புதுக்கோட்டை பாடகர் பிரகாஷ் மீதான சாதிய கொலைவெறி தாக்குதல் – கள அறிக்கை
கடந்த நவம்பர் 12.11.23 தீபாவளி தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆயப்பட்டி அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் பாடகர் பிரகாஷ் (27) என்பவர் மீதான சாதிவெறி கொலைவெறித் தாக்குதலானது வன்கொடுமையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.
ஆயப்பட்டி அருகே கீழ தொண்டைமான் ஊரணி என்ற கிராமத்தில் வசிக்கும் பிரன்மலை கள்ளர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் சாரதி,பிரசாத், தேவா மற்றும் மழையூர் கிராமத்தை சேர்ந்த நவீன் ஆகியோர் குடிபோதையில் பிரகாசின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதுடன், கல்லாலும் பாட்டிலாலும் தாக்கியதில் பிரகாசின் மண்டை உடைந்து படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாதி ஒழிப்பு முன்னணி தோழர்கள் 26.11.23 அன்று பாதிக்கபட்ட பாடகர் பிரகாசை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று விசாரித்தோம். தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர் வெங்கை சின்னதுரை உடன் வந்தார்.
பெற்றோர்களான தந்தை சதாசிவம் தாய் மலர்க்கொடி ஆகியோருக்கு ஒரே மகனான பிரகாஷ் (27) கலைத் திறமை கொண்டவர், சுற்றுவட்டாரத்தில் கச்சேரிகள் பல செய்துவருபவர், கூடுதலாக ZEE TAMIL சரிகமசீசன் 2 நிகழ்ச்சியில் பாடல் பாடி புகழ் பெற்றவர். தாய் கண் பார்வை இல்லாதவர். அவரை பராமரித்து கொண்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் பிரகாசத்தை B.A, B.ED படிக்க வைத்துள்ளனர். கூடுதலாக painting வேலையும் செய்துவருகிறார். இதனை பொறுத்துக் கொள்ளாத தொண்டைமான் ஊரணி கிராமத்து இளைஞர்களான உதிரிகள் மேற்கண்ட 4 பேர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பிரகாஷ் மீதான வன்கொடுமை தொடக்கமல்ல, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பட்டியலின மற்றும் முத்தரையர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் கள்ளர் சாதி உதிரி இளைஞர்களால் பிரகாஷை போன்றே தாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த வன்கொடுமை வெளியில் வரவில்லை. காரணம் தாக்கிய இளைஞர்களின் பெற்றோர்கள் வந்து “நாம ஒன்னுக்குள்ள ஒண்ணா பழகுறோம்? நமக்குள் எதுக்கு வழக்கு போலீஸ்” என்று சமரசம் பேசி வழக்கு கொடுக்க விடாமல் தடுத்து வந்துள்ளனர். பிரகாஷ் சம்பவம் மட்டும்தான் முதல்முறையாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்தி வெளியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. பிரகாஷ் அப்பாவான சதாசிவம் சாதி ஆதிக்கவாதிகளால் வண்டி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். அதற்கும் வழக்கு தண்டனை எதுவும் இன்றி முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதி முழுவதும் சாதிய வன்கொடுமைகள் அன்றாடம் நடப்பதாக பிரகாஷ் பதிவு செய்தார். காவல்துறையிடம் முறையிட்டால் அவர்கள் வனகொடுமை வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக கவுண்டர் பெட்டிஷன் கொடுக்க சொல்லி காவல்துறையே அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வழக்கை நீர்த்துப் போக செய்கிறது என்றார் பிரகாஷ்.
நான் எந்த சிக்கலுக்கும் போகமாட்டேன், எங்க அம்மாவை பார்த்துக் கொண்டு நான் சம்பாதிக்கும் வருமானத்தில் இப்போதான் எங்களுக்கு வீடு கட்டி வருகிறேன். நான் நல்லா பாடுவேன். என் அப்பா CPI கட்சியில் உறுப்பினராக இருந்தார். நானும் DYFI, SFI இல் வேலை பார்த்தேன் போராட்டத்திற்கு போவேன். தற்போது தமுஎச வில் உள்ளேன். அரசியல் கற்று நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், நம் குடும்பத்தை பார்க்க வேண்டும். பொறுப்பாக வளர வேண்டும் அதுல தான் நான் கவனம் செலுத்தினேன். இதுதான் அவங்களால தாங்கிக் கொள்ள முடியல.
அந்த சாதியைச் சேர்ந்த பசங்களுக்கு எந்த பொறுப்பும் இல்ல, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், நல்லா படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணமே இல்ல. அதிலும் சில பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு அடிபட்டதும் விசாரித்தார்கள். அவங்க சாதியில் கொஞ்சம் பேர் நல்லவங்க இருக்காங்க அவங்களும் இந்த மாதிரி பசங்கள திட்டுறாங்க. ஆனால் புதுசா ஒரு குரூப் இப்படி வளருறானுங்க.
“முற்போக்கு அரசியலுக்குள் வாங்கடா என்று அழைத்தாலும் வர ஆர்வம் இல்லை. ஆனால் கையில் கயிறு கட்டிக்கொள்கிறார்கள். சாதி சங்க கொடி ஏற்றுவது, தண்ணி அடிச்சிட்டு ரோட்டில் கத்திக் கொண்டு போகிற வரவங்கள சாதியை சொல்லி வம்பிழுக்கிறார்கள். திருப்பி கேட்டால் அடிக்கிறார்கள். இது வாடிக்கையாகவே இருக்கிறது.”
“அருகில் வசிக்கும் முத்தரையர் மக்கள் எங்க ஊரோடு நல்லா இருக்காங்க. அவங்களால எங்களுக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரல. அவங்க நல்ல குணமா இருக்காங்க. காதல் திருமணங்கள் நடந்தால் கூட நேரில் வந்து பேசி சமாதானமாக போகவே முயற்சிக்கிறார்கள். முத்தரையர் ஜனங்க பொருளாதாரத்தில் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்
அதனால் வாழ்க்கையில சம்பாதிக்கண்ணும் முன்னேறனும் என்று நினைக்கிறார்கள். முத்தரையர் ஜனங்களும் கந்தர்வக்கோட்டை கள்ளரால் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வளவு அட்டூழியம் செய்கிறார்கள்.”
பெற்றோர்களிடம் முறையிட்டால் என் பையன் கிட்டவே மோதுறியா? அவன் யார் தெரியுமா? அவன் அப்படிதான் பண்ணுவான்? என்று மகன் செய்யும் தவறை பெற்றோர்களே ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்க எப்படி அந்த பசங்க மாறுவாங்க?
ஏன் இப்படி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் என யோசிக்கிறேன் என்றார் பிரகாஷ்.
“ அவங்க என்ன நினைக்கிறார்கள் என்றால் பழைய மாதிரி அடிமை வேலை செய்யணும் குனிந்து இருக்கணும் என்று எதிர்பார்க்கிறார்கள். எங்க தலைமுறை நல்லா படித்து முன்னேற நினைக்கிறோம்.
“தேவையில்லாமல் என்னை அடித்து என் வாழ்க்கையும் வீண் பண்ணி, இப்போ கேசு, ஜெயில் என்று அந்த பசங்களும் வாழ்க்கையை வீண் பண்ணிக்கிட்டாங்க. ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்பாவது திருந்தி நல்லா வாழ்ந்தா எல்லாருக்கும் நிம்மதி ஏன் என்றால்
“நானும் நல்லா வாழனும் மற்றவர்களும் நல்லா வாழனும்” என்றார் பிரகாஷ்.
——————-
இந்த சமூகத்தில் பிரகாஷ் செய்த குற்றம் என்ன?
நன்கு படித்தது குற்றமா? தன் திறமையால் பாடலை பாடி புகழை பெற்றது குற்றமா? தன் உழைப்பால் நல்ல ஒரு வீடு கட்டி வாழ நினைத்தது குற்றமா? அடிமை வேலை செய்யாமல் நிமிர்ந்து வாழ நினைத்தது குற்றமா? எது இங்கு தடுத்தது?
உயர்சாதி என சொல்லிக் கொள்ளும் சாதிகளில் நிலவும் வன்மம், பொறாமை,
தலித் வெறுப்பு, தன்னை விட நல்லா இருக்கிறார்களே என்ற காழ்ப்புணர்ச்சி, இயலாமை, தாழ்வுமனப்பான்மை, தன்னிடம் வேலை செய்தவர்கள் இன்று மதிக்காம போறாங்க என்ற சாதிய மனோபாவம் போன்ற எண்ணங்கள் வளர்ந்து வரும் சமூகத்தை பின்னுக்கு இழுக்கிறது. இந்த எண்ணங்கள் மேலோங்கும் இடமெல்லாம் கிராமங்கள் எரிக்கப்படுவதும், வன்கொடுமைகள் நிகழ்வதும் நடக்கிறது.
இன்றைய இளைஞர்கள் ஒரு பிரிவு சாதி தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஒரு பிரிவு சாதி மத சங்கங்கள் பின்னால் செல்கிறார்கள்.
தலித் இளைஞர்களோ மக்களோ நன்கு படித்து தன் திறமையால் வளர நினைத்தால் அதனை ஏற்றுக் கொள்ள மனமின்றி வன்கொடுமைகள் செய்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட எதிர்க்காமல் அமைதி காப்பதன் விளைவு வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தலித்களே அவர்கள் வீட்டை கொளுத்திக் கொண்டனர், தலித்களே தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்துவிட்டார்கள், தலித்கள் தான் தவறு செய்திருப்பார்கள், தலித்கள் தான் கொலை செய்திருப்பார்கள், தலித்கள் தான் பிரச்சினை பண்ணிருப்பாங்க etc…
இத்தகைய விஷப் பிரச்சாரங்கள் அவதூறுகள் திட்டமிட்டு சாதியவாதிகளால் பரப்பப்படும்போது அதனை முறியடிப்பதற்கு முனைப்புக் காட்ட வேண்டும். மாறாக, களத்தில் உண்மையை கண்டறியாமல் சாதிய சிந்தனையோடு அதனை ஏற்கும் பொது மக்களின் முற்போக்கு சக்திகளின் மனநிலை ஆபத்தாக இருக்கிறது.
அன்றாடம் நடக்கும் சாதிய தீண்டாமை பாகுபாடுகளை தடுத்திட அந்தந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு சாதிக்குள்ளும், சமூகத்திலும் உள்ள ஜனநாயக சக்திகள் சாதி எதிர்ப்பாளர்கள் களத்தில் இறங்கி வினையாற்றினால் இந்தக் கொடுமைகள் நடப்பது கட்டுப்படுத்தப்படும். அதற்கான ஒருங்கிணைப்பு இன்று அவசியமாக இருக்கிறது. அதை முன்னெடுத்தால் மட்டுமே இத்தகைய வன்கொடுமைகள் தடுக்கப்பட்டு மக்களிடையே சமத்துவம், சாதி கடந்த வர்க்க ஒற்றுமை, தமிழர் ஒற்றுமை உருவாகும்.
சாதிக் கொடுமைக்கு மட்டுமின்றி இன்று உருவாகும் கூலிப்படைகள், கஞ்சா பழக்கங்களால் நடக்கும் கொலைகள் என இன்றைய இளைய தலைமுறையை சீரழிக்கிறது. முன்னோக்கி செல்லும் இந்த சமூகத்தை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு சாதிய மதவாதிகள் அப்புறப்படுத்தப்பட தமிழக அரசு கறாராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் விளைவு குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது.
திமுக அரசும் காவல்துறையும் குற்றங்கள் அதிகரிப்பதை வேடிக்கை பார்க்கிறது. வேங்கை வயல், நாங்குநேரி, பெரியகுளம், மணிமூர்தீஸ்வரம், திசையன்விளை, கிருஷ்ணகிரி சோக்காடி, ஆயப்பட்டி, கோபிசெட்டிபாளையம், மதுரை பெருங்குடி என எண்ணற்ற வன்கொடுமை கொலைகள் தாக்குதல்கள் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது.
*ஆனால் SC ST ஆணையம், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த தலைவர், அமைச்சர் யாருமே இதுவரை வன்கொடுமைகள் நடந்த மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சில வன்கொடுமைகளுக்கு மட்டும் நடவடிக்கை எடுப்பது என்பதும் பல வன்கொடுமைகளுக்கு குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் கண்டுகொள்ளாமல் இருப்பது எவ்வாறு சமூக நீதியை நிலைநாட்டுவதாக அமையும்? இதற்கு
முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு உடனடியாக கூட்ட வேண்டும்.
- தொடரும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்திட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- சாதி மத வெறுப்பை தூண்டும் அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
வ. ரமணி
பொதுச் செயலாளர்
சாதி ஒழிப்பு முன்னணி