ஏலம்விட்ட ஒன்றிய அரசு ஏலத்தை இரத்துசெய்ய நெருக்கடி! மக்களின் எழுச்சியும் சட்டமன்றத் தீர்மானமும்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 5000 ஏக்கர் நவம்பர் 7 ஏலம் விடப்பட்ட செய்தி..காட்டுத்தீ போல கிராமங்களில் பரவியது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் சுற்றுச் சூழல் போராளிகள் முகிலன், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து மனு அளித்தனர். எனக்குத் தெரியாது எனக் கையை விரித்தார். #டங்ஸ்டன்சுரங்கத்திட்டஎதிர்ப்புமக்கள்கூட்டமைப்பு_உருவானது…மறுநாள் தமிழ்நாடு அமைச்சர்கள், அடுத்து முதல்வர் எங்களிடம் யாரும் இதுவரை அனுமதி கேட்கவில்லை என்று கூறினர். தமிழ்நாட்டில் 50, 000 ஏக்கரை இலக்காக வைத்து முதல் கட்டமாக 5,000 ஏக்கரை டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் லிமிட்டெட்டிற்கு கொடுத்துள்ளது.
நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது…25க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராம சபைக் கூட்டங்ளில் டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, அழகர் கோவில் என மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட எதிர்ப்புக் கூட்டங்கள் நடந்தன.
மேலூரில் பலஆயிரம் மக்கள் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க அழைப்பின் பேரில் திரண்டனர். திமுக அமைச்சர் மூர்த்தி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொல்லான் ஒன்றிணைந்து வந்தனர். சட்டமன்றத்தில் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என வாக்குறுதி கொடுத்ததால் கட்டுப்பட்டு கலைந்து சென்றனர்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் விரிந்த கூட்டம் கூடியது…
தமிழ்நாடு சட்டமன்றம் கூடும் 9-12-2025 நாளில் ஏலத்தை இரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவானது..ஆர்ப்பாட்டத் தலைமையாக தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் ஆகிய எனக்கு கூட்டமைப்பு பெருவாய்ப்பை அளித்தது. மேலூர் வட்டார மக்கள் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளாகக் கலந்து கொண்டனர்…ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ஒன்றிய அரசு இரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட நல்ல செய்தி கிடைத்தது…
இலண்டனுக்குப் படிக்கப் போன பாசக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு திரும்பினார். இறங்கியவுடன் கலந்து கொண்ட கூட்டத்தில், தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கின்றனர்..ஸ்டெர்லைட் மூடிக்கிடக்கிறது..காப்பர் இறக்குமதி ஆகிறது…டங்ஸ்டன் எடுக்க உருவாகியுள்ள மக்கள் எதிர்ப்பை கடுமையாகச் சாடினார். வேதாந்தா குழுமத்திற்கு வக்காலத்து வாங்கினார்…பின்னர் திட்டம் வர திமுக அரசே காரணம் என தனது அரசியல் நாடகத்தை நடத்தினார்…

ஏற்கெனவே டங்ஸ்டன் திட்டத்தை ஏலம் விட்ட மோடி அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி..போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் வருகை..பாசக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும் திரும்பியது..பாசகவுக்குப் பேரிடியாக மாறியது…
முல்லை பெரியாறு விவசாயிகள் சங்கம் 07-01-2025 அன்று நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தமுக்கம் ஒன்றிய அரசின் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிடுவது என அறிவிப்புச் செய்தனர்…நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கில் தன்னெழுச்சியாகத் திரண்டனர்…
நடைபயணத்தைத் தடுக்க காவல்துறை பலவழிகளில் தடுத்தது..
தடைகளை மீறி மக்கள் மதுரை நோக்கி நடந்தனர்…வாகனங்களில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். காவல்துறை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ், இந்திய சனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன், தொடர்ந்து கூட்டமைப்பில் செயலாற்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டக்குழுத் தோழர் வழக்கறிஞர் சி.கா.தெய்வம்மாள், மறைந்த சூழலியல் போராளி அரிட்டாபட்டி இரவிச்சந்திரன் தங்கை தமிழ்நாடு உழவர் சங்கத்தின் மேலூர் வட்டார அமைப்பாளர் தோழர் விமலா உள்ளிட்டோரை தனிமைப்படுத்த, தாக்க முயற்சித்தனர். தடைகளை மீறி மதுரை தமுக்கம் முன்பு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய அரசு பல்லுயிர் மண்டலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 500 ஏக்கர் தவிர்த்து மீதமுள்ள 4500 ஏக்கரில் ஆய்வைத் தொடர்வது, தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தி வைப்பது என ஒன்றிய அமைச்சர் அறிவிப்புச் செய்தார்… மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் கம்பூர், தும்பைப்பட்டி, மேலவளவு என கிராமங்களில் போராட்டங்களில் மக்கள் திரண்டனர்..
விழித்துக் கொண்ட பாசக மாநிலத்தலைவர் அண்ணாமலை அ.வல்லாளபட்டிக்குள் வந்து டங்ஸ்டன் சுரங்கம் வராது என வாக்குறுதி கொடுத்து பாசக ஒன்றிய அரசை நோக்கி வந்த எதிர்ப்பை மட்டுப்படுத்த முயற்சித்தார்…
ஏலத்தை இரத்து செய்வது எனும் முடிவை அறிவிக்க பாசக நாடகத்தை அரங்கேற்றுவது என முடிவு செய்தனர். 19-01-2025 தங்களுக்கு நெருக்கமான கிராமத்தார்களை விமானத்தில் அழைத்துக் கொண்டு ஒன்றிய அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை, இராம.சீனிவாசன் டெல்லியில் சுரங்கத்துறை அமைச்சரைச் சந்திக்க வைத்தனர்..
23-01-2025 அன்று மாலை டங்ஸ்டன் சுரங்கத்திட்ட ஏலத்தை இரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஊடகச் செய்தி பார்த்து மேலூர் வட்டார மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்..ஆடிப்பாடி மகிழ்ந்தனர்…

தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் மக்கள் நம்பிக்கை எழுச்சிகரமான போராட்டம் கார்ப்பரேட் ஆதரவு பாசிச அரசைப் பணிய வைத்துள்ளது…
போராடிய மேலூர் வட்டாரப் பெருங்குடி மக்களுக்கும்,
டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புக்கும்,
ஒருபோக விவசாயிகள் சங்கத்திற்கும்,
அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள்,
விவசாய அமைப்புகள்,
தமிழ்நாடு சமணர் பேரவை,
ஊடக நண்பர்களுக்கும்
போராட்ட வெற்றி வாழ்த்துகள்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தமிழ்நாடு உழவர் சங்கம்
பேச: 94431 8405
09/12/2024 சட்டமன்ற தீர்மானம் என வரவேண்டும். ஆனால், 09/12/2025 என வந்துள்ளது. திருத்தவும்.