திசம்பர் 10 –மனித உரிமை நாள்.  காசா போரின் 64 ஆம் நாளும்கூட! -செந்தில்

11 Dec 2023

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஐ.நா. மன்றத்தில் ( Universal declaration of human rights) ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1949 ஆம் ஆண்டு திசம்பர் 10. இந்நாளே அனைத்துலக மனித உரிமை நாளாக ஒவ்வோராண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அப்பிரகடனம் இயற்றப்பட்ட 75 ஆம் ஆண்டு. ஐ.நா. அவை 75 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கான கருப்பொருளாக “மனித மாண்பு, சுதந்திரம், அனைவருக்கும் நீதி ( Dignity, Freedom and Justice for all) என்று அறிவித்துள்ளது. இந்த 75 ஆம் ஆண்டை முன்னிட்டு உலகின் பல பகுதிகளிலும் அரசுகளும் மனித உரிமை அமைப்புகளும் அரசு சாரா நிறுவனங்களும் இந்நாளைக் கடைப்பிடித்து உறுதிமொழிகளையும் தீர்மானங்களையும் செயல்திட்டங்களையும் கோரிக்கைகளையும் அறிவித்துக் கொண்டுள்ளன.

மனிதனின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசுகளின் மன்றம் ஒன்றில் பிரகடனம் செய்யப்பட்ட 75 ஆவது ஆண்டைக் கடைபிடிக்கும் இந்த நாள், காசா மீதான இசுரேலினது இனவழிப்புப் போரின் 64 ஆவது நாளும் ஆகும்.

இதுவரை பாலத்தீனர்கள் 17,177 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 7112 பேர் குழந்தைகள். 46,000 த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60% மேலான வாழ்விடங்கள் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. வாழ்விடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், முகாம்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது இசுரேல். எகிப்து – காசா எல்லையில் உள்ள ரஃபா எல்லைப் பகுதியைத் திறந்துவிடுவதற்கே ஐ.நா. பெரும்பாடு பட வேண்டியிருந்தது. உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்களை காசாவுக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டும் என்று போரைத் தொடங்கிய போதே அறிவித்துவிட்டது இசுரேல்.

சுமார் 19 இலட்சம் பேர் குவிந்து கிடக்கும் தெற்கு காசாவுக்குள் இசுரேல் படை நுழைந்துவிட்டது. மிக மோசமான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என்று ஐநாவால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையாவும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் என்ற வகைப்பாட்டில் வரும் என்று சொல்லிய வண்ணம் இருக்கிறது ஐ.நா. இந்த இரு மாதப் போர்க்காலத்தில் வெறும் 7 நாட்கள் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. இந்த உலகத்தால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடனடிப் போர்நிறுத்தம் கோரும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் முன்வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஐக்கிய அமீரகம் முன்வைத்தது ”காசாவில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இனி பட்டினிச் சாவுகள் பெருமளவில் ஏற்படக் கூடும். எனவே இடைக்கால போர் நிறுத்தம் இல்லாமல் அவர்களுக்கு உணவைக் கொண்டு செல்ல முடியாது” என்ற காரணத்திற்காக தீர்மானம் முன்மொழியப்பட்டது. 15 நாடுகள் நிரம்பிய பாதுகாப்பு அவையில் 13 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா தனது வெட்டதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்த்து வாக்களித்துப் போர் நிறுத்தத் தீர்மானத்தைத் தோற்கடித்தது. இங்கிலாந்து வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் விலகி நின்றது. மொத்தத்தில் அனைத்துலக மனித உரிமை நாளை உலகம் கடைபிடிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு பாலத்தீனர்கள் உயிர் வாழும் உரிமையைக் காக்க முடியாமல் தோற்றுப் போனது ஐ.நா.

ஒவ்வொருமுறை இவ்வுலகில் இனவழிப்பு நடந்து முடிந்ததும் ”இன்னொரு முறை நடக்கக் கூடாது ‘Never again’”  என்று சொல்லிக் கொள்ளும் ஐ.நா., பண்பாட்டு இனங்கள் அழித்தொழிக்கப்படும் போது தடுகக் முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஐ.நா. வல்லரசுகளின் வலுசமநிலைக்கு வளைந்து கொடுத்து அசையும் நிறுவனம் என்பது ஒவ்வொரு இனவழிப்பின் போது வெட்ட வெளிச்சம் ஆகிவிடுகிறது. 

பாதுகாப்பு அவையில் இருக்கும் வெட்டதிகாரம் கொண்ட ஐந்து அரசுகளில் ஏதேனும் ஒன்றின் விருப்பம் இல்லாவிட்டால் ஐ.நா.வால் செயல்பட முடியாது. இது தேச அரசுகளுக்கு இடையே சமத்துவம் இல்லாத நிலைமையின் வெளிப்பாடாகும்.

தேச அரசுகளுக்கு இடையே சமத்துவம் இல்லாத விடத்து மனிதர்களின் பிறப்புரிகளாக அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் சாற்றுரைகளை செயல்படுத்த முடியாது என்பது தான் இந்த 75 ஆண்டுகாலப் பட்டறிவாகும்.

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் இப்பிரகடனம் உலகுக்குப் பறைசாற்றுகின்றது.    இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் உலகு தழுவியை ( Universal ),  மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்து இருப்பவை ( inherent) , பிரிக்க இயலாதவை ( inalienable) , மீறப்பட முடியாதவை (  inviolable and indivisible ) எக்காலத்திலும் சமரசம் செய்யப்படாதவை ( Non – derogable ). எனவே இந்த மனித உரிமைகள் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்று இப்பிரகடனம் அறைகூவல் விடுகிறது.

கடந்த 56 ஆண்டுகளாக மூச்சுவிட முடியாத அளவுக்கான ஆக்கிரமிப்பில் பாலத்தீனம் இருக்கிறது என்று ஐ.நா. செயலரே ஒப்புக்கொள்கிறார். ஈழத்தமிழர்களின் தாயகமான வடக்குகிழக்கும் சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. ஈழம், பாலத்தீனம் மட்டுமின்றி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் தேசங்களில் எல்லாம் ஆக்கிரம்பிப்பு அரசுகளின் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

மேற்படி தேசிய ஓடுக்குமுறைக்குள் சிக்குண்டு வாழ்வோருக்கு முதலாவது பொருளில் அவர்களது தேசிய தன்தீர்வுரிமை என்ற கூட்டுரிமை ( collective rights) மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனம் என்ற வகையில்  இந்த தன்தீர்வுரிமையும் உள்ளார்ந்து இருக்கும் உரிமைதான் ( inherent). தன் தீர்வுரிமை மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தேசிய இனத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு தனி மனிதனுக்கு இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, அமைப்பாகும் உரிமை, போராடும் உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமை, நிலவுரிமை, வழிபாட்டுரிமை, உயிர்வாழும் உரிமை, மனித மாண்பு, சுதந்திரம் உள்ளிட்ட எதுவும் இருப்பதில்லை அல்லது பிரிக்க முடியாததாக இருப்பதில்லை அல்லது எந்நேரத்திலும் பறித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

தன்தீர்வுரிமை மறுக்கப்பட்டிருக்கும் தேசங்களில் எல்லாம் மேற்சொன்ன அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டும் சமரசம் செய்யப்பட்டும் வருகிறது. எனவே, ஒரு மக்கள் கூட்டத்திற்கு தன்தீர்வுரிமை இல்லாதவிடத்து அந்த மக்கள் கூட்டத்தின் உறுப்பினராகவுள்ள தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிசெய்ய முடியாது என்பதுதான் நம் கண்முன் தெரியும் உண்மையாகும்.

அடிமைப்பட்ட தேசங்கள் இப்புவிப்பரப்பில் இருக்கும் வரை அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்ய முடியாது. கூடவே, தேச அரசுகளுக்கு இடையே சமத்துவம் உறுதி செய்யப்பட்டால்தான் இந்த மனித உரிமைகள் மீறப்படும் போது அதில் தலையிட்டு அவற்றைப் பாதுகாக்க முடியும்.

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட இந்த 75 ஆம் ஆண்டில் மனித மாண்பு, சுதந்திரம், அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கு தேசங்களின் தன்தீர்வுரிமையும் சுதந்திரமும் சமத்துவமும் முதலில் உறுதிசெய்யப்பட்டாக வேண்டும்.

நன்றி: உரிமை மிண்ணிதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW