அதானியின் நிலக்கரி சுரங்கத்தைக் காக்க சூழலியல் அமைப்புகள் மீது ஒன்றிய அரசின் புலனாய்வு சோதனை அச்சுறுத்தல்.-அழிக்கப்படும் வனம்,வெளியேற்றப்படும் பழங்குடிகள்,காக்கப்படுமா ஹஸ்தியோ வனம்? – அருண் நெடுஞ்செழியன்

24 Jun 2023

பங்குவர்த்தக மோசடி மன்னன் அதானியின் ஹஸ்தியோ திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுத்தி தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது மோடி அரசு.கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த புலனாய்வு சோதனை நடவடிக்கைகள்  ஊடகங்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாததுதான் வேதனை.

மோடி அரசின் இந்த அராஜகமானது,சத்தீஸ்கர் காட்டின் அடியில் புதைந்துள்ள பலமில்லியன் டன் நிலக்கரி வளத்தை தங்கு தடையின்றி அதானியிடம் தாரை வார்க்க மேற்கொள்ளப்பட்ட மோசமான நடவடிக்கை என சூழல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சியில் கார்ப்பரேட் நலனுக்கு நாட்டின் இயற்கை வளங்களை  வரைமுறையின்றி சூறையாடுப்படகிற இத்தகைய “சூழலியல் வன்முறை” நிகழ்வுகள்  இந்திய அரசியல் இதுவரை கண்டிராதது ஆகும்.

வனமும் கார்ப்பரேட்களும்:

மத்திய இந்தியாவில் உள்ள  சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 40 விழுக்காடு காடுகள் ஆகும்.இந்தியாவின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கிற மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர்.இயற்கைவாதிகள் இக்காட்டின் தாவரங்களையும் உயிரினங்களையும் கண்டு ரசிக்க,கார்ப்பரேட்களோ இக்காடுகளின் மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள நிலக்கரி வளத்தை கறுப்புத் தங்கமாக பார்க்கிறார்கள்.உலகமயகாலகட்டத்தில்  அனைத்தும் சரக்காக/பண்டமாக மாறிய நிலையில்,இயற்கை வளங்கள் லாபத்தை வழங்குகிற அட்சய பாத்திரமாக கார்ப்பரேட்களின் கண்களுக்குத் தெரிகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர்ந்த காடுகளில் ஒன்று ஹஸ்தியோ அரந்த் காடாகும்.சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவில் அடர்த்தியான மரங்களால் சூழப்பட்டுள்ள இக்காட்டில் 82 வகையான புள்ளினங்களும் 167 வகையான தாவரங்களும்  பட்டியிலடப்பட்டுள்ளன.இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலானது இக்காட்டை “மத்திய இந்தியாவில் பழமையான சால் மற்றும் தேக்கு காடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய துண்டாடப்படாத காடு” என்று விவரித்துள்ளது.இக்காட்டில் ஹஸ்தியோ நதியொன்று பாய்கிறது.இக்காடு நதியின் நீர் பிடிப்புப் பகுதியாக உள்ளதாக வற்றாமல் ஆண்டுதோறும் ஓடுகிறது.இந்த வனத்தில் கோண்ட் , ஓரான் உள்ளிட்ட பழங்குடிகள் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர் வசிக்கின்றனர்.வனப்பாதுகாப்பு சட்டம் வழங்குகிற குறைந்தபட்ச உரிமைகளைக் கொண்டு காட்டை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட அமைதியான பசுமை மாறா காடும், காட்டை நம்பிய பழங்குடிகளும் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்ந்த நிலையில்தான் அதானி மூலமாக ஹஸ்தியோ காட்டிற்கு ஆபத்து வந்தது.

அதானியின் வருகையும் காடழிப்பும்:

கார்ப்பரேட்களின் கண்ணில் வளம் கொழிக்கிற காடுகள் தென்பட்டுவிட்டால் அவர்களது கோடரிகள் வேடிக்கை பார்ப்பதில்லை. ஹஸ்தியோ காட்டில் சுமார் ஐந்து பில்லியன் டன் அளவிலான நிலக்கரிவளம் இருக்குமென நிபுணர்கள் கணித்தனர்.அவ்வளவுதான் அதானி குழுமம் களத்தில் குதித்தது.2007 ஆம் ஆண்டில் ஹஸ்தியோ காட்டில் சுரங்கப் பணிகளை கையாள்கிற ஒப்பந்தத்தைப் பெற்ற அதானி நிறுவனம்,2013 ஆம் ஆண்டில் நிலக்கரியை அகழ்ந்து எடுக்கிற சுரங்க அனுமதியை பெற்றது.முதற்கட்டமாக 1882 ஏக்கர் பரப்பளவில் நிலக்கரியை வெட்டி எடுக்கத் தொடங்கிய அதானி நிறுவனம்,அப்பகுதியில் இருந்த நீண்ட நெடிய மரங்களடங்கிய காட்டை மொட்டையடித்தது. ஒருகாலத்தில் சூரியவெளிச்சம் தொட்டிராத தரைகள்,இன்று மரங்கள் வெட்டப்பட்டு,பள்ளம் தோண்டப்பட்டு பெரும் பள்ளத்தாக்குகளாக, பாலை நிலமாக காட்சியளிக்கிறது.

அதானியின் சுரங்கத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  பழங்குடிகள் காடழிப்பிற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழக்காடுகிற LIFE என்ற தொண்டு நிறுவனம் மக்கள் போராட்டத்திற்கு சட்டரீதியாக வலு சேர்த்தது.பழங்குடிகள் போராட்டத்திற்கு பல்வேறு சூழல்வாதிகள் பக்க பலமாக இருந்தனர்.குறிப்பாக என்விரோன்டிரஸ்ட் என்கிற சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் மூலமாக சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற  புவியலாளர்  ஸ்ரீதர் என்பவர் அதானி நிறுவனத்தின் சுரங்க முறைகேடுகளை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றினார்.அதானியின் வேறொரு மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த  ஸ்ரீதரிடம் அதானி நிறுவனம் பேரம் பேச முயற்சித்து தோல்வியடைந்தது. இவ்வழக்கைப் பின்னர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதானிக்கு  வளைந்து கொடுக்காத காரணத்திற்காக திரு ஸ்ரீதரிடம்  வருமான வரித் துறை மூலமாக சட்ட நெருக்கடி கொடுத்தது அரசு.இதன் உச்சமாக பெகாசாஸ் எனும் இஸ்ரேல் உளவுமென்பொருள் மூலமாக ஸ்ரீதரின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.எதிர்க்கட்சி தலைவர்கள்,பல்வேறு துறை சார்ந்த செயற்பாட்டாளர்களின் அலைபேசியை அரசு உளவு பார்த்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டை ஒன்றிய அரசு ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கார்ப்பரேட்களின்  முறைகேடுகளுக்கு எதிராக செயல்படுகிற செயற்பாட்டாளர்களை சட்டபூர்வ வன்முறையின் துணைக் கொண்டு அச்சுறுத்துவது,அலைபேசியை ஒட்டுக் கேட்டு சதி செய்வது என அரசும் கார்ப்பரேட்களும் கைகோர்த்துக் கொண்டு நாட்டைச் சுரண்டுவது புதிய இந்தியாவின் இன்றைய எதார்தமாகிப் போனது.

புலனாய்வு அமைப்புகளின் “துப்புக்களும்” மேற்குலக சதி பிரச்சாரமும்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதானியின் சுரங்க முறைகேடுகளை அம்பலப்படுதிய என்விரோன்டிரஸ்ட்,மத்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்(CPR) மற்றும் LIFE  ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்கள் மீது சோதனை செய்த புலனாய்வு அமைப்பு,சுரங்கத்திற்கு எதிராக பழங்குடிகளை போராடத் தூண்டியதாகவும் போராட்டத்திற்கு  நிதி வழங்கியதாகவும்,அதானியை வேண்டுமென்றே  சிக்க வைக்க  சதி செய்ததாகவும் ,இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிற மேற்குலக சதி எனவும் “துப்பு” துலக்கியது.

CPR அலுவலகத்தில் ஒரு டசன் அதிகாரிகள் நுழைந்து அங்கிருந்த கணினிகள் மற்றும் அலைபேசிகளை எடுத்துச் சென்று அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.தேச வளர்ச்சிக்கு எதிராக சுரங்க எதிர்ப்பு போராட்டத்தை வழிநடத்தியதாக  சிபிஆர் மீது குற்றம்சாட்டப்பட்டது.என்விரோன் டிரஸ்ட் அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாகக் கூறி,அதானி எதிர்ப்பு போராட்டத்தை  பலப்படுத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அமெரிக்க தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்திய நீதிமன்றங்களில் நிலக்கரி திட்டத்திற்கு எதிராக வழக்கு நடத்துகிறார் என லைப் அமைப்பின் இணை நிறுவனர் திரு ரித்விக் தத்தா மீது குற்றம் சாட்டியது வருமான வரித்துறை.

இம்மூன்று தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் யாவும் அதிரடியாக முடக்கப்பட்டன.இந்த அறக்கட்டளைகளுக்கு 80-90 விழுக்காட்டு நிதி வெளிநாட்டில் இருந்தே வருகிற நிலையில்,அரசு கணக்கை முடக்கியதால் அதனது செயல்பாடுகளும் முடங்கின.இந்த நிறுவனங்களில் பணிபுரிகிற நூற்றுக்கணக்கான அலுவலர்களுக்கு சம்பளம் தர இயலாமல் தடுமாறின.அரசின் இந்த சட்டப்பூர்வ தாக்குதலுக்கு பின்னர் அதானி சுரங்க எதிர்ப்பு போராட்டமானது அரசு எதிர்பார்த்தவாறு,பின்னடவை எதிர்கொள்ள நேரிட்டது.கடந்த செப்டம்பர் 27 இல் லைப் அமைப்பின் வக்கீல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரங்க முறைகேடுகள் மீதான தங்களது வழக்கை திரும்பப்பெற்றுக் கொண்டனர்.இதனால் அதானி சுரங்கத்திற்கு நீதிமன்றத்தில் நிலவிய தடை விலகியது.

வழக்கு திருப்பப்பெறப்பட்ட அன்றைய தினமே சுமார் 106 ஏக்கர் பரப்பளவிலுள்ள காடுகள் அதானியின் இரண்டாம் கட்ட சுரங்கப் பணிகளுக்காக  அழிக்கப்பட்டது.சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சுக்லா போன்ற சுரங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் வருமான வரித்துறையின் அலைக்களிப்புகளால் அன்றைய தினத்தில் நிகழ்விடத்திற்கு வர இயலாமல் போனது.தான் தில்லியில் இருக்கும்போது திட்டமிட்டே  அன்றைய தினம் காட்டை அழித்ததாக சுக்லா குற்றம் சாட்டினர்.இதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திடம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு சென்றதால் தற்காலிகமாக சுமார் 2700  ஏக்கர் காடுகள் காப்பாற்றப்பட்டுள்ள.

ஒன்றிய அரசின் இந்த சட்டப்பூர்வ வன்முறையை கண்டித்து சுமார் நூறு அறிவுஜீவிகள் ஒன்றிய அரசுக்கு கண்டனக் கடிதம் எழுதினர்.நாட்டின் வளங்களைக் காக்க நீதிமன்றத்தை நாடினால்,புலனாய்வு மற்றும் வருமானவரித்துறை கொண்டு மிரட்டி அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கார்ப்பரேட் கொள்ளையா?வளர்ச்சிக்கு எதிரான சதியா?

பாஜக அரசைத் பொறுத்தவரை கார்ப்பரேட் என்றால் “வளத்தை உருவாக்குபவர்கள்”.அதற்காகத்தான் கார்ப்பரேட் வரிகளை குறைத்து வளத்தை உருவாக்க ஊக்கப்படுத்துகிறது பாஜக அரசு.இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் சூறையாடி சொந்த லாபத்தை குவிப்போர்கள்தான் பாஜகவிற்கு வளத்தை உருவக்குவோர்களாக தெரிகிறார்கள்.

மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையை எதிர்ப்போர்கள் தேசத் துரோகிகளாகவும் இந்திய வளர்ச்சியை மட்டுப்படுத்த முயற்சிக்கிற மேற்குலக சதிக்கு துணை நிற்பதாகவும் ஒரு பொய் பிரச்சாரத்தை மோடி அரசு மேற்கொள்கிறது.இதன் மூலம் தனது முதலாளித்துவ ஆதரவு கொள்கைக்கு நியாயம் கற்பிக்க முயற்சிகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களைக் கண்டு மோடி அரசு எப்போதுமே அஞ்சி நடுங்குகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிற்கு புலனாய்வு அமைப்பு அளித்ததாக இருபத்திமூன்று பக்க அறிக்கையொன்றை திட்டமிட்டே ஊடகங்களில் கசியவிடப்பட்டது.அந்த அறிக்கையின் சாராம்சமானது வருமாறு

“சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிருந்து நிதி பெற்றுக்கொண்டு(குறிப்பாக இங்கிலாந்து,ஜெர்மனி,அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து) இந்தியாவின் வளர்சித்திட்டங்களை மக்களின் துணைக்கொண்டு முடக்குகின்றன. இதில், அணுமின் நிலையத்திட்டங்கள்,அனல் மின் நிலையத் திட்டங்கள்,மரபணு மாற்றப்பட்ட விதைகள்,பெரும் தொழில்துறை திட்டங்கள்(போஸ்க்கோ ,வேதாந்தா),நீர்மின் திட்டங்கள்(நர்மதா சாகர் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகளின் திட்டங்கள்) மற்றும் சுரங்கத்திட்டங்கள் போன்றவை அடங்கும்.இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று விழுக்காடு என்ற அளவில் பாதிப்பு ஏற்படுகிறது ” என நீள்கிறது.

வேதாந்தாவின் திட்டங்களை கிரீன் பீஸ் அமைப்பு முடக்க முயல்வதாக  அறிக்கை குற்றம் சாட்டுகிறது.காஷ்மீர் பகுதியின் மனித உரிமை மீறல்  குறித்தும் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்கிற சுரங்கப்பணிகள் குறித்தும் குரல் எழுப்பிவரும்  தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நெதர்லாந்திலிருந்து நிதி வருவதாக அறிக்கை சாடியது.

இந்த அறிக்கைகள் வந்த அடுத்த சில நாட்களில் இந்தியாவிலிருந்து செயல்படுகிற கிரீன் பீஸ் அமைப்பின் கிளை அலுவலக கணக்குகள் முடக்கப்பட்டன.இந்திய நிலக்கரி சுரங்கங்கள் பற்றி கிரின்பீஸின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கிளம்பிய செயற்பாட்டாளர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

தற்போது குஜராத் கலவரம் குறித்த பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை தடை செய்த மோடி அரசு,பின்னர் பிபிசி அலுவலகத்தில் வருமானவரி துறையை கொண்டு சோதனை நடத்தி அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலம் முதலாக ஆளும் கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கிற எதிர்க்கட்சிகளை தாக்குவது,அரசியல் கட்சிகள் சார முற்போக்கு/சூழலியல்  அமைப்புகள்,செயற்பாட்டாளர்களை சட்டப்பூர்வ வன்முறையை பிரயோகித்து அச்சுறுத்துவது,மேற்குலக அரசுகளால் ஆட்டுவிக்கப்படுவோர் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்குவோர் என்றும் முத்திரை குத்துவதை போன்ற பொய் பிரச்சாரத்தை பரப்புவதை  முக்கிய செயல்திட்டமாக வைத்துள்ளது.

அரசு ஆதரிக்கிற பெரும் திட்டங்களால் இயற்கை வளத்திற்கும் மக்களுக்கும் என்ன பாதிப்பு ஏற்படுகிறது,ஏன் பூர்வகுடி மக்களும் சாமனிய உழைக்கும் மக்களும் அரசின் செயற்பாடுகளை  எதிர்க்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு ஆளும்வர்க்கதிடன் எந்த பதிலும் இல்லை.ஆகவேதான்  சதிக் கோட்பாடுகளில் அரசு தஞ்சமடைகிறது.

உலகளவில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருவணிக தொழில்குழுமங்களுக்கும் அவர்களுக்காக இயங்கும் அரசுக்கும் எதிரான போராட்டங்கள் சாமானிய உழைக்கும் மக்களால்  தீர்க்கமாக முன்னெடுத்துவரும் சூழலில், இந்திய ஒன்றியத்தில் அரசின் கார்ப்பரேட் நலனிலான  பொருளாதர கொள்கைகளையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சிப்போர்,எதிர்ப்புக் குரல் எழுப்புவோர்,அரசின் நடவடிக்கைகளில் அவநம்பிக்கை கொள்வோர் தேசத்தின் எதிரியாகவும்,வெளிநாட்டு கைக்கூலிகளாகவும் கட்டமைக்கிற அரசின் முயற்சி ஒட்டுமொத்த சனநாயகவெளியை  புதைப்பதற்கான பாசிச கருத்தியலின் உச்சமாகும்.உண்மை என்னவென்றால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கு வருகின்ற வெளிநாட்டு  நிதியால்தான் மனித நாகரிகத்திற்கு சவால் விடும் வகையிலான மிக மோசமான மத பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு வரும் நிதி குறித்து கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு மற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதுதான்  முரண்.

அண்மையில் ஹிடென்பர்க் அறிக்கையானது, அதானியின் மோசடியை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்தியபின் அதன் பங்குகள் வேகமாக சரிந்து உலக பணக்காரர்கள் பட்டியிலில் பின்னுக்குச் சென்றார் அதானி.ஆனபோதும் மோடியுடனான தனது அதீத அரசியல் செல்வாக்கின் காரணமாக,இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்து தனது கார்ப்பரேட்  வலைப்பினலை அதானியால் உறுதிப்படுத்து முடிகிறது என்பதைநாமிங்கே  கவனிக்கவேண்டும்.இது மிக மோசமான காலகட்டம்.நரகம் காலியாக கிடக்கிறது,ஏனெனில் அனைத்து பேய்களும் இங்கே நம்முடன் உலாவுகிறது என்ற ஷேக்ஸ்பியர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது..

நன்றி ஜனசக்தி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW