அடக்குமுறைகளையும் மீறி தொடரும் யமஹா தொழிலாளரின் போராட்ட எழுச்சி

03 Oct 2018

பதின்மூன்று நாட்களாய் தொடருகிறது இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்.  சங்க செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் நாள் 2 தொழிலாளர்கள் எந்த முன்னறிவிப்புமும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக வேலையில் அமர்த்த வேண்டும்.

தொழிலாளார்களின் சங்கம் அமைத்து செயல்படும் உரிமையை மதிக்க வேண்டும்

என்ற கோரிக்கைகளோடு 750 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

யமஹா மோட்டார் என்ற ஜப்பானிய நிறுவனம் இந்திய தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில்லை. குறிப்பாக தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமையை காலில் போட்டு மிதிக்கிறது. தொழிலாளர் சட்ட உரிமைகள் குறித்து குரல் எழுப்பிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது, இடை நீக்கம் செய்வது, மிரட்டுவது, எச்சரிக்கை கடிதம் அனுப்புவது என யமஹா நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக ஒரு கோபத்தை மனக்குமுறலை உண்டு பண்ணி இருந்தது. இதையெல்லம் தட்டி கேட்பது யார்? வழி நடத்துவது யார்? என்ற கேள்வி எழுந்தது. அதே நேரத்தில், எதிர்த்து கேட்டால் வேலை போய்விடுமோ? பணிமாற்றம் செய்து விடுவார்களோ என்ற பயமும் இருந்தது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் யமஹா நிறுவனம் கழிப்பறையை கழுவ வேண்டும், அலுவலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் மீது ஒரு அடக்குமுறையை ஏவியது. மற்றொரு தொழிலாளி தன்னுடைய பதவி உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதால் 25 நாட்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு மிரட்டப்பட்டார். இந்த நிகழ்வுகள் யமஹா வின் இந்த அடக்குமுறைகளை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு தொழிலாளர்களை கொண்டு சென்றது.

ஒரு சிறு குழுவாக சேர்ந்து இந்த அடக்குமுறைகளை எதிர்க்க ஆரம்பித்தனர். இதனால் மிரட்டல், பணி இடமாற்றம் உள்ளிட்ட பல இடர்களை சந்தித்தனர். 10 நாட்களுக்கு ஒரு முறை வெவ்வேறு துறைகளுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். இருந்தாலும் மனம் தளராது, ஒவ்வொரு தொழிலாளரையும் சந்தித்து தொழிலாளர் சட்ட உரிமைகள் குறித்து சங்கமாய் உரிமைகளை வென்றெடுப்பது குறித்தும் தமக்குள் பேசி இருக்கிறார்கள் யமஹா தொழிலாளர்கள். எந்த தொழிலாளிக்கு பிரச்சினை என்றாலும் அனைத்து தொழிலாளிகள் உடன் நிற்போம் ஒன்று பட்டு உரிமையை வெல்வோம் என்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றனர். வாரம் வாரம் இடைவிடாது சந்தித்து தங்கள் நிறுவன தொழிலாளிகளை ஒருங்கிணைத்து சங்கமாய் பதிவு செய்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

10 பேராக ஆரம்பித்த சங்கம் இன்று 750 பேர் கொண்ட சங்கமாக மாறி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் பற்றி பொறுமையாக புரியவைத்து வலுவான சங்கமாக மாறி இருக்கிறார்கள். பிறகு சி.ஐ.டி.யு என்ற ‘தூங்கா தொழிற்சங்கத்தோடு’ தங்கள் சங்கத்தை இணைத்து இருக்கிறார்கள். நிர்வாகம் சிசிடிவி காமிரா வைத்து கண்காணிப்பது உள்ளிட்ட பல அடக்குமுறைகளை ஏவியது. அனைத்தையும் தாங்கியபடியே பணியிடத்தில் அனைத்து விதிகளையும் பின்பற்றி உற்பத்தியில் ஈடுபட்ட படியே தொழிற்சங்கத்தையும் வளர்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தொழிற்சங்கத்தை பதிவு செய்து கோரிக்கைகளை நிர்வாகத்திற்கு சமர்பிக்க முயற்சியை மேற்கொண்டனர் தொழிலாளர்கள். அதன் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் குறித்து தெரிந்து கொண்ட நிறுவனம் கூலிப்படை போன்ற ஆட்களை கொண்டு தொழிலாளர்களை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வந்த தொழிற் சங்க நிர்வாகிகள் கூட மிரட்டப்பட்டு இருக்கின்றனர். வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்றெல்லாம் உச்சமாக கொலை மிரட்டல் வரை சந்தித்து இருக்கிறார்கள்.

நிறுவன சட்ட விதிகள் படி செப்டெம்பர் 20 அன்று 2 மணி நேர அனுமதி பெற்று இரண்டு சங்க உறுப்பினர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொள்ள சென்று இருக்கின்றனர். செப்டெம்பர் 21 அன்று அந்த இரண்டு தொழிலாளர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து நிர்வாகம் கடிதம் கொடுத்தது. அதை தொழிலாளர்கள் வாங்க மறுத்தனர். இந்த தகவல் கிடைத்த தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணி நீக்கத்தை திரும்ப பெற வலியிறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நான்கு முறை தொழிலாளர் நலத்துறை நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையை நிர்வாகம் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பணி நீக்கம் செல்லாது அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று கூறியும் இது வரை நிர்வாகம் தனது நிலையில் இருந்து இறங்கி வர வில்லை. மாறாக, பயிற்சி பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களை வைத்து உற்பத்தியை நடத்த ஆரம்பித்து இருக்கிறது.

இதற்கிடையில் நீதி மன்றம் யமஹா தொழிலாளர்களின் போராட்டத்தில் தலையிட்டு 200 மீட்டருக்கு உள்ளே போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்ற தீர்ப்பு கூறி ஜப்பானிய நிறுவன முதலாளிகளுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டி இருக்கிறது.

காவல்துறை நீதி மன்ற தீர்ப்பை காட்டி தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக நிறுவனத்தில் இருந்து அப்புறப்படுத்தி வல்லம் சிப்காட் வளாகத்தில் நிருவனத்திற்கு அருகாமையில் தொழிலாளர் போராட்டத்திற்கான ஓர் இடத்தை ஒதுக்கி தங்கள் எஜமானர்கள் இட்ட கட்டளையை தலைமேல் கொண்ட கடமையாய் நிறைவேற்றியது. இந்த போராட்டத்தில் பெண் தொழிலாளர்களும் இணைந்து இருக்கிறார்கள். ஐ.டி பணியாளர்கள் சங்கம் உள்பட பல தொழிற்சங்கங்கள் பண உதவி உள்பட பலவிதங்களின் தங்கள் ஆதரவு கரத்தை கொண்டு யமஹா தொழிலாளர் போராட்டத்தை அணையாமல் பாதுகாத்து நிற்கின்றனர்.

பதின்மூன்று நாட்களாய்  இந்த நாட்டு அரசமைப்பு சட்டம் அளித்து இருக்கிற தொழிலாளர் உரிமைகளை சங்கமாய் சேரும் உரிமையை கேட்டு தான் யமஹா தொழிலாளார்கள் சட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தை உண்ணா நிலைப் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசின் தொழிலாளர் துறையோ அரசமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஜப்பானிய நிறுவனத்தின் மீது எந்த கடுமையான நடவடிக்கையையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது. சட்டத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய நீதித் துறையும் காவல்துறையும் தொழிலாளர்களின் உரிமை குரல்களை நெறிக்க தங்கள் கொடும்கரங்களை நீட்டி முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் கொள்கைக்கு சேவை செய்து கொண்டு இருக்கின்றன.

முதலாளிகலுக்கான அரசில் நீதிமன்றம் காவல்துறை தொழிலாளர் துறை அனைத்தும் அவர்களின் நலனுக்காகவே செயல்படும் என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஒன்றே நம்மை அனைத்து வித சுரண்டலில் இருந்து விடுவிக்கும் ஒரே மருந்து என்று நமது வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி யமஹா தொழிலாளர் போராட்டத்தை வென்றெடுப்போம்.

 

  • பரிமளா, தலைவர், ஃபோரம் ஃபார் ஐ.டி எம்ப்ளாயிஸ் (F.I.T.E)

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW