எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை
கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் நடந்த திருப்புவனத்தைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவரது கொலை வழக்கின் பெயரால் தான் இந்த சோதனை நடவடிக்கையில் என்.ஐ.ஏ. ஈடுபட்டுள்ளது. ஒரு தனி நபரின் கொலையை அதுவும் மதமாற்றத்தை தட்டிக் கேட்டதால் அவரைக் கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் போல் ஓர் இயக்கத்தையே சித்திரித்து, தப்பிய குற்றவாளிகளைத் தேடுவது என்ற பெயரில் கடலூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, கோவை, புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் எனத் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்கும் இந்த சோதனையை நடத்தியுள்ளது.
இராமலிங்கம் கொலை வழக்கை மாநில அரசின் விசாரணையில் இருந்து என்.ஐ.ஏ. வுக்கு மாற்றியதே திட்டமிட்ட நோக்கம் கொண்டதாகும். பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்டதை ஒட்டி போடப்பட்ட வழக்கில் கடந்த 2022 செப்டம்பரில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே வழக்கில் கடந்த மே 9 ஆம் நாள் அவ்வழக்கை நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ், முகமது யூசுப், பாப்புலர் ஃப்ரண்ட் முன்னாள் நிர்வாகி அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் தன் கட்சிக்காரருக்கு வழக்காடும் உரிமையை மறுக்கும் சட்டவிரோத செயல் இது என வழக்கறிஞர்கள் கொதித்து எழுந்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, திருப்புவனம் இராமலிங்கம் கொலை வழக்கு, கோவை எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு என என்.ஐ.ஏ. நடத்திவரும் வழக்குகளின் பெயரால் தமிழ்நாட்டில் இசுலாமிய சமூகத்திற்கு எதிராக அன்றாடம் சோதனைகளையும் அடிக்கடி கைதுகளையும் என்.ஐ.ஏ. நடத்திவருகிறது. மேலும் இடதுசாரி செயற்பாட்டாளர்களையும் மக்கள் இயக்கங்களையும் குறிவைத்து அவ்வப்போது சோதனை, கைது நடவடிக்கைகளில் என்.ஐ.ஏ. ஈடுபட்டு வருகிறது.
கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் பழங்குடிகளையும் அவர்களுக்கு துணை நிற்கும் இடதுசாரி சனநாயக ஆற்றல்களையும் ஊபா பிரிவுகளின் கீழ் கைது செய்து, பிணையின்றி நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது பாசிச பாசக அரசு. இசுலாமியர்களுக்கு எதிரான பாசிசக் கருவியாக ஊபாவையும் பாசிச நிறுவனமாக என்.ஐ.ஏ. வையும் பயன்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
குறிப்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பையும் அதன் உறுப்பு அமைப்புகள் என்ற பெயரால் வேறு பல அமைப்புகளையும் தடை செய்ததன் மூலம் இசுலாமியர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் இருக்கும் உரிமையை பாசிச பாசக அரசு மறுத்துள்ளது. அதை தொடர்ந்து நினைத்த நேரத்தில் நினைத்தபடி சோதனை, கைது என தமிழ்நாட்டில் இசுலாமிய சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. இசுலாமிய சமூகத்தில் உள்ள அரசியல் முன்னணிகளை எப்போதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் நோக்கத்தில் என்.ஐ.ஏ இதை செய்து வருகிறது.
இன்னொருபுறம், மதக் கலவரங்களைத் தூண்டி சிறுபான்மை மக்களைக் கொல்வதும் வன்புணர்வு செய்து கொல்வதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிற இந்துத்துவ கும்பலின் மீது எந்த அடக்குமுறையும் ஏவாமல் பாதுகாப்பும் அளித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அங்கு என்.ஐ.ஏ.வோ, ஊபா சட்டமோ, இராணுவ சிறப்பதிகாரச் சட்டமோ செயலற்றதாகிவிடுகிறது. தனது கொள்கைக்கு எதிராக செயல்படும் மக்களை, இயக்கங்களை வேட்டையாடுவதற்கு மட்டுமே இந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சனநாயக ஆற்றல்கள் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த வேண்டும்.
நேற்று இசுலாமிய சமூகத்தையும் இசுலாமிய அரசியல் முன்னணிகளையும் அச்சுறுத்தும் நோக்கில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையைக் கண்டிப்பதுடன் பாசிச சட்டங்களான ஊபா, என்.ஐ.ஏ. வைத் திரும்பப் பெற வேண்டும், என்.ஐ.ஏ. வை கலைக்க வேண்டும், ஊபா வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கோருகிறது.
சட்ட ஒழுங்கு அதிகாரம் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில், என்.ஐ.ஏ. என்ற ’அனைத்து இந்திய’ போலீசைப் பயன்படுத்தி கொலை, பயங்கரவாதம் என்ற பெயரில் மாநில உரிமைகள் மீது அத்துமீறல் செய்து வருகிறது ஒன்றிய அரசு. எனவே, மாநில உரிமை மீறல் என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ. வை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து தேசிய இனங்களும் எழுப்ப வேண்டும்.
பாசிச மோடி அரசு சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தையும் அமலாக்கத் துறையையும் எதிர்க்கட்சிகளைப் பணியவைப்பதற்காக பயன்படுத்துவது போல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தையும் (ஊபா) என்.ஐ.ஏ. வையும் போராடும் ஆற்றல்களுக்கு எதிராக திட்டமிட்டு பயன்படுத்துகிறது என்பதை அறிந்தேற்று பாசிசத்துக்கு எதிரான அனைத்து சனநாயக ஆற்றல்களும் ஊபா, என்.ஐ.ஏ.வுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.
என்.ஐ.ஏ. அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருப்போர் குறிப்பாக தமிழ்நாட்டு இசுலாமியர்கள் அஞ்ச வேண்டாம், பொடாவை முடிவுக்கு கொண்டு வந்தது போல் போராட்டக் களத்தில் ஒன்றுபட்டு நின்றால் ஊபாவையும் முடிவுக்கு கொண்டு வந்து என்.ஐ.ஏ. அலுவலகங்களுக்கு நம்மால் பூட்டுப் போட முடியும். என்.ஐ.ஏ. வுக்கு எதிராக போராட்டக் களத்தை நிரப்புவது ஒன்றே இன்று நமக்கு தற்காப்பு அரண் அமைக்கும் வழி என பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
இப்படிக்கு,
பாலன்,
ஒருங்கிணைப்பாளர்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
70100 84440