குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட மதுரை ஜெயராணிக்கு துணை நிற்போம்!
சென்னை சேப்பாக்கம், அருணாச்சலம் தெரு, செட்டியார் காம்பவுண்ட்டில் வசிக்கும் பாபுராஜ் என்பவரின் வளர்ப்பு மகன் காளீஸ்வரன் என்பவருக்கும்,
மதுரை, பெத்தானியாபுரம், திலீபன் தெரு, மேட்டுத் தெருவில் வசிக்கும் டீ மாஸ்டர் ஜெயபால் என்பவரின் 4ஆவது மகள் ஜெயராணி என்பவருக்கும் 19-02-2018 அன்று இருவீட்டார் சம்மதத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.
மாமனார், மாமியார், மூன்று நாத்தனார்கள் ஆகியோருடன் குடும்ப வாழ்க்கை! காளீஸ்வரனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து, பிரிந்து விட்டதை மறைத்து ஜெயராணியைத் திருமணம் செய்தது பின்னர்தான் தெரிய வந்துள்ளது. பெற்றோர், உறவினர்களை சந்திக்க ஜெயராணியை கணவரது குடும்பம் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.
20-01-2019 அன்று தனது வீட்டு மாடியிலிருந்து மாமியார் உள்ளிட்டோரால் தள்ளிவிடப்பட்டு, கீழே விழுந்து மயக்கமுற்றுச் சுற்றியுள்ளவர்களால் 108 ஆம்புலன்சுக்குச் செய்தி கொடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை, பின்னர் குடும்பத்தினர் சென்னை MIOT இண்டர் நேசனல் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ’தானே தவறி விழுந்ததாகச்’ சொல்ல வைத்துள்ளனர். இடுப்புக்குக் கீழே எந்த அசைவும், உணர்வும் இல்லாமல் கிடந்த ஜெயராணியை. தகவலறிந்து பார்க்க வந்த ஜெயராணியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சந்திக்க முடியாமல் திணறியுள்ளனர்.
09-02-2019 அன்று சென்னையிலிருந்து மதுரை அழைத்து வந்துள்ளனர். மதுரை காவல் ஆணையரிடம் ஜெயராணியின் தந்தை புகார் அளிக்க கீழே கொண்டுவரப்பட்ட ஜெயராணியிடம் காவல்துறை நேரடியாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். திலகர் திடல் துணை ஆணையாளரிடம் அனுப்பப்பட்டு, பின்னர் கரிமேடு காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கரிமேடு காவல் நிலையத்திலிருந்து இரு பெண் காவலர்கள் நேரடியாக வீட்டிற்குச் சென்று விசாரித்து, எழுத்து மூலம் வாக்குமூலம் வாங்கிப் படுக்கையில் இருந்த ஜெயராணியிடம் கையெழுத்துப் பெற்றனர். காவல்துறை வழிகாட்டலில் மதுரை அரசு மருத்துவமனையில் 90 பி வார்டில் சேர்க்கப்பட்டார். வழக்கம் போல் காளீஸ்வரன் குடும்பத்தினரின் மிரட்டல் மற்றும் கரைவேட்டிகளின் இடைத்தரகு வேலைகள் நடந்தன.
அவரது தந்தை ஜெயபால் முறையீட்டின் பேரில் தமிழ்நாடு பெண்கள் இயக்க அமைப்பாளர் தோழர் ஆரோக்கியமேரி மற்றும் தோழர்கள் மருத்துவமனையில் ஜெயராணியை நேரடியாகச் சந்தித்து விசாரித்ததுடன் வழக்கை முன்னகர்த்தி வருகின்றனர். ஜெயராணியின் தந்தை மற்றும் சகோதரிகளின் கணவர்கள் கோட்டைச்சாமி, ஆசைத்தம்பி ஆகியோருடன் திலகர் திடல் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று சந்தித்து வலியுறுத்தினர். விசாரணை அறிக்கை சம்பவம் நடந்த சென்னை காவல்துறைக்கு அனுப்பப்படும் எனக் கூறினர்.
அதற்கு பிறகு சென்னை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மதுரை காவல் ஆணையாளர் விசாரணை அறிக்கை குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். தேர்தல் காலகட்டம் என்பதால் விசாரணை அறிக்கை மதுரையில் இருந்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்து சேர பல நாட்கள் பிடித்தது. பிறகு 15.04.2019 தேதியிட்ட மதுரை காவல் துறை விசாரணை அறிக்கை திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. திருவல்லிக்கேணி காவல் நிலைய அதிகாரிகள் ஆயிரம் விளக்கு பெண்கள் காவல் நிலையத்திற்கு புகாரை மாற்றியதாக கூறினார்கள். ஆயிரம் விளக்கு பெண்கள் காவல் நிலையத்திற்கு 24.04.2019 அன்று ஜெயராணியின் தந்தை ஜெயபால் அவர்கள் நேரில் வந்து விரிவாக வாக்கு மூலம் அளித்தார். பெண்கள் காவல் நிலைய அதிகாரி 2 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிகிறோம் என்று கூறினர். இரண்டு நாட்களுக்கு பிறகு பேசியபோது சரியான தகவல் கிடைக்க வில்லை. பிறகு மறுபடியும் பல நாட்கள் தொடர் முயற்சிகளுக்கு பிறகு திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்திற்கு நேரிடையாக சென்று கேட்டபோது முதல் தகவல் அறிக்கை பதிந்து விட்டதாக காவல் நிலையத்தில் கூறினர். முதல் தகவல் அறிக்கை எண் 292/2019 என்றனர்.
முதல் தகவல் அறிக்கை நகல் வேண்டும் எனக் கேட்டபோது இணையத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினர். ஆனால், இணையத்தில் தேடியபோது தகவல் கிடைக்க வில்லை. பிறகு தான் தெரிந்தது முதல் தகவல் அறிக்கை இன்னும் இணையத்தில் ஏற்றப்பட வில்லை என்பது. தொடர் முயற்சிகளுக்கு பிறகு 292/2019 இணையத்தில் ஜூன் மாதம் பதிவேற்றப்பட்டது. ஆனால், ஜெயராணியை காளீஸ்வரன் குடும்பத்தினர் மிரட்டியதால் ‘தானே மாடியில் இருந்து விழுந்து விட்டதாக’ கூறிய அந்த வாக்கு மூலத்தை நேரிடையாக பெற்றதாக திருவல்லிக்கேணி D1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகாய அனிசா முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறார். இந்த முதல் தகவல் அறிக்கை 27.04.2019 தேதி பதிவு செய்யப்பட்டதாக உள்ளது.
மதுரை காவல் ஆணையாளர் சார்பில் அனுப்பப்பட்ட விசாரணை அறிக்கையும், ஜெயராணியின் தந்தையை விசாரித்த அறிக்கை இரண்டையும் புறந்தள்ளி ஜெயராணியின் கணவர் காளீஸ்வரன் குடும்பத்தினர் அழுத்தத்திற்கு பலியாகி திருவல்லிக்கேணி காவல் நிலைய அதிகாரி அநீதியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து இருக்கிறார். பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டு இருக்கின்ற இந்த கால கட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. காவல் துறையும் நீதித்துறையும் தான் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ளனர். ஜெயராணி ஏழைப்பெண் என்பதால் கணவர் குடும்பத்தினரின் கொலை முயற்சி மூடி மறைக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு நீதி கிடைப்பதையும் தடுக்கவும் திருவல்லிக்கேணி காவல் நிலைய அதிகாரிகள் துணை போய் இருக்கிறார்கள்.
ஜனவரி மாதம் நடந்த குற்றச் செயலுக்கு 6 மாதங்களுக்கு மேலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே அலட்சியப்படுத்துகிற தமிழக காவல் துறையின் செயல்பாட்டை தமிழ் நாடு பெண்கள் இயக்கம் வன்மையாக் கண்டிக்கிறது.
தமிழக அரசே,
ஜெயராணியை மாடியில் இருந்து பிடித்துத் தள்ளி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் குடும்பத்தினர் அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்
ஜெயராணி கணவர் குடும்பத்தினரை பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்
ஜெயராணியின் மருத்துவ உதவிக்கும், பிற்கால வாழ்க்கைக்கும்
நிவாரணம் வழங்கு.
பெண்களே!
வீட்டிலும்,வீதியிலும் நம் மீதான வன்முறைகளுக்கு எதிராக அமைப்பாகிப் போராடாமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியாது.
வாழ்க்கை பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் ஜெயராணிக்குத் துணை நிற்போம்!
தோழமையுடன்,
தொ.ஆரோக்கிய மேரி,
அமைப்பாளர்,
தமிழ்நாடு பெண்கள் இயக்கம்
பேச: 94869 53557