மணிப்பூர் வன்முறை – உடனடிக் காரணங்கள் என்ன? – செந்தில்

01 Jul 2023

கடந்த மே 3 ஆம் நாள் அன்று இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் வெடித்த இன மோதல்கள் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மிகவும் வலிமைவாய்ந்த படையைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? வன்முறை வெடித்ததில் இருந்து இந்நாள்வரை இந்நாட்டின் பிரதமர் இது குறித்து வாய்திறக்காதது ஏன்? மே 3 ஆம் நாளே வன்முறை வெடித்த நிலையில் மணிப்பூர் சென்று பார்வையிடுவதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா 25 நாட்கள் எடுத்துக் கொண்டது தற்செயலானதா? இல்லை, ஒன்றிய அரசு குக்கு இன மக்களுக்கு எதிரான வன்முறையை வெடிக்கப் பார்ப்பது உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள், தேவாலயங்கள், கோயில்கள் எரியூட்டப்பட்டுள்ளன. சுமார் 200 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இதில் குக்கி இன மக்களுடையது மட்டுமல்ல மைத்தி இனத்தினரது தேவாலயங்களும் எரியூட்டப்படுகின்றன. சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். பள்ளத்தாக்கில் குக்கி இனத்தவர் எவரும் இல்லை, மலைப்பகுதிகளில் மைத்தி இனத்தவர் எவரும் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் புவியமைப்பு வகைப்பட்ட பிளவு என்பது இனவகைப்பட்ட பிளவாக மாறியிருக்கிறது.

இது இன மோதலா? சமய மோதலா? என்று பிரித்தறிவதிலும் இடர்பாடு உள்ளது? எனவே முதலில் மணிப்பூரின் இன வரைபடத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

மணிப்புர் இம்பால் பள்ளத்தாக்கையும் மலைகளையும் உள்ளடக்கிய ஒரு மலை மாநிலமாகும் ( Hill State) ஆகும். 1949 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தில் மணிப்பூர் இணைக்கப்பட்டது. மணிப்பூரின் மொத்த மக்கள்தொகை 20,85,000. அதில் 53% மைத்தி இனத்தினர். நாகா இன மக்கள் சுமார் 24%. குக்கி இனத்தினர் 16%. மொத்தம் 33 பழங்குடியின மக்கள் மணிப்பூரில் உள்ளனர். மைத்தி இன மக்கள் பழங்குடிகளாக அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்படவில்லை. மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 60% இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். 40% மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மைத்தி இனத்தவர்களில் 83% க்கும் மேலானவர்கள் இந்துக்கள். குக்கி இன மக்களில் 90% கிறித்தவர்கள். மைத்தி இனத்தவர்கள் இந்து சமயத்தினராய் இருப்பதால் அவர்களுக்கிடையே வர்ணமும் உண்டு. மூன்று பெரும் பிரிவுகளாக உள்ளனர். பிராமணர்கள், சத்திரியர்கள், பட்டியலின சாதிகள். கடந்த பத்தாண்டுகளாக மைத்தி இனத்தவர்கள் தம்மைப் பட்டியல் பழங்குடியினராக(ST) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

மைத்தி இன மக்கள் பெரும்பான்மையினர் என்பதோடு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமக்கென கனிசமான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருப்பவர்கள். அரசியல் பொருளியல் வலிமை கொண்ட மைத்தி இனத்தவரைத்தான் பட்டியல் பழங்குடியினராக அறிவிக்கக் கோருகின்றனர். மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தம்மை பட்டியல் பழங்குடியினராக அறிவிக்க கோரும் முறையீட்டைச் செய்கின்றனர். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முரளிதரன், மே 29 ஆம் தேதிக்குள் மைத்தி இனத்தைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிக்க கோரி ஒன்றிய பழங்குடி விவகார அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு ஏப்ரல் 27 ஆம் நாள் அன்றுஆணைப் பிறப்பித்து தீர்ப்பளிக்கிறது.மாநில உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வாதாடாமல் மாநில அரசு வேடிக்கைப் பார்த்தது, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கும் செல்லவில்லை. இதை எதிர்த்துப் பழங்குடித் தலைவர் தின்காங்க்லுங்க் உச்சநீதிமன்றத்தை அணுகினார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் மேற்படி தீர்ப்பை விமர்சித்து,

“ ’எந்த மாநில அரசுக்கும் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் எவர் எவரை பழங்குடி மக்கள் என்று சேர்ப்பது சம்பந்தமான ஆணையை அளிப்பதற்கு அதிகாரம் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு சட்ட அமர்வு ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது என்று கூறினார்.

ஏப்ரல் 27 அன்று தீர்ப்பு வருகிறது. மே 3 அன்று மைத்தி இனத்தவருக்கு பழங்குடி தகுதி வழங்குவதை எதிர்த்து அனைத்துப் பழங்குடி மாணவர் அமைப்பு பேரணி நடத்தியது. அப்போது வெடித்த வன்முறை இப்போதுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், மைத்திக்கு பழங்குடி தகுதி கொடுப்பதுதான் பிரச்சனையின் அடியும்முடியும் என்றால் அதுதான் இல்லை. மாறாக, பாதுகாக்கப்பட்ட வனங்களையும் அங்குள்ள வளங்களையும் கொள்ளையடிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரல் இதற்குப் பின்னால் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்துடன் மணிப்பூர் இணைக்கப்படுவதற்கு முன்பு மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் மலைப் பகுதிகளில் நிலங்களை வாங்க முடிந்தது என்றும் 1960 களில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி மலைப்பகுதிகளில் பழங்குடி அல்லாதவர்கள் நிலம் வாங்க முடியாமல் போனது என்றும் ஒரு கதையாடல் மைத்தி இனத்தவரால் சொல்லப்படுகிறது. மைத்தி இனத்தவர் சமவெளிப் பகுதிகளில் வாழ்பவர்கள்தான். அசாமிலும் அவர்கள் அப்படித் தான் வாழ்ந்து வருகின்றனர். மலைப் பகுதிகளில் சென்று குடியேறி அங்கு வாழக் கூடியவர்கள் கிடையாது என்று வடகிழக்குப் பற்றி நன்கறிந்தவர்கள் சொல்கின்றனர்.

மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை இடங்களில் 40 இல் மைத்தி இனத்தவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர். அதாவது 5 மாவட்டங்களில் வாழும் மைத்தி மக்கள் 3 ல் 2 பங்கு இடங்களைப் கைப்பற்றுகின்றனர். அதேநேரத்தில் பத்து மாவட்டங்களில் வாழக் கூடிய பழங்குடியினர் வெறும் 20 இடங்களை நிரப்புகின்றனர். பாசக மணிப்பூரில் ஆட்சிக்கு வந்தது. அதன் முதல்வராக மைத்தி இனத்தைச் சேர்ந்த பிரேன் சிங் பதவியில் அமர்ந்தார். அவர் சட்டப்பேரவையில் மைத்தி மக்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசமைப்பு சட்ட உறுப்பு 371C பழங்குடிகளின் அடையாளம் மற்றும் உரிமைகள் தொடர்பில் கொண்டிருந்த பாதுகாப்பு அம்சங்களைப் பலவீனப்படுத்தும் வேலையைச் செய்தார். மேலும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் பழங்குடி மக்கள் நிலம் வாங்குவதற்கு இருந்த உரிமையைப் பறித்தார். நீதித்துறையும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையைச் செய்தது.

பாதுகாக்கப்பட்ட காடுகள், சேமக் காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் என்ற பெயரில் பழங்குடிகளை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அதை சமூக நலக் காடுகள் ( community reserves) என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடமும் அறக்கட்டளைகளிடமும் ஒப்படைக்கும் வேலையை செய்கின்றனர். இதுபோல் நாட்டில் உள்ள 220 சமூக நலக் காடுகளில் 200க்கும் மேற்பட்டவை வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. கிட்டத்தட்ட 75 விழுக்காடு மணிப்பூர் காடுகள் இது போன்ற சமூகநல அமைப்புகளால் பராமரிக்கப் படுகின்றன. பெரும்பாலான சமூக நலக் காடுகளை இந்திய வன உயிர்கள் அறக்கட்டளை ( Wildlife Trust of India) வைத்திருக்கின்றன. இந்நிறுவனம் இங்கிலாந்தின் உலக நில அறக்கட்டளை ( World Land Trust ) என்ற அமைப்பின் கூட்டாளி நிறுவனமாகும். மேற்சொன்ன உலக நில அறக்கட்டளை பல்வேறு நாடுகளில் காடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரிலும் வனங்கள் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு என்ற பெயரிலும் பூர்வகுடிகளையும் பழங்குடிகளையும் காடுகளில் இருந்து விரட்டியடிக்கும் வேலையை செய்துவருகின்றது. இந்திய வன உயிர்கள் அறக்கட்டளையும் அதன் அறிவாளிகளும் சேர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகி காடுகளில் இருந்து பழங்குடிகளை விரட்டியடிக்கும் தீர்ப்பொன்றை 2019 இல் பெற்றனர்.

மணிப்பூர் பாசக அரசு பழங்குடிகளை வனப் பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எடுக்கும் வேலையை கடந்த சனவரித் திங்களில் இருந்து செய்து வருகின்றது. இதுவரை சுமார் 35,000 க்கும் மேற்பட்டோர் அவ்வண்ணம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து அங்குப் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. பழங்குடிகளிடம் நிலவிய அதிருப்தி மேலும் தீவிரப்படும் வகையில் பாசக முதல்வர் பிரேன் சிங் குக்கிகளை ஆக்கிரமிப்பாளர்கள், போதைப் பொருள் கடத்துவோர், கஞ்சா பயிரிடுவோர், சட்டவிரோத குடியேறிகள் எனப் பலவாரும் வசைப்பாடினார். அவர் மிக வெளிப்படையாகவே குக்கி இன மக்கள் மீதான வெறுப்பைக் கக்கினார்.

மணிப்பூர் பாசக அரசு, ”போதைப் பொருட்களுக்கு எதிரானப் போர்” என்ற பெயரில் பழங்குடிகள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது; ஆனால், பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பன்னாட்டுப் போதைக் கடத்தல் மாஃபியாக்கள், முக்கியப் புள்ளிகள் போன்ற மெய்யான குற்றவாளிகள் மீது கைவைக்கவில்லை. 50 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய தேவாலயங்களைச் சட்டவிரோத கட்டுமானங்கள் என்று சொல்லி இடித்துத் தள்ளியது பிரேன் அரசு. அதுவும் ஏப்ரல் திங்களில் ஈஸ்டர் நாளுக்கு முன்பு இத்தகைய தேவாலய இடிப்பு வேலையைச் செய்தது பிரேன் அரசு.இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் பழங்குடி மக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வளர்த்துவிட்டுக் கொண்டிருந்தப் பின்புலத்தில்தான் மே 3 ஆம் நாள் அன்று அது இரு இனங்களுக்கு இடையிலான வன்முறைப் பிழம்பாக வெடிக்கத் தொடங்கியது. மே 4 ஆம் நாள் அன்று இம்பால் உள்ளிட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளில் நூற்றாண்டுக்கணக்காக வாழ்ந்துவந்த பழங்குடிகளுக்கு சொந்தமான நிலப் பகுதிகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. எனவே, இப்பிரச்சனை பழங்குடிகளின் உரிமைகள், நிலவுரிமை தொடர்பானது என்பது தெள்ள தெளிவாகப் புலப்பட்டது.கனிம வளங்கள் நிரம்பிய இக்காடுகளைப் பழங்குடிகளிடம் இருந்து கைப்பற்றி பழங்குடிகளை விரட்டியடித்துவிட்டு கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்கும் புதுத்தாராளிய நிகழ்ச்சிநிரலின் பகுதியாக இந்த இன மோதல் தீ மூண்டுள்ளது. பழங்குடிகளுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை நிலவுரிமையை உறுதிசெய்து, பாதுகாப்பதன் மூலம் தான் இச்சிக்கலுக்கு முடிவு கட்ட முடியும்.மைத்தி – குக்கி இன மோதலாகவும் இந்து – கிறித்தவ சமய மோதலாகவும், சமவெளியினர் – மலைவாழ் பழங்குடியினர் என்ற நிலப்பரப்பு சார்ந்த மோதலாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இம்மோதல் அதன் அடியாழத்தில் காடுகள் மீதான பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைக்கும் கார்ப்பரேட்களின் கொள்ளைக்காரத்தனமான சுரண்டல் வேட்கைக்கும் இடையிலான மோதலாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் பாசகவின் இன – சமய வெறுப்பு அரசியலும் கார்ப்பரேட் ஆதரவு அரசியலும் ஒன்றுபடுகிறது.

பெரும்பான்மை மைத்தி மக்களை ஒன்றுதிரட்டுவதற்கான பண்பாட்டு இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இரு பேரினவாத இயக்கங்களான மைத்தி லீபுன் உம் ( Meitei Leepun) அரம்பாய் டெங்கோல் உம் ( Arambai Tenggol) குக்கிகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விரு அமைப்புகளுக்கும் ஆளும் பாசக அரசின் முழு ஆதரவு இருக்கிறது. மைத்தி லீபுன் அமைப்பின் தலைவர் பிரமோத் சிங் ஏப்ரல் 28 அன்று தனது டிவிட்டர் பதிவில் ”மலைகளில் இருக்கும் நமது பகைவர்களை அழித்தொழிப்போம்” என்று எழுதியுள்ளார். இம்பாலின் எல்லையோரங்களில் குக்கி இன மக்களின் குடியிருப்புகள் மீண்டும் மீண்டும் மைத்தி வன்முறைக் குழுக்களால் தாக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றிலும் இருக்கும் பொதுவான பண்பு என்னவென்றால் அக்குழுக்களில் கறுப்பு டீ-சர்ட் அணிந்தவர்கள் இருப்பதுதான். அவர்கள் அரம்பாய் டெங்கோல் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். மைத்தி லீபுனின் தலைவர் பிரமோத் சிங் ‘தி வயர்’ இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில், “ குக்கி இன மக்கள் அயலார், சட்டவிரோத குடியேறிகள், பூர்வகுடி மக்கள் அல்ல, வந்தேறிகள், வாடகைக்கு குடியிருப்போர்” எனப் பலவாரும் வசைபாடினார். எவ்வித சான்றுகளையும் முன் வைக்கவில்லை. ஒரு நாள் மைத்தி மக்கள் எழும் போது குக்கிகள் இருக்கமாட்டார்கள் என்றும் பிரச்சனையை அரசுகள் தீர்க்கவில்லை என்றால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று வெளிப்படையாகவே சொன்னார். அவர் தமது அமைப்புக்கும் ஆர்.எஸ்.எஸ். க்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று சொன்னாலும் தான் ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பில் இருந்தவன். அதனால், அவ்வமைபின் செல்வாக்கு தன் மேல் உண்டு என்று சொன்னார்.

காவல்நிலையங்களில் புகுந்து மைத்தி குழுக்களும் குக்கி குழுக்களும் துப்பாக்கிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. மணிப்பூர் காவல் துறை முழுக்க இனச் சார்பு கொண்டதாக இருக்கிறது. குக்கி மக்கள் மணிப்பூர் காவல் துறையினர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். துணை இராணுவத்திலும் கூட மைத்தி இனத்தை சேராதவர்களே அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.”

பாசக முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும், குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்” என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. குக்கி இனத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ. களும் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மலைப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலமாகவோ அல்லது ஒன்றிய ஆட்சிப்புலமாகவோ அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். மைத்தி இனத்தவர்கள் இதற்கு உடன்படவில்லை. அதே நேரத்தில் நாகா இன மக்களின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக வெளியே வரவில்லை. மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு எதிரான இனத்துடைப்பு நடந்தேறி வருகிறது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக எழுந்துள்ளது. இந்தியா இனவழிப்பு அபாயத்தில் உள்ளது என்றும் அசாமிலோ காசுமீரிலோ இரத்தம் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்றும் வெளிநாட்டு அமைப்புகளின் எச்சரிக்கைகள் வந்தன. ஆனால், நம் கண் முன்னே அத்தகைய பெருந்துயரம் ஒன்று மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மக்கள் மாநில பாசக அரசின் மீதும் ஒன்றிய பாசக அரசின் மீதும் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டனர். அதுமட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பகுதியாக கருதாமல் வேறுபடுத்திப் பார்த்து கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்தியாவின் ஏனையப் பகுதி மக்கள் மீதும் அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

மணிப்பூரில் வெடித்துக் கிளம்பியுள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கான உடனடி காரணங்களில் இருந்து தொடங்கி அதன் வரலாற்று வேர்களை அடையாளம் காண வேண்டியுள்ளது. காலனியத்திற்கு முன்பு, காலனியக் காலம், காலனியத்திற்கு பிந்தைய சுதந்திர இந்தியாவின் காலம், பாசக என்ற நச்சரவம் கால் பதித்ததற்குப் பின்னான காலம் எனப் பிரித்தும் தொகுத்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டுவிட்டோம் என்றும் பாசக வடகிழக்கு மாநிலங்களை வெற்றி கொண்டுவிட்டது என்றும் இருமாந்து போன மோடியின் கண் முன்னால் அவர்களின் மனக்கோட்டை சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களை வெற்றி கொண்டது போல் கிறித்தவர்களை வளைப்பதன் மூலம் கேரளாவைக் கைப்பற்றுவோம் என்று முழங்கிய மோடியின் சொற்கள் எரியூட்டப்படும் தேலாயங்களில் இருந்து எழும் தீச்சுவாலைகளில் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.

பாசக கையில் எடுத்து சுழற்றி வரும் வெறுப்பு அரசியல் என்ற நெருப்புக் கோல் எங்கே, எப்படி பற்றிக் கொண்டு தீச்சுவாலைகளாக தன் நாக்கை நீட்டும் என்பது முன்கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால், இந்நாட்டு மக்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைத் தீராப் பகையாக்கி, அந்த காயங்கள் ஆறுவதற்கு பல பத்தாண்டுகள் பாடுபட வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

மணிப்பூரில் வேட்டையாடப்பட்டு வரும் பழங்குடி மக்களுக்கு ஆதரவு தந்து வன்முறையைக் கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரும் அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாசகவின் வெறுப்பு அரசியல் எங்கே இட்டுச் செல்லும் என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய கடமையும் நம்முன் இருக்கிறது.

நன்றி: வையம் இதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW