என்.ஐ.ஏ – NIA நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் சோதனை.. வன்மையான கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்ந்து இயங்கும் அரசியல் தலைவரின் செயலை முடக்க முயற்சிக்கும் செயலாகும். இஸ்லாமியர்களுக்கான சனநாயகக் குரலாக தமிழ்நாட்டில் இயங்கும் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் நெல்லை முபாரக். நெல்லையில் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. சோதனையிட்டது தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு காவல்துறையின் அனுமதி பெறப்பட்டதா?
பி.எஃப்.ஐ. மீதான தடையைத் தொடர்ந்து கைதுகள் தொடர்கிறது. யூ.ஏ.பி.ஏ. வழக்கு போடப்பட்டுள்ளனர். வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக வழக்காடிய வழக்கறிஞர்கள் மீதும் யூ.ஏ.பி.ஏ. போடப்பட்டு கைதாகியுள்ளனர். இதற்கான கண்டன இயக்கங்கள் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களை, இயக்கங்களை குறி வைத்து நடத்தப்படும் பாசிச பாசக அரசின் தாக்குதலுக்கு எதிராக இடதுசாரி, முற்போக்கு, சனநாயக இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்ப வேண்டியது சனநாயகக் கடமையாகும். தமிழ்நாட்டிற்குள் அத்துமீறும் என்.ஐ.ஏ. பாசிச பா.ச.க. அரசின் கையில் ஒரு ஆயுதமாக அடுத்தடுத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களை குறி வைக்கிறது. இஸ்லாமிய அமைப்புகளைத் தீவிரவாத முத்திரை குத்துவதன் மூலம் இஸ்லாமியச் சமூகத்தை தனிமைப்படுத்தும் செயலைத் திட்டமிட்டு பாசிச பா.ச.க அரசு செய்து வருவது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசு, காவல்துறையை மீறிய இச்செயலைத் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் பாசிச இந்துத்துவ ஒற்றை அதிகார ஆட்சிக்கு எதிராகக் களமாடும் அமைப்புகளை அச்சுறுத்தும் செயலாகும். நேற்று குஜராத்தில், இன்று மணிப்பூரின் அவலங்கள் தொடரும் இச்சூழலில் தமிழ்நாட்டை அச்சுறுத்தும் செயல்கள் தொடர்கின்றன. இந்திய ஒன்றிய அரசின் பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது நம்முன் எழுந்துள்ள சவாலாகும். எஸ்.டி.பி.ஐ அமைப்பின் பாசிச எதிர்ப்பு சனநாயகச் செயல்பாடுகளுக்குத் தோள் கொடுப்போம்!
சிறுபான்மைச் சமூகத்தை தனிமைப்படுத்தும் வெறுப்புச் செயல்பாடுகளை முறியடிப்போம். என்.ஐ.ஏ. வை லைத்திட, யூ.ஏ.பி.ஏ.வைத் திரும்பப் பெற வைக்க ஒன்றிணைந்து செயல்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் அமைப்புகளையும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவி அழைக்கிறது…
தோழமையுடன்
மீ.த.பாண்டியன், தலைவர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051