தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 – ஏன் எதிர்க்க வேண்டும்? – கி.வே.பொன்னையன்
உலகெங்கும் நிதி மூலதன சக்திகளான கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள நிலங்களையும் நிலம் சார்ந்த வளங்களையும் கைப்பற்றித் தனது தொழிற்சாலைகளை நிறுவி இலாபம் ஈட்டி வருகின்றனர்
தமிழ்நாட்டிலும் ஆட்சியாளர்கள் அந்நிய மூலதனத்தை ஈர்க்கிறோம்; நாங்கள்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கெட்டிக்காரர்கள்;
இங்கு தான் அன்னிய மூலதனம் அதிகமாக வந்து இறங்குகிறது என்றெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு இவ்வாறு வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் சொந்த நாட்டு மக்களின் நிலங்களை,
நீர் ஆதாரங்களை, சூழலியல் பாதுகாப்பை
தொழில் தொடங்க வரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எடுத்துக் கொடுப்பதற்கான கொடூரமான சட்டங்களையும் சத்தம் இல்லாமல் நிறைவேற்றி வருகின்றனர் .
விவசாயிகளின் நிலங்களையும் மக்களின் நீர் நிலைகளையும் ஒரு பக்கம் பறிப்பதற்கான சட்டங்களைப் போடும் இதே தமிழ்நாடு அரசுதான் பன்னாட்டு நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று தொழிலாளர்கள்பனிரெண்டு மணிநேர வேலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்ததையும் இந்த நேரத்தில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் டெல்லி ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நில கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு மறு குடியமர்வு என்ற கூறுகளைக் கொண்ட அந்த சட்டங்களை வைத்துக் கண்டு துரிதமாக உழவர்களிடம் உள்ள நிலங்களையும் மக்களின் பொதுப் பயன்பாட்டில் உள்ள நீர் நிலைகளையும் கைப்பற்ற இயலவில்லை.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மிகப்பெரிய அளவில் நிலம் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
பரந்தூர் விமான நிலையத்தின் தேவைக்கானது என்று அடையாளம் கண்டுள்ள நிலங்களை வைத்து வாழ்க்கை நடத்தும் உழவர்கள் இரண்டு ஆண்டு காலமாக தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இருந்த போதும் அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசு மிகக் கொடூரமாக இறங்கியுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா என்ற பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை எடுப்பதை எதிர்த்து உழவர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம்.
மேல்மா சிப்காட்டிற்கு எதிராகப் போராடிய விவசாயிகளின் மீது குண்டர் சட்டத்தையே ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசு போட்டதை அனைவரும் அறிவோம்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நெல் வயல்களை பறித்துக் கொடுத்துள்ளதையும் அதற்கு எதிரான மாபெரும் உழவர் போராட்டத்தையும் தமிழகம் சந்தித்தது
இந்தப் பின்னணியில்தான் உடனடியாக நிலங்களை கைப்பற்றுவதற்கு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளை முறியடிப்பதற்காக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 .
Thamil Nadu Land Consolidation (Special Projects) Act 2023.
என்ற பெயரில் ஒரு சட்டத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் இராமச்சந்திரன் அவர்கள்
21 /04 /2023 நாள் சட்டசபையில் தாக்கல் செய்தார் .
எந்த விவாதமும் இல்லாமல் அந்த மசோதா உடனடியாக சட்டமாக்கப்பட்டு விட்டது.
இந்த சட்டம் வந்தவுடன் இது எவ்வாறு உழவர்களின் நிலங்களைப் பறிக்கும் என்றும் நீர் நிலைகளைகள் எல்லாம் சின்னா பின்னப்பட்டு சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று உழவர் இயக்கங்கள் எடுத்துக்காட்டின.
மேலும் காலநிலை மாற்றத்தால் தற்போது திடீர் பெரும் மழைப்பொழிவு ஏற்படுவதும் பெருவெள்ளம் ஏற்படுவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இயற்கை வழியில் அமைந்த நீர் நிலைகளை தனியார் கார்ப்பரேட்டுகள் வசம் கையளித்தால் அவர்கள் அதை சின்னா பின்னப் படுத்தி அனைத்து நீர்வழிப் பாதைகளையும் சிதைத்து விடுவார்கள்.
இதனால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலிலும்,
பேரிடர் மேலாண்மையிலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மிகுந்த கவலையோடு உழவர் இயக்கங்களும் சூழலிய அமைப்புகளும் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டினர்.
இதற்கு ஆதாரமாக தற்போது
நகர்மயப்படுத்தலின் விளைவாக உருவாகி வரும் பெரு வெள்ளங்கள் குறித்தும் வெள்ளச் சேதங்கள் குறித்தும் சான்றுகளோடு எடுத்துக்காட்டினர்.
தமிழகத்தின் இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்வியலில் கார்ப்பரேட்டுகள் புகுந்து மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுவார்கள் என்ற அச்சத்தை மிகச் சரியாகவே பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் அறிஞர்களும் தெரிவித்தனர்.
.
விவசாய இயக்கங்களோடு இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஒரு முறை கூட கலந்து பேசவே இல்லை.
தற்போது இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தேவையான விதிகளை வகுத்து அக்டோபர் 18 /2024 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பின்படி 100 ஹெக்டேர் அதாவது கிட்டத்தட்ட 250 ஏக்கர் தேவைப்படும் ஒரு நிறுவனம் தனது தேவையை தமிழக அரசிடம் இந்த விதிகளின்படி விண்ணப்பித்தால் தமிழக அரசு அந்த விண்ணப்பித்தனை ஏற்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அவர்கள் கேட்கும் பகுதியில் உள்ள நிலங்களையும் பொதுப்பயன்பாட்டில் இருக்கும் நீர் நிலைகளையும் உடனடியாக அந்த நிறுவனத்திற்கு தாரை வார்த்து விடுவார்கள் .
இதுவரை நிலங்களை எடுப்பதற்கு நீர்நிலைகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் தடையாக இருந்து வந்ததை இந்த சட்டமும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிகளும் அடித்து நொறுக்கி விட்டன.
சுருக்கமாகச் சொன்னால் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நில கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டத்தின் மூலம் திடுமென உழவர்களின் நிலங்களையோ, பொதுப் பயன்பாட்டில் இருக்கும் நீர் நிலைகளையோ, சுற்றுச்சூழல் சார்ந்த விதிமுறைகளையோ கடந்து நிலம் எடுப்பதற்கு தடைகள் இருந்தன.
டெல்லி ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு ஆட்பட்டு அன்னிய மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்து சொந்த நாட்டு உழவர்களின் நிலங்களையும் பன்னெடுங்காலமாக இந்த மண்ணை வளப்படுத்தி வரும் நீர் நிலைகளையும் கார்ப்பரேட்டுகளுக் தாரை வார்ப்பதற்கு திராவிட மாடல் அரசு சட்டமியற்றி அதற்கான விதிகளையும் வகுத்து அரசிதழிலும் வெளியிட்டு விட்டது .
இதுவரை செயல்பாட்டில் இருந்த 2013 நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தின் விதிகளை 2023 தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்)சட்டமும் அதன்படி வகுக்கப்பட்ட விதிகளும் இல்லாது ஒழித்து விட்டன.
எனவே நிலம் பறிபோகிற உழவர்கள்,
நீர்நிலைகளால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள் ,ஆடு மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வரும் சாமானிய மக்கள்
அவர்களைச் சார்ந்த இயக்கங்கள் நீதிமன்றத்திற்கு சென்று தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது.
தற்போது தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் மற்றும் அதனை நிறைவேற்ற வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் நிலத்தை எடுக்கலாம் என்று நீதிமன்றம் சட்டப்படி தெரிவித்து விடுவார்கள்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது ஏற்படும் சில விளைவுகள்:
1)ஒரே இடத்தில் நீர் நிலைகள் உட்பட 250 ஏக்கர் பரப்பில் நிலங்களை கையகப்படுத்தி ஒரு நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும்.
2) தற்போதுள்ள சட்டப்படி நீர் நிலைகள் மற்றும் ஆயக்கட்டு நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்த புதிய சட்டத்தின் படி நீர் நிலைகளைப் பராமறிக்கும் பொறுப்பை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இந்தச் சட்டம் ஒப்படைக்கின்றது.
அந்த நீர் நிலைகளைக் கையாளும் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
. 3)பெருந்துறை சிப்காட்டில் வந்து குவிந்த சாய ,தோல் ஆலைகளால் பொது நீர் நிலைகள் குறிப்பாக பாலதொழுவு குளம்(400 ஏக்கர் பரப்பளவு)ஓடையக் கட்டூர் குளம்(15 ஏக்கர் பரப்பளவு)
மற்றும் அதன் கீழ் நீரோட்டத்தில் உள்ள நொய்யலாறு உட்பட அனைத்தும் இன்றளவும் மீட்கப்பட முடியாத அளவுக்கு நாசம் அடைந்து கிடப்பதை நாடு அறியும்.
திருப்பூர் சாய சாலைகள் ஏற்படுத்திய நச்சுத்தன்மையால்
நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் என்கிற அணையில் நீர் தேக்க கூடாது என்று நீதிமன்றமே ஆணையிட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
கொடுமணல் நாகரிகம் தந்த நொய்யல் ஆற்றை ஒரு நஞ்சு ஆறாக ஏற்றுமதி என்ற பெயரில் திருப்பூர் சாய ஆலை அதிபர்கள் மாற்றினார்கள்.
இந்த அரசுகள் நொய்யலாற்றை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
சென்னிமலை பகுதி கொடுமுடி பகுதி விவசாயிகள் டெல்லி வரை சென்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை வாங்கி நொய்யலாற்றை பாதுகாக்கப் போராடி வருகின்றார்கள்.
தமது கட்டுப்பாட்டில் இருந்த பொழுது பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்பு கொண்ட ஒரு ஆற்றையே ‘டாலர்’ பைத்தியத்தில் பறி கொடுத்த ஆட்சியாளர்கள்தான் இவர்கள் என்பதை நாம் இந்த இடத்தில் மிகக்குறிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.
நீர் ஆதாரங்கள் அனைத்தும் இலாப வெறி கொண்ட இந்த முதலாளிகள் கைகளுக்கு மாறினால என்ன செய்வார்கள் என்பதனை கூர்ந்து நோக்க வேண்டும்.
அதேபோல் கடலூர் சிப்காட், தூத்துக்குடி சிப்காட்,
கும்முடிபூண்டி சிப்காட் போன்ற பல்வேறு பகுதிகளிலும் பொதுப் பயன்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை தற்போது நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்களையே அழித்தவர்கள் தான் இந்த தொழில் நடத்துகின்றவர்கள்.
4)நீர்வழிப் பாதையில் உள்ள நிலங்களை கையகப்படுத்தி தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவி இன்றளவும் அதை ஆண்டு அனுபவித்து வருகின்றவர்கள். சட்டப்படியாகவே நீர் ஆதாரங்களை அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கும் பொழுது நீரோட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றவும் சற்றும் தயங்க மாட்டார்கள்!
5)சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விதிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் இன்றைய நிலையில் பல்வேறு இடங்களில் வரம்பற்று நிலங்களை கையகப்படுத்த இயலவில்லை.
அந்த சுற்றுச்சூழல் விதிகளை எல்லாம் செயலிழக்கச் செய்துவிட்டு இந்த சிறப்பு திட்டங்கள் சட்டமும் அதன் விதிகளும் நிலம், நீர் நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் மண்டலம் என்ற ஒரு பன்மைய உயிர்மச்சூழலை அழித்துவிடும்.
5) நீர் நிலைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபொழுது தமது அரசியல் அதிகார செல்வாக்கால் அவைகளை தகர்த்தெறிந்தவர்கள் இந்த ஆலை அதிபர்கள்.
சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாதது மட்டுமல்ல மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிவோம்.
இவ்வாறு சட்டங்கள் இருந்த பொழுது அவைகளை பின்பற்றாதவர்கள் இப்பொழுது பூனையையே பாலுக்கு காவல் வைத்துள்ளது போல் அவர்களிடத்திலேயே நீர் ஆதாரங்களை ஒப்படைத்து விட்டால் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டின் நிலம் , நீர்நிலைகள் சார்ந்த பல்லுயிர் பன்மையைச் சூழலில் பாரதூரமான கெடும் விளைவுகளை ஏற்படுத்தும் சட்டமாகவே இந்த தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023
மற்றும் அதற்காக தற்பொழுது வகுக்கப்பட்டு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள விதிகளும் உள்ளது என்பதை மிகுந்த கவலையோடு சுட்டிக் காட்டுகின்றோம்.
எனவே சொந்த நாட்டு மக்களின் நிலங்களை பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கு சட்டப்படி தாரை வார்ப்பதற்கு மு .க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு துணிந்து இறங்கி வட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் புலப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு உழவர் அமைப்புகளும்,
ஜனநாயக இயக்கங்களும்,
சூழலிய அமைப்புகளும்,
இடதுசாரி இயக்கங்களும் இந்த அநீதியான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023ஐ முறியடிக்க அணி திரள வேண்டும்.
கி.வே.பொன்னையன்
தலைவர்
தற்சார்பு விவசாயிகள் சங்கம்
09/11/2024