எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணியவைக்க அமலாக்கத்துறை!

01 Sep 2023

மணிமாறன்

அமலாக்க துறையும்(ED) பண மோசடி தடுப்புச் சட்டமும் (PMLA) எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் இந்தச் சட்டம், ஜனநாயக நாட்டிற்கு உகந்தது அல்ல என்ற எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

அமலாக்க இயக்குநரகத்தின்(ED) திறனை வலுப்படுத்த அவசியம் என்று சொல்லியே ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் பண மோசடி தடுப்புச் சட்டத்தை கொடூரமானதாக மாற்றியுள்ளது. தடா, பொடா சட்டங்களை விட கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, மிகையான அதிகாரங்கள் கொண்டதாக அமலாக்க இயக்குநரகம் மாறியுள்ளது. இதனை ஏவி விட்டு, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவது, அவர்களில் ஒரு பகுதியினரை சேர்த்துக் கொண்டு மாநில அரசுகளை கைப்பற்றுவது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) செயல்பாடுகள், இயற்கை நீதிக்கு எதிரானதாகும். குற்றவியல் நடைமுறை சட்டப்படி (CrPC), எந்த நபரும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்தானே தவிர குற்றவாளி கிடையாது. ஆனால், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 22, 23 மற்றும் 45 ஆகியவை இதனை மீறுகிறது. இந்தப் பிரிவுகள் குற்றம் சாட்டப்பட்டவர் மீதே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பை சுமத்துகின்றன. இவை நியாயமான விசாரணைக்கான வாய்ப்புகளை, உரிமைகளை பறித்து விடுகின்றன.

காவல்துறை ஒருவரை கைது செய்வதற்கோ, அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி திட்டவட்டமான விதிகளும் நீதிமன்றக் கண்காணிப்புகளும் உள்ளன. ஆனால் அமலாக்க இயக்குநரகம் கைது செய்வது; ஆய்வு மேற்கொள்வது போன்றவற்றுக்கு விதிமுறைகளோ நீதிமன்றக் கண்காணிப்போ கிடையாது. இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியோ, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையோ அறிந்து கொள்ள முடியாது. அதற்கான சட்ட உரிமைகளை பண மோசடி தடுப்புச் சட்ட விதிகள் பறித்து விடுகின்றன.

இதனால், ‘அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கை’ (Enforcement Case Information Report – ECIR) என்று கூறப்படும் அமலாக்க இயக்குநரகத்தின் முதல் தகவல் அறிக்கையைப் பெற ஒருவர் காத்திருந்தாக வேண்டும். அதனைப் பெற்று, தன் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதுடன், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முயற்சிக்க வேண்டும்.

‘அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கை’ (ECIR) அடிப்படையில் அமலாக்கத்துறை, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை வரவழைத்து நிதிப் பரிமாற்ற விவரங்களைப் பெற முடியும். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை சட்டப்படி கையகப்படுத்த முடியும். இதுபோன்ற மிகையான சட்ட விதிகளைக் கொண்டிருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளில் 888 வழக்குகளில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 23 வழக்குகளில்தான் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 2.59 விழுக்காடு வழக்குகளில்தான் தண்டனை பெற்றுத்தர முடிந்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மார்ச் மாதம், அமலாக்கத்துறை குறித்த கேள்வி ஒன்றுக்கு நிதியமைச்சகம் அளித்த பதில் வருமாறு: 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டில், பண மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக 112 சோதனைகளை அமலாக்க இயக்குநரகம் நடத்தியுள்ளது. இதற்கு அடுத்த 8 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 26 மடங்கு அதிகரித்து, 2,974 சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்வது போல், அமலாக்க இயக்குநரகம் புகார்களை பதிவு செய்வதை அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ECIR) என்று கூறுவர். இந்த அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்து, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 104 ஆக இருந்தது, எட்டு மடங்கு அதிகரித்து 839 ஆக அதிகரித்துள்ளது. 2014ல் அமலாக்கத்துறை நடத்திய ஆய்வுகள் 112 மட்டுமே. 2022ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை 3 ஆயிரம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதாவது 27 மடங்கு அதிகரித்துள்ளது.

அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.5,346 கோடியாக இருந்தது, ரூ. 95,432 கோடியாக உயர்ந்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 4,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,186 வழக்குகள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பண மோசடி தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 17 ஆண்டுகளில், 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளையும் அரசை விமர்சிப்பவர்களையும் மிரட்டிப் பணிய வைக்க, பண மோசடி தடுப்புச் சட்டத்தை மோடி அரசு எப்படி பயன்படுத்தி வருகிறது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சான்றாகும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, ‘தடா’, ‘பொடா’ போன்ற கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. இந்த கருப்பு சட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த போதும், அவற்றில் மிகக் குறைவான வழக்குகளிலேயே தண்டனைகளைப் பெற்றுத் தர முடிந்தது. இது போன்ற கருப்புச் சட்டங்களை எதிர்ப்பதில் அரசியல் கட்சிகள் இரட்டை நிலையையே மேற்கொள்கின்றன.

ப.சிதம்பரம் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கீழ் பல்வேறு சட்டப்பிரிவுகளைக் கொண்டு வந்து, அதிகாரங்களை விரிவுபடுத்தினார். அவர் விரிவுபடுத்திய அதிகாரங்களைக் கொண்டே அமலாக்கத்துறை, அவரைக் கைது செய்து 106 நாட்கள் சிறையில் அடைத்தது. சில மூத்த அரசியல் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத் துறையின் புகார்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்பது உண்மைதான். அமலாக்கத்துறை மீதான இந்தக் குற்றச்சாட்டை உரிய முறையில் எதிர்க்கட்சிகள் நிறுவ வேண்டும். இந்தப் பணியை நீதிமன்றங்களிடம், அதன் நீண்ட விசாரணைகளுக்குள் தள்ளி விடுவது சரியான அணுகுமுறை அல்ல.

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டும். அமலாக்கத் துறைக்கு அதீத அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை, கடுமையான விதிகளை அம்பலப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்து, அதனை நீக்கச் செய்திட வேண்டும். அமலாக்கத்துறை ஆய்வு நடத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூக்குரல் இடுவதாலோ கண்டிப்பதாலோ கருப்புச் சட்டங்கள் நீங்கி விடாது. நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அவற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW