கல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு !

01 Dec 2018

கல்வி நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்தும் காவி அரசியல் திருச்சி சிறுபான்மையினர் நிர்வாகத்தில் இயங்கும் செஞ் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வை பா.ச.கவின் எச். ராஜாஅரசியல் நிர்ப்பந்தம் கொடுத்து நிறுத்தச் செய்துள்ளனர். சிவில் உரிமை அமைப்பான பியூசிஎல் (PUCL) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்  (கீழ்வருமாறு). தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

-மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

பியூசிஎல் கண்டன அறிக்கை
கருத்து உரிமைக்குக் கட்டுப்பாடா?
திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெறவிருந்த பன்னாட்டுக் கருத்தரங்கை தடை செய்யக் கோருவது குறித்த பியூசிஎல் கண்டன அறிக்கை
திருச்சி தூய வளனார் (தன்னாட்சி) கல்லூரி (St. Joseph’s College (Autonomous)), தமிழ் ஆய்வுத் துறையின் சார்பில், தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண்களுக்கு எதிரான) வன்கொடுமைகள் (Harassment of Women as registered in Tamil Literature) எனும் பொருளில், திசம்பர் 6 மற்றும் 7-ஆகிய நாட்களில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, புதுமைப் பித்தனின் ‘பொன்னகரம்’, வைரமுத்துவின் படைப்புக்கள், மாலதி மைத்ரியின் படைப்புக்கள், சல்மாவின் ‘இரண்டாம் சாமங்களின் கதை’ ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என பல இலக்கியங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாதிரித் தலைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இவை போன்ற வேறு தலைப்புக்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் அமையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவரான எச்.ராஜா அவர்கள், “தமிழ் இலக்கியங்கள் மற்றும், இந்து இதிகாசங்களைக் கொச்சைப்படுத்தும் நோக்குடனும், தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தைத் தூண்டும் குறிக்கோளுடன் கிறித்துவ மிஷனரிகள் மற்றும் அர்பன் நக்ஸல்கள் திட்டமிட்டுள்ளனர். சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மைச் சமுதாயத்தையும், நம் தாய் மொழி தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்த அனுமதிக்க முடியாது. உடனடியாக தமிழக அரசு இந்நிகழ்ச்சிக்கு தடை விதித்து, இச்சதியின் பின்னணியில் உள்ளவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களின் மாண்பினைக் காத்திட வேண்டும்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி கருத்துப் பதிவிட்டுள்ளார். மேலும், “இது கிறித்தவ St. ஜோசஃப் கல்லூரி தமிழ் மொழி மற்றும் இந்து மதத்திற்கு எதிராக அறிவித்துள்ள போர். இதை எதிர் கொள்ள தயாராவோம்” எனவும் அதே நாளில்  அவர், இன்னொரு டிவிட்டர் பதிவில் எச்சரிக்கைக் குரல் எழுப்பியுள்ளார்.
எச். ராஜாவின் பதிவை இணைத்து, டிவிட்டரில், shrewdbird என்ற பெயரில் கணக்கு வைத்திருப்பவர், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா க. பாண்டியராஜன் அவரின் டிவிட்டர் பக்கத்தில், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரிக்கை வைக்கிறார். இதற்கு, அதே நாள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலேயே பதிலளித்துள்ள பாண்டியராஜன் அவர்கள், “தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட கல்லூரியிடம் தலையிட்டு, இத்தகைய இழிவுபடுத்தும், அவதூறு செய்யும் கருத்தரங்கு நடக்காமலிருப்பதை உறுதி செய்யும். பெண்களை மகிமைப் படுத்தும் எண்ணற்ற இலக்கியப்படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில், தமிழ்ப்பண்பாடு பெண்களை தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக் கருத்தினை பதிய விடக்கூடாது!” எனத் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், கருத்தரங்கு தள்ளி வைக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, இந்து முன்னணியின் தலைவர் ராம கோபாலன் இந்தக் கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனும் புகார் மனுவை தமிழக ஆளுநருக்கும், மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக் கழக மானியக்குழு ஆகியவற்றிற்கும் அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கீழ்கண்ட விஷயங்களை பியூசிஎல் வலியுறுத்த விரும்புகிறது.
1. கருத்தரங்கிற்குக் கொடுக்கப்பட்ட மாதிரித் தலைப்புக்கள், மதநூல்களை மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்களையும் உள்ளடக்கியவை. என்ன தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றன என்பதோ, அவற்றில் எந்தக் கட்டுரைகள் இறுதி செய்யப்பட்டன என்பதோ தெரியாத சூழலில், இது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் கருத்து என்ன என்று கூடக் கேட்காமல், அவசர கதியில் ஓர் அகில இந்தியக் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவரான  எச். ராஜா, நிகழ்ச்சிக்குத் தடை கோருவதும், அதை இன்னொருவர் பகிர்ந்து கோரிக்கை வைப்பதும், அதை ஏற்று, தமிழக அமைச்சர் ஒருவர், தமிழக அரசு தலையிட்டு இந்த நிகழ்ச்சி நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று அறிவிப்பதும், தற்போது, இந்து முன்னணி தலைவர் கல்லூரி உரிமத்தை ரத்து செய்யக் கோருவதும், அடிப்படை நீதிக்கும், அரசியல் சாசன விழுமியங்களுக்கும் எதிரானது.
2. அமைச்சரின் டிவிட்டர் பதிலையடுத்தே, கல்லூரி நிர்வாகம், நிகழ்ச்சியைத் தள்ளி வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு, கல்லூரியிடம் முறையாக எந்த விளக்கமும் கேட்கவில்லை. டிவிட்டர் பக்கங்களில், அரசின் முடிவுகள் எடுக்கப்படும் மிகத் தவறான முன்னுதாரணத்திற்கு, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா க. பாண்டியராஜன் வித்திட்டுள்ளார். இது ஆட்சியியல் விழுமியங்களுக்கு எதிரானது; கண்டிக்கத்தக்கது.
3. ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவிருந்த ஒரு கருத்தரங்கிற்குத் தடை கோருவதும், அதை நடத்த முடியாத வகையில் அச்சமான சூழலை உருவாக்குவதும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் முயற்சிகளன்றி வேறல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறையும், ஆணாதிக்கப் போக்கும் தமிழிலக்கியங்களில் இருந்தால், அதை வெளிப்படுத்துவது ஆய்வுலகின் கடமையே. அது எந்த வகையிலும் தவறானது அல்ல. அதற்கு எதிர்க் கருத்துக்கள் இருந்தால், அதைப் பதிவிடுவதுதான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அணுகுமுறையாக இருக்க முடியும். மாறாக மாற்றுக் கருத்துக்களைக் கூறவே கூடாது என்பது கருத்தியல் வன்முறையாகும். அதைத் தனிநபர் செய்தாலும், அரசு செய்தாலும், அது கடும் கண்டனத்திற்கு உரியது.
4. “வெளிப்படுத்தும் கருத்தின் மூலம் உருவாகும் அபாயம், நேரடியாகவும், உடனடியாகவும் சமூக நலனை பாதிக்கும் படி இருந்தால் மட்டுமே, 19(2)ன்படி,  பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அது யூகத்திற்குட்பட்டதாகவோ, நீண்ட கால தாக்கத்தைப் பற்றியதாகவோ, இருந்தால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்தக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் {Ramesh v. Union of India AIR 1988 SC 775} அளித்தத் தீர்ப்பு இங்கு குறிப்பிடத்தக்கது.
5. இலக்கியங்களை விருப்பு, வெறுப்பின்றி ஆய்வு செய்து, உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சியை வரவேற்காமல், அதை எச். ராஜா போன்றவர்கள் மதச் சிக்கலாக்குவதையும், சிறுபான்மை- பெரும்பான்மை என உள்நோக்கத்துடன் பேசுவதையும் வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகள் என்றே பியூசிஎல் கருதுகிறது. இது போன்ற வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும். பன்னாட்டுச் சட்டங்களும், குறிப்பாக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும், அதிகரித்து வரும் பன்மைச் சமூகம் மற்றும் கலாச்சாரத்தில், பொறுப்புணர்வுடன் பேச்சுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. இதே போன்று, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க {Pravasi Bhalai Sangathan v. Union of India (AIR 2014 SC 1591)}, தேசிய சட்ட ஆணையம், ‘வெறுப்புரை’ குறித்து கடந்த மார்ச் 2017ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் (அறிக்கை எண்: 267), வெறுப்புரையைத் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை வலியுறுத்தியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
6. அரசியல் சாசனத்தின் சாராம்சமான, ‘முகப்புரை (Preamble)’ வலியுறுத்தும் சம உடைமை (Socialism) மற்றும் மதச்சார்பின்மை (Secularism) போன்ற விழுமியங்கள் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களால் தொடர்ந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. இந்த அரசியலின் தொடர்ச்சியாகவே, கருத்தரங்கிற்கு மதச் சாயம் பூச நினைக்கும் முயற்சிகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
7. எனவே, தள்ளிவைக்கப்பட்ட கருத்தரங்கை, கல்லூரி நிர்வாகம் முறையாக தேதி அறிவித்து நடத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு முழு ஆதரவையும், பாதுகாப்பையும் அளிக்க வேண்டும். ஒரு வேளை தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையெனில், கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகுவதே சரியான வழிமுறையாக இருக்கும். மாறாக, கருத்தரங்கை ரத்து செய்யும் முடிவுக்கு கல்லூரி நிர்வாகம் வருமானால், ஆணாதிக்கத்திற்கும், மதவெறுப்புணர்வுக்கும், அது மண்டியிடுகிறது என்று கருதப்படும் ஆபத்து உள்ளது என பியூசிஎல் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இறுதியாக, ஜே.எஸ். மில், ‘விடுதலை’ குறித்த தன்னுடைய படைப்பில், “ஒரே ஒரு மனிதரைத் தவிர உலகம் முழுவதும் ஒரு கருத்து கொண்டதாகவும், அந்த ஒரு மனிதர் மட்டும் மாற்றுக் கருத்து கொண்டவராகவும் இருந்தால் கூட, மனிதகுலம் அந்த ஒருவரை வாயடைக்கச் செய்வதில் நியாயமில்லை. மாறாக, அந்த ஒரு மனிதரின் கருத்து உலகம் முழுவதையும் வாயடைக்கச் செய்யும் வலுவுள்ளதாக இருந்தால், அந்தக் கருத்தை வெளிப்படுத்தும் நியாயம் இருக்கவே செய்கிறது” என்று கருத்துச் சுதந்தரத்தின் அவசியத்தைக் குறிப்பிடுவதை பியூசில் இந்தத் தருணத்தில் நினைவுகூர விரும்புகிறது.
 இந்தக் கருத்தரங்கு விவகாரத்தில் மட்டுமல்லாமல், மத நல்லிணக்கம் மற்றும் பாலின சமத்துவத்திற்கு எதிரான எந்தவொரு முயற்சியையையும் எதிர்த்து, சமரசமற்ற போராட்டத்தைச் சனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.
கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்
க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர்
27.11.2018
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW