பெய்ஜிங் முன்வந்துள்ளது. தனது பரம எதிரியான ஜப்பானுக்கு முன் எப்போதையும் விட அதிக ஒத்துழைப்பை வழங்குகிறது. சீன அதிபர் ஜின்பிங் ஐநா பொது செயலாலளரை தொடர்பு கொண்டு மற்ற நாடுகள் எவ்வாறு கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கினார். சீனாவின் பணக்கார மனிதரான ஜாக் மா கொரோனா வைரசுக்கு எதிரான தனியார்துறையின் பங்களிப்பை முடுக்கி விட்டுள்ளார். சீன பிரச்சார இயந்திரங்கள் இதைப் பெரிதாக்கும். சீனாவின்  நடவடிக்கைகள் புவிசார் அரசியல் ஆதாயங்களுக்கான ஒரு சிறந்த பொருளாதார முதலீடாகும். உலகளாவிய தலைமைக்கான சீனாவின் தொடர் முயற்சிக்கு இது கைகொடுக்கும். ஹுவாய் 5G சோதனைகளுக்கான பேரத்திற்கும் பெல்ட் மற்றும் சாலை Belt and Road initiative முயற்சிக்கான உலகளாவிய தேவையை நிறுவுவதற்கும் இது பயன்தரும். கொரோனா வைரஸ் சர்வதேச அமைப்புகளை சீன குணாதிசயங்களைக் கொண்ட ஒரு உலகாக மாற வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ்| தலையங்கங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து நவதாராளவாத பொருளாதார உலகமயமாக்கல் பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. உலகளாவிய மந்தநிலை (Economic Recession) வரக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். நவதாராளவாத கொள்கைகள்  உலகமயமாக்கலின் ‘வெற்றிகளை’ வைரஸ் பின்னுக்குத் தள்ளும்போது கூட, உலகமயமாக்கலின் அரசியல் முகம் கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்கத் தேவைப்படுகிறது. எல்லா பெரிய நாடுகளும் முதன் முதலில் செய்தது தங்கள் எல்லைகளை மூடுவது, இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம் என்று உள்ளுரளவில் ஆராய்ந்து அதன்படி நடவடிக்கைகள் எடுப்பது. உலகளாவிய ஒழுங்கில் முன்பே இருக்கும் கட்டமைப்பு பலவீனம் மற்றும் கொரோனா வைரஸ் நெருக்கடி ஆகியவையால் பல நாடுகளில் அதீத தேசியவாத உணர்ச்சியால் தூண்டப்பட்டு பாதுகாப்புவாத போக்குகள் (protectionist tendencies) வலுவடைவதை காணலாம். அனைத்து தரப்பட்ட நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கு தற்போதைய நிலமையில் அமைவது கடினமே. அதற்கு மாறாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரிப்பது போல், “மேலும் ஏழ்மையான, குறுகிய மனப்பான்மை உடைய ஒரு சிறிய உலகமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்

உற்பத்தி, பங்கு பரிவர்த்தனை, விநியோக சங்கிலிகள் மற்றும் காப்புத் திட்டங்கள் மீதான அரசின் அதிகரித்த தலையீட்டினால் இவைகள் மீதான பெருநிறுவனங்களின் அதிகாரக் கட்டுபாடு மட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் கணிக்க முடியாத விநியோக ஆதாரங்கள் குவிவதை தடுக்கவும், புவிசார் அரசியல் ரீதியான சிக்கலான பகுதிகளை தவிர்க்கவும், நெருக்கடி காலங்களின் போது தேசிய அளவிலான அவசரகால தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் முடியும். இதானல் பெருநிறுவனங்களின் இலாபங்கள் குறையும். மேலும் திட நிலைக்கான (stability) தேவை அதிகரிக்கும்.

சிலர் இவை அனைத்தும் அதீத உலகமயமாதலில் இருந்தும் உள்ளார்ந்த குறைபாடுகளிலிருந்தும்  பின்வாங்குவதைக் குறிக்கக்கூடும் என்று மகிழ்ச்சியுடன் வாதிடுவார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பொருளாதார மற்றும் அரசியல் பூகோளமயமாக்கலின் மிகவும் சீரான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வடிவத்தைக் கொண்டுவரும் என்ற அனுமானம் தவறானதாகும். பொருளாதார விஷயங்களில் அரசு தலையீடு மற்றும் பாதுகாப்புவாதம் ஆகியவை இதில் இருந்து மீள்வதற்கான எளிதான வழியாக இருக்கலாம், நெருக்கடி முடிந்தவுடன் உலக நாடுகளும் இதையே செய்யக் கூடும். ஆனால் இது மீண்டும் பின்கதவு வழியாக “லைசென்ஸ் ராஜ்” (License Raj) க்ககே வழிவகுக்கக் கூடும், அரசியல் நன்மைகளுடன் உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான உலகமயமாக்கலுக்கான உந்துதலாக அமையாது.

கொரோனா வைரஸ் | சமூக விலகலைத் தாண்டி கொரோனாவை எதிர்த்து போராடுவது

தேசிய பாதுகாப்பு தயாரிப்பு பற்றிய உயரமான கூற்றுக்கள் இருந்தபோதிலும், தொற்றுநோயிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியாமல் போனதில் அரசு தோல்வியடைந்துள்ளது. ஆயினும், இன்னும் அதிக சட்டப்பூர்வ அதிகாரங்களுடன் கண்காணிப்பு தொழில்நுட்பங்களுடன் அரசு வலுவடைந்துள்ளது. உண்மையில், பதட்டம் அதிகமாகியுள்ள நிலையில் குடிமகக்கள் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல், அரசு எங்கும் நிறைந்ததாகவும்,  சர்வ வல்லமையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவர். உலகளாவிய பொருளாதார சக்திகளிடம் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் அரசு, மக்களின் கடைசி அடைக்கலமாக ஆகக் கூடும்.

உலகமயமாதல் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இன்றைய சூழலில், ‘பெருநிறுவனங்கள்’ தலைமையிலான  உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார முன்னமாதிரிகளைவிட ‘அரசு’ தலைமையிலான முயற்சிகளே இனி விரும்பப்படும். இது உலகமயமாக்கலின் உள்ளார்ந்த குறைபாடுகளுக்கு சில நேர்மறையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துமா?  நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டியிருக்கும். ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி என்னவென்றால், பெருநிறுவனங்களை மீறி இவ்வாறு செயல்பட அரசுக்கு முனைப்பு இருக்கிறதா என்பது தான். அரசுக்கும்  பெரிய மூலதனத்திற்கும் இடையிலான கூட்டுறவு உறவைக் கருத்தில் கொண்டு, அரசு, பெரும்பாலும்  பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல், பெரு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கப் பழகிவிட்டன,. உதாரணமாக, பல மேற்கத்திய நாடுகள் கொரோனா வந்தவுடன் முதலில் பொது சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படுவதை விட அவர்களின் மூலதன சந்தைகளைப் பாதுகாப்பதில் தான் கவனம் செலுத்தினர்.

நவயுக இனவாதம் 

தொற்றுநோயின் மற்றொரு விரும்பத்தகாத விளைவு பல்வேறு வகையான பாகுபாடுகள் அதிகரித்திருப்பது ஆகும். உலகளவில், சமூகங்கள் மேலும் சுய-தேடல் கொண்டவையாகவும், உள்நோக்கி பார்ப்பபவையாக  மாறக்கூடும்,  இது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பான தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மேலும் உந்துதலுக்கு வழிவகுக்கும். பொருட்களின் மூலத்தைப் பற்றி புதிய கேள்விகள் கேட்கப்படலாம். PhytoSanitary measures எனப்படும் தாவரங்களின் ஆரோக்கியதிற்கான நடவடிக்கைகள் வளர்ந்த நாடுகளால் வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களின் மீது கடுமையாக திணிக்கப்படுவது இனி சகஜமாகலாம். ஊரடங்கு மற்றும் பயணக்  கட்டுப்பாடுகள் பழைமைவாத நாடுகளில், ‘எல்லைச் சுவர்கள்’ பற்றிய விவாதத்திற்கு சட்டவடிவம் கொடுக்கும்.

இந்தியாவிலும் கூட, சமூக விலகல் என்ற பெயரில் நாம் அழித்தொழிக்க வேண்டிய சமூக நடைமுறைகள் மீண்டும் உயிர் பெறுவதை நாம் பார்க்கலாம். டெல்லியில் ஒரு மணிப்பூரி பெண் தன்னை “கொரோனா வைரஸ்” என்று அழைத்த ஒரு நபரால் துப்பப்பட்டார்.  மேலும் COVID-19 தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களை பாகுபாடு காட்டி ஒதுக்கியது, ஒரு புதிய வகையான பாகுபாட்டைக் குறிக்கிறது. பிறப்பு மற்றும் வர்க்க அடிப்படையிலான தூய்மைவாத கூற்றுக்கள், அத்துடன்  ‘சுகாதாரம்’ என்பதை வரையறுத்தல் அதிகரிக்கக்கூடும். கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அதிகமாக நீடித்திருப்பதற்கு ஏற்ப, இது போன்ற பிற்போக்குவாத பழக்கங்கள் ஆழமடையும். இந்த நடைமுறைகள் எவ்வளவு மோசமானதென்று நமக்கு தெரியும்; அது இன்னும் மோசம் அடையவே கூடும்.

 

  • ஹாப்பிமோன் ஜேக்கப் (ஜே.என்.யூ பல்கலைக்கழக ஆசிரியர்)

தமிழில்: லீனஸ்

https://www.thehindu.com/opinion/op-ed/covid-19-and-the-crumbling-world-order/article31324259.ece

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW