திசம்பர் 6 – அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு நாள் கட்டுரை – எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன?

07 Dec 2018

சமூக வளர்ச்சிக்கு சாதியமைப்பு தடையானதென்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சிந்தனையின் மலைமுகட்டைத் தொட்ட மாபெரும் வரலாற்று ஆளுமையாக இந்தியாவின் புதுமக் கால அரசியலில் அம்பேத்கர் காட்சி தருகிறார். அவர் மறைவுக்குப் பின்னான இந்த 62 ஆண்டுகளில் சர்வதேச அரசியலும் இந்திய அரசியலும் நெளிவு சுளிவான வளர்ச்சிப் பாதையில் அதிரடி திருப்பங்களுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பல்வேறு அரசியல் நீரோட்டங்கள் சாதி ஒழிப்பு என்ற இலட்சியத்தின் பொருட்டே கருத்துத் தளத்தில் முட்டிக் மோதிக் கொண்டிருக்க காண்கிறோம். சாதியடிப்படையில் அடித்தட்டுகளில் இருக்கும் மக்களின் பெருவிருப்பாக சாதி ஒழிப்பு என்னும் இலட்சியம் வளர்ந்து நிற்கிறது. ஆயினும் புறநிலை உண்மைகள் மென்மேலும் சிக்கலானதாக உருப்பெற்று வரக்காண்கிறோம்.

கடந்த கால வரலாற்றுக்குள் பயணித்து புதிய புதிய உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள் ஆய்வாளர்கள். 133 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு வட்டார அளவில் குறிப்பான வரலாற்றுப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சி நடந்து வருகிறது. சாதி வாழ்க்கையை சமூக வாழ்க்கையாக கொண்டுள்ள மக்கள் இந்த இழிவில் இருந்தும் விடுபடுவற்கும் அரசியல் பொருளியலில் மறுக்கப்படும் பங்கைப் பெறுவதற்கும் பல்வேறு பாதைகளை தேர்ந்தெடுத்தும் பயணித்தும் முட்டிமோதி வருகின்றனர்.

முதலிய உலகமயத்திற்கு எதிரான உள்ளூர்மய உணர்வு பெருக்கெடுக்கிறது. உங்களுக்கென்று தனித்த வாழ்வு, அடையாளம், வரலாறு, குணங்கள் எதுவும் இல்லையென்றும் அப்படி இருப்பினும் உலக சந்தையில் அவற்றுக்கு மதிப்பு இல்லை யென்றும் ஏகாதிபத்திய அரசுகளால் ஒற்றைமயம் வலியுறுத்தப்படுகிறது. இதற்கெதிராக தமது வரலாறு, தமது வாழ்க்கை, தமது பண்பாடு, தமது கருத்துகள் என மக்கள் தேடியலைகின்றனர். இந்தப் பின்புலத்தில் பழமையில் இருக்கும் நன்மைதீமைகளைப் பற்றிய பகுத்தாய்வு இன்றி ஆளும்வர்க்கம் தமது வசதிக்கு ஏற்றாற் போல் பழமைச் சேற்றை எடுத்து மக்கள் மீது பூசுகிறது.

இந்தியாவின் சிற்பிகளாக திகழ்ந்த அம்பேத்கரோ, நேருவோ அல்லது இவர்களை ஒத்த புதுமக் கால தலைவர்கள் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு அரசியல் வரைப்படத்தை இந்தியா பார்த்து வருகிறது. வல்லபாய் படேலுக்கு பிறிதொரு காலத்தில் இந்தியாவிலேயே உயரமான சிலை வைக்கப்படும் என்று 50 களில் வாழ்ந்த எந்தவொரு அரசியல் ஆளுமையும் கற்பனை செய்திருக்க வாய்ப்பில்லை. சியாம் பிரசாத் முகர்ஜி உயிர்ப்பிக்கப் படுவார் என்று எவரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இனப்படுகொலை செய்தவர்கள், வன்முறையையும் வெறுப்பையும் வெளிப்படையாக கக்கக் கூடியவர்கள் முதல்வர்களாகவும் பிரதமராகவும் முடிசூட்டிக் கொண்டு வலம்வரும் ஒரு நாளை எவரும் எண்ணி இருக்க மாட்டார்கள். ஆனால், அவை எல்லாம் மெய்யாகியுள்ளது.

இதுகாறும் அரசியல் தளத்தில் கோலோச்சிய ஆற்றல்கள் மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் கருத்துகளோடு முட்டி மோத விரும்பவில்லை. கடும்போக்காளர்களோ பழமைக்கு பட்டாடை அணிவித்து பவனி வருகின்றனர். பசுப் பாதுகாப்பெனும் பெயரில் மாந்தப் படுகொலைகளை அனுமதிக்கும் மக்களின் பொது உணர்வோடு முட்டி மோதுவதை தவிர வேறு வழியில்லை. சாதி ஆணவத்தின் பொருட்டு பெற்ற மகளையும் அவள் கணவனையும் கொன்று ஆற்றில் வீசுவதை அனுமதிக்கும் மக்களின் பொது உணர்வோடு முட்டி மோதுவதைத் தவிர வேறு வழியில்லை.

வரலாற்றில் நிலைபெற்ற அம்பேத்கரைப் போன்ற தலைவர்கள், சரி, பிழைக்கு எதிரானப் போராட்டத்தில் இருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. மகாத்மா என்று பிறரால் புகழாரம் சூட்டப்பட்டு மாபெரும் மக்கள் தலைவராக இருந்த காந்தியின் பிற்போக்குத்தனங்களோடு சண்டையிடக் கூடிய நேர்மை திறமும் நெஞ்சுரமும் அம்பேத்கருக்கும் பகத் சிங்குக்கும் பெரியாருக்கும் மட்டுமே இருந்தது. அம்பேத்கர் நாடாளுமன்ற பதவிப் பவிசுகளோடு தன் காலத்தை முடித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், இலட்சிய வேங்கைகளை நாடாளுமன்றங்களில் சிறைப்படுத்த முடியாதென்பதற்கு அம்பேத்கர் ஒரு தனிச்சிறப்பான எடுத்துக்காட்டு.

இன்றைக்கு நம்முன் இருக்கும் சவால் – ”சாதி ஒழிப்பு சாத்தியமில்லை, தேசிய சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை, சோசலிசம் சாத்தியமில்லை, இருப்பதை ஏற்றபடி காலத்தை தள்ளு” என்ற மெய்யியல் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்த ஒரு காலத்தில், அம்பேத்கரை ஒத்த மாபெரும் ஆளுமைகள் ஆக்கித் தந்த படைக்கருவிகள் இருக்கும் போது சோர்ந்து கிடப்பதற்கோ, ஆளும்வர்க்கத்தின் காலடியில் பணிவதற்கோ தேவையில்லை. அப்படி யாரேனும் பணியச் சொன்னால் அது மக்களை ஏமாற்றும் வேலைதான்.

விடாப்பிடியானப் போராட்டம், கற்றல், நடைமுறை, விலைபேச முடியாத தன்னளிப்பு, இடைவிடாத தேடல், எதற்கும் அஞ்சாத துணிவு – இவற்றைக் கைக் கொள்வோம். நாடாளுமன்றமும் , சட்டமன்றமும் அதிகாரத்தின் திறவுகோல் என்று எழுப்பப்படும் மாய்மாலங்களில் இருந்து தெளிவோம்.

இந்த எழுபது ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் சாதித்தது என்ன? கொத்தும் பாம்புகளுக்கு அதிகாரத்தைக் கையளித்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு என்பது இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்த மண்ணையும் மக்களையும் நம்பி இந்தியாவை விட்டுப் பிரியாத மண்ணின் மைந்தர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம்.

”மக்களைத் தட்டி எழுப்புவோம், மசூதியைக் கட்டி எழுப்புவோம்” என்ற முழக்கங்கள் முழக்கங்களாகவே உள்ளன. ஆனால், சங் பரிவாரக் கூட்டங்களோ ராமருக்கு கோயில் கட்டுவதற்கு நாளை அறிவிப்பதற்கொரு நாளைக் குறித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு நானும் ராமர் பக்தர், நானும் சிவ பக்தன், நானும் பிராமணன், நானும் இந்து என்று ஆர்.எஸ்.எஸ். ஐ பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர். ’நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்’ என்பதை தாண்டி இடிக்கப்பட்ட மசூதியை மீளக் கட்டி யெழுப்ப வேண்டும் என்று சொல்வதற்கு காங்கிரசு தலைவர் ராகுலுக்கு துணிவில்லை.

சோமநாத் கோயில் புணரமைப்பு விழாவில் அன்றைய குடியரசு தலைவர் இராஜேந்திர பிரசாத், ’குடியரசு தலைவராக செல்லக் கூடாது’ என்ற அன்றைய தலைமை அமைச்சர் நேருவின் கண்டிப்பை இன்றைய தலைமை அமைச்சர் மோடி கேலி செய்கிறார். நேருவின் நிலைப்பாட்டில் உள்ள வரலாற்று நியாயத்தை உயர்த்திப் பிடிக்க அவரது பெரனுக்கு நெஞ்சுரம் இல்லாமல் போய்விட்டது. இதுதான் இன்றைய மெய்ந்நிலை.

தேர்தலுக்கும் தேர்தலுக்கு அப்பாலும் ஒரு நெடுநாள் போருக்கு அணியமாக வேண்டியுள்ளது. போராட்டம், இடைவிடாத போராட்டம், கலைப்படையாத போராட்டம், மக்களின் மீது நம்பிக்கை கொண்ட போராட்டம், குறுக்கு வழிகளை நம்பாத போராட்டம் – இதுவே நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முன்நிபந்தனை. அதற்கான ஊக்கத்தை, அயர்விலா ஆதவனாய்ப் பாடுபட்ட அம்பேத்கரிடம் இருந்துபெறுவோம்.

இருள் சூழ்ந்திருக்கும் வேளையிலே நமது முன்னோர்கள் பக்கத் துணையாக நம்மோடு நிற்பார்கள் என்ற நம்பிக்கையோடு…

 

செந்தில், இளந்தமிழகம்
tsk.irtt@gmail.com, 9941931499

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW