உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னால் யார்? – அம்பலப்படுத்தும் சானல் 4 ஆவணப்படம் – செந்தில்

27 Sep 2023

இலங்கை அரசியலைப் பொருத்தவரை 2009 என்றால் அது முள்ளிவாய்க்கால் – சிங்கள பெளத்தப் பேரினவாதத்தால் தமிழர்கள் வகைதொகையின்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டதன் குறியீடு. 2019 என்றால் அது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு.( ஈஸ்டர் குண்டுவெடிப்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தால் தேவாலயங்களில் தொழுது கொண்டிருந்தோர் கொல்லப்பட்டதன் குறியீடாகும். இவ்விரண்டின் தொடர்பிலும் இன்றுவரை தற்சார்பான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு குற்றமிழைத்தோர் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை. 

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு யாரால், யாருக்காக, எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை செப் 4 ஆம் நாள் இரவு 11 மணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகமான சானல்  4 தொலைக்காட்சி, ஓர் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு “சிறிலங்காவின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் – அம்பலமாகும் தகவல்கள்        “.

சானல்  4 தொலைக்காட்சி  ”சிறிலங்காவின் கொலைக்களங்கள்” என்ற தலைப்பில் 2011 இல் வெளியிட்ட ஆவணப்படம் தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக சிங்களப் படையினர் நடத்திய சட்டப்புறம்பான கொலைகளைக் காட்சிப்படுத்தின. உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியதில் அதற்கொரு தனிச்சிறப்பான பங்குண்டு.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படமும் அது போலவே முகன்மையுடையது ஆகும். இப்போது நடந்துவரும் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடரைக் குறிவைத்துத் தான் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு:

2019 ஏப்ரல் 21 அன்று கொழும்பில் அந்தோணியார் ஆலயத்திலும் நீர்க்கொழுப்பில் செபஸ்டியான் ஆலயத்திலும் மட்டக்களப்பில் ஜியோன் ஆலயத்திலும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பு நகரில் உள்ள மூன்று சொகுசு விடுதிகளிலும் – சாங்ரி லா, கிங்ஸ் பரி, சின்னமன் கிராண்ட் இல் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் காலை 8:45 இல் இருந்து 9:05 க்குள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இவையன்றி பிற்பகல் வேளையில் இரண்டு விடுதிகளில் குண்டுகள் வெடித்தன. இத்தாக்குதல்களில் மொத்தமாக 269 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் 43 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தோர். அதில் 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தோர்.  இங்கிலாந்து, துருக்கி, டென்மார்க், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல்களின் மூளையாக ஹாசிம் ஜாகிரான் என்பவர் இருந்தார். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்டோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தோர் என்று சொல்லி இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான அப்பாவி இசுலாமிய  இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இசுலாமியர்களுக்கு எதிரான சிங்கள பெளத்தப் பேரினவாதம் சிறிலங்காவில் கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியது.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ் – சிங்கள கத்தோலிக்கர்கள் ஆவர். இதுநாள்வரை இத்தாக்குதலுக்கு காரணமானோர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவில்லை.

சானல் 4 காணொளி:

இந்த 47 நிமிட காணொளி உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கும் இராசபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான புலனாய்வுத் துறை அதிகாரிக்கும் இத்தாக்குதலை நடத்தியவர்களோடு உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இராணுவப் புலனாய்வுத் துறை தாக்குதலுக்கு துணை போனதை இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிள்ளையானிடம் 20 ஆண்டுகள் மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றிய, கடந்த ஆண்டு உயிருக்கு தஞ்சம் கேட்டு சுவிட்லார்ந்துக்குப் போயுள்ள அன்சீர் ஆசாத் மெளலானா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இவர் இவ்வாண்டு தொடக்கத்தில் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையிடம் வாக்குமூலம் தந்துள்ளார்; ஐரோப்பிய உளவு அமைப்புகளும் இவரை உசாவல் செய்துள்ளன. அந்த வாக்குமூலம் ஏற்கெனவே வெளிவந்திருப்பினும் சானல் – 4 காணொளி வழியாக தொகுக்கப்பட்டிருப்பது சிங்களத் தரப்பில் கூடுதலான விவாவத்தைக் கிளப்பியுள்ளது.   சானல் 4 காணொளியில் வரக்கூடிய செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் படுகொலை

2005 இல் மகிந்த இராசபக்சே சிறிலங்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்டார். அவர் அதிபரானவுடன் தனது தம்பியான கோத்தபய இராசபக்சேவை நாட்டின் பாதுகாப்புச் செயலர் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம், ,நாட்டின் இரண்டாவது அதிகாரமிக்க மனிதனாக கோத்தபய இராசபக்சே மாறிப்போனர். அவரது நேரடிக் கட்டளையின்கீழ் விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போர் நடத்தப்பட்டது. அப்போரில் ஒரு சிறு நிலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் மாட்டிக் கொண்டனர். அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தே குண்டு மழைப் பொழிந்தது சிங்கள படை. சுமார் 40,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக படுகொலைகளை நடத்துமாறு கோத்தபய இராசபக்சே கட்டளையிட்டார்.  சண்டே லீடர் ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் பிரெட்ரிக் ஜான்சு வின் கூற்றாக இவை சானல் 4 காணொளியில் சொல்லப்படுகின்றன.

லசந்தா படுகொலை:

போரின் வெற்றிநாயகனாக இராசபக்சேக்கள் மாறிப்போயினர். அவர்கள் புலிகளுக்கு எதிரானப் போரை முடித்த பின், சிவில் சமூகத்தினருக்கு எதிரானப் போரைத் தொடங்கினர். கோத்தபய இராசபக்சேவுக்கு எப்படி ஒடுக்குமுறையை செய்ய வேண்டும் என்பது மிக நன்றாகத் தெரியும். அவர் அச்ச சூழலை உருவாக்குவதில் மிகவும் திறன் வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலர் கோத்தபய, நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்கு என்னென்ன வழிவகைகள் தேவையோ அவற்றை எல்லாம் செய்தார் என்று சிறிலங்காவின் மனித உரிமை ஆனையத்தின் ஆணையராக 2015 முதல் 2020 வரை செயல்பட்ட அம்பிகா சத்குகானந்தம் சொல்கிறார்.

பிள்ளையானும் நானும் கோத்தபயாவை சந்தித்த போது தனக்கு உதவும் பொருட்டு டிரிபோலி பிளாட்டூன் (Tripoly Platoon) என்ற பெயரில் துணை இராணுவக் கொலைப் படை ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். உங்களிடம் இருக்கும் சிறந்த ஆட்களைக் கொண்டு அவ்வணியை அமைக்குமாறு சொன்னார். அந்தப் படை கோத்தபயவின் நேரடி கட்டளையின் கீழ் செயல்பட்டது. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்று மெளலானா சொல்கிறார்.

துணை இராணுவப் படைகள் அரசுடன் சேர்ந்து வேலை செய்ததைப் பார்க்க முடிந்தது. ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டதைக் காண முடிந்தது. ஊடகத் துறை மீது இராசபக்சேக்கள் தாக்குதலை நடத்தினர். தி நேசன் நாளிதழின் பாதுகாப்புப் பிரிவு சேகரிப்பாளர் குல்தீப் நய்யார் கடத்தப்பட்டு தாக்கபட்டார். ஊடக ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மிரட்டப்பட்டனர், தாக்கப்பட்டனர், கொல்லவும் பட்டனர்.

மனித உரிமைக் கண்காணிப்பகமும் ( HRW) அமெரிக்க வெளியுறவுத் துறையும்( US State Department) தாக்குதல்கள் பலவும்  டிரிபோலி பிளாட்டூனால் நடத்தப்பட்டவை என்று உறுதிசெய்தன. இத்தகைய தாக்குதல்களுக்கு இடையிலும் சண்டே லீடர் ஆசிரியரும் நிறுவனருமான லசந்தா விக்ரமசிங்கே அரசை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த துணிவுடன் புலனாய்வு இதழியலை மேற்கொண்டிருந்தார். அவரது ஊடக அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வரசால் தான் கொல்லப்படக் கூடும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். இரசியாவிடம் இருந்து மிக் 27 ரக போர் விமானங்கள் வாங்கியதில் கோத்தபய இராசபக்சே ஊழல் செய்திருக்கிறார் என்பதை லசந்தா அம்பலப்படுத்தினார். இது கோத்தபயவுக்கு ஆத்திரமூட்டியது.

அப்போது கோத்தபய இராசபக்சே பிள்ளையானையும் என்னையும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அவரது அறையில் அவரை சந்தித்தோம். சண்டே லீடர் செய்தித்தாளை தன் மேசையில் வைத்திருந்தார்.   ”இந்த நாய் லசந்தா தன்னிடம் எப்போதும் விளையாடுகிறது, அவர் கொல்லப்பட வேண்டும். உங்களால் இயலுமாயின் உடனே அவரைக் கொன்றுவிடுங்கள் என்று சொன்னார்” என்று கோத்தபய கூறியதாக மெளலானா வாக்குமூலம் தந்துள்ளார்.

2009 சனவரி 8 அன்று தன் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் போது லசந்தா சுட்டுக் கொல்லப்பட்டார். ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புக் கமிட்டியின் கணக்குப்படி போர் முடிவுற்ற கடைசிப் பத்தாண்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் லசந்தா 19 ஆவது ஆள் ஆவர்.

லசந்தாவைப் படுகொலை செய்ததன் மூலம் மாபெரும் அச்சம் விதைக்கப்பட்டு பலரும் மெளனிக்கப்பட்டனர் என்று அம்பிகா சத்குகானந்தம் சொல்கிறார்.

இராசபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலம்:

2010 வாக்கில் இராசபக்சேக்கள் பெரும்பாலான ஊடகங்களை மெளனிக்கச் செய்தனர். இராசபக்சே சகோதரர்கள் போர் வெற்றியின் மீதமர்ந்து கொண்டனர். அவ்வாண்டு நவம்பரில் மீண்டும் அதிபராக மகிந்த இராசபக்சே தெரிவு செய்யப்பட்டார். கோத்தபய பாதுகாப்புத் துறை செயலராகவே தொடர்ந்தார். போர் வெற்றி அவர்களை மக்களிடையே கதாநாயகர்களாக ஆக்கியது.

இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் சில ஆண்டுகளில் இராசபக்சேக்கள் தமது புகழைப் பயன்படுத்தி தங்கள் அதிகாரத்தை உறுதிசெய்து கொண்டனர். குற்றங்களுக்கு தண்டனைக் கிடையாது என்ற அச்சமின்மையும் நாடே தங்களுக்கு சொந்தம் என்ற உணர்வும் அவர்களிடம் இருந்தது. இராசபக்சே குடும்பம் எல்லாமாக மாறிப் போனது. உடனடி உறவினர் மட்டுமின்றி தூரத்து உறவினர்கள் வரை எல்லோருக்கும் அரசு பதவிகளோ அல்லது தொழில் வாய்ப்புகளோ அல்லது அரசின் சலுகைகளோ கொடுக்கபட்டன.  இராசபக்சே குடும்பத்தில் கிட்டதட்ட 40 பேருக்கு அரசப் பதவிகள் கொடுக்கப்பட்டன. வெகுசில ஆண்டுகளில் இராசபக்சே குடும்பத்தினர் நாட்டின் 70% வரவுசெலவுத் தொகையை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக மாறிப்போயினர்.

இராசபக்சேக்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சுழன்றடித்தன, அவர்கள் மீதான பொதுக்கருத்து மாறத் தொடங்கியது. இலங்கைக்கு வெளியில் உள்ள கமுக்க நிறுவனங்களில்  இராசபக்சே குடும்பத்தினர் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்று புலனாய்வு இதழியலுக்கான பன்னாட்டுக் கூட்டமைப்பு அம்பலப்படுத்தியது.

இராசபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முடிவில் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரானப் போராட்டங்கள் எழுந்தன. ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா 2015 சனவரியில் சிறிலங்காவின் 6 ஆவது அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.

நிசாந்தா சில்வாவின் வாக்குமூலம்:

20 ஆண்டுகாலம் சிரிலங்கா காவல்துறையின் உயர் பொறுப்பில் பணியாற்றிய நிசாந்தா சில்வா, இராசபக்சே ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சிறிசேனா அரசால் பணியமர்த்தப்பட்டவர். அவர் தனது வாக்குமூலத்தை ஐரோப்பிய புலனாய்வு நிறுவனங்களிடமும் ஹேக்கில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்திடமும் கொடுத்திருந்தார். அவர் முதல் முறையாக ஊடகத்திடம் தான் அறிந்தவற்றை சொல்லியுள்ளார். அவர் சிறிலங்காவை விட்டு ஏன் வெளியேறினார் என்ற கேள்விக்குப் பதிலாக, “தனக்கும் தனது குடும்பத்திற்கும் இராணுவப் புலனாய்வுதுறை , கடற்படை புலனாய்வுதுறை, முன்னாள் அதிபர் கோத்தபயவிடம் இருந்து உயிர் அச்சுறுத்தல் இருந்தது.

இவர் விசாரித்த வழக்குகளில் லசந்தா விக்ரசமசிங்கே கொலை வழக்கு முகன்மையானது. அதில் அவர் டிரிபோலி பிளாட்டூனின் பங்கைக் கண்டுபிடித்தார். லசந்தா கொலையில் தொடர்புடைய டிரிபோலி பிளாட்டூன் அமைப்பின் உறுப்பினர்கள் ஐவரின்  தொலைபேசி எண்களைக் கண்டுபிடித்தார். அந்த தொலைபேசி எண்களையும் அவற்றுடனான அழைப்புகளையும் ஆய்வு செய்தபொழுது கொலைகாரர்கள் லசந்தாவின் வீட்டில் இருந்து அவர் கொலை செய்யப்படும் இடம் வரை பின்தொடர்ந்து வந்ததைக் கண்டுபிடித்தார்.

பல ஆண்டுகளாகவே இந்த கொலைக்குப் பின்னால் கோத்தபய இராசபக்சே இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர். நிசாந்தாதான் அந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்தக் கூடிய சான்றை முதன்முதலாக கண்டுபிடித்தவர் ஆவர். “கோத்தபய டிரிபோலி பிளாட்டூனிடம் நேரடி தொடர்பில் இருந்தார். அதனால், அவரைக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு முன்பு விசாரணைக்கு அழைத்தேன்” என்று நிசாந்தா சொல்கிறார்.

நிசாந்தாவின் இம்முடிவு மிகவும் துணிச்சலானது. ஏனென்றால் கோத்தபய ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் அதிகாரம் மிக்கவராகவே இருந்தார். அவருக்கு அதிகாரமிக்க நண்பர்கள் இருந்தனர்.

””லசந்தா கொலை வழக்கில் என் பெயரை ஏன் சந்தேகத்திற்குரியவராக சேர்த்தீர்கள்?” என்று கோத்தபய என்னிடம் கேட்டார். நான் தேவையானவற்றை மட்டுமே செய்வேன். தேவையில்லாதவற்றை நான் செய்வதில்லை. நீங்கள் யார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நான் உங்கள் பெயரை சந்தேகத்திற்கு உரியவர் பட்டியலில் சேர்த்தேன்” என்று அவரிடம் சொன்னேன். என் பொருட்டு அவருக்கு அதிருப்தி இருப்பதாக காணப்பட்டார்” என்று நிசாந்தா சொல்கிறார்.

இராசபக்சேக்களிடம் பற்றுடன் இருக்கக்கூடிய அதிகாரமிக்க ஆட்கள் லசந்தா கொலைவழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் முட்டுக்கட்டைப் போட்டனர்.

நெருக்கடியில் இராசபக்சேக்கள்

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் இராசபக்சேக்களைச் சுற்றி எழுந்தன. மகிந்த இராசபக்சே ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முன்னாள் பொருளியல் வளர்ச்சித் துறை அமைச்சர் பசில் இராசபக்சே நிதிசார் குற்றங்களுக்கானப் புலனாய்வுப் பிரிவால் சிறைப்படுத்தப் பட்டார். மகிந்தவின் மகன் நாமல் இராசபக்சேவும் மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்டார். இராசபக்சேக்களும் அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு இழந்துப் போனார்கள்.

”யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். திடீரென்று எல்லாம் மாறிப் போனது. நாங்கள் மிகவும் பயந்து போய் இருந்தோம்” என்று மெளலானா சொல்கிறார்.

இராசபக்சேவை எதிர்க்கும் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் 2005 இல் தேவாலயத்தில் வைத்து நள்ளிரவு தொழுகை நடந்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். அவ்வழக்கில் அக்டோபர் 2015 இல் பிள்ளையான் குற்றவியல் புலனாய்வு பிரிவால் விசாரணைக் கைதியாக மட்டக்களப்பில் சிறைப்படுத்தப் பட்டார். அது அவருடைய சொந்த ஊர் என்பதால் அவருக்கு செல்வாக்கு இருந்தது. எனவே, சிறையிலும் அவர் ஓர் அரசியல்வாதியாக சிறப்புச் சலுகையுடன் இருந்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு திட்டமிடல்:

”குண்டு வெடிப்புக்கு 19 மாதங்களுக்கு முன்பு 2017 செப்டம்பரில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் பிள்ளையானை அவரது அறையில் சந்தித்தேன். ”ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சில சிறையாளர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் ‘’தீவிரமானவர்கள்”. அவர்களில் ஒருவரை நீ சந்திக்க வேண்டும்” என்று பிள்ளையான் என்னிடம் சொன்னார். ஒரு சிறைக்காவலர் அந்த சிறையாளரை அழைத்து வந்தார். அவர் கறுப்பு நிறத்தவராக, தாடியுடன் இருந்தார். அவர் பெயர் ஜைனி மெளல்வி”  என்று மெளலானா சொல்கிறார்.

ஜைனி அசிம் மெளல்வி சமய தீவிரவாதக் குற்றங்களுக்காக அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது சகோதரர் ஜாகிரான் தலைமறைவாக இருந்தார். அவர்  தேசிய தவ்ஹீத் ஜமாத் (National Thowheed Jamad) அமைப்புக்கு உறுப்பினர்களைத் திரட்டி வந்தார். அது ஒர் இசுலாமிய தீவிரவாதக் குழுவாகும். அது சிறிலங்காவில் கலிபா ஆட்சியைக் கொண்டுவர விரும்பியது.

”அவர்கள் சாவுக்காக காத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், பிள்ளையானோ, ”இது நல்லது. அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொன்னார். அவர்களுக்கு இவ்வுலகில் எதன் மீதும் ஈடுபாடு இல்லை. அவர்களைப் பிணையில் வெளியே எடுப்பதற்கு செலவு செய்து ஒரு வழக்கறிஞரை அமர்த்தினேன். அவர்கள் பிணையில் வெளியே வந்தார்கள்.

”மூன்று மாதங்களுக்குப் பிறகு சனவரி 2018 இல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சாலையுடன் இவர்களுக்கு ஒரு சந்திப்பை ஏற்படுத்துமாறு பிள்ளையான் என்னிடம் சொன்னார்” என்று மெளலானா சொல்கிறார்.

இராசபக்சே ஆட்சிக் காலத்தில் சுரேஷ் சாலை மிக வேகமாக வளர்ந்து புலனாய்வுத் துறையின் இயக்குநராகப் பதவி உயர்வுப் பெற்றிருந்தார். 2015 இல் இராசபக்சே தேர்தலில் தோற்ற பிறகு, புதிய அரசாங்கத்தால் இவர் மலேசியாவுக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் அப்போதும் இராசபக்சேக்களுக்கு மிகவும் பற்றுடன் இருந்தார். திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இராணுவத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தார்.

தன் பெயரை சொல்ல விரும்பாத, உயர்பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர், ”சுரேஷ் சாலை எப்படி செயல்படக் கூடியவர்” என்று சானல் 4 இடம் பகிர்ந்துள்ளார். கோத்தபயவின் கட்டுப்பாட்டில் இருப்பவர் சுரேஷ் சாலை. அதனால், மிக இலகுவாக உயர் பதவியை அவரால் அடைய முடிந்தது. இவர்தான் சிறிலங்காவின் ஏராளமான பிரச்சனைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர். 

”பிள்ளையான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு நான் சிறையில் இருந்து வெளியே எடுத்த நபரும் சுரேஷ் சாலையும் சந்திப்பதற்கு நான் ஒழுங்கு செய்தேன். அந்த சந்திப்பு நடைபெற்ற இடம் கரடிப்புவல் ஆகும். அங்கு ஒரு பெரிய தென்னந்தோப்பு உள்ளது. அங்கு ஒரேயொரு வீடு இருந்தது. நான் செல்லும் போதே அங்கு சுரேஷ் சாலை வந்திருந்தார். தேசிய தவ்ஹீது ஜமாத் உறுப்பினர்கள் வரும்வரை நாங்கள் காத்திருந்தோம். அவர்கள் வெள்ளை மூடுந்தில் ( வேன்) வந்தார்கள். அதில் ஜைனி இருந்தார். அவருடன் ஜாகிரானும் வந்திருந்தார். ஜாக்கிரான் தங்களுடைய தலைவர் என்று ஜைனி எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் அவர்களை சுரேஷ் சாலைக்கு அறிமுகப்படுத்தினேன். என்னை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். அவர்களுக்கு இடையிலான சந்திப்பு மூன்று மணி நேரம் நடைபெற்றது. அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் சுரேஷ் சாலை, ”சிறிலங்காவுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழல் வேண்டும்” என இராசபக்சேக்கள் விரும்புவதாகவும் கோத்தபய அதிபராவதற்கு அதுஒன்றுதான் வழி என்றும் என்னிடம் சொன்னார்” என்று மெளலானா சொல்கிறார்.

இந்த சந்திப்பு நடந்ததாக சொல்லப்படும் நாட்களில் தான் மலேசியாவில் இருந்ததாக சுரேஷ் சாலை சொல்கிறார்.

2018 இன் இறுதிவாக்கில் தேசிய தவ்ஜீத் ஜமாத் தலைப்புச் செய்திகளில் அடிபடத் தொடங்கியது. இரு காவல்துறையினரின் உடல்கள் மட்டக்களப்பில் ஐயத்திற்கு இடமான வகையில் கிடைத்தன. இக்கொலையைச் செய்துவிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாத்தினர் தப்பிச் சென்றுவிட்டனர். சனவரி 2019 இல் காவல்துறை விசாரணையில் தென்னந் தோப்பில் உள்ள அந்த பாதுகாப்பான வீட்டை வந்தடைந்தனர். அந்த இடத்தில்தான் சுரேஷ் சாலைக்கும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அந்த வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது அதிர்ச்சிதரக் கூடிய பொருட்கள் கிடைத்தன.  100 கிலோவுக்கு மேல் யூரியா நைட்ரேட் என்ற வெடி மருந்து கிடைத்தது. கூடவே, கருவிகளையும் இராணுவம்சார் வன்மியங்களையும் ( military hardwares)  பார்க்க முடிந்தது. சந்தேகத்திற்குரிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அந்த வீடோ அல்லது அந்த பயிற்சி மையமோ ஜாகிரானால் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அவர்கள் தேசிய தவ்ஹீது ஜமாத்தின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.

ஜாகிரானையும் என்.டி.ஜே. உறுப்பினர்களையும் கைது செய்வதற்குப் போதுமான தகவல்கள் காவல்துறையிடம் இருந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் காவல்துறையின் புலனாய்வுக்கு குறுக்கே இரும்புக் கதவுகள் வந்தன. என்.டி.ஜே வின் தலைவரைக் கண்டுபிடிக்க காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு முயலும் போதெல்லாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு குறுக்கே வந்து சில தகவல்களைக் கொடுக்கும். அத்தகவல்கள் அடிப்படைகள் அற்றவை என்பது பின்னர் தெரிய வரும்.

முரண்பட்ட, பொய்யான தகவல்களைக் கொடுப்பதன் மூலம் இராணுவப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையின் புலனாய்வை ஒவ்வொரு கட்டத்திலும் முடக்குவதற்கு முயன்றிருக்கிறது.

”இராணுவப் புலனாய்வு துறை கொடுத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்பு தெளிவாக தெரியவந்தது. இதுவொரு மிகப் பெரிய குற்றம். இதனால் எவ்வளவு பெரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன!  இராணுவப் புலனாய்வும் அரசப் புலனாய்வும் இதுபோல் தவறாக வழிநடத்தாமல் இருந்திருக்குமாயின் கண்டிப்பாக குற்றவியல் புலனாய்வுப் பீரிவு(CID) இதில் தேசிய தவ்ஹீத் ஜமாத் ஈடுபட்டுள்ளதைக் கண்டுபிடித்திருக்க முடியும்.”  என்று அந்த உயரதிகாரி பதிவு செய்கிறார்.

குண்டுவெடிப்பு நடப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன்பு இந்தியப் புலனாய்வுத் துறை சிறிலங்காவின் அரசப் புலனாய்வுத் துறைக்கு ஜாகிரான் இத்தகைய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப்பதைச் சொல்லி எச்சரித்துள்ளது. சிறிலங்கா காவல்துறையின் உயர்பொறுப்பில் இருந்தோர் எச்சரிக்கை எழுப்பி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். உண்மையில் புலனாய்வுத் தகவல்கள் கத்தோலிக்க தேவாலயங்கள் வாய்ப்புள்ள இலக்குகள் என்பதைக்கூட துல்லியமாகக் காட்டின. ஆனால், அரசின் உயர் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் அதிபருக்கும் இச்செய்தி போய் சேரவில்லை என்று தாக்குதலுக்குப் பிறகு சொல்லப்படுகிறது.

”கிடைக்கப்பெற்றத் தகவல்கள் உறுதியானவை. எந்த நாளில், எந்த இடத்தில், யாரால் , என்னவிதமான தாக்குதல் நடக்கப் போகிறது என எல்லாத் தகவல்களும் கிடைக்கப்பெற்றிருந்தன” என்று அந்த உயரதிகாரி சொல்கிறார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்:

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்த அன்று காலை நேரத்தில் சுரேஷ் சாலையிடம் இருந்து எனக்கு எதிர்பாராத அழைப்பு வந்தது. அவர் என்னை உடனடியாக கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஓட்டலுக்குப் போகச் சொன்னார். அங்கோர் ஆள் எனக்காக காத்திருப்பதாகவும் அங்குசென்று அவரை என்னுடன் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு அவர் சொல்லும் இடத்தில் அவரை இறக்கிவிடுமாறும் அவரது தொலைபேசியை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் எனக்கு அறிவுறுத்தினார். ஆனால், ”நான் மட்டக்களப்பில் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

அதேநேரத்தில், தாஜ் சமுத்ரா ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஜாகிரானின் என்.டி.ஜே குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை காலை 8:50 மணி வாக்கில் காட்டியது. அவர் வெடிமருந்துகள் அடங்கிய பையொன்றை முதுகில் மாட்டியிருந்தார். இவரைத்தான் சந்திக்குமாறு சுரேஷ் சாலை தன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று மெளலானா  இப்போது  கருதுகிறார். அந்த ஆளுக்கு அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. இரண்டு நிமிடத்திற்குப் பிறகு அவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்யாமல் அந்த விடுதியில் இருந்து வெளியேறுகிறார்.

நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்டியன் தேவலாயத்தில் உயிர்த்த ஞாயிறு தொழுகை முடிவுக்கு வருகிறது. தொழுகை முடிந்து எல்லோரும் புறப்பட அணியமாகும் பொழுது முதல் மனித வெடிகுண்டு வெடித்தது. இதில் 115 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில்  27  பேர் குழந்தைகள். இதற்குப் பிறகு ஒரே நேரத்தில் இரு வேறு தேலாயங்களிலும் மூன்று சொகுசு விடுதிகளிலும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. சாங்ரி லா விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜாகிரானும் இன்னொரு ஆளும் ஈடுபட்டிருந்தனர்.

பிற்பகல் இரண்டு மணி வாக்கில் மத்திய கொழும்பில் உள்ள ’டிராபிகல் இன்’ என்ற நடுத்தர விடுதியில் ஏழாவது குண்டு வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வெடித்து சிதறியவர் தாஜ் சமுத்ரா விடுதியில் இருந்து அன்று காலை வெளியேறிய அதே ஆள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னான நாட்களில் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தியது.  இந்த சோதனைகளின் போது ஜாகிரானின் சகோதரர் ஜைனியை ஒரு வீட்டில் கண்டுபிடித்தனர். மட்டக்களப்புச் சிறையில் பிள்ளையானுடன் மெளலானா சந்தித்தது இந்த ஆளைத்தான். படையினர் அந்த வீட்டை முற்றுகையிட்டு தாக்குவதற்கு அணியமாகிக் கொண்டிருந்தபோதே, ஜைனி கைபேசி வழியாக நேரலையில் பேசிவிட்டு, வெடிகுண்டை வெடிக்கச் செய்து தனது மனைவி, குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டார்.

”உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்த பிறகு அதில் ஈடுபட்டவர்களின் முகத்தை என்னால் அடையாளம் காண முடிந்தது. முதலாவது ஆள் ஜாகிரான். அவர்தான் தலைவர். இரண்டாமவர் அவரது சகோதரர் ஜைனி. எனக்கு இந்த ஆட்களைத் தெரியும். அவர்களை நான் முன்பே சந்தித்திருந்தேன். நான் பயந்துபோனேன். பிள்ளையானைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர், ’உனக்கு எதுவும் தெரியாது. அவ்வளவு தான். உன் வாயை மூடிக் கொண்டிரு’ என்று சொன்னார் என மெளலானா சொல்கிறார்.

 கடற்கரை விடுதிகளில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து அமெரிக்கக் குடிமக்களும் இருந்தனர். எனவே, அமெரிக்கப் புலனாய்வு துறையான எப்.பி.ஐ. யும் தனது சொந்தப் புலனாய்வைத் தொடங்கியது.

”எப்.பி.ஐ. ஓர் ஐ.பி. முகவரியை ( IP address ) எங்களுடன் பகிர்ந்து கொண்டது. அதில் இருந்து ஜாகிரான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறார். அவர் யாரென கண்டுபிடிக்கச் சொன்னார்கள். அந்த ஐ.பி. முகவரி ஒர் இசுலாமியப் படை வீரருடையதாகும். அவர் இராணுவப் புலனாய்வுடன் தொடர்புடையவர்” என்று அந்த உயரதிகாரி சொல்கிறார்.

இந்த சந்தேகத்திற்கு உரிய ஆளை விசாரணைக்கு உட்படுத்துவதை இராணுவப் புலனாய்வுத் துறையே தடுத்தது. சுரேஷ் சாலையை குற்றஞ்சாட்டக் கூடிய சான்றுகள் கிடைக்கப்பெற்றன என்று அந்த உயர் அதிகாரி சொல்கிறார். சுரேஷ் சாலை கோத்தபயவுக்குப் புலனாய்வு துறையில் உள்ள மிகவும் நம்பிக்கைக்குரிய ஆளாகும்.

”சுரேஷ் சாலை இக்குண்டுவெடிப்பை நடத்துவதில் மிகப் பெரிய பங்காற்றியுள்ளார். அவர் இக்குண்டுவெடிப்பு நடத்துவதை எளிதாக்கியுள்ளார். மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி அவருக்கு தெரிந்திருந்தது. குறிப்பாக ஜாகிரானும் அவரது செயல்பாடுகளும் அவருக்கு தெரிந்து இருந்தது”  என்று உயரதிகாரி வாக்குமூலம் தந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்து சில நாட்களிலேயே கோத்தபய அரசியலில் நுழைந்தார். மகிந்த ஆதரவுடன் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார். அவர் தேர்தல் பரப்புரைகளில் இசுலாமிய வெறுப்பு அலையைத் தூண்டிவிட்டார். இப்போது நாட்டை சூழ்ந்துள்ள இசுலாமிய ஆபத்தில் இருந்து நாட்டை தன்னால் மட்டும்தான் மீட்க முடியும். தமிழர்களைத் தோற்கடித்தது போல் இந்த புதிய இசுலாமிய ஆபத்தில் இருந்தும் நாட்டைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று  தேர்தலில் பரப்புரை செய்தார். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னான ஆறு மாதங்களுக்குள் நடந்த அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார் கோத்தபய. பிள்ளையான் உள்ளிட்ட இராசபக்சேக்களின் பற்றாளர்கள் இராசபக்சே குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை வரவேற்றனர்.

”இராசபக்சேக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் கட்டளைக்கு ஏற்பவே இராசபக்சே பற்றாளர்கள் இந்த தாக்குதலை நடத்தினார்கள்” என்று மெளலானா சொல்கிறார்.

கோத்தபய பதவிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையைத் தடம்புரளச் செய்தார். அவர் விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தார். அவர் விசாரணையை நாசப்படுத்தினார்.

சுரேஷ் சாலை  நாட்டின் புலனாய்வுத் துறையின்  தலைவராக கோத்தபயவால் பணியமர்த்தப்பட்டார். நவம்பர் 2022 இல்  பிள்ளையான் மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு மாதத்தில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதிபர் விசாரணை ஆணைக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையைக் கொடுத்தது. கோத்தபய அந்த அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார். அந்த அறிக்கை சானல் 4 க்கு கிடைத்துள்ளது. மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியக் குழுவின் தலைவரை பல ஆண்டுகளுக்கு முன்பே புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருந்தது என்று அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது

தாக்குதல் நடந்தது முதலே நீதிக்காக உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் கத்தோலிக்க சபையின் தலைவர் கார்டினல் மால்கம் ரஞ்சித் ஆவார். ”அரசு அதிகாரிகளுக்கு இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. தற்சார்பான புலனாய்வு நடத்த வேண்டும்” என்று அவர் கோரி வருகிறார். ”உண்மையைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் இந்த போராட்டத்தைத் தொடர்வோம். அதை தெரிந்து கொள்வதற்கான உரிமை மக்களுக்கு உண்டு” என்று அவர் சொல்கிறார். 2022 ஆம் ஆண்டு வாடிகனில் இருந்து போப் அவர்களும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு நீதியை உறுதிசெய்ய வேண்டும் என்ற குரலை எழுப்பினார்.

பொருளியல் நெருக்கடி காரணமாக எழுந்த வெகுமக்கள் எழுச்சியின் பகுதியாக அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். செப்டமர் 2022 இல் கோத்தபய நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. சில கிழமைகளுக்குப் பிறகு அவர் சிறிலங்காவுக்கு திரும்பினார்.

இராசபக்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் மேல்மட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நாட்டைத் திருடிக் கொண்டிருக்கிறார்கள்; பலன் அடைகிறார்கள். இதுவொரு வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. அரசியல் வாழ்வியலாக மாறிவிட்டது. இதுவொரு அமைப்பாக நிலைப்பெற்றுள்ளது. எனவே இராசபக்சேக்களைத் தாண்டி களையெடுக்கப்பட வேண்டிய பலரும் உள்ளனர் என்று சன்டே லீடர் முன்னாள் ஆசிரியர் சொல்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் கோத்தபயவிடமும் பிள்ளையானிடமும் முன் வைக்கப்பட்டது. அவர்கள் பதிலளிக்கவில்லை. சுரேஷ் சாலை என்.டி.ஜே உறுப்பினர்களைச் சந்தித்ததாக சொல்லப்படும் நாட்களில்  தான் மலேசியாவில் இருந்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்த பொழுது இந்தியாவில் இருந்ததாகவும் சனவரி 2018 க்கும் 2019 ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்புக் கட்டமைப்புகளில் எவ்வித செயல்பாட்டிலும் இல்லை என்றும் சுரேஷ் சாலை சானல் – 4 க்கு சொல்லியுள்ளார்.

இந்த குட்டுடைப்பாளர்களின் ( Whistleblowers) வாக்குமூலங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

  1. புலனாய்வுத் துறை அதிகாரிகள் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை இரகசியமாக சந்தித்தார்களா?
  2. பயங்கரவாதக் குழுவைக் கண்டுபிடிக்க முயன்ற காவல்துறையை இராணுவப் புலனாய்வுப் பிரிவு தவறாக வழிநடத்தியதா?
  3. குண்டுவெடிப்புக்கான விசாரணையை கோத்தபய அரசு நாசப்படுத்தியதா?

இந்த ஆவணப்படம் வெளிவந்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பை விசாரிப்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றை அமைத்துள்ளது சிறிலங்கா அரசு. இதை நம்ப மறுத்து பன்னாட்டுப் புலனாய்வை வலியுறுத்துகிறார் கார்டினல் மால்கம் இரஞ்சித்.

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவும் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரியுள்ளார். இசுலாமியர்கள் தரப்பும் இக்கோரிக்கையை எழுப்பத் தொடங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டுமென சிங்களத் தரப்பில் இருந்து எழும் குரல்களை  இறையாண்மை, ஆட்சிப்புல ஓர்மை என்ற பெயரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சிங்கள பெளத்தப் பேரினாவதம் சிங்களவர்களிடையே தனிமைப்படுவதற்கான வழித்தடம் தெரியத் தொடங்கியுள்ளது. அரகலயா போராட்டம் ஊழல் எதிர்ப்பின் பெயரால்தான் எழுந்தது என்றாலும் சிங்கள வெகுமக்களில் ஒரு தரப்பினரிடம் இராசபக்சேக்கள் தனிமைப்பட்டதைக் காட்டி நின்றது. இப்போது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு நீதி வேண்டுமாயின் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என சிங்களர்களில் ஒருசாரார் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் மக்கள் உறுதியுடன் நின்று போராடினால் சிங்கள பெளத்தப் பேரினவாதம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முற்றிலும் தனிமைப்படும் நிலைமைகள் தோன்றும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களுக்கு எதிராகப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்ற குரல் சிங்களத் தரப்பில் இருந்தும் எழ முடியும்.

நீதிக்கான போராட்டத்தை சோர்வின்றியும் நம்பிக்கையோடும் தொடர்வோம்!   

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW