பேய் அரசாண்டால் – சஞ்ஜீவ் பட்களும், சாய்பாபாக்களும் சிறையில்! பிரக்யாசிங் நாடாளுமனறத்தில்!

04 Aug 2019

சஞ்ஜீவ்பட் என்ற பெயர் இந்திய அரசியல் வானில் அரசின் எதேசதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் போர்ப் பறைகளில் ஒன்று. மோடி-அமித்சாவின் வெற்றியின் இறைச்சலுக்கு மத்தியிலும் அவர்களுக்கு இந்த ஒலி நாராசமாய் ஒலிக்கிறது. அதை அடக்க சிறைத்தண்டனை விதித்து இருக்கிறது மோடியின் அநீதிமன்றம். ஆனால், பட்டோ குஜராத்தின் குறுநில மன்னனாக மோடி இருந்தகாலம் தொட்டு இந்தியப் பேரரசின் சர்வல்லமை பொருந்திய சாயின்சாவாக இருக்கும் காலம்வரை உண்மையின் வலிமையோடு அநீதிக்கு எதிராக ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடும் நேர்மையான அரசதிகாரி.

2002 குஜராத் மாநிலத்தில் கோத்தரா ரயில் எரிப்புக்குப் பின்னான மதக்கலவரத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த கலவரத்திற்கு சட்ட அங்கீகாரமும்,  சட்டப் பாதுகாப்பும், உதவியும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்ட கூட்டத்தில் பங்குகொண்டவர் பட். ஆனால், அவரால் இந்த மதப்படுகொலைகளைத் தடுக்க முடியாமல் ரத்த சாட்சியாய் மட்டுமே இருக்க முடிந்தது. இந்திய நீதிமன்றத்தின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையால் நியாயம் கிடைக்கும் என்று நீதிமன்றங்களின் படிகளை ஏறி மூட்டுதேய்ந்ததுதான் மிச்சம். அதற்குள் மோடி-அமித்சா நாசகரக் கூட்டணி நாட்டின் தலைமை மந்திரியாகி விட்டது. எந்த அரசியலமைப்பைப் பட்  நம்பினாரோ அந்த அரசியலமைப்பைப் பயன்படுத்தி அவருக்கு தண்டனை வழங்குகிறது மோடி அரசு. முதலில் வேலைக்கு சரியாக வரவில்லை என்று காரணம் காட்டி வேலையைப் பறித்தது. அதற்கு பிறகும் பட் அடிபணிய மறுத்ததால் இரண்டாம்முறை ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஜாம்நகர் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ASP) இருந்த பட் தலைமையிலான காவல்துறை மதக் கலவரத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதில் பிரபுதாசு வைசுனணி  இறந்துபோனார். அந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பக்கம் உண்மை இருக்கிறது. அதனால் துணிந்து எதிர்த்து நிற்கிறார். சர்வல்லமை பொருந்திய மோடி அவரைத் தற்காலிகமாக தடுக்கலாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு அடக்க முடியாது. இதே அரசியலமைப்பு முறையிலே நாம் மக்களுக்கான ஜனநாயகத்தைப் படைக்கமுடியும் என்று நம்பி ஏமாறாமல் மக்கள் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாடம் சொல்லித்தரும் பேராசிரியர் மீது ஊபா சட்டம்

சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில வகுப்பு எடுக்கும் பேராசிரியர். 90 % செயல்பட முடியாத மாற்றுத்திறனாளி. வறியக் குடும்பப் பின்னணி கொண்ட சாய்பாபா தன் வாழ்க்கையின் கடினமான சூழலில் படித்துப் பேராசிரியாகவும் முன்னேறியவர். சமுதாயப் பற்றுகொண்டதனால் கருத்து தளத்திலும், மாணவர் மத்தியிலும் உலகளாவிய இடது, ஜனநாயக அறிஞர்கள் மத்தியிலும் நன்கு அறியபட்டவர்; பழங்குடிகளுக்கு எதிரானப் பசுமை வேட்டைக்கு எதிரானப் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்; பழங்குடி மக்களுக்கு எதிராக அரசால் உருவாக்கப்பட்ட சல்வாஜுடும் என்ற அமைப்பை எதிர்த்துப் போரடியவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதய உள்துறை அமைச்சகத்தை உச்சநீதிமன்றம் கண்டித்தது. சல்வார்ஜுடும் போன்ற அமைப்பை அரசே உருவாக்கியது ஜனநாயகம் அற்றசெயல் என்று நீதிமன்றம் காரி துப்பியது. அந்த அமைப்பை எதிர்த்துப் போராடியவர் சாய்பாபா. அதுமட்டும் இல்லாமல் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் இடதுசாரி. அவர்மீது அரசுக்கு எதிராக போர் தொடுத்தார் என்று குற்றம்சுமத்தி ஊபா சட்டத்தில் சிறையில் அடைத்து வாழ்நாள் தண்டனை வழங்கி இருக்கிறது பாசிச மோடி அரசு. சாய்பாபா குற்றவாளி என்றால் சல்வாஜுடும் அமைப்பைக் கலைக்க சொன்ன நீதிபதிக்கும் இந்த மக்கள் விரோத பாசக அரசு தண்டனை கொடுக்க வேண்டும். அவர் மீது எந்தஆதாரமும் இல்லாமல் எந்த சாட்சியும் இல்லாமல் வேறோரு வழக்கை அதுவும் திருட்டு வழக்குக்காகப் பக்கத்துவீட்டில் வசிக்கும் நபரின் வீட்டை சோதனையிடும்போது இவர் வீட்டையும் சோதனை செய்து இடதுசாரி தத்துவங்கள் கொண்ட புத்தகமும் ஹார்ட் டிஸ்க்கும் கைப்பற்றப்பட்டதாகவும் அதில் நிறைய ஆதாரம் இருப்பதாகவும் கூறி அவரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனையும் வழங்கியது மோடி அரசு. போதிய அடிப்படை மருத்துவ வசதிகளும்,கழிவறை வசதியும் இல்லாமல் அப்பட்டமான விதிமீறல்கள் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார் சாய்பாபா. விஜய்மல்லையா இந்திய சிறைகளில் இருப்பது மனித உரிமை மீறல் என்று வெளிநாட்டில் இருந்து கொண்டு சொன்னவுடன் ’சகல வசதிகளும் செய்து விட்டோம்’ என்றது இந்திய அரசு மக்கள் பணத்தைல் கொள்ளை அடித்த கோமானுக்காக மக்கள் வரிபணத்தில் சிறை வசதிகளைச் செய்தது மத்திய அரசு, இன்றுவரை அவரைக் கைது செய்யவில்லை என்பது வேறுகதை. மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் மாமனிதர் சாய்பாபார். அது மட்டுமின்றி தனது ஊனம் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னாள் துச்சம் என்று துணிந்து போராடுபவர். முதலாளித்துவ அரசை தூக்கி எறிந்து தொழிலாளர் தலைமையிலான மக்களுக்கான குடிஅரசுதான் விடியல் தரும் என்று நம்புவோது அதை நடைமுறைப்படுத்த துடிக்கும் மார்க்சியவாதி சாய்பாபா. இது ஒன்று போதும் பாசிச சக்திகள் இவரை ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்ய. வேங்கையைக் கண்டு அஞ்சி நடுங்கும் நரிக்கூட்டம் சதி செய்து குப்புறத்தள்ளியது

குண்டு வெடிப்பு நடத்தி 4 பேர் படுகொலை, 79பேர் காயமடைய காரணமானவர் பிரக்யா சிங் தாக்கூர் – நாடளுமன்ற உறுப்பினர் பதவி

இசுலாமியர் அதிகமாக வாழும் பகுதியான மாலேகானில் 2008ல் குண்டு வெடிக்கச் செய்து 4 இசுலாமியர்களைப் படுகொலை செய்து,79 பேர் காயமடையக் காரணமானவர் பிரக்யா சிங் தாக்கூர். அவர் நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் திக் விஜய் சிங்க்குக்கு எதிராகப் போட்டியிட்டு எம்.பி,யானவர் பிரக்யா. சமூகம்  பாசிசமயம் ஆவதற்கானப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் அறிகுறிதான் இது. இவர்தான் குற்றவாளி என்பதற்கு எல்லா ஆதாரங்கள் இருந்தும் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யாவுக்கு சொந்தமானது. அதுமட்டும் இல்லாமல் அசிமானந்தாவின் வாக்குமூலத்தின்படி மாலேகான் குண்டுவெடிப்பு மட்டுமல்ல சம்ஜூதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் பிரக்யா சிங்கிற்கு பங்கு உண்டு என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரையும் இந்த மோடி அரசாங்கம் விடுவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு. மோடியின் முதல் 5 ஆண்டுகளில் பிரக்யாவை விடுவித்தது மக்களவைக்குப் போட்டியிட இடம் கொடுத்தது. அவர் எம்.பி. ஆக்கபட்டுள்ளார் இரண்டாம் 5 ஆண்டுகளில் அவர் எம்.பியாக ஆனது இந்துத்துவ அரசில் ஒன்றும் வியப்பில்லை சாத்தானின் அரசவையில் ரத்த வெறிப்பிடித்த ஒநாய்கள் இடம் பெறுவது.

 

பாசிச சக்திகள் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்து இருக்கிறது இன்னமும் நிறைய பட்டுகளும், சாய்பாபாக்களும் சிறைப்படுத்தபடுவார்கள். பிரக்யாக்கள் அமித்சாக்களிடம் மேலும் பதவிகளும், அதிகாரங்களும் குவிக்கபடும். மாட்டின் பெயராலும்,ராமனின் பெயராலும் மக்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாகும், திமுக, அதிமுக, காங்கிரசு கட்சிகளும் வேடிக்கை பார்க்கும் அல்லது சலாம் போடும் இல்லை என்றால் காணாமல் போவார்கள். இவர்கள் தான் இந்த பாசிச சக்திகள் அரியணையேற காரணமானவர்கள் அவர்களுக்குப் பாதை அமைத்து தந்தவர்களும் இவர்கள்தான். வரும் காலம் சவால் நிரம்பியதுதான் ஆனால் எதிர்கொள்ள  முடியாதது அல்ல! பொய்யும், புரட்டும் கொண்டு மக்கள்விரோத சக்திகள் எந்தவித பயமுமின்றி நம்மை அடக்கி ஆள முயல்வர். உண்மையும் மக்கள் மீது மாளாக் காதலும் கொண்ட பட்களும், சாய்பாபாக்களும் முளைத்து கொண்டே இருப்பார்கள். மோடிக்களும், அமித்சாக்களும், பிரக்யாசிங்குகளும் வீழ்த்தப்படுவது நிச்சயம். மோடிக்கு பட்  எழுதிய கடிதத்தில் வரும் புச்சங் சோனத்தின் (எம்.ஸ்.பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்) கவிதையே சான்று.

என்னிடம் கொள்கையுண்டு ஆனால் அதிகாரம் இல்லை

உங்களிடம் அதிகாரம் உண்டு ஆனால் கொள்கை இல்லை

நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்

நான் நானாக இருக்கிறேன்

சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

அதனால் போராட்டம் தொடரட்டும்.

 

என்னிடம் உண்மையுண்டு ஆனால் படை இல்லை

உங்களிடம் படை உண்டு ஆனால் உண்மை இல்லை

நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள்

நான் நானாக இருக்கிறேன்

சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

 

நீங்கள் என் மண்டையை உடைக்கலாம்

நான் போராடுவேன்

நீங்கள் என் எலும்பை நொருக்கலாம்

நான் போராடுவேன்

நீங்கள் என்னை உயிருடன் எரிக்கலாம்

நான் போராடுவேன்

உண்மை என்னுள் ஒடுவதால்

நான் போராடுவேன்

என் இறுதி பலம் இருக்கும் வரை

நான் போராடுவேன்

என் இறுதி முச்சு உள்ளவரை

நான் போராடுவேன்

என் போராட்டம் தொடரும்

உங்கள் பொய்யால் கட்டப்பட்ட கோட்டை சுக்குநுறாகும் வரை

உண்மை என்னும் என் தேவதை முன்னால் நீங்கள் பொய் சொல்லி வணங்கும் சாத்தான் மண்டியிடும் வரை போராடுவேன்!

 

ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW