முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

19 May 2018

தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக் கொல்லப்பட்டனர். மக்கள் மீது தாக்குதல் தொடராதிருக்க சரணடைந்த தலைவர்கள் கைதிகளாகப் பராமரிக்காமல் சர்வதேசப் போர் மரபை மீறிக் கொல்லப்பட்டனர். குண்டு வீசப்படாத பாதுகாப்புப் பகுதி என சிங்கள இராணுவத்தால் அறிவிக்கப்பட்டு வந்தடைந்த அப்பாவிப் பொதுமக்கள் பத்தாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே மற்றும் சிங்கள இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேசப் பொது விசாரணை நடத்த தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு புலம்பெயர் மற்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட வலியுறுத்தி சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் முற்றிலும் திரும்பப் பெறப்படவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள், வீடுகளில் கட்டாயச் சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமியத் தமிழர்கள் மீது தாக்குதலை சிங்கள இராணுவம் செய்து வருகிறது.

தமிழர்களின் வழிபாட்டுத் தளங்கள் புனரமைக்கப்படாமல் பௌத்த மடாலயங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

காணாமல் போனோர், கைது செய்யப்பட்டோர் திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது.

அதிகாரமில்லாத கிழக்கு மாகாண அரசு காவல்துறை உரிமை கூட இல்லாததாக நடத்தப்பட்டு வருகிறது.

கத்தி போய் கம்பு வந்தது எனும் கதையாக இந்திய அரசில் ஏற்பட்ட மாற்றங்கள் காங்கிரசுக்குப் பதிலாக பா.ச.க. மோடி அரசு தமிழர் விரோத சிங்கள அரசுக்குத் துணையாக நிற்கிறது.

சர்வதேச அளவில் ஈழத்தமிழர் மத்தியில் பொதுவாக்கெடுப்பிற்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியது அவசிமானது. தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவ ஆயுதப்படைகள் திரும்பப் பெறக் குரலெழுப்புவோம்!

இந்திய, சீன, அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்கொள்ள தெற்காசியாவில் போராடும் புரட்சிகர, இடதுசாரி, தேசியஇன விடுதலை அமைப்புகளின் கூட்டுச் செயல்பாட்டை வளர்த்தெடுப்போம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW