மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி-1 – செந்தில்

29 Feb 2024

தேர்தல் 2024 ஐ முன்னிட்டு மையநீரோட்ட அரசியல் களத்திலும் மாற்று அரசியல் களத்திலும் தீவிர உரையாடல்கள் நடக்கின்றன. மாற்று அரசியல் களத்தில் நடக்கும் விவாதங்கள் வாக்கு அரசியலில் விளைவிக்கக் கூடிய தாக்கம் குறைவு என்றாலும் இந்த உரையாடல் இன்றும் நாளையும் நீண்ட நெடிய எதிர்காலத்திலும் புரட்சிகர அரசியல் களத்தில் செயலுத்தி வகையில் சரியான முடிவு எடுப்பதற்கு உதவும்.

தேசிய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னேறிச் சென்றுள்ள காசுமீரத்திலேயே மக்கள் சனநாயக கட்சி(PDP) பாசகவோடு கூட்டணி வைத்து காசுமீரத்திற்கு தீங்கு விளைவித்ததைக் கண்டோம். மாநிலக் கட்சிகளின் பிழைப்புவாத அரசியலுக்கு இதுவொரு எடுத்துக்காட்டு. இன்றைக்கும் தமிழ்நாட்டில் பாசகவோடு கூட்டணி வைப்பதற்கு கட்சிகள் போட்டியிட்டுக் கொண்டுதான் உள்ளன. பாசகவுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும் அக்கட்சியுடன் எவ்வித உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையும் உறுதிப்பாடும் பெரும்பாலான கட்சிகளிடம் இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராபக்சேவையும் இரணிலையும் சமப்படுத்தி விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததுதான் இராசபக்சேவை அதிபராக்கியது; அதை தொடர்ந்து விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தது. 

ஆகவே, தேர்தல் நிலைப்பாடு என்பது போராட்டப் பயணத்தின் வேகத்தை, மேடுபள்ளங்களை, ஏற்ற இறக்கங்களை தீர்மானிக்கக் கூடியதாகும்.

முதலாவது விடயம், ஆட்சி அதிகாரத்தில் பாசகதான் இருக்கிறது. அதுவும் பத்தாண்டு காலமாக இருக்கிறது. அரசியல் என்பது ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள்? என்பது பற்றியதுதான்.

இரண்டாவது, பாசக மிக வேகமாக அரசு இயந்திரத்தில் ஊடுறுவி வருகிறது. இன்னுமொரு தடவை ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தால் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான இராணுவம், தொலைத்தொடர்பு, நிதி ஆணையம் ஆகியவற்றைக் கைப்பற்றிவிடும். அப்படி ஆர்.எஸ்.எஸ். மடமும் பாசகவின் ஆட்சி அதிகாரமும் இராணுவமும் ஒரு நேர்க்கோட்டில் நிற்க நேர்ந்தால், அதனால் விளையக் கூடிய பேரழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

 மூன்றாவது, இந்தியாவில் வேறெந்த ஆளும் வகுப்புக் கட்சிக்கும் இல்லாத அரை இராணுவக் கட்டமைப்புடன் விளங்கும் ஆர்.எஸ்..எஸ். என்ற அமைப்புப் பின்புலம் பாசகவுக்கு இருக்கிறது. அது சமூகத்தை வேகமாக பாசிசமயமாக்கி வருகிறது. இனியும் பாசக ஆட்சியில் நீடித்தால், சமூகத் தளத்தில் இந்துத்துவம் விசம் போல் பாய்ந்து பேரழிவையும் வரலாற்றின் முன்னோக்கியப் பயணத்தை சில பத்தாண்டுகளுக்கு தள்ளிப் போட்டுவிடும்.

அரசு, அரசியல் அதிகாரம், புறஞ்சார்ந்த பார்வை ஆகியவை இருந்தால் போதும் மேற்படி மூன்று விடயங்களில் இருந்தும் பாசகவை எப்படியும் ஆட்சியில் இருந்து கீழிறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆனாலும், பல்வேறு காரணங்களின் பெயரால் பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்தி தேர்தல் புறக்கணிப்பு அல்லது அதை போன்ற மூன்றாவது அணி நிலைப்பாட்டை எடுப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

பாசக, காங்கிரசு, திமுக என அனைத்தும் நிதி மூலதனக் கட்சிகள் என்பதால் எல்லாம் ஒன்றென்று சொல்லும் இடதுசாரி ஆற்றல்கள் உண்டு. அந்த நிலைப்பாடு குறித்துப் பின்னர் பார்க்கலாம்.

பாசகவும் காங்கிரசும் தமிழ்த்தேசியத்தின் எதிரிகள் என்ற பார்வை தமிழ்த்தேசிய அரசியல் ஆற்றல்களிடம் உள்ளது. இவ்விரண்டு கட்சிகளும் தமிழ்த்தேசியத்தை மறுக்கின்றன என்ற அளவில் இவ்விரண்டும் தமிழ்த்தேசியத்தின்  எதிரிகள் என்று வரையறுப்பது கடினமானதன்று. ஆனால், இவ்விரண்டின் குறித்தத் தன்மைக் குறித்து அறிவதற்கு இயங்கியல் ஆய்வுமுறை தேவை.

பாசகவும் காங்கிரசும் ஒன்று என்று சமப்படுத்துவதற்குப் பின்னால் இருக்கும் புரிதல் இடைவெளிக்கான காரணங்களை ஒவ்வொன்றாய் காண்போம்.

1. மாநில அரசும் ஒன்றிய அரசும்

இந்தியாவில் அதிகாரம் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசும் அதிகாரம் குறுக்கப்பட்ட மொழிவழி மாநில அரசுகளும் என்ற அரசமைப்பு சட்ட ஏற்பாடு இருக்கிறது. மாநில அரசுக்கு கொஞ்சமும் அதிகாரம் இல்லை, ஒன்றிய அரசில்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதுதான் தமிழ்த்தேசிய அரசியலின் பாலபாடமே.

பதவி அரசியலில் இருக்கக் கூடிய மாநிலக் கட்சிகள் இந்த உண்மையை மறைத்துவிட்டு முதல்வர் பதவியும் மாநில சட்டப்பேரவையும் அதிகாரமிக்கவை என்ற தோற்றத்தைக் காட்டி வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதுதான் தமிழ்த்தேசியர்களின் முதல் திறனாய்வே.

பதவி அரசியல் கட்சிகளின் அணுகுமுறைக்கு மாறாக மாநில சட்டப்பேரவை தேர்தலையும் ஒன்றிய மக்களவை தேர்தலையும் வேறுபடுத்திக் கண்டு இரண்டின் பொருட்டும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள  வேண்டிய கடமை தமிழ்த்தேசியர்களுக்கு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகள், மாநில அரசின் மீதான விமர்சனத்தை முதன்மைப்படுத்தி ஒன்றிய மகக்ளவை தேர்தலில் என்ன முடிவெடுப்பது? என்று தீர்மானிப்பது பொறுத்தமுடையது அல்ல.

”தான் மட்டுமே தீர்மானிக்க முடியும்” என்ற வகையில் 19 துறைகள் மட்டும்தான் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என மறைந்த அறிஞர் கு.ச. அனந்தன் தனது தேசிய இனச் சிக்கல் பற்றீய நூல் ஒன்றில் எழுதியுள்ளார். சொற்பமான மாநில அரசதிகாரத்திற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு அதற்காகவே அரசியல் செய்யும் கட்சிகளும் மக்களவையைக் கைப்பற்றி நாட்டின் கட்டமைப்பையே மக்கள் விரோதமாக மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அதை செயல்படுத்திவரும் பாசகவும் எப்படி ஒன்றாக முடியும்?

ஒரு மாநிலத்தில் மட்டும் அரசியல் செய்யும் கட்சிகள் எந்த காலத்திலும் இந்தியாவில் பாசிசத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. குறைந்தபட்சம் ஓர் அனைத்திந்திய கட்சியால்தான் அந்த பாத்திரத்தை வகிக்க முடியும். எனவே, பாசிசம் என்றால் என்ன? என்ற புரிதலிலும் இடைவெளி இருப்பதால் எல்லோரையும் கண்ணில் பட்ட எந்த அமைப்பையும் பாசிச அமைப்பென்று சொல்லும் போக்கு நிலவுகிறது.

உண்மையில் தமிழ்த்தேசியர்கள்தான் மக்களவையில் அதிகாரம் குவிந்து கிடப்பது பற்றியும் அதற்கான தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துச்சொல்லி மாநிலக் கட்சிகளையும் மாநில அளவில் செயல்படும் சாதிக் கட்சிகளையும் வழிப்படுத்தி இருக்க வேண்டும்.

மாறாக, மாநில அரசில் ஆட்சியில் இருக்கும் திமுக மீதான விமர்சனத்தின் பெயரால் மக்களவை தேர்தலில் பாசகவையும் திமுகவையும் தமிழ்த்தேசியர்களில் சிலர் சமப்படுத்தி வருகின்றனர். இது பதவி அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற அரசியல் நிலைக்கு தமிழ்த்தேசியர்களைக் கீழிறக்கி விடுகிறது.

அதேநேரத்தில், மக்களவைத் தேர்தல் முக்கியத்துவம் உடையது, அதிகாரமற்ற சட்டப்பேரவைக்கான தேர்தல் முக்கியம் அற்றது என முடிவெடுத்துவிட வேண்டாம். சட்டப்பேரவைக்கான அதிகாரம் என்பது பாதுகாக்கப்படுவதும் மென்மேலும் அதிகரிக்கப்படுவதும் அவசியம் ஆகும். அதிலும் யார் வெற்றிப் பெற வேண்டும்? என்பதும் முக்கியத்துவம் உடையதாகிறது; குறிப்பாக பாசிச அபாயக் காலகட்டத்தில் மாநில அரச அதிகாரம் என்பது ஒன்றிய அரசுடன் முரண்பட்டு மக்களுக்கு ஒருசில துறைகளில் பாதுகாப்பு தரவல்லது. எடுத்துக்காட்டாக, காவல்துறை மாநிலப் பட்டியலில் இருக்கிறது; உயர்சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என சொல்ல முடிகிறது. ஆளுநரையும் ஒன்றிய அரசையும் மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை உச்சநீதிமன்றத்தில் வெல்ல முடிகின்றது. இது போல் சிற்சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

எனவே, தமிழ்த்தேசிய ஆற்றல்களுக்கு மக்களவை தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும் அதில் யார் ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பது பற்றியும் கூடுதல் கவனமும் செயல்பாடும் தேவையாகும். அங்கு தான் நம்மை அடிமைப்படுத்தி, சுரண்டிக் கொழுத்து, கொள்ளையடித்து, அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கான அனைத்து அதிகாரமும் உறைந்து கிடக்கின்றன. அதை ஆகப் பிற்போக்கான,ஆக மோசமான ஆற்றல்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

மொழிவழி மாநிலங்கள் நீடிக்குமா?

காங்கிரசும் பாசகவும் தமிழ்த்தேசியத்தை ஏற்பதில்லை என்பது உண்மையே. 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த காலத்தில் மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு காங்கிரசு விரும்பவில்லை. அளப்பரிய போராட்டங்களுக்குப் பின்பு அன்றைய தலைமை அமைச்சர் நேரு மொழிவழி மாநிலங்களுக்கு இசைவு தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஓ மொழிவழி மாநிலங்கள்  உருவாக்குவதை எதிர்த்தது. மொழிவழியாக அல்லாமல் துண்டு துண்டான நிர்வாக அலகுகளாக  ( ஜன்பத்களாக) இந்தியாவைப் பிரித்து ஆள வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் அவர்கள். இன்றுவரை அவர்களின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

அரசமைப்பு சட்ட உறுப்பு 3 ஐ பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் ஓர் எளிய பெரும்பான்மையின் மூலம் ஒரு மாநிலத்தை துண்டாட முடியும் என்ற காரணத்தால்தான், இந்த உறுப்பு முற்றாக நீக்கப்பட்டு மாநிலப் பிரிவினைக்கான வேறு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தில் சொல்லப்பட்டது. ஆனால், கூட்டாட்சி பற்றி ஆய்வு செய்ய அடுத்தடுத்து வந்த ஆணையங்கள் இந்த அபாயத்தைப் பற்றி கருதிப் பார்க்கவில்லை. 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் காசுமீர் தலைவர்களை எல்லாம் சிறை வைத்து விட்டு ஓர் எளிய நாடாளுமன்ற பெரும்பான்மையின் மூலம் காசுமீரைத் துண்டாடிய போதுதான் இந்தியாவின் சனநாயக ஆற்றல்களுக்கு அந்த அபாயம் புரிந்தது. சொல்லி வைத்தாற் போல் காசுமீர் உடைப்பை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். எனவே, உறுப்பு 3 தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தி என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே தமிழ்நாட்டை மூன்றாகப் பிளக்க வேண்டும் என்ற குரலை சங் பரிவாரங்கள் எழுப்பத் தொடங்கிவிட்டன. மேற்கு வங்கத்தின் மேற்குப் பகுதியை தனிமாநிலமாக்கச் சொல்லி பாசக குரல் எழுப்பி வருகிறது.

இந்த இடத்தில் காங்கிரசுக்கும் பாசகவும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மாநில உரிமைப் பிரச்சனையில், மாநிலங்களுக்கு உரிமையை மறுக்கிறது காங்கிரசு, மொழிவழி மாநிலங்கள் என்ற ஏற்பாடே கூடாது என்கிறது பாசக.

எப்படி அவர்கள் அரை நூற்றாண்டு முயன்று பாபர் ம்சூதி இருந்த இடத்தில் இராமர் கோயிலைக் கட்டினார்களோ , காசுமீர் 370 ஐ செயலிழக்கச் செய்தார்களோ  அது போல் எத்தனைப் பத்தாண்டுகள் ஆனால் என்ன, தமிழ்நாட்டைத் துண்டாடாமல் ஆர்.எஸ்.எஸ். ஓயாது.

அப்படி துண்டாடினால் என்ன, தமிழினம் தடுத்துவிடும், சேர்ந்துவிடும் என்று சொன்னால் அது ஓர் அறியாமையும் நல்லெண்ணமும்தான். வட கொரியா, தென் கொரியா பிரிந்தது, இன்றுவரை சேர முடியவில்லை. இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர் என காசுமீரம் துண்டாடப்பட்டு இருக்கிறது.. ஈழத்திலும் வடக்குகிழக்கு என தமிழர்கள் வட்டார வகையில் பிரிந்துள்ளனர்.  தொடர்ச்சியான நிலப்பரப்பில் ஒரே மொழி, ஒரே சமயம் என்ற பொதுவான விசயங்கள் இருந்தாலும் 22 அரபு தேச அரசுகள் உள்ளன. ஆங்காங்கே ஆண்ட மன்னர் கால அரசுகளின் அடிப்படையிலேயே நவீன தேசிய அரசுகள் அங்கே உருவாகிவிட்டன. எதிர்காலத்தில் ஆந்திராவும் தெலங்கானாவும் இணையலாம் அல்லது தனித்தனியான நாடாகவே தொடரலாம்.  

ஓர் அரசக் கட்டமைப்புக்குள் வாழ தொடங்கிவிட்டாலே அது மக்களிடையே ஒரு மனக் கட்டமைப்பை உருவாக்கிவிடும், இரு மாநிலங்களில் உள்ள முதலாளிய வகுப்பு தமது சந்தையைப் பாதுகாப்பதற்கு தனித்தனியாக இருப்பதை விரும்பும், இரு மாநிலங்களிலும் உள்ள தலைவர்கள் தமது தலைமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பிரிந்து இருப்பதை விரும்புவர். எனவே, விடயம் அவ்வளவு எளிதானதல்ல.

போதாக்குறைக்கு நம்மிடையேதான் சாதி இருக்கிறதே! எனவே, தமிழ் மாநிலம் மூன்றாக உடைபடுவது என்பது  நிரந்தரமான ஒன்றாக மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.

மாநிலங்களை உடைக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறது, காங்கிரசுக்கு அந்த கொள்கை இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தாயகம் இல்லாமல் தேசியமோ தேசிய விடுதலையோ இல்லை என்பதை புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது தமிழ்த்தேசியம் பற்றிய தெளிவு.

”ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி” என கட்டமைப்பு வகைப்பட்ட மாற்றங்களை செய்துவரும் கட்சியை மீண்டும் ஆளவிடுவது எவ்வகையில் அறிவுடைமை ஆகும். மேலும் இதையே சற்று மெதுவாகவும் நயமாகவும் காங்கிரசும் செய்யப்போகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தை அப்படியே எடுத்துக் கொண்டாலும் அரைத்துப் பொடியாக்கும் நிகழ்ச்சிநிரல் மெதுவாக நடைபெறுமானால் அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு கூடுதலான கால அவகாசம் கிடைக்கும் அல்லவா? அது போராட்டத்திற்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா?

மாநில உடைப்பெல்லாம் நடக்கும் போது பார்க்கலாம். இப்போது பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்தலாம் என்று சிலர் சொல்லலாம். அதற்குப் பெயர் அரசியலே அல்ல. எதிர்காலம் பற்றிய மதிப்பீடும் , வரக்கூடிய ஆபத்துகளை முன்னறிந்து அரண் அமைப்பதும் அரசியலில் மிக முக்கியமான கடமையாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினாற் கில்லை

அதிர வருவதோர் நோய்.

நன்றி : வையம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW