கொரோனா ஒரு சுகாதார நெருக்கடி மட்டும் அல்ல, முதலாளித்துவத்தின் நெருக்கடியும் கூட

2001 ல், பூகம்பத்தால் குஜராத் ஆயிரக்கணக்கான உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .100 கோடியைப் பாதிக்கப்பட்ட பூஜ் நகரில் உள்ள ஜி.கே. பொது மருத்துவமனையை மீண்டும் கட்டிக்கொடுக்க உத்தரவாதம் கொடுத்தார். நாட்டின் நான்கு பிராந்தியங்களில் எய்ம்ஸ் AIIMS மருத்துவமனைகளை அமைக்க வாஜ்பாய் விரும்புவதாகவும், பூஜ் நகரின் மருத்துவமனை எய்ம்ஸ்-வெஸ்ட் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் எய்ம்ஸ்-வெஸ்ட் ஒருபோதும் கட்டப்படவில்லை. மாறாக, பூஜ் நகரில் அரசால் மீண்டும் கட்டப்பட்ட பொது மருத்துவமனையை 2009 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் 99 ஆண்டுக் குத்தகைக்கு அதானி குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் இன்று, குஜராத் அதானி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (GAIMS)ஐ நடத்துகிறது.
நான் ஏன் இப்போது குஜராத் மருத்துவமனை பற்றி பேசுகிறேன்?
ஏனெனில் பூஜ் நகரில் உள்ள ஜி.கே மருத்துவமனைக்கு இந்திய அரசு செய்த்தைத்தான் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிராகவும் செய்துகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் என்பது ஒரு சுகாதார நெருக்கடி மட்டும், இது கோடீஸ்வரர்கள், கார்போரேட்டுகள் மற்றும் முதலாளித்துவத்தின் நெருக்கடி.
இந்த தொற்றுநோய் உலகம் முழுவதும் ஒரு உரையாடலைத் தூண்டியுள்ளது. அந்த உரையாடல் பொது சுகாதாரம் பற்றி பேசுகிறது, உயர் சோதனை மற்றும் ‘சமூக விலக்கம்’ மற்றும் ‘சுய தனிமைப்படுத்தல்’ ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது. அரசு மதுத்துவ ஆராய்சசிகளில் முதலீடு செய்யவேண்டுமென்று மக்கள் வேண்டுகின்றனர். விமான நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு தூய்மையான மற்றும் தரமான அரசாங்க ஏற்பாடுகளை விரும்புகிறார்கள். உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் உயரடுக்கினர் ‘வீட்டிலிருந்து வேலை’, ‘சம்பளத்துடன் கூடிய நோய் விடுப்பு’ கோருகின்றனர்.
முதன்முறையாக, ‘இந்தியக் கோடீஸ்வரர்கள்’ சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படுகின்றனர். ‘அம்பானிகள், அதானிகள் மற்றும் மஹிந்திராக்கள் எங்கே?’ என்று மக்கள் கேட்கிறார்கள். இறுதியாக, ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரிப்பதில் ஈடுபடுவதாக அறிவித்து, தனது ஹோட்டல்களை கோவிட் -19 மருத்துவமனைகளாக இயங்க அனுமதித்துள்ளது.
சொல்லப்படும் செய்தி மிகத் தெளிவாக உள்ளது: எல்லோரும், பணக்கார வர்க்கங்கள் கூட, ஒரு தொற்றுநோய் காலத்தில் சோசலிஸ்டாக மாறிவிட்டனர். பில்லியனர்கள் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியாது என்பதை நாம் உணரும் நேரம் இது , மாறாக மக்களின் அரசால் மட்டுமே முடியும்.
உதவிகளை எதிர்நோக்கும் நிலையிலிருந்து கோரிக்கைகளை நோக்கிச் சிந்திப்போம்
இன்று ஆளும் வர்க்கத்தினரைக் கேள்வி கேட்டு முதல் படி எடுத்துள்ளோம். நாளை, நமது அரசியல் சிந்தனையை பரிதாபப்படுவதிலிருந்தும், உதவிக்கு வேண்டி நிற்பதிலிருந்தும் மாற்றி அரசாங்கங்கள் பில்லியனர்களை அதிகவரி வசூல் செய்யவும்,தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கான உரிமைகளை உறுதி செய்வதற்கும் மாற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை உடனடியாகக் கட்டுப்படுத்த, பணக்காரர்களில் முதல் 1 சதவீதத்திற்கு கூடுதல் வரி விதிக்கச் செய்ய வேண்டும். சமீபத்திய ஆக்ஸ்பாம் ஆய்வு (https://scroll.in/latest/950460/oxfam-report-wealth-of-indias-richest-1-is-four-times-more-than-total-held-by-70-poorest), இந்தியாவின் அடிமட்ட 70 சதவீத மக்களின் செல்வத்தின் நான்கு மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை பணக்காரர்களில் முதல் 1 சதவீதத்தினர் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ரிலையன்ஸ், அதானியின் மின் உற்பத்தி நிலையங்கள், அமேசானின் கிடங்குகள் மற்றும் உபெர் டிரைவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் இவர்கள் அதிக ஊதியம் மற்றும் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும்.
‘தீவிர இடதுசாரிகள்’ MGNREGS தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் 10 கிலோ வரை இலவச உணவு தானியங்களை வழங்க, ஆரம்பகால சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்க அரசாங்க உதவியை முன்மொழிந்தனர். இதற்கிடையில், ஸ்பெயின் தனது அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது, மேலும் இங்கிலாந்தின் அதிபர் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது வேலை செய்யாத பிரிட்டனின் தொழிலாளர்களின் ஊதியத்தில் 80 சதவீதம் வரை அரசு செலுத்துவதாக அறிவித்தார்.
ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 4-5 சதவீதம் சுகாதாரத்துக்காக செலவிடப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், சுகாதார பராமரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.6 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சில முன்னோக்குகளுக்காக, ஒரு சர்தார் படேல் சிலைக்கு ரூ .2,989 கோடியையும், அசாமில் தோல்வியுற்ற குடியுரிமைப் சட்ட நடைமுறைக்கு ரூ .1,100 கோடிக்கு மேல் செலவிட்டோம்.
தெளிவாகும் சாதிய-வர்க்க வேறுபாடு
இங்குதான் கேரளா மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது, இதைநோக்கியே நம் அரசாங்கங்களை கவனம் செலுத்த அழுத்தம் தர வேண்டும். எல்லா மதங்களில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் மோடி அரசு பொது மருத்துவமனைகளில் முதலீடு செய்துள்ளதா அல்லது அதற்கு பதிலாக நிதி – ஆயோக் (Niti Aayog) பாணியிலான ‘பொது-தனியார் கூட்டு’ மூலம் தனியார்மயமாக்கலுக்கு முன்வந்ததா என்று கேட்க வேண்டிய நேரம் இது. விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசாங்கம் எவ்வளவு முதலீடு செய்தது என்று கேட்க வேண்டிய நேரம் இது.
மேலும், இந்தியாவில் பணிபுரியும் நபர்களில் சுமார் 81 சதவீதம் பேர் முறைசாரா பணியாளர்களில் ஒரு பகுதியாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிடுகிறது. தினசரி கூலி சம்பாதிப்பவர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருமே இந்த தொற்றுநோயின் மையத்தில் உள்ளனர். இதைப் படிக்கும் போது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உட்கார்ந்திருந்தாலும், சோமாடோ(Zomatto) மற்றும் ஸ்விக்கி (Swiggy) ஊழியர்கள் அல்லது உங்கள் சமையல்காரருக்கு இன்னும் அரசாங்க பாதுகாப்புகள் மற்றும் வலுவான தொழிற்சங்கங்கள் இல்லை. மேலும் இந்த தொற்றுநோய் காலத்திலும் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும், சாதி ரீதியாக பணிசெய்ய நிர்பந்திக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்
பணக்காரர்களுக்கான சோசலிசம்
2014 முதல், இந்தியாவின் வங்கிகள் ரூ .6,60,000 கோடி மதிப்புள்ள வராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. அண்மையில் தனியார் வங்கியான Yes Bank திவாலாகும் நிலையிலிருக்கும்போது பொத்துத்துறை வங்கியான SBI வங்கி பிணை வழங்க முன்வருகிறது. இவை சொல்லும் சேதி என்னவென்றால், ஒரு அனில் அம்பானி அல்லது சுபாஷ் சந்திரா கடனை திரும்ப செலுத்தாமல் தனியார் வாங்கி சிக்கலுக்குள்ளாகும் போது ,பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறது. எனவே, முரண்பாடு இதுதான் – தனியார்மயமாக்கலின் பயனாளர்களான இந்த ஆளும் வர்க்கம் உண்மையில் சோசலிசத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செயல்படும்போது விரும்புகிறார்கள், அது வெகுஜனங்களுக்கானது அல்ல.
தமிழில்: ராதா
India doesn’t want taali-thali charity from billionaires, it wants Socialist state to act – Jignesh mevani