இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது போல் இலங்கையின் புதிய சனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில்

01 Oct 2024

  1. இலங்கையின் தேர்தல் முடிவு இந்தியாவுக்கு என்ன செய்தியை கூறியுள்ளது?

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக் கட்சிகளையும் மலையக, முஸ்லிம், வடக்குகிழக்கு தமிழர்களையும் இணைத்து பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய கூட்டணி ஒன்றை உருவாக்கியதில் இந்திய அரசின் கைவண்ணமும் இருந்ததென தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றீல் அரசியல் விமர்சகர் ஒருவர் விதந்தோதிக் கொண்டிருந்தார். அப்போது இலங்கைத் தீவில் அமெரிக்க – இந்திய அணியின் கை மோலோங்கியதாக சொல்லப்பட்டது.

அதை தொடர்ந்து, முன்பு முள்ளிவாய்க்கால் குருதி வெள்ளத்தில் நடந்து சென்று முடிசூடிக் கொண்ட மகிந்தாவைப் போல் 2019 இல் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் மேலெழும்பி அதிபர் நாற்காலியில் அமர்ந்தார் கோத்தபய. 2015 இல் இராசபக்சேக்களை தோற்கடித்தது போல் 2019 இல் அவர்களை இந்திய அரசால் தோற்கடிக்க முடியவில்லை.

பிறகு 2022 இல் அரகலயா எழுச்சியின் விளைபயனாய் இராசபக்சேக்கள் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிபரை தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில் இரணில் இலகுவாக வெற்றிப் பெற்றார். பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் அவர் வெற்றி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் போட்டியிட்ட அழகம்பெருமவை ஆதரிக்குமாறு இந்திய அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லியிருந்தது. இந்தியாவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இரணில் மேற்குலக சார்பு கொண்டவராக அறியப்படுகிறார்.

கடந்த 15 ஆண்டுகால தேர்தலில் தமிழர்கள் இராசபக்சேக்களைத் தோற்கடிப்பதற்காக சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரித்துத்தான் வந்தனர். தமிழர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதிபர்கள் தமிழர்களின் கோரிக்கைகளை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்கு வாக்களிக்கச் சொன்ன இந்திய அரசோ தமிழர்களின் அடிப்படையான கவலைகள் பற்றி சிறிதும் கருதிப்பார்க்கவில்லை.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலிலும் இந்திய அரசின் தெரிவு சஜித் பிரேமதாசா தான். தமிழ்த்தரப்பின் வாக்குகள் சஜித்துக்கும் இரணிலுக்கும் அரியநேத்திரனுக்கும் என சிதறிப் போயின.

அனுரகுமார திசநாயக்கா சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று அதிபராகிவிட்டார். அனுரகுமார திசநாயக்கா சீன ஆதரவாளர் என்றும் அமெரிக்காவோடு நெருங்கிய உறவு கொண்டவர் என்றும் செய்திகள் வருகின்றனவே தவிர இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்ற செய்தி வரவில்லை.

சிங்கள பெளத்த பேரினவாதம் வெளிநாட்டரசுகளின் காய்நகர்த்தல்களை மீறி தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதைத்தான் அடுத்தடுத்த அதிபர் தேர்தல்கள் காட்டுகின்றன.  தொலைதூரத்தில் இருக்கும் அமெரிக்காவும் சீனாவும் சிறிலங்காவின் அரசியல் போக்கில் செல்வாக்கு செலுத்த முடியும் அளவிற்கு தம்மால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை என்பது இந்தியாவிற்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு வெளிப்படையான செய்தியாகும்.

நலன்களின் மேல் தான் உறவுகள் உருப்பெறுகின்றன. தம்முடைய நலன்கள் இந்திய அரசால் தொடர்ச்சியாக புறந்தள்ளப்படுமாயின், எவ்வித கைம்மாறும் இன்றி தமிழர்கள் தலையாட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் அரியநேத்திரன் என்ற பொதுவேட்பாளர் வழியாக தமிழர்கள் இந்தியாவிற்கு வழங்கியிருக்கும் செய்தியாகும்.

  1. இலங்கையை இந்தியா முதன்மையான நண்பனாக கருதினாலும் இலங்கையின் புதிய அரசு அவ்வாறு இந்தியாவை அணுகுமா?

இந்திய அரசைப் பொருத்த வரை தெற்காசிய அளவில் வட்டார மேலாதிக்க அரசாகவே அண்டை நாடுகளுடனான தமது உறவைப் பேணி வந்துள்ளது. இனியும் அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை. ‘Neighbourhood first policy”  என்று இந்திய அரசு சொல்வதெல்லாம் பாசாங்குப் பேச்சுகள் ஆகும்.

இந்து மதத்தைப் பரப்பப் போன விவேகானந்தர் என்றாலென்ன, இந்திய விடுதலைக்கு  ஆதரவு கேட்டுப்போன காந்தியார் என்றாலென்ன, இடதுசாரித் தலைவர் ஏ.கே.கோபாலன் என்றாலென்ன,  ஜவகர்லால் நேரு முதல் இராஜீவ் காந்தி வரை சிறிலங்காவுக்குப் போன தலைமை அமைச்சர்கள் என்றாலென்ன சிங்களர்களிடம் எதிர்ப்பைத்தான் சந்தித்து வந்துள்ளனர். இந்தியாவுடனான சிங்கள அரசின் வெளியுறவுக் கொள்கை மகாவம்சக் கருத்துமண்டலத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். வரலாறுதோறும் கடல் கடந்து இந்தியாவில் இருந்து வரும் பேரரசப் படர்ச்சியில் இருந்து தற்காத்துக் கொள்வதை மையமிட்ட வெளியுறவுக் கொள்கையாகவே வந்துள்ளது.

இப்போது அதிபராகியுள்ள அநுரகுமார திசநாயக்கா ஜனதா விமுக்தி பெரமுனாவை சேர்ந்தவர். இடதுசாரி பின்புலம் கொண்ட கட்சி என்றாலும். பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இருப்பதால் மேற்குலத்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முரண்டுப் பிடிக்க முடியாது. ஜேவிபி இந்தியாவை ஒரு விரிவாதிக்க அரசாக மதிப்பிட்டுள்ள கட்சி . இந்திய விரிவாதிக்க எதிர்ப்பில் ஊறித் திளைத்து, இந்தியாவுடனான பொருளியல் உடன்படிக்கைகளை எதிர்த்து தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்துப் பழகி, இனச் சிக்கலை இந்திய விரிவாதிக்கத்தின் நீட்சியென்றக் கோட்பாடு கொண்ட கட்சியான ஜேவிபியின் உலைக்களத்தில் புடம்போட்டவர் அநுரா.

தொடக்கக் காலத்தில் மலையகத் தமிழர் குறித்து கொண்டிருந்த பார்வை, இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தமை, வடக்குகிழக்கு இணைப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்து வெற்றி கண்டமை, இனவழிப்புப் போருக்கு ஆள் திரட்டிக் கொடுத்தமை, இனவழிப்பு வெற்றியில் பங்குபோட்டுக் கொண்டமை என ஜேவிபியின் சிங்கள பெளத்த பேரினவாத சேற்றில் மலர்ந்த ’செந்தாமரை’ தான் அநுரா.

சிறிலங்கா அரசின் இராஜதந்திர பாரம்பரியத்தின் விளைவாக அநுரா தலைமையிலான அரசும் அண்டை நாடான இந்தியாவிடம் நல்லுறவைப் பேணுவது போல் தோற்றங்காட்ட முயலக்கூடும். ஆனால், அமெரிக்க – சீன வல்லரசிய போட்டியும் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மோடி – அமித் ஷா – அஜித் தோவல் தலைமையிலான இந்துத்துவ கார்ப்பரேட் அரசின்  விரிவாதிக்க வேட்கையும் ஜேவிபியின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பும் இனவாதமும் இடதுசாரி சாயலும் சிறிலங்கா அரசை இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்து சம தூரத்தில் இருக்க அனுமதிக்காது. முந்தைய அரசுகளைவிட அநுராவின் அரசு இந்தியாவிடம் கூடுதலாக முரண்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  1. தொடர்ந்து சிங்கள தரப்புடன் நிற்பதால் தமிழ் மக்களை இந்தியா நிரந்தரமாக இழந்துவிடுமா?

சிறிலங்கா அரசு போருக்குப்  பின்பு கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதாவது, தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் விகாரைகளை நிறுவுவது, படைக்குவிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழர் தாயகம் என்ற நிலையை மாற்றியமைத்து வருகிறது. இதன்மூலம் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற தகுநிலையை இழந்துவிடுவர். இதை சிங்கள அரசால் செய்து முடிக்க முடியுமா? என்றால் அதற்கு வரலாறு ஒரு தெளிவான பதிலை வைத்திருக்கிறது.

மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து, உடன்படிக்கைகளின் மூலம் நாட்டை விட்டு விரட்டியடித்து, இன்று நம் கண் முன்னே சிதைக்கப்பட்ட உதிரிகளாக அம்மக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் மலையகத் தமிழர்களின் நிலை போல் ஆகிவிடலாம்.

சிறிலங்காவுக்குள் தமிழர்கள் உதிரிகளாக மாற்றப்படுவதற்கு இந்திய அரசு துணை நிற்குமானால் தமிழ் மக்கள் இந்தியாவிடம் நட்பு பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது?

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW