மோடி கொல்ல நினைப்பது கொரோனாவையா அல்லது புலம்பெயர் தொழிலாளர்களையா ? – நடந்தே ஊருக்கு சென்ற 22 தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் மரணம், ஊர் திரும்பியவர்கள் மீது இரசாயன மருந்தடித்த உ.பி அரசு

30 Mar 2020

உலகம் மூழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்ட கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24, 2020 இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி 21 நாட்கள், அதாவது வரும் ஏப்ரல் 14, 2020 வரை இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இதன் மூலம் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவித்தார். கடந்த 2016 ஆண்டு மோடியால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு நூற்றுக்கும் மேலான உயிர்களைக் காவு வாங்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே இந்த முழு அடைப்பு நடவடிக்கையையும் மத்திய அரசு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் செயல்படுத்தி வருகிறது.

அதன் விளைவு, நாடு முழுவதும் திக்கற்று நிற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பஞ்சம் பிழைக்க, பட்டினியைத் தவிர்க்க புலம்பெயர்ந்தவர்கள், இன்று மத்திய அரசின் முன்யோசனையற்ற நடவடிக்கையால் திக்கற்று அலைகிறார்கள். அனைத்து ஊர்களிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்களைக் கூட அடித்து துன்புறுத்தும் காவல்துறையினரின் செயல்கள் தினம்தோறும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், உணவுக்கு வழியின்றி, வேலையின்றி இருக்கும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்று பற்பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள்.

கடந்த இரு தினங்களாக, உ.பி., பிகார் மாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தில்லி எல்லையில் குவிந்திருந்த கூலித் தொழிலாளர்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டன. பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழியில்லாதததால், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லத் துவங்கிவிட்டனர். இவ்வாறு செல்பவர்கள் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக நெடுஞ்சாலைகளில் உணவின்றி, தங்க இடமின்றி நடந்து செல்கின்றனர். இவ்வாறு தில்லியிலிருந்து தனது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் செல்ல வழியின்றி, நடக்க முற்பட்ட ரன்வீர் சிங் என்பவர் 200 கிலோமீட்டர்கள் நடந்த ஆக்ரா வந்தடைந்த நிலையில் வழியிலேயே மரணமடைந்தார். இன்னும் சிலர் நெடுஞ்சாலைகளில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்து செல்லும் போது, சாலை விபத்துகளில் சிக்கு உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடுவரை நடந்து வந்த முதியவர், பால் வாங்க வீட்டைவிட்டுச் சென்று, காவலர்களிடம் அடி வாங்கிப் பின்னர் மாரடைப்பால் இறந்து போனவர் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

நாடு முழுவதும் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை 32ஐத் தொட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்த முழு அடைப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 20ஐ தொட்டுள்ளது.

கடந்த 28 ஆம் தேதி, புலம் பெயர் தொழிலாளர்களை தில்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 1000 பேருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லி எல்லையில் ஞாயிறன்று குவிந்தனர். ஆனால் வெகு சிலரைத் தவிர ஏனையோரால் உத்தரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் ஏற முடியவில்லை. உலகம் முழுவதும் சமூக தனிமைப்படுத்தலை வலியுறுத்தி வரும் வேலையில் மத்திய மாநில அரசுகளின் தவறான திட்டமிடலால் பல மணி நேரங்கள் காத்டிருட்ந்து தங்கள் இருப்பிடங்களுக்கோ அல்லது சொந்த ஊர்களை நோக்கியோ நடந்தே செல்லத் துவங்கினார்கள் அவர்கள்.

இந்நிலையில் நேற்று, மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஏழை எளிய தொழிலாளர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் அனைத்து மாநில எல்லைகளும் அடைக்கப்பட வேண்டும் எனவும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே உணவு, தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னரே இச்சிக்கலைப் பற்றி எந்த யோசனையுமின்றி மூழு அடைப்பினை அறிவித்துவிட்டு, பல லட்சம் மக்களை திண்டாட வைத்துவிட்டார் மோடி.

இவை ஒருபுறமிருக்க, பேருந்துகளில் ஏறிய தொழிலாளர்கள் மேலும் சிறுமைப்படுத்தும் வேலையை உ.பி. அரசு செய்துள்ளது. தில்லியில் பேருந்தில் ஏறி உ.பி. மாநில பரேலியில் இறங்கிய அத்தொழிலாளர்களை, சாலைகளில் அமர வைத்து, அவர்கள் மீது மருந்தினை அடிக்கும் காணொளி தற்போது பரவி வருகிறது. அமர்ந்திருக்கும் அனைவரையும் தங்கள் கண்களையும் தங்கள் குழந்தைகளது கண்களையும் மூடச் சொல்லி உத்தரவிடும் அரசு அதிகாரி ஒருவர், கிரும் நாசினியை குழாயின் மூலம் அவர்கள் மீது பீய்ச்சி அடிக்கிறார்.

இது குறித்து பேசிய தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி, ”அவர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமி நாசினிகள் கெமிக்கல்கள் அடங்கியவை. அவை மக்கள் மீது பயன்படுத்தக்கூடியவை அல்ல. அது அவர்கள் கண்களில் படக்கூடாது. நாங்கள் அந்த காணொளியினைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து அறிக்கை ஒன்றை எங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறோம். அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பேருந்துகளுக்காக காத்திருந்த மக்கள் சிலர் அங்கு வந்து அமர்ந்திருக்கலாம். கிருமி நாசினிகள் அவர்கள் மீது நேரடியாகத் தெளிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை”, என்று குறிப்பிட்டார்.

வெளி ஊர்களில் இருந்து வந்த தொழிலாளர்களை சுத்தப்படுத்துவதாகக் கூறி அவர்கள் மீது கெமிக்கல் கலந்த ப்ளீச் மருந்தினை அடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநகரங்களைக் கட்டியெழுப்பிய இந்தத் தொழிலாளர்கள் அதே மாநகரங்களில் திக்கற்றவர்களாகவும், தங்கள் சொந்த அரசுகளாலேயே மனிதத்தன்மையற்று நடுத்தப்படுவதையும் காட்டுகிறது.

தமிழில்: பாலாஜி

https://thewire.in/rights/coronavirus-national-lockdown-migrant-workers-dead

RELATED POST
1 comments
  1. மக்கள் மீது மருந்தெளிப்பு…அழுத்தமாகஇலை

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW