தமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் முதுகில் ஆளும் மத்திய பாஜக அரசு குத்தி இருப்பதாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
காவிரி பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு அமைதி காக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளாது தமிழ்த்தேச மக்கள் முன்னணி. இதுகுறித்து, பேசிய மீ.த.பாண்டியன், உச்சநீதிமன்றம் நமது பங்கிலிருந்து 7 டி.எம்.சி நீர் கர்நாடகாவிற்குப் பிடுங்கிக் கொடுத்தது. மத்திய அரசோ மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடுவிற்குள் அமைக்காமல் மேலும் குந்தகம் விளைவித்துள்ளது.
இதன் மூலம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய அரசு மீறியுள்ளது. தமிழக மக்களின் முதுகில் பா.ஜ.க. அரசு குத்தியுள்ளது. கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலுக்காக பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரஸ் அரசாங்கமும் அரசியல் செய்கிறது. இது காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வுரிமைப் பிரச்சினை. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை. தமிழக மக்களை நம்பவைத்துக் கழுத்தறுக்கிறது தமிழக அரசு. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்நாட்டின் ஆளும் கட்சி அ.தி.மு.க. தனது அழுத்தமான எதிர்ப்பை முன்னெடுக்க வேண்டும். தமிழர் விரோத பா.ச.க. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், அரசியல் அமைப்புகள் கரம் கோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடந்து, காவிரியில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் சார்பில் சந்திக்கக் கோரிய கடிதத்திற்கு இதுவரை பிரதமர் மோடி பதிலில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்திய அரசின் பிரதமர் மீது தமிழக அரசு தொடுக்க வேண்டும். காவிரி நீர் உரிமை காப்பாற்ற, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக விவசாயச் சமூகம், அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டக் களத்தை வீரியமாக்குவோம். காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைக்கப் போராடுவோம் எனக் கூறியிருக்கிறார்.
http://www.nodikunodi.com/news/tamilnadu/3727-tamilnadu-people-cheated-by-bjp-govt.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner