காதலை குற்றமாக்கும் சாதி ஆணவம் ஓர் உரையாடல் – வ. ரமணி

25 Apr 2023

கடந்த ஏப்ரல் 15.4.23 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(28) என்ற பட்டதாரி இளைஞரும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசியா(25) என்ற பட்டதாரி பெண்ணும் காதலித்துவந்த நிலையில், அண்மையில் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதனை ஏற்காத தந்தை தண்டபானி பாசமாகப் பேசி இருவரையும் வீட்டிற்கு வரவழைத்தார். அதிகாலையில் அயர்ந்து உறங்கும்போது வெறித்தனமாக வெட்டியதில் சுபாஷ், அவரது பாட்டியும் உயிரிழந்துவிட்டனர். உயிர்தப்பி ஓடிவந்த சுபாஷ் மனைவி அனுசியா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாணார் சாதியைச் சேர்ந்த சுபாஷ், தலித் பெண் அனுசியா வை காதலித்த காரணத்திற்காகவே கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் மார்ச் 21.3.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி ஜெகன்(28) என்ற இளைஞர் புழுகன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சரண்யா(21) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக, பெண்ணின் அப்பா சங்கர் உள்ளிட்ட 3 பேர் ஜெகனை வழிமறித்து “கூலிவேலைசெய்யுற உனக்கு என் வீட்டுப்பொண்ணு கேட்குதா. சாவுடா?“ என்று பட்டப்பகலில் பலரின் கண்முன்னே கொடூரமாக துடிதுடிக்க ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெகன் காதலித்து கரம்பிடித்த மனைவி தலித் பெண்ணோ அல்லது வேறு சாதி பெண்ணோ கிடையாது. ஜெகனும் சரண்யாவும் (வன்னியர்) ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணக்காரன் ஏழை என்ற வர்க்க அந்தஸ்து கொலைக்கு காரணமாக இருக்கிறது. வயிற்றில் கருவை சுமந்து நிர்கதியாக நிற்கும் சரண்யா, “என் கணவரை கொன்றவர்களைத் தூக்கிலிடுங்கள்“ என்று கதறிய சத்தம் இன்னும் அடங்கவில்லை.

சரண்யாவும், அனுசியாவும் “பாசமாக பேசி வீட்டுக்கு அழைத்தீர்களே? எங்களை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்பித்தானே வந்தோம்? இப்படி அநியாயமாக எங்களை வாழவிடாமல் கொன்னுட்டீங்களே? என்று கேட்டனர். அக்கேள்வி அவர்களது குடும்பத்தை நோக்கியது மட்டுமல்ல இந்த சமூகத்தை நோக்கியதுமாகும். வளர்ந்த நாகரிக சமூகத்தில் வயது வந்த ஒரு பெண்ணோ, ஆணோ தனக்குப் பிடித்த ஒருவரை விரும்பி தேர்வுசெய்து கொள்வது குற்றமா?
2013ஆம் ஆண்டு இளவரசனுக்காக திவ்யா நீதிமன்றத்தில் மன்றாடினார். “எங்களை வாழவிடுங்க, சாதி சாதி என்று ஏன் வெறித்தனமாக இருக்கிறீங்க? எங்க வாழ்க்கையில அரசியல் பண்ணாதிங்க. நாங்கள் சாதி பார்த்து காதலிக்கவில்லை, மனதைப்பார்த்து காதலித்தோம். எங்களை வாழவிடுங்கள்? என்றார். நீதிமன்றம் தவறிழைத்தது. திவ்யாவின் அப்பா நாகராஜ் இடதுசாரி சிந்தனையாளராக காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதிகாத்தார். ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான அக்குடும்பம் வேற இடத்திற்கு குடிபெயர்ந்து செல்லும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்றனர். அது தற்கொலைதானா? என்று நிரூபிக்க ஆதாரமில்லை. அரசியல் சூழ்ச்சியால் திவ்யா, இளவரசனை பிரிந்துசென்றபோதும், ”திவ்யா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது“ என்று உறுதியோடு இருந்தார் இளவரசன். இறுதியில் இளவரசன் இரயில் தண்டவாளத்தில் தற்கொலைசெய்துகொண்டார் என்று செய்தி வந்தது. அது தற்கொலையா? ஆணவக்கொலையா? என்று விசாரிக்க காவல்துறை தயாராக இல்லை. சிக்கலை முடிக்கவே முயற்சித்தது. அது தற்கொலை என காவல்துறையால் மாற்றப்பட்டுவிட்டது. நாடகக் காதல் அரசியலும், சாதியும் அந்தக் காதலைக் குழிதோண்டி புதைத்துவிட்டது. இரு உள் ளங்களின் காதலை நசுக்கி சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக 3 கிராமங்கள் கொளுத்தப்பட்டது.

அதே 2013 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமத்தில் சாதி மறுப்புத்திருமணம் செய்துகொண்ட சுரேஷ், சுதா ஆகிய இருவரும் இரு குடும்பத்தினரின் ஆதரவோடு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சுரேஷ் சார்ந்த வன்னியர் கிராம பஞ்சாயத்தவர்களாலும் சில அரசியல்வாதிகளும் இணையர்கள் இருவரையும் மட்டுமின்றி சுரேஷ் குடும்பத்தினரையும் சேர்த்து ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த காரணத்திற்காக சாதியவாதிகளால் சுதா, சுரேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மண்டை உடைந்தநிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாத கைக்குழந்தையின் தாயான சுதா மீது வழக்குத்தொடுக்கப்பட்டு 3 மாதம் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். சாதி மறுத்த திருமணம் செய்துகொண்ட இணையர்களும், அந்த திருமணத்தை ஏற்றுக்கொண்ட வன்னியர் குடும்பமும் இன்றுவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். சாதியா? சட்ட உரிமையா? என்ற மோதலில் இங்கு சாதி ஆதிக்கமே வென்றுள்ளது. காவல்துறையின் துணை இன்றி இதுபோன்ற சட்டவிரோத செயலை செய்ய முடியாது.
2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த சங்கரை கரம்பிடித்த கவுசல்யாவும் பெற்றோர்களிடம் மன்றாடினார். “சங்கர் நல்லவன் என்னை நல்லா பார்த்துக்கொள்வான் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்தப்பின், வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். “அப்பாவும் அம்மாவும் என்மீது அதிக பாசம் கொண்டவர்கள் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்கள்“ என்று முழுமையாக நம்பினார். என்னைக் கொன்றுவிடுவார்களா? என்று பயந்த சங்கரை நம்பிக்கையூட்டி தேற்றினார். ”ஏழ்மையான வீட்டிலும் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்தோம். அந்த மகிழ்ச்சி சிறிதுகாலம்தான் நீடித்தது. கூலிப்படைகள் பட்டப்பகலில் பலரின் கண்முன்னே வெட்டி சாய்த்தனர். என்னையும் வெட்டினார்கள். யாரும் வந்து தடுக்கவில்லை. அதுதான் எனக்கு மன்வேதனையை கொடுத்தது” என்று கவுசல்யா சொன்னார். கொல்ற அளவுக்கு நாங்க என்ன தப்பு செய்தோம்? பாசம் என்பது வேசமா? என்ற கேள்வியை சமூகத்தின்முன் வைத்தார். ஆறாத வடுக்களை சுமந்து இன்றும் உறுதியோடு சாதிக்கு எதிராகவும் நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார் கவுசல்யா. குற்றவாளிகள் மேல்முறையீட்டிற்கு சென்று விடுதலைப் பெற்றதும் அதற்குப்பின்புலமாக சாதிய சக்திகள் இருப்பதும் அம்பலமானது.

அதேபோல், 2015 ஆம் ஆண்டு, சேலம் மாவட்டம் ஓமலுரைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது. நீதிபதிகள் துருவிதுருவிக் கேட்கும்போது அழுவதைத்தவிர வேறொன்றும் செய்யவியலாத சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ளார் சுவாதி. கோகுல்ராஜ் கொலையின் உண்மை சாட்சியாக புகார் கொடுத்தவரே சாதியினர், குடும்பத்தினரின் அழுதத்தில் இன்று பிறழ் சாட்சியாகியுள்ளார்.

அண்மையில் கும்பகோணம் துளுக்கவேலி கிராமத்தை சேர்ந்த பறையர் – முதலியார் சாதிகளைச் சேர்ந்த சாதி மறுப்பு இணையர்கள் பெண்ணின் குடும்பத்தினரால் பாசம்காட்டி வரவழைக்கப்பட்டு கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டனர். சரண்யா மோகன் இருவரின் தாய்மார்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இரு குடும்பங்களும் ஏழ்மை நிலையில் உள்ளவை. இத்தகைய குடும்ப பின்னணியிலும் கொலை நடப்பது அதிர்ச்சியானது.

மேல் சாதி என்று சாதி அடுக்கில் உள்ள ஒரே சாதியாக இருந்தாலும் வசதி குறைவாக உள்ள மாப்பிள்ளைக்கு பெண் தருவதில்லை. நிலம் இருக்கா? ஆடுமாடு இருக்கா? சொந்த வீடு இருக்கா? மாப்பிள்ளைக்கு கவர்மெண்ட் வேலையா? எவ்வோ சம்பளம்? என்று ஆயிரம் கேள்விகளை கேட்பதில்லையா?.இன்றும் அந்தந்த சொந்த சாதியில் உயர்சாதிகளில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணையோ, விதவைப் பெண்ணயோ, ஊனமுற்றப் பெண்ணையோ, ஆதரவற்ற பெண்ணையோ எத்தனைப்பேர் விரும்பி திருமணம் செய்துகொள்கிறார்கள்? ஒரே சாதியாக இருந்தாலும், பெண்ணோ ஆணோ பார்க்க லட்சணமாக, வெள்ளையாக, அழகாக ஊர் மெச்சும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லையா? அதே கருப்பாக, படிக்காத பெண்ணாக இருந்தால் அந்த பெண்ணையோ ஆணையோ ஒதுக்கிவிடுவதுதானே பண்பாட்டு வழக்கமாக இருக்கிறது? இதில் நாகதோசம் உள்ளவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இதுல சாதிக்கு என்ன வேலை இருக்கிறது?

சாதி என்றால் என்னவென்றே அறியாத இளம் பருவ வயதில் இயற்கையாக தோன்றும் காதல் உணர்வில் கரம் பிடிக்கும் காதலர்களை நோக்கி, அறிவியலுக்கு முரணாக ”நீ காதலிப்பது குற்றம்” அதுவும் சாதி மாறி காதலிப்பது குற்றம், மீறி காதலித்தால் வெட்டுவோம் என்பதும் அதற்காக எதையும் செய்யத் துணிவதும் இன்றைய சூழலில் ஆபத்தானதாக மாறிவருகிறது. யாரோ சில சுயநல விசமிகளின் தூண்டுதலால் மிகக்கொடூரமாக கொலையை செய்வதன்மூலம் சாதிமறுப்புத் திருமணங்களை, காதல் திருமணங்களை தடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள் சிலர். நடைமுறையிலோ சாதி மறுத்த திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களும் அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. முற்போக்கு இயக்கங்களால் அன்றாடம் பல திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தனை குடும்பங்களும் நன்றாக வாழ்கிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் சாதிகடந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை வாழ்த்தி வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எதார்த்தமே.

அதேபோல் சாதிமீறிய காதல் திருமணத்தால் மட்டும்தான் வாழ்க்கை வீணாகுவதுபோல் சித்தரிக்கப்படுகிறது. ஏற்பாட்டுத் திருமணங்களில் சிக்கல் வருவதில்லையா? விவாகரத்து இல்லையா? வரதட்சணை கொடுமை இல்லையா? ஆணாதிக்க ஒடுக்குமுறை இல்லையா? அன்றாடம் நடக்கிறது என்பதே உண்மை. ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளை நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் சொந்த சாதியில் கல்யாணம் செய்தால்தான் நல்லாயிருப்பாள் என்று தீர்மானிப்பதுதான் தவறு. அவர்களைக் கட்டுப்படுத்தும் பொழுதுதான் தன் விருப்பத்தை நிறைவேற்ற முற்படுகிறார்கள் காதலர்கள். வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லையென்றாலும் சாதி மறுப்பு இணையர்களை எங்கோ ஓர் மூலையில் வாழ அனுமதிப்பதற்கும் பாசம் காட்டி அவர்களை வரவழைத்து மானம் போச்சே என்று நயவஞ்சகமாக கொல்லும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்தந்த சாதிகளில் உள்ள ஜனநாயக சக்திகள் இதை விவாத பொருளாக்க வேண்டும். பிராமணர்கள் போல் நாங்கள் ஆணவக்கொலை செய்ய மாட்டோம் என்ற முடிவை இடைநிலை சாதி மக்கள் எடுப்பார்களா?

சாதி மறுப்பு இணையர்கள் பாதுகாப்பாக வாழ்ந்திட சனநாயக உரிமையை உறுதிசெய்ய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உரையாடலை நடத்திட வேண்டும். இயற்கையாக உருவாகும் காதலை குற்றமாக்குபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சட்டத்தின்மூலமாக எடுக்கும் முன்னெடுப்பும் அதற்கான தொடர் பரப்புரையை மாவட்ட நிர்வாகம் செய்லாக்குவதில்தான் ஆணவக்கொலைகளுகும் நீ3 மேல் சாதி கீழ் சாதி என்ற மனோபாவததை மாற்ற முடியும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஜனநாயக பண்பை வளர்த்துக்கொள்ள முற்படவில்லை என்றால் சாதி மனிதனை சாக்கடையாகும் என்ற பெரியாரின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW