நாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்!

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – 1 –  புதுக்கோட்டை தோப்புக்கொல்லை

கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே சீற்றங் கொண்ட புயல் சிதைத்தெறிந்த மாவட்டங்களில் உள்ள பல்வேறு பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் மீண்டெழுவதற்கு அரசிடம் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கண்டறியும் பணியை தமிழ்த்தேச மக்கள் முன்னணி செய்துவருகிறது. கஜா புயல் புரட்டிப் போட்டு போய்விட்டது; புயலில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் நெஞ்சாங்கூட்டிலிருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகள் இன்னும் உணரப்படவில்லை. களத்தில் இருந்து எழும் உயிர்க்காற்றின் ஓசைகளை ஆய்வறிக்கையாய் முன்வைக்கிறோம். கேளாத செவிகள் கேட்கட்டும், காணாத கண்கள் திறக்கட்டும்,

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல் கஜா புயல் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள தோப்புக்கொல்லை ஈழ ஏதிலிகள் முகாமையும் சூறையாடிவிட்டுப் போய்விட்டது. மொத்தம் 420 வீடுகள். அதில் 120 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. 300 வீடுகள் பகுதியளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. மொத்த மக்கள் எண்ணிக்கை 1560. ஓட்டு வீடுகள், அஸ்பெஸ்டாஸ் தாள் கூரைகள் தான் பெரும்பாலானவை.

இன்று 23 நவம்பர் 2018 – புயல் கரையைக் கடந்த எட்டாவது நாள்

  • அரசு துயர்துடைப்பு பொருட்கள் எதுவும் வரவில்லை. இன்றைக்குதான் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் முகாம்வாசிகளை சந்திக்கிறார்.
  • தார்பாய் போன்ற உதவிப் பொருட்கள் ஓரிரு தொண்டு நிறுவனங்கள், தமிழீழ ஆதரவு ஆற்றல்கள்  வழியாக கிடைத்துள்ளன.
  • உணவு, தண்ணீர் போன்றவை  கிடைக்கின்றன.
  • மின்சாரம் இன்றுவரை மீள்கட்டமைக்கபட வில்லை.
  • வேறு ஏதிலிகள் முகாம்களில் இருந்து உதவிப் பொருட்கள் வந்துள்ளன.

வாழ்வில் எத்தனையோ புயலை சந்தித்த ஈழ ஏதிலிகளுக்கு கஜா புயல் மற்றுமொரு துயரம்தான். வேறெந்த குமுகப் பிரிவினரை விடவும் வஞ்சிக்கப்பட்டவர்கள் இவர்கள் தான். ஏனென்றால் வாக்குகளுக்காகவேனும் இவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டியக் கட்டாயம் எவருக்கும் இல்லை. எத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்ந்தாலும் இவர்கள் வாக்குரிமை கொடுக்கப்படுவதில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பாரும் அதிகம் இல்லை. எனவே, இவர்களின் எதிர்ப்பார்ப்பும் குறைவு. இவர்கள் தமிழர்கள் மீதும் தமிழக, இந்திய அரசின் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையும் குறைவு. ஆனால், இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களோ மிகவும் அதிகம்.

1980 களில் உருவாக்கப்பட்ட இந்த முகாமில் தரமான வீடுகள் இல்லை. கட்டப்பட்டிருக்கும் கல் வீடுகளும் கூட 15×10 அளவுதான். வாழ ஓர் இடமென்று இந்த வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். புயலோ, மழையோ எதுவரினும் வீடுகளும் தெருக்களும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு மழை நாளில் இந்த குடியிருப்புப் பகுதிக்குள் நடந்துவிட்டு வந்தாலே மாந்த மாண்புகளை மதிக்கக் கூடிய எவரும் அங்கு வாழ்வதில் உள்ள துயரத்தை உணர முடியும். எனவே, அவர்களது கோரிக்கை தரமான வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்பதே.

ஏதிலிகளுக்கு பணத்தை ஒதுக்குவது மத்திய அரசுதான். மத்திய அரசோ ஏதிலிகள் பற்றிய கொள்கை எதுவுமில்லாமல் இருக்கிறது. இந்து ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, திபெத்திய ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, வங்க ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை, தமிழீழ ஏதிலிகளுக்கு ஒரு கொள்கை என ஆளுக்கு ஏற்றாற் போல் கொள்கையைக் கடைபிடிக்கிறது இந்திய அரசு. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற ஆளுங் ஈழத் தமிழர்கள் மீது சிறிதளவேனும் அக்கறை வைத்திருக்கின்றனவா? என்ற கேள்விக்கான விடையை அவர்களின் விடும் அறிக்கையில் தேடக் கூடாது.,தமிழகமெங்கும் உள்ள ஏதிலிகள் முகாமில் அவர்களின் வாழ்நிலையைப் பார்த்தாலே போதும்.

இவர்கள் வெளியாட்களிடம் பேசத் தயங்குகின்றனர். ஏனென்றால் உளவுத்துறை கண்காணிப்பு இருக்கிறது. கடந்த காலங்களில் உரிமை கோரி போராடிய போது இவர்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்கள் ஆழமான நம்பிக்கையின்மையாக இவர்கள் மனதில் பதிந்துள்ளது. போராடுபவர்கள் வேறு முகாம்களுக்குப் பெயர்த்தெடுத்து அனுப்பப்படுவார்களாம்!

இங்கேயே பிறந்தவர்கள் அதுவும் ஏதிலியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்குப் பிறந்தவராயினும் குடியுரிமையும் கிடையாது,, எவ்வித சட்ட ஏற்பும் கிடையாது. இதுவும் ஒரு முக்கிய கோரிக்கை என்றனர்

விளிம்பு நிலை மக்களிலேயே மிகவும் கைவிடப்பட்டவர்கள் இவர்களே. ஏனெனில் ஒன்று சேர்ந்து உரிமைக்காக அமைப்பாய் திரளும் உரிமையும் போராடும் உரிமையும் இவர்களுக்கு இல்லை.

வேறுபாடு காட்டாத கஜா புயல் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஏதிலிகளின் வாழ்வையும் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. ஆனால், அரசோ ஏதிலிகளை வேறுபடுத்தி நடத்துகிறது. ஏதிலிகளைப் பொருத்தவரை பாகுபாடு காட்டுவதில் கஜா புயலைவிட கொடுமையானது இந்த அரசு!

ஒரு சட்டமன்றத் தொகுதில் உள்ள மக்களை விலைக்கு வாங்க இக்கட்சிகள் செய்யும் செலவில் நூறில் 10 பங்கு செலவு செய்தாலே போதும், வாழத்தகுதியான வாழ்விடங்களை அமைத்து தந்துவிட முடியும்.

 

  • மக்கள் முன்னணி ஊடகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW