பாசிசப் போர் மேகம் சூழ்ந்திருக்கு…….தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!

02 Mar 2020

காசுமீர் சிறைவைக்கப்பட்டு 210 நாள் முடிந்துவிட்டது. 80 இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  பாசிச இருள் தில்லியிலும் படரத் தொடங்கிவிட்டது. அது கதவை உடைத்துக் கொண்டு முன்னேறுகிறது. இதோ, உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. திருக்குரான் எரிக்கப்படுகிறது. 85 அகவை மூதாட்டியை உயிருடன் எரிக்கும் இந்துத்துவப் பாசிச பயங்கரம்! அச்சம், அச்சம், அச்சம். அது உத்தரவின்றி உள்ளே நுழைந்து மனத்தின் நடுவினில் இருக்கைப் போட்டு அமர்ந்திருக்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவிடலாம். சக மனிதன் மீது, பக்கத்து வீட்டுக்காரன் மீது நம்பிக்கைப் போய் விட்டால் எப்படி வாழ்வது?

ஆனால், இத்தனை புகைப்படங்களையும் காணொளிகளையும்  பார்த்த பின்னும் தமிழ்நாட்டில் உள்ள பாசக கனவான்கள் எவருக்கும் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லை. குரல் தளரவில்லை, தொண்டை விக்கவில்லை. கணீர் குரலில் எப்போதும் போல கதைக்கிறார்கள். திரிபுராவில் லெனின் சிலையை இடித்ததைப் பார்த்து தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் இப்படி இடிக்கப்படும் என்றவர்கள் இப்போது தில்லியைப் போல் சென்னையிலும் நடக்கும் என்கிறார்கள்.

முகேஷ் அம்பானி உலகின் ஒன்பதாவது பெரிய பணக்காரராய் இருக்க, இந்துத்துவக் காடையர்கள் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு தெருச்சண்டை போட, காவல்துறை கைகட்டி நிற்க, செத்தவனையே குற்றவாளி ஆக்கி, அவனுக்காய் அழுகிறவன் மீது வழக்கு போட்டு ஆட்சி செய்யும் அரசை பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

உறங்கிக் கொண்டிருக்கவோ, செயலற்று இருக்கவோ, அருகில் வரட்டும் பார்க்கலாம் என்றிருக்கவோ, ஓடுற வரைக்கும் வண்டி ஓடட்டும் என்று பார்த்திருக்கவோ இது தருணம் அல்ல, தில்லியில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடல்கள் நம் வீட்டில் எங்கோ ஓர் மூலையில் இருப்பதாய் உணருங்கள்.  எரியூட்டப்பட்டதில் இருந்து எழும் புகைக் காற்று நமது மூக்கை துளைப்பதாய் உணருங்கள். அந்த மரண ஓலங்கள் நம் தெருமுனையில் கேட்பதாய் உணருங்கள்.  அந்த மரண ஓலம் நமக்கு புதிதல்ல..இப்படித்தான் முன்பொருகாலத்தில் தென் திசையில் இருந்து , ஈழத்தில் இருந்து வந்தது. இப்போது வடக்கில் இருந்து வருகிறது. அதே இரத்தம், அதே உடல்கள், அதே கண்ணீர், அதே துயரம்.

பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் எல்லாக் கரங்களும் இணைய வேண்டிய நேரமிது. எல்லா வண்ணங்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை அனுமதிக்கும் எல்லையில் இருந்து கைகளையும் குரலையும் உயர்த்த வேண்டிய நேரமிது. அவர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூச்சல்களை மூழ்கடிக்கும்படி ’சனநாயகம் ஓங்குக’ என்ற நமது முழக்கம் விண்ணைப் பிளக்க வேண்டிய நேரமிது. முகநூலில் மட்டும் இருப்போர் சற்றே முகம்பார்க்கும் களத்துக்கு வாருங்கள். அங்கே ‘fake id’ க்கு இடமிருக்காது. தலையெண்ணிச் சொல்லலாம் சனநாயகத்திற்காக வெளியில் வந்தோர் எத்தனைப் பேரென்று!

வீடு வாசல் இழந்து, வண்டி வாகனங்கள் எரிக்கப்பட்டு, இரத்த உறவுகளை இழந்து அழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்தோடுகையில் சின்னஞ் சிறு இழப்புகளுக்காக சிந்தித்து கொண்டிராதீர். நான் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்று எண்ணிக் கொண்டிராதீர். இனி எல்லாம் கணக்குதான். மக்கள் யார் பக்கம்? பாசிச வெறியர்கள் பக்கமா? இல்லை பாசிசத்திற்கு எதிரான சனநாயகத்தின் பக்கம்? இந்தப் பக்கம் எத்தனைப் பேர்? அந்தப் பக்கம் எத்தனைப் பேர்? இதுதான் பாசிச இயக்கத்தின் எழுச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ தீர்மானிக்கப் போகிறது. வேறுவகையில் சொன்னால் நம்முடைய அழிவையோ அல்லது இருப்பையோ தீர்மானிக்கப் போகிறது.

ஒவ்வொரு களத்தையும் பாசிச எதிர்ப்பிற்கான களமாக்குவோம். பள்ளிகளோ கல்லூரிகளோ பல்கலைக் கழகங்களோ  தொழிற்சாலைகளோ கிராமங்களோ நகரங்களோ வீடோ விளையாட்டுத் திடலோ தேனீர் கடையோ முடிதிருத்தும் நிலையமோ பணியிடமோ பால் வாங்குமிடமோ ஓடும் பேருந்தோ நிற்கும் பேருந்து நிறுத்தமோ இரயில் பயணமோ எதுவாயினும் அங்கே பாசிசப் பயங்கரத்தைப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள். சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்லுங்கள். பொய்ப்புரட்டுகளை போட்டுடையுங்கள், உண்மைகளை உரக்கச் சொல்லுங்கள். இது நியாயமா? இதை ஏற்கிறீர்களா? எது தேசியம்? எது தேசப் பற்று? எது சனநாயகம்?  என்று விளக்குங்கள்.

பாசிச இயக்கத்தின் மிரட்டும் குரலுக்கு மக்கள் அஞ்சுகின்றனர். மாற்றுக் கருத்திருந்தால் எங்கே ‘தேச துரோகி’ என்றிடுவாரோ என்ற பயம். ”பயப்படாதீர்கள், இதுதான் சரி, இதுதான் தர்மம், நாம் இந்தப் பக்கம்தான் நிற்க வேண்டும்” என்று உங்கள் நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்துங்கள்.  எல்லோரும் தன் பக்கம் இருப்பதாகவும் யாரோ சிலர் தான் எதிர்ப்பதாகவும் மாய்மாலம் செய்வது அவர்கள் தந்திரம். அந்த தந்திரத்திற்கு வேட்டு வையுங்கள். பாசிசத்திற்கு எதிரானவொரு படைவீரனாய் இன்றைக்கு ஏதாவதொரு காரியமாவது செய்தோமா? என்று கணக்கு வையுங்கள்.

ஏனென்றால் பாசிசம் பேரழிவை ஏற்படுத்தும். அது நம் வாழ்நாளில் இதுவரை கண்டிராத பெரும் மாந்தப் பேரவலமாய் இருக்கும். இன்றைக்கே ’துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள்’ என்பதை சகஜமாய் சொல்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஒலித்த ’ஜெய் ஸ்ரீராம்’ கூச்சல் போல் ’சுட்டுக் கொல்லுங்கள்’ என்பதும் அங்கே ஒலிப்பதற்கு வெகுநாட்கள் இல்லை. அமித்ஷாவும் அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் இன்னும் சில காலத்தில், ’சுட்டுக் கொல்லுங்கள்’ என்று சொல்லத்தான் போகிறார்கள்.  அப்போது வெறியூட்டப்பட்ட வேட்டை நாய்கள் போல் ஆர்.எஸ்.எஸ். காடையர்கள் வீதியில் இறங்குவார்கள். அவர்களை விரட்டியடிக்கப் போகிறோமா? அல்லது வெறிநாய்களுக்கு விருந்தாகப் போகிறோமா? என்பது ஓரிரவில் முடிவாவதில்லை. இது தேர்வுக்கு முந்தையநாள் படிக்கும் திருவிழாக் கூத்தும் அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருக்க வேண்டிய விசயம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை கருத்தியல் களத்தில் அவர்களின் கைகள் ஓங்காமல் தடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும் ஒவ்வொரு பிரச்சாரமும் ஒவ்வொரு பேச்சும் ஒவ்வொரு சொல்லும் இனி முக்கியத்துவம் உடையதாக மாறுகிறது.

பாய்ந்துவருகிறது பாசிசம். தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!

– செந்தில் இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW