பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா!
’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை தன் மாமனிடம் விவரிக்கும் பொழுது, ” அவர்கள் என்னை அவமானப்படுத்தினார்கள். ஆனால், ஒருவர்கூட அதை தட்டிக்கேட்கவில்லை. அதுதான் மிகவும் வலிக்கிறது’ என்ற பொருள்பட அவர் அழுதபடியே பேசுவார். எனவே, மனித வரலாற்றில் இதுவரை வலதுசாரிகளும் அரசர்களும் படைபலமிக்கவர்களும் ஆதிக்கம் செலுத்தும் போதும் அடக்கியாளும் போதும் பாதிக்கப்படுபவர்களுக்கு துணையாக எழக் கூடிய எதிர்ப்புக் குரல்களும் நடவடிக்கைகளும்தான் வரலாற்றை முன்னோக்கி நகர்த்தி வந்துள்ளது.
1992 திசம்பர் 6 இல் இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டும் அல்ல, இந்தியா எல்லா சமயத்தவர்களுக்குமான நாடு என்ற வரலாற்றுவழி உண்மையையும் ஒருவருக்கு ஒருவர் தம்மிடையே கொண்டிருந்த நம்பிக்கையும் அத்தகைய மக்களுக்கு இடையே நிலவிவந்த நல்லிணக்கம்தான். ராமர் அங்கே பிறந்தாரா? இல்லையா? என்பதற்கு சான்றுகள் இல்லை, அதைக் கண்டவரும் இல்லை. இராமனுக்கு அங்கே கோயில் இருந்ததா? என்பதை கண்டவரும் இல்லை, சான்றுகளும் இல்லை. பிறகு அப்படியொன்று இருந்து அது இடிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனால், 500 ஆண்டுகாலமாக அங்கே ஒரு மசூதி இருந்தது. அந்த மசூதி பயன்படுத்தப்படாத ஒன்று என்பதற்கும் சான்றுகள் இல்லை. 1857 முதல் 1949 வரை அந்த மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் உண்டு, நடத்தப்பட்டதைக் கண்டவர்கள் உண்டு, சான்றுகளும் உண்டு. அந்த மசூதி உலகமே பார்க்க மதவெறியர்களால் இடித்துத் தள்ளப்பட்டது. எனவே, இதற்கு ஒரு ஈடுசெய் நீதியை நீதிமன்றம் அளிக்கும் என்பதே நல்லிணக்கத்தையும் நீதியான அமைதியையும் சனநாயகத்தையும் விரும்புவோர் எதிர்ப்பார்த்தாகும். ஆனால், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைப் பொய்த்துப் போய்விட்டது. இப்போது அடுத்த கேள்வி, நீதிமன்றத்திடம் இருந்து நீதியை எதிர்ப்பார்த்தவர்களும் பொய்த்துப் போய்விட்டார்களா? என்பதே ஆகும்.
எங்கெல்லாம் ஆதிக்கம் வெற்றிகொள்கிறதோ அங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் போதனைகள் வழங்கப்படுகின்றன. அமைதி காக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதுதான் ஈழத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. படுகொலைகளை நிகழ்ந்தியவர்கள் அதற்காகவென்று ஒருதுளி கண்ணீரும் சிந்தவில்லை, ஒரு வாய்ச்சொல் மன்னிப்புக்கூட கோரவில்லை. ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீளிணக்கம் காணச் சொல்கிறார்கள். அதையே தான், பாபர் மசூதி இடிப்பிலும் சொல்கிறார்கள். ஒருவேளை இந்துக்களுக்கு உரிமைகோருபவர்கள், மசூதியை இடித்தவர்கள், ரத யாத்திரை நடத்தியவர்கள் மன்னிப்போ வருத்தமோ கோரியிருந்தால்கூட பரவாயில்லை? அதுவும் நடக்கவில்லை. எந்த நீதிமன்றம் நிலத்தின் உரிமையை ராமனுக்கு கொடுத்ததோ அதே நீதிமன்றம் மசூதியை இடித்தது பெருங்குற்றம் என்கிறது. ஆனால், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் இந்துத்துவ ஆற்றல்கள் நீதிமன்றத்தின் வழியாகப் பிரச்சனையைத் தீர்க்காமல் மசூதியை இடித்தது குற்றமென்று வருத்தம் தெரிவிக்க இல்லை. ”இதுதான் கடைசி இனி இந்தியாவில் எந்தவொரு வழிபாட்டுத் தளத்திற்கும் இப்படி நேராமல் இருப்பதற்கு தாம் பொறுப்பு” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறவில்லை. ”காசி, மதுரா மசூதிகளை அடுத்து கையில் எடுப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்கும் போது ’அது எங்கள் வேலை இல்லை’ என்று சொன்னார். அதாவது அந்த ’உழவாரத் திருப்பணியை’ மேற்கொள்ள வேறு அமைப்புகள் இருக்கின்றன என்று சொல்லாமல் சொல்கிறார். அப்படியொன்று நடக்குமாயின் அதை முதலில் எதிர்ப்பது ஆர்.எஸ்.எஸ். ஆகத்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தால் நல்லிணக்கத்தின் முதல்படியாக அது அமைந்திருக்கக் கூடும். கரசேவைக்காரர்கள் ஒருவர் கூட எதிர்காலம் பற்றி எந்த உறுதிமொழியையும் தராத நிலையில் அவர்களை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் ‘மதசார்பற்ற’ காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்காக இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சொல்கிறார்கள்? இந்த ஒட்டுமொத்த கதையில் இந்துத்துவ ஆற்றல்கள் பெற்றிருக்கும் வெற்றி அவர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் மிகப்பெரியது. அந்த ஊக்கத்திற்கு சேவை செய்வதுதான் இந்த தீர்ப்பை வரவேற்பதும், அமைதி காக்க சொல்வதும் ஆகும். நீதியின்றி நல்லிணக்கம் இல்லை. உண்மையிலேயே நல்லிணக்கத்தை மீள உருவாக்க வேண்டுமானால் இந்த தீர்ப்பை எதிர்த்து நிற்பதை தவிர வேறு வழியில்லை.
சனநாயகம் என்பது தலை எண்ணும் புள்ளி விவரம் அல்ல. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவதல்ல. பெரும்பான்மையினரின் பேராசைகளுக்கும் வெறித்தனத்திற்கும் கொள்ளைக்காரத்தனத்திற்கும் சிறுபான்மையினர் விட்டுக்கொடுக்க வேண்டும், அனுசரிக்க வேண்டும், அடங்கி போக வேண்டும் என்பவர்கள் சனநாயகத்தைத் தான் முதலில் தூக்கில் ஏற்றுகிறார்கள். மாறாக சிறுபான்மையினரின் நியாயமான விருப்பங்களை, உரிமைகளை, பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவற்றிற்கு இடமிருப்பதும் அதற்காக பெரும்பான்மையினர் அனுசரித்துப் போவதும் தான் சனநாயகம். இந்துப்பெரும்பான்மைவாதம் தானே அதனால் நமக்கு என்ன வந்தது என்று இஸ்லாமியர் அல்லாதவர்கள் கருதிக்கொள்வார்களே ஆயின் அது தற்கொலைக்கு சமம். ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் சிறுபான்மையினராக இருக்கிறோம். எந்த ஏரணத்தின்படி இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறதோ அதே ஏரணத்திற்கு மக்கள் பழக்கப்படுவதால் அதன்படி வேறொரு தருணத்தில் இன்னொரு சிறுபான்மைப் பிரிவினரின் உரிமைப் பறிக்கப்படும். அம்பேத்கர் அரசமைப்பு சட்டத்திற்கு ஓர் அடிப்படையை வழங்குவது போல் ’அரசும் சிறுபான்மையினரும்’ என்ற நூலை எழுதினார். அதில் அவர் தாழ்த்தப்பட்டோர் சிக்கலை சிறுபான்மையினர் பிரச்சனையாக கையாள்கிறார். எனவே, சாதிய சமூகத்தில் தாழ்த்தப்பட்டார் சிறுபான்மையினராகிவிடுகின்றனர். தாழ்த்தப்பட்டோரில் அருந்ததியர் சிறுபானமையினராகி விடுகின்றனர். பலநேரங்களில் குடும்பத்திற்கு வெளியே பெண்கள் சிறுபான்மையினராகிவிடுகின்றனர். கர்நாடகாவிலும், மராட்டியத்தில் தமிழர்கள் சிறுபான்மையினர். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் சிறுபான்மையினர். இவையன்றி வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு அளவுகோல்களின்படி ( கொள்கை, விருப்பங்கள் இன்னபிறவற்றால்) நாம் சிறுபான்மையினராக இருந்து வருகிறோம். எனவே, இந்துப்பெரும்பான்மைவாதத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையைப் பலிபீடத்தில் ஏற்றுவதை நியாயப்படுத்துபவர்கள் இதே பெரும்பான்மைவாத ஏரணத்தின்படி தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்குவதாகும்.
செயலுத்தியின் பெயரால் பகுத்தறிவாளர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட்களும் கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், மதச்சார்பின்மை என்ற விழுமியத்திற்கோ அல்லது அதை தாண்டி நீதி, நியாயத்திற்கோ இவர்களைவிட உறுதியாக நின்றவர்களாக இருவர் என் கண்ணுக்கு தெரிகின்றனர். தன்னை ராம பக்தனாக அறிவித்துக் கொண்ட காந்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இந்துக்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்பதற்காக அவர் அஞ்சவில்லை, எந்த நேரத்திலும் இந்த மதவெறியர்களிடம் சரணடையவும் இல்லை. இன்னொருவர், அயோத்தியில் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராமனுக்கென்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி லால் தாஸ். இந்துக்களின் நம்பிக்கையைப் பொருத்தவரை ஒரு கல்லை வைத்து அதை கடவுள் என்று மக்கள் வழிபடத் தொடங்கிவிட்டால் அந்தக் கல் தெய்வீகத் தன்மைப் பெற்றுவிடும். எனவே மசூதியை இடித்து அந்த இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சொல்வது அரசியல் என்று சொன்னார். இதற்காகவே ஒரு நள்ளிரவில் அவர் காவிக்கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். தான் நம்பும் ஆன்மீகத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் லால் தாஸ்கள் காட்டிய உறுதியைக்கூட மதச்சார்பின்மை, சனநாயகம், பகுத்தறிவு போன்ற கொள்கைகளைக் கொண்ட நம்மவர்கள் காட்டத்தவறுவது சரியா? உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்டவரும் சரி பொருள்முதல்வாதிகளும் சரி இந்த தீர்ப்பை எதிர்க்காமல் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
என்.ஐ.ஏ., முத்தலாக், காஷ்மீர் 370 என ஒவ்வொன்றிலும் நம் மெளனம் தந்த ஊக்கத்தில்தான் இப்போது பாபர் மசூதி வழக்கிலும் தமக்கு சாதகமான ஒரு தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்துவா. தீர்ப்பை விமர்சித்து முகநூலில் எழுதினால்கூட கண்காணிக்கிறது அரசு. இன்னும் எதற்காக சனநாயக ஆற்றல்கள் காத்திருக்கிறார்கள்? இந்த தீர்ப்பை வரவேற்பதும் அமைதி காப்பதும் இந்துத்துவத்திற்கு ஒத்துழைப்பதாகும். இந்துத்துவ அரசியலை முறியடிப்பதற்கு சரியான உத்தியாகாது(tactics)
மசூதியோடு சேர்த்து இடிக்கப்பட்ட நம்பிக்கையையும் நல்லிணகக்த்தையும் கட்டியெழுப்புவதற்கு இந்தக் கள்ள மெளனம் உதவாது. ”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க இந்நேரத்தில் அநீதிக்கெதிராக நிற்பதுதான் உண்மையான தோழமையாகும். வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு இடையேயான நல்லிணக்கமும், ஒருவர் பால் ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும் இந்த அரசமைப்புச் சட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் மூத்தது. எனவே, அந்த நம்பிக்கையை,யும் நல்லிணக்கத்தையும் இந்த அரசமைப்பின் பெயராலும் நீதித்துறையின் பெயராலும் கெடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்கு இந்த அரசமைப்புச் சட்டமும் நீதிமன்றமும் தொண்டாற்றும் வரைதான் அதற்கு மதிப்பு. எப்போது அவை கொலைகாரர்களின் திரிசூலத்திற்கும் கத்திக்கும் அஞ்சி தீர்ப்பு வழங்கியதோ அப்போதே அதுஅதன் மதிப்பை இழந்துவிட்டது. எனவே, நூற்றாண்டுகளாக நாம் பேணிவந்த நல்லிணக்கமும் நம்பிக்கையும் சேதப்பட்டிருப்பதை சீர்செய்வதற்கு ஒரேவழி தீர்ப்பை எதிர்ப்பதுதான். இது சமகால தலைமுறையின் கடமை. இல்லையென்றால் நாம் எதிர்கால தலைமுறையின் அமைதியான வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறியர்களாக காணப்படும்.
எனவே, பாபர் மசூதி தீர்ப்பை எதிர்ப்போம்! எதிர்ப்புக்கு செயல் வடிவம் கொடுப்போம்! நாளை நவம்பர் 21 மாலை 3 மணிக்கு சேப்பாகக்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பார்ப்பட்டத்தில் அணிதிரள்வோம்! பிறிதின் தன்னோய் போல் போற்றாத அறிவினால் பயனில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவி வரும் கள்ள மெளனத்தை உடைப்போம்! எதிரிகளின் பரப்பிவரும் அச்சத்தை தூள் தூளாகுவோம்!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
-செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499