முள்ளிவாய்க்கால் – ஜஸ்டின் ட்ரூடோவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் – செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

03 Jun 2023

மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகோலை நாளை ஒட்டி சிறிலங்கா அரசு கனடிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க நேர்ந்தது. ஏனெனில் கனடாவின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மே 18 ஆம் நாள் அன்று  முள்ளிவாய்க்கால் படுகொலையை எண்ணி , பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அவ்வறிக்கையில் மே 18 ஆம் நாள் தமிழின அழிப்பு நினைவு நாளாக கடைபிடிக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் 2023 சனவரியின் போது மனித உரிமை மீறலின் பொருட்டு சிறிலங்காவின் இரு முன்னாள் அதிபர்கள் கோத்தபய இராசபக்சே, மகிந்த இராசபக்சே மற்றும் இரு படையதிகாரிகள் மீது தடை விதித்தது கனடிய அரசு. ஐ.நா.வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரித்தது கனடிய அரசு.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டோருடன் தொடர்ந்து நிற்போம் என்றும் ஒட்டுமொத்த கனடிய மக்களும் சிறிலங்காவின் பூசல் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும், அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். இதுதான் சிறிலங்கா அரசின் சீற்றத்துக்கு காரணம்.

வெறும் ஐந்து இலட்சம் தமிழர்களை குடிமக்களாகக் கொண்டுள்ள கனடிய அரசைக் கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது சிறிலங்கா அரசு. ஆனால், 8 கோடி தமிழர்களைத் தன் குடிகளாக கொண்டுள்ள இந்திய அரசைக் கண்டிக்க வேண்டிய கட்டாயம் சிறிலங்காவுக்கு ஏற்படவில்லை. ஏனெனில் இந்திய அரசு கொல்லப்பட்ட தமிழர்களுக்காக இதுநாள் வரை ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்தவில்லை.

கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போலொரு தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக இராசபக்சேக்களுக்கோ அல்லது வேறு படையதிகாரிகளுக்கோ இந்திய அரசு தடைவிதிக்கவில்லை. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதற்கு மாறாக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது இந்திய அரசு.

இப்போதுவரை இனவழிப்புக் குற்றவாளியான சிறிலங்கா அரசைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன் சிறிலங்காவின் இறைமை பற்றியும் ஆட்சிப்புல ஓர்மைப் பற்றியும் அதிகம் அக்கறை கொண்ட அரசாக இந்திய அரசு இருக்கிறது. ஆனால், ஈழத் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று ஏற்பதற்குகூட இந்திய அரசு அணியமாகவில்லை.

கனடிய அரசு தமிழர்களுக்கான நீதிக் கோரிக்கையில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கைக்கூட இந்திய அரசு காட்டவில்லை என்பதொருபுறம். ஆனால், 8 கோடி தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழக மாணவர் போராட்டங்களின் அழுத்தத்தினால், இனவழிப்புக்கு நீதி பெற பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும்  பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் நிலையேற்பட்டது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றிய அதிமுகவோ அதை ஆதரித்த திமுகவோ அந்த தீர்மானத்தை செயல்படுத்தும் பொருட்டு என்ன செய்தன? 

சிறிலங்கா அரசின் மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முழங்கியது. ஆனால், அது குறித்து தமிழக அரசு தொடர்ச்சி பேணியதா?  இனவழிப்பு என்று தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிவிட்டு மே 18 ஆம் நாளை இனவழிப்பு நாள் என்று கடைபிடிக்க மறுப்பதேன்?

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூர மறுப்பதில் அதிமுகவும் திமுகவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரவும் உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கவும் இனவழிப்புக்கு நீதி கேட்டு ஓங்கி குரல் கொடுக்கவும் இவ்விரு பெரும் கட்சிகளும் மறுக்கின்றன.

 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாட்கள் முடிந்துவிட்டன. ”இனவழிப்புக்கு நீதி வேண்டும்” என்று சொல்லி ஓர் அறிக்கையையோ அல்லது ஒரு டிவிட்டர் பதிவையோ கூட போடுவதற்கு சமூகநீதி அரசு அணியமாக இல்லை. 

ஈழப் பிரச்சனையை நாம் பேசாமல் விட்டுவிட்டால் அது மண்ணுக்குள் புதைந்துவிடும் என்று தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கருதினால், அதைவிடவும் ஓர் அரசியல் அறியாமை இருக்க முடியாது. பாலஸ்தீனர்களுக்கு அரபு தேசங்களில் நிலவும் ஆதரவை மீறி எந்தவொரு அரபு அரசும் செயல்பட்டுவிட முடியாது.

காசுமீர் மக்களின் துயரத்தைப் பாகிஸ்தான் அரசு கண்டும் காணாமல் இருப்பதை அந்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழர் பால் காட்டும் அக்கறையும் மேற்சொன்னவை போல் இயற்கையான உணர்ச்சிதான். அதை புறந்தள்ளிவிட எண்ணினால் அது ஆட்சியாளர்களைக் குப்புறத் தள்ளும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கை இன்றுவரை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழின தலைவர்கள் கைவிட்ட பொழுது தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இது பொருந்தும்.

வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.. எடப்பாடிகளும் முகஸ்டாலின்களும் மெளனம் காத்த பொழுது கனடிய நாட்டு தலைவன் ஒருவன் தமிழர்களுக்காக குரல் கொடுத்தான் என்று கட்டாயம் பதிவு செய்யும்.

ஜஸ்டின் ட்ரூடோ என்றொரு தலைவன் தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய பொழுது இன்றைய முக ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விக்கு வருங்காலத் தலைமுறையினர் பதில் தேடுவர்.

“Impuntiy in sri Lanka” “ குற்றங்களுக்கு தண்டனையில்லா சிறிலங்கா” என்ற தலைப்பில் திரு இராதாகிருஷ்ணன்   எழுதிய நூலுக்கு 26-2-2014 தேதியிட்டு எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய முகவுரையில், இந்நூலைப் படிக்கும் எவரும் பன்னாட்டுப் புலனாய்வு என்ற முடிவுக்கு கட்டாயம் வருவர் என்றும்  நீதிகேட்டு ஈழத்தமிழர்கள் எழுப்பும் அழுகுரலுக்கு செவிகொடுக்கும் பன்னாட்டுச் சமூகம் இதை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ’ஈழத் தமிழர்’ என்று குறிப்பிட்டுள்ளாரே ஒழிய சிலோன் தமிழர் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் முகவுரையுடன் அந்நூலைப் படிக்க வேண்டிய இடத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இருக்கிறார் போலும்.

போரை நிறுத்தக் கோரி சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் தீக்குளிக்கும் வரை தமிழினவழிப்புக்கு எதிராக செயல்பட முத்துவேல் கருணாநிதிக்கு வரலாறு அவகாசம் கொடுத்திருந்தது.

தமிழ் இனவழிப்புக்கு நீதிகோர முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. இவராவது காலத்தை தவறவிடாமல் இருப்பார் என்று நம்புவோமாக!

நன்றி உரிமை மின்னிதழ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW