பட்ஜெட் 2020 – மோடி அரசு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன ?

03 Feb 2020

நாடாளுமன்ற வராலற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்,தனது 2020-21  ஆண்டுக்கான சாதனை பட்ஜெட் உரையில் மக்களுக்கு கூறுகிற செய்தி என்ன? சுருக்கமாக பார்ப்போம்.

தனிபர் வருமான வரிச் சலுகை உண்டு! ஆனால் இல்லை!

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கு சலுகை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகிற வரிச் சலுகை அறிவிப்பு உண்மையிலேயே எந்த சலுகைகளும் வழங்கவில்லை.அதாவது நபரின் ஆண்டுவருமானம் 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு 10 விழுக்காடு வரியாக குறைக்கப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர்.ஆனால் வீட்டு வாடகை,குழந்தைக் கல்விக் கட்டணம்,காப்பீடு போன்ற வரிக் கழிவு சலுகைகள் கோராதவர்கள் மட்டுமே இந்த வரி குறைப்பு முறையில் பயன்பெற முடியும்.அப்படி பார்த்தால் பழையமுறையில் வரிக் கழிவுடன் வரி கட்டுகிற தனி நபரே கூடுதல் பலனைப் பெற முடியும்.

எல் ஐ சி பங்கு தனியாருக்கு விற்பனை, ரயில்கள் தனியார் மயம் ,அரசுப் பொது மருத்துவமனை தனியார்மயம்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) வைத்திருக்கும் ஒரு பகுதி பங்குகளை விற்பனை செய்யும் என அறிவித்துள்ளார். அவர்கள் எதையுமே உருவாக்கவில்லை. மாறாக உருவாக்கி வைத்திருந்ததை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டுள்ளார்கள்.  இந்த நாட்டையே விற்றுக் கொண்டுள்ளார்கள் என மோடியின்  அரசின் பொருளாதார அழிவுக் கொள்கையை விமர்சித்து வருகிற  எதிர்க்கட்சிகலைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், தனியாரமயதிற்கு எதிரான பொதுத்துறை ஊழியர்களின் போராட்டங்களுக்கெல்லாம் செவி மடுக்காமல் நாட்டின் அரசுத் துறை தொழில் நிறுவனங்களை ஏகபோக முதலாளி வர்க்கத்திற்கு வேகமாக கூறுபோட்டு விற்கப்படுவது தொடர்ந்துகொண்டுள்ளது.

வேளாண்மையில் பண்ணை விவசாயத்திற்கு ஊக்கமளிக்கப்படும்

பசுமைப் புரட்சியின் வன்முறை, முறையாக அமல்படுத்தப்படாத நிலச் சீர்திருத்தங்கள், வேளாண் பொருட்களின் இறக்குமதி போன்ற காரணங்களால் சீரழிந்துள்ள இந்திய வேளாண் பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளைத் தீர்க்காமல்  சூரிய ஒளி மின்சார மோட்டர்களுக்கு ஊக்கமளிப்பது, விவசாயிகளுக்கு தனி ரயில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் போன்ற மேற்பூச்சு ஆடம்பர  அறிவுப்புகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது

 மாநில அரசிற்கு மத்திய அரசு வழங்குகிற வரி வருவாய்  நிதி வெட்டு

மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய  வரி வருவாய் பகிர்வை குறைத்துள்ளதை  மாநில முதல்வர்கள் கண்டித்துள்ளனர்.மத்திய அரசின் இந்த முடிவால் ஒடீசாவிற்கு வரவேண்டிய சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பதாகவும்,கேரளா 1000  கோடி ரூபாய் இழப்பதாகவும் தெலுங்கான 3731 கோடி ரூபாய் இழப்பதகாவும் அம்மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்தெல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படமால், தமிழக முதல்வரும் துணை முதல்வரும் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்து வருகிறார்கள்.

கூட்டுறவு சங்கங்களுக்கு  வரி அதிகரிப்பு

நாட்டின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கு கார்ப்பரேட் வரியை குறைக்கின்ற அரசு, இந்த பட்ஜெட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு 22 விழுக்காடாக  வரியை அறிவித்துள்ளது. இம்முடிவால் கூட்டுறவு சங்கங்கள் பாதிப்பிற்குள்ளாகும்க என கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிப் பற்றாக்குறை இலக்கு அதிகரிப்பு

2019-20-ம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில்  3.3 விழுக்காடாக இருக்க வேண்டும் என கடந்தாண்டில் மதிப்பிடப்பட்டது.தற்போது இது 3.8 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட கார்பரேட் வரிச் சலுகை போன்ற குறைவான வரி வருவாயால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை உயர்ந்துகொண்டுள்ளது.

இந்த பட்ஜெட் அறிவிப்பில்

  • நாட்டின் பொருளாதார சரிவு குறித்தோ மந்தப் போக்கோ குறித்து எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.எல்லாம் சரியாக செல்வது போல பாவனை காட்ட முயற்சிப்பது கண்கூடாக தெரிகிறது.சரக்கு மற்றும் சேவை வரியாலும்,பணமதிப்பு நீக்கதாலும் இந்தியப் பொருளாதாரம் குறை வளர்ச்சியில் செல்கிறது பன்னாட்டு நிதியகத்தின் இயக்குனர் கிறிஸ்டியான இரு தினங்களுக்கு முன்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பட்ஜெட்டில் வழங்கப்பட்ட பொருளாதார தகவல்கள்(எண்கள்) அனைத்தும் பொய்யாக உள்ளது என பொருளாதார விமர்சகர் தோழர் ஜெயந்தி கோஷ் கூறியதை கவனத்தில் கொள்கையில்,பட்ஜெட்டின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மொத்தத்தில்

வாங்கும் சக்தியை அதிகரிக்க, முதலீட்டை பெருக்கவேண்டும், முதலீட்டை உருவாக்க கார்பரேட் வரியை குறைக்கவேண்டும். வரி வருவாயில்  ஏற்படுகிற நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, எல் ஐ சியை விற்கவேண்டும், மாநிலங்களுக்கு நிதியை வெட்ட வேண்டும், மானியங்களை வெட்ட வேண்டும் அடுத்து வருமான வரிக் குறைவு என நடுத்தர வர்க்கத்தை ஏமாற்ற வேண்டும், விவசாயிகளுக்கு ரயில் என விவசாயிகளை ஏமாற்ற வேண்டும், கார்பரேட்களை குஷிப் படுத்த சில குறிப்பிட்ட பொருட்களுக்கு இறக்குமதிக்கான சுங்க வரியை அதிகரிக்க வேண்டும்,2021 ஆண்டுக்குள் பொதுத்துறை நிறுவன பங்குகளை சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க வேண்டும்,பொருளாதார அழிவை அம்பலப்படுத்துகிற தகவல்களை மறைக்க வேண்டும் அல்லது திரிக்க வேண்டும்.இதுவே இந்த பட்ஜெட்டின் ஒட்டுமொத்த சாராம்சம்.

-அருண் நெடுஞ்சழியன்

 

 

மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

 ஆதாரம்:

https://economictimes.indiatimes.com/markets/stocks/news/fm-says-budget-2020-to-boost-income-and-purchasing-power-key-highlights/articleshow/73830994.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

https://www.indiatoday.in/business/budget-2020/story/budget-2020-telangana-cm-chandrashekhar-rao-kcr-criticise-funds-1642451-2020-02-02

https://www.indiatoday.in/business/budget-2020/story/kerala-unhappy-with-2020-union-budget-1642400-2020-02-01

https://qz.com/india/1794538/budget-2020-india-inc-must-brace-for-a-widening-fiscal-deficit/

https://scroll.in/latest/951792/indian-economy-faced-abrupt-slowdown-in-2019-but-its-far-from-a-recession-says-imf-chief

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW