ஊடகச் செய்தி – விவசாயத்தை அனுமதித்தது போல் மீன்பிடித் தொழிலையும் அனுமதி! வழக்கமாக தொடங்க இருக்கும் ஏப்ரல் 15 மீன்பிடி தடை காலத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவை!
8 வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை மீன் பிடித் தடைக்காலத்திற்கு மானியமாக வழங்கிடு!
கொரோனவின் கோர தாண்டவத்தால் உலகமே நிலை குலைந்து, முடங்கி கிடக்கிறது. இதன் தொடச்சியாக இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவின் பெயரில் 22 ம் தேதி சுய ஊரடங்கு மற்றும் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்து. இந்த ஊரடங்கால் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கடல் சார்ந்து வாழும் மீனவர்களையும், அவர்களின் குடுபங்களையும் வாழ்வாதாரம் இன்றி தவிக்க வைத்துள்ளது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் மளிகை பொருட்கள், தண்ணீர், பால் , காய்கறிச் சந்தை, இறைச்சிக் கடைகள் மருந்தகங்கள், உணவு விடுதிகள், வேளாண்மை தொழில்களான நடவு , அறுவடை, மற்றும் கொள்முதல் என அனைத்தும் செயல்பட வழிவகை செய்யப்படும் என அரசு உறுதியளித்தது. அதன்படி மீன் சந்தைகள் செயல்படுகின்றன, மக்கள் கூட்டம் அலைமோதுவதும், ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் மீன்கள் விற்பனையாகும் செய்திகளை காண முடிகிறது . ஆனால் கடந்த 12 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணையில் வளர்க்கப்படும் இறால் போன்ற உயர்தர பண்ணை மீன்கள் மட்டுமே சந்தைக்கு வருகிறது. இத்துயரமான வேளையில் மீன் பண்ணை முதலாளிகளின் கல்லாவை சத்தமில்லாமல் நிரப்ப இவ்வூரடங்கு பயன்படுகிறது. இன்னொருபுறம் பாரம்பரிய மீன் பிடிதொழிலாளர்கள் பசி பட்டினியில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன் பிடி தடைக் காலம் தொடங்குகிறது. அதாவது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தல் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, மீன்வளத்தை பாதுக்காத்திடும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் தொடங்கி ஜீன் 14 வரை 61 நாட்கள் மீன் பிடித்தல் தடை செய்யப்படும்.
எனவே தமிழக அரசு, தனது அண்டை மாநிலமான கேரளா அரசு வெளியிட்டுள்ள அரசாணை ( GO (Rt) No.196/2020/F&P Dated 27/03/2020) வழிமுறையை பின்பற்றி போர்கால அடிப்படையில் மீனவர்களின் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி மீனவர்களை பாதுக்காக்க வேண்டுகிறோம்
- கட்டுபாடுமின்றி உடனடியாக மீனவர்களை கடலுக்கு சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கு.
- இழுவை படகு, சிறிய விசை படகு , மற்றும் பாரம்பரிய மீன்பிடித்தல் முறையை பின்பற்றும் மீனவர்கள் ஒரு படகில் 3 பேரும், அதிக படியாக 7 பேர் மட்டுமே பயணம் செய்து மீன் பிடிப்பர். அவர்களின் உடல் நிலையை பரிசோதணை செய்து கடலுக்கு செல்ல அனுமதி வழங்கு .
- காய் கறி சந்தையை ஒழுங்குபடுத்தியது போல் மீன் சந்தையும் ஒழுங்கு படுத்தி , சமூக இடைவெளிப் பேணி கொரோனா நோய் தொற்றுப் பரவலிருந்து தடுக்க முன் ஏற்பாடுகளை செய்து கொடு
- கொரோனா பரவல் தடுப்பு , ஊரடங்கு காரணமாக கடந்த 12 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக் நிவாரண உதவி தொகையாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்கிடு
- ஊரடங்கு, பொருட்கள் தட்டுபாடு , பொருட்களின் விலையேற்றம், கொரோனா நோய் தொற்று அச்சம் என எல்லா மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிருப்பதைப் போல மீனவர்களும் கடந்த 12 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்க செல்ல முடியாமல் நலிவடைந்துள்ளனர். மேலும் மீனவர்களை இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் ஊரடங்கு முடியும் ஏப்ரல் 14 ம் தேதி முதல் வருடாந்திர மீன் பிடி தடை காலம் தொடங்குகிறது. மீன்பிடி தொழிலை மட்டும் நம்பிவாழும் மீன்வர்கள் 3 மாதம் கடலுக்கு செல்லவில்லை என்றால் அவர்களின் வாழ்வாதாரம் கற்பனை செய்யமுடியாத துயரத்தில் கொண்டு செல்லும். எனவே மீன்பிடி தடைகாலத்தை இரு வாரங்கள் தள்ளி வைக்க ஆணை வெளியிடு.
6. மீன் பிடித் தடைக்காலம் ஒன்றரை மாதமாக இருந்த போது கொடுக்கப்பட்ட அதே 5000 ரூ தொகையே இருமாதமாக நீடிக்கப்பட்ட போதும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி உழைப்பவர் யாராயினும் மாதம் 21,000 ரூபாயை குறைந்தபட்ச கூலியாக வழங்கிடு.
கொரோனா தொற்றில் சத்தம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துக் கொண்டிருக்கும் மீன் பிடித்தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு, இத்துறைசார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்வர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
-சதீஸ், பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்