இந்தியாவில் பாசிசம்: ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் – தோழர் செந்தில்

01 Apr 2023

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி பாசிசம் பற்றிய தீவிரமான உரையாடல்களை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாசிசம் வருவதற்கான வரலாற்று, சமூக, அரசியல் பொருளியல் அடிப்படைகளே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்திய அரசு பாசிச வடிவம் எடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய இடதுசாரி அமைப்புகள் உள்ளன. இப்போது பாசகவின் சர்வாதிகார(authoriatarian) அல்லது அரை சர்வாதிகார(semi-authoritarian) ஆட்சி நடந்துவருகிறது என்றும் அரசு பாசிச வடிவம் எடுக்கக்கூடிய அபாயம் இருக்கிறது என்றும் அதை நோக்கிய பாசிச இயக்கம் இருந்து வருகிறது என்றும் சொல்பவர்கள் உள்ளனர். இவையெல்லாம் இடதுசாரிகளிடையே நடந்துவரும் பேச்சுகள் ஆகும். முதலியக் கட்சிகளைப் பொருத்தவரை அரசு, பொருளியல் அடித்தளம் ஆகியவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ’பாசிச’ பாசக அரசு என்று சொல்லி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பண்பாட்டுத் தளத்தில் மட்டும் வடிவமைத்துக் கொள்கின்றன. பாசிசம் பற்றிய கோட்பாட்டு வழிகாட்டலைக் கையில் வைத்திருக்கும் இடதுசாரிகள் ஒத்த நிலைப்பாட்டுக்கு ஏன் வர இயலவில்லை? அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று – ஒன்றிய அரசு, மாநில அரசுகள் என்ற ஏற்பாடு இங்கு இருப்பதால் இந்திய அரசு பாசிச அரச வடிவம் எடுப்பது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவதில் இடர்பாடு நிலவுகிறது.மாநில அரசுதான் எல்லாம் , முதல்வர் பதவியே தீர்மானகரமானது என்று அதைப் பற்றி மட்டுமே கவலைக் கொள்ளக்கூடிய மாநில கட்சிகள் ஒருபுறம். மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, யார் ஆட்சி செய்தால் என்ன? என்று சொல்லக்கூடிய தமிழ்த்தேசிய அமைப்புகள் இன்னொருபுறம். இந்த இருவேறு புரிதலில் இருந்து தமிழ்நாட்டில் ’திமுக பாசிசம்’, கேரளாவில் ’சிபிஐ(எம்) பாசிசம்’, மேற்கு வங்கத்தில் ’திரினாமூல் பாசிசம்’ என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருப்போர் உள்ளனர். ஒரு போலி மோதல் கொலை நடந்தாலோ போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ உடனே அதை பாசிசம் என்று சொல்லும் போக்கு உள்ளது. ஒரு கட்சிக்கு உலகமய, தாராளமய, தனியார்மய ஆதரவு கொள்கை இருந்தாலே போதும், நிதிமூலதன ஆதரவுக் கொள்கை இருந்தாலே போதும் அதுவும் ஒரு பாசிச கட்சி என்று சொல்லிவிடுகின்றனர். முற்றும்பாராமை என்ற மெய்யியல் சறுக்கல் இவற்றில் எல்லாம் செல்வாக்கு செலுத்துகின்றது. ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச அமைப்பு நூறு ஆண்டுகளாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை மட்டுமே காட்டி இந்தியாவில் பாசிசம் நிலவுகிறது என்று சொல்லிவிட முடியாது. அதே போல் 1998 முதல் 2004 வரை ஒன்றிய அரசின் ஆட்சிக் கட்டிலில் பாசக இருந்த போதும் அது ’பாசிச பாசக அரசு’ என்று வரையறுக்கப்படவில்லை. எனவே ஒன்றிய அரசின் ஆட்சிக் கட்டிலில் பாசக இருந்துவிட்டால் உடனே இந்திய அரசு பாசிச வடிவமெடுத்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான, மிகவும் பேரினவாத மற்றும் வல்லரசியக் கூறுகளைக் கொண்டிருந்தால் அதை பாசிசம் என்று வரையறுக்க முடியும் என்பது பாசிசத்தின் பன்னாட்டுப் பொதுமை வரையறையாகும். எனவே, பாசிசம் என்பது முதலிய அரச வடிவம் பற்றியதே ஆகும். எத்தகைய பொருளியல், சமூக, அரசியல் ,பண்பாட்டு நிலைமைகளில், வரலாற்று கட்டமைப்புக்குள்ளால் ஒரு நாட்டில் அரசு அத்தகைய வடிவத்தை எடுக்க முடியும் என்பதே குறிப்பான ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள கேள்வியாகும். பாசக ஒன்றிய அரசில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதானி, அம்பானி போன்ற நிதிமூலதன சக்திகளின் சிறுகும்பலாட்சியாக ஒன்றிய அரசின் ஆட்சி இருந்துவருகிறது. இது நிதிமூலதன சிறுகும்பலாட்சியாக இருக்கும் அதேவேளையில், ஒன்றிய அரசில் பாசிசக் கொள்கைகளைக் கொண்ட கட்சி ஒன்று ஆட்சியில் இல்லை என்றால் அவ்வரசு பாசிச வடிவம் எடுப்பது பற்றிய கேள்வியே இங்கு இல்லை. ஒரு நாட்டில் பாசிசக் கொள்கைகளைக் கொண்ட கட்சி எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எந்த பாசிசக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதைதான் முதன்மை எதிரியாக வரையறுக்க முடியும். ஒரு கட்சி பாசிச கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அது ஆட்சியதிகாரத்தில் இல்லாதவிடத்து அதை முதன்மை எதிரி என்று வரையறுத்துவிட முடியாது. அரசு என்ற மந்திரக் கோல் யார் கையில் இருக்கிறது? என்பதுதான் முக்கியம்.ஒன்றிய அரசில் யார் ஆட்சியில் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ளும் அதேவேளையில் மாநில அரசுகளின் நிலை என்ன? என்பதையும் சேர்த்து நிலைமையை மதிப்பிட வேண்டும்.இந்தியாவில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் என்ற வகையில் இறைமை பகிரப்பட்டுள்ளது. கூட்டாச்சியியலின் அடிப்படை இறைமைப் பகிர்வு பற்றியதே ஆகும். அதாவது divided sovereignty / shared sovereignty ஆகும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய பட்டியல்(union list), ஒத்திசைவு பட்டியல்(concurrent list), மாநில பட்டியல் ( state list) ஆகிய ஏற்பாட்டின் மூலம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இறைமை பகிரப்பட்டுள்ளது. ஒன்றிய பட்டியலில் 97 இனங்கள் உள்ளன. ஒத்திசைவு பட்டியலில் 51 இனங்கள், மாநிலப் பட்டியலில் 61. ஒன்றிய பட்டியல்: நாணயம், வெளியுறவு துறை, பாதுகாப்பு, இரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகம், விமானம், வங்கி, காப்பீடு உள்ளிட்டவைமேற்படி 97 இனங்களிலும் ஒன்றிய அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். மாநில அரசு சட்டமியற்ற முடியாது. ஆகவே, இவ்விசயங்களில் 100% இறைமை ஒன்றிய அரசுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.ஒத்திசைவுப் பட்டியல்: கல்வி, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து பாதுகாத்தல், பொருளியல் மற்றும் சமூக திட்டமிடல், தொழிற்சங்கங்கள்- தொழில்துறை, தொழில்தகராறு உள்ளிட்டவையாகும்.இதை பொதுப்பட்டியல் என்றும் எளிமைப்படுத்தி சொல்வது உண்டு. ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்த அதிகாரம் கொண்ட இனங்கள் ஆகும். ஆனால், உண்மையில் ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒரு பொருளில் முரண்படும் போது, ஒன்றிய அரசின் முடிவே இறுதியானது. ஒன்றிய அரசு இவ்வினங்களில் ஒரு சட்டம் இயற்றிவிட்டால் மாநில அரசு அதை மீற முடியாது.கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு. அந்த நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மாநில அரசு சட்ட மசோதாவை அனுப்பியுள்ளது. ஒத்திசைவு பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கினால் ஒழிய மாநில அரசு அனுப்பிய மசோதா சட்டமாக முடியாது.எனவே நடைமுறையில் ஒன்றியப் பட்டியல், ஒத்திசைவுப் பட்டியல் ஆகிய இரண்டும் ஒன்றிய அரசுக்கு வாரி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களே ஆகும். எனவே, ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடிப்பது என்பது பொதுவான நிலைமைகளில் மேற்படி 148 இனங்களில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதாகும், அதாவது சட்டமியற்றும் துறைகளில் 75% கையில் வைத்திருப்பதற்கு ஒப்பாகும். மாநிலப் பட்டியல்:மொத்தம் 61 இனங்கள். இதில் 9 துறைகள் ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன (சுரங்கங்களை முறைப்படுத்துவது – கனிமப் பொருட்களை வளர்ச்சி செய்வது, தொழில்கள்…), பெருவழித்துறைகள் என்ற பதிவு ஒன்றிய பட்டியலிலும் ஒத்திசைவுப் பட்டியலிலும் கட்டுப்படுத்தப் படுகிறது, வணிகமும் வர்த்தகமும் , வாகனங்கள் மீதான வரிகள் உள்ளிட்ட 3 பதிவுகள் ஒத்திசைவுப் பட்டியலாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன, 13 பதிவுகள் சட்டமியற்றும் தேவையற்ற வெறும் நிர்வாகப் பதிவுகள், வரி விதிப்பு அதிகாரங்கள் 20 அதிலும் ஒன்றிய பட்டியலினதும் ஒத்திசைவுப் பட்டியலினதும் தலையீடு உண்டு. அத்தனையையும் கழித்துவிட்டுப் பார்த்தால் வெறும் 19 துறைகளில் மட்டுமே தனித்த சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. பொது அமைதி, காவல் துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலை, உள்ளாட்சி, பொதுநலனும் மருத்துவமும், பயணங்கள், நில உரிமை, எரிவாயு, மாநில அரசின் நிலங்கள், பணிகள்,கட்டிடங்கள் உள்ளிட்டவை. மாநில அரசில் ஆட்சியில் இருப்பது என்பது ஏட்டளவில் 61 இனங்களில் அதிகாரம் உண்டு என்றாலும் நடைமுறையளவில் 19 துறைகளில் மட்டுமே 100 விழுக்காடு இறைமையைக் கையில் வைத்திருப்பதாகும்.. இதில் சட்டம் ஒழுங்கு என்பது முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரமாகும். சிங்கள பேரினவாத ஒற்றையாட்சி அரசியல் ’போலீஸ்’ அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்கவே முடியாது என்று பிடிவாதம் காட்டுவதில் இருந்து இதை இலகுவில் புரிந்துகொள்ள முடியும். மாநிலப் பட்டியலில் இருக்கும் இனங்களில் மாநில அரசுக்கு நூறு விழுக்காடு இறைமை உண்டு என்ற வாதத்தை அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் எடுத்து வைக்கிறார். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் உறுப்பு 161 ஐ மாநில அரசு பயன்படுத்தியது. ஒன்றிய அரசு குறுக்கே நின்றாலும் அதை மீறி அரசமைப்பு சட்ட உரிமையின் வழி அவர்களை மாநில அரசால் விடுவிக்க முடிந்தது என்பது மாநிலப் பட்டியலில் உள்ள இனங்களில் மாநில அரசுக்கு இருக்கும் இறைமையைப் புரிந்து கொள்வதற்கான அண்மைக் கால எடுத்துக்காட்டாகும். பொருளியல் நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டு சட்டத்தை மாநில அரசுப் பணிகளில் நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. எனவே, இந்திய அரசு இந்தியாவில் எப்படி செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி பார்த்தால் ஒரு மாநிலத்தில் ஒன்றிய அரசும் அம்மாநில அரசும் சேர்ந்து இந்திய அரசாக தொழில்படுகிறது. ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் இணைத்துத்தான் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திய அரசு எப்படி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும். ஒன்றிய அரசையும் மாநில அரசையும் தனித்தனி அரசாக பார்ப்பது அல்லது மாநில அரசு ஒன்றுமே இல்லை, ஒன்றிய அரசுதான் இந்திய அரசு என்று பார்ப்பது ஆகிய இருவேறு பார்வைகளும் தவறானதாகும். இந்திய அரசின் இறைமை ஒன்றிய அரசிடமும் மாநில அரசுகளிடமும் பகிரப்பட்டுள்ளது என்று பார்க்கப்பட வேண்டும். பாசிசம் என்பது அரசு வடிவம் என்ற அளவில் அதற்குரிய பொருளியல் பின்புலத்தில் அதாவது நிதிமூலதன சக்திகளை அடித்தளமாக கொண்டு பாசிசக் கட்சியொன்று ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், இது மட்டும் போதாது. இந்திய அரசின் இறைமைப் பகிரப்பட்டிருக்கும் மாநில அரசுகளையும் அக்கட்சியோ அல்லது அதே கொள்கைகளைக் கொண்ட பிற கட்சிகளோ கைப்பற்றியிருக்க வேண்டும். ஒன்றிய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பினும் மாநில அரசுகளை பாசக கைப்பற்றத் துடிப்பதும் அதற்காக எல்லாவித தகிடுதத்தங்களைச் செய்வதும் கண்கூடாக தெரிபவை. மாநில அரச அதிகாரம் சொற்பமானதே என்றாலும் இந்திய அரசு பாசிச அரச வடிவம் எடுப்பதற்கு அதையும் கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இன்னும் கூடுதலான அதிகாரப் பகிர்வு இருந்து உண்மையான கூட்டாட்சி நடைமுறையில் இருக்குமாயின் பாசிச அரச வடிவம் எடுப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்காது.இவையனைத்திற்கும் மேலே, ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கொண்டு ஓர் அவசர நிலைப் பிரகடனத்தின் மூலமோ அல்லது ஆட்சிக் கலைப்பின் மூலமோ அல்லது ஆட்சியில் இருக்கும் மாநிலக் கட்சியை உருட்டிமிரட்டி அடிபணிய வைப்பதன் மூலமோ மாநிலத்தின் நிலைமையை முற்றிலும் கையில் எடுத்துவிட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.’ஒரே நாடு , ஒரே தேர்தல்’ என்பதை முன்வைக்கிறது பாசக. அதன் மூலம் மாநிலக் கட்சிகள், மாநில தேர்தல் ஆகியவற்றை பொருளிழக்கச் செய்வதே அதன் நோக்கமாகும். எனவே, இன்றைய இந்திய அரசியலைப் பொருத்தவரை ஒன்றிய அரசில் பாசக பொரும்பான்மையோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதால் இந்திய அரசு பாசிச வடிவவெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது என்று வரையறுக்க முடியும். அதேவேளையில், மாநில அரசில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள், பாசிச ஆற்றல்களின் சமூக அடித்தளம் என்ன? என்பவற்றைப் பொருத்துதான் பாசிச அபாயத்திற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். ஆகவே ஒன்றிய அரசு, மாநில அரசு ஆகிய இவற்றிற்கு இடையிலான அதிகாரப் பகிர்வு பற்றிய பார்வையும் இந்தியா ஒரு தேசமல்ல, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக்கண்டம் என்ற பார்வையும் இல்லாமல் இந்திய அரசு பாசிச வடிவமெடுக்கும் நிகழ்முறை பற்றிய புரிதலை வந்தடைய முடியாது.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW