மோடியின் இந்தியா என்பது அதானியின் ஏகபோகமே
அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை – பாலன்

07 Mar 2023

மோடியினுடைய குஜராத் மாடலில் தொடங்கியதுதான் அதானியின் வளர்ச்சி. 2014 ஆம் ஆண்டு மோடி ஒன்றிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மிக வெளிப்படையாகவே இந்தியாவின் முதன்மை ஏகபோக சக்தியாக அதானி வளர்ந்துவந்துள்ளார். இதை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். ஏற்கெனவே 2008 – 2009 மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சூறையாடும் முதலாளிகளின் (crony capitalism) வளர்ச்சிப் பற்றிய விவாதம் இந்தியாவில் முன்னுக்கு வந்தது. சுறையாடும் முதலாளிகளில் அதானி மிக முக்கிய சக்திகயாக வளர்ந்து வந்துள்ளார். முழுக்கமுழுக்க அரசின் ஆதரவுடன் அரசின் நிறுவனங்களையும் திட்டங்களையும் கைப்பற்றுவதும் அதன் அடிப்படையில் ஒரு பெருமுதலாளியாக வளர்ந்து வந்ததுதான் அதானியின் வரலாறாகும்.
2014 க்குப் பிறகு மோடியால் கொண்டுவரப்பட்ட பொருளியல் மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கார்ப்பரேட்கள் என்போர்– ’வளங்களை உருவாக்குபவர்கள், அவர்களை விமர்சிக்கக் கூடாது’ என்ற மோடியின் சுதந்திர தின உரை, பொதுத்துறை நிறுவனங்களைக் கைவிடுவது, சோசலிசம் சுமை என்ற நிதியமைச்சரின் பேச்சுக்கள் என வெளிப்படையாக சூறையாடும் முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மோடியின் ஆட்சி மேற்கொண்டு வருகிறது. ஏகபோக சக்திகள் வளர்வதற்கு ஏற்ப அரசக் கட்டமைப்புகளை வளைத்து ஒவ்வொரு துறைகளிலும் தனியார் ஏகபோகங்கள் வளர்ந்து நிற்பதற்கு வழிவகுத்துள்ளார் மோடி. அவர்கள் நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொள்வதற்கு எல்லா வகையிலும் வழியேற்படுத்திக் கொடுத்து கொண்டிருக்கிறார்.

கொரோனாவுக்கு முன்னால் அதாவது 2018 வாக்கில் வெறுமனே இருபது பில்லியன் டாலருக்குள்தான் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு இருந்தது. கொரொனாவுக்குப் பின் 2022 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் 3 வது பெரிய பணக்காரர் ஆகிற வகையில் 150 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட நிறுவனமாக அதானி குழுமம் மாறியுள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் மோடியினுடைய வெளிநாட்டுப் பயணங்களில் அதானியின் திட்டங்களுக்கு ஆதரவாக அரசுகளிடம் பேசிக் கையெழுத்திட வைத்தது, இரண்டாவது முக்கியமான காரணம் விமான நிலையம், துறைமுகம், சுரங்கம், பாதுகாப்புத் துறை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அதானி குழுமத்திற்கு தாரை வார்த்தது. பொதுத்துறை வங்கிகளுடைய ஆதரவு, எல்.ஐ.சி. போன்ற நிதி நிறுவனஙக்ளுடைய ஆதரவு ஆகியவற்றை வழங்கி இத்துறைகளில் கால் பதிக்கவும் ஏனையப் போட்டியாளர்களை ஒழித்துக்கட்டவும் உதவியது. இறுதியாக, புதிதாக வளர்ந்து வரக்கூடிய ஹைட்ரஜன் ஃபூயல், சோலார் எனர்ஜி, மெகா பேட்டரி போன்ற பசுமை எரிசக்தி துறைகளிலும் அதானி குழுமத்தை தனிப்பெரும் சக்தியாக கால்பதிக்க வைத்தது. இதுபோன்ற புதிய வளர்ந்து வரக்கூடிய துறைகளில் பெருமளவிலான அந்நிய நிதி நிறுவனங்களுடைய முதலீடுகள் அதானி நிறுவனங்களை நோக்கி வருவதற்கு காரணம் அதானி குழுமத்திற்கு மோடி அரசின் நிலைத்த பேராதரவு இருக்கிறது என்ற நம்பிக்கைதான்.

இந்த மாதிரியான அரச ஆதரவுப் பின்புலத்தில் மிக வேகமான ஒரு வளர்ச்சியை அதானி குழுமம் கண்டதும் அதன் மொத்த மூலதன மதிப்பு உயர்ந்ததும் உலகப் பணக்காரர் வரிசையில் முன்னேறிச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் மோடி அரசின் பாசிசத்திற்கு அடித்தளமாக இருக்கும் பொருளியல் காரணம் என நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது, இந்தியாவின் ஒருசில பெருமுதலாளிகள் ஏகபோக சக்திகளாக வளர்வதற்கும் நாடு கடந்து அவர்கள் விரிவடைவதற்கும் தீவிரமான சந்தை விரிவாக்கத்திற்கும் சூறையாடலுக்கும் வழிவகுப்பதற்கும்தான்.
அதானி, அம்பானி உள்ளீட்ட நிதிமூலதன கும்பலின் திரட்சிக்கு உதவும் வகையிலேயே பணமதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கம், கொரோனா கால ‘ஆத்ம நிர்பார்’ 20 இலட்சம் கோடி ரூபாய் நிவாரண அறிவிப்பு மற்றும் ஒவ்வோராண்டும் முன்வைக்கப்படும் நிதிநிலை அறிக்கை போன்றவை செயல்படுத்தப்பட்டன. இந்த இந்துத்துவ தேசியத்தின் அரசு தமது அத்துமீறல்களையும் ஏகபோக சூறையாடல்களையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான் அதானி போன்றவர்கள் இந்த அளவுக்கு தீவிரமாகப் போனதற்கு காரணமாகும்.
ஹின்டன்பர்க் அறிக்கை இரண்டு முக்கியமான விசயத்தை வெளிப்படுத்துகிறது.

  1. செயற்கையாகப் பங்கு விலையை உயர்த்திய புரட்டு வேலை (Maninpulation)
  2. வரியில்லாத நாடுகளில் (tax heavens) இருந்து போலியான நிறுவனங்களைத் தொடங்கி இந்தியாவில் முதலீடு செய்த பித்தலாட்ட வேலை(Fraud).


இந்த இந்துத்துவ தேசிய அரசு தன்னைப் பாதுகாக்கும் என்பதுதான் அதானி இந்தக் குற்றங்களை இழைப்பதற்கு அடிப்படையாக இருக்கிறது.

இந்தியாவில் சூறையாடும் முதலாளித்துவம் என்பது இன்று வேறொரு நிலையை அடைந்திருக்கிறது. பாசிசத்தின் ஆதரவுடன் ஒருசில ஏகபோகங்கள் இந்த நாட்டில் உருவாகி நிலைபெறுவது என்ற நிலையை அடைந்திருக்கிறது . ஏகபோகக் கும்பல் பாசிச சக்திக்கு ஆதரவாக இயங்குகிறது. அதனால் தான் தன் மீதான தாக்குதல் வந்த பொழுது அதை இந்தியாவின் மீதான தாக்குதல் என்று அதானியால் வெளிப்படையாக விமர்சிக்க முடிந்தது. தேசப் பக்த கூச்சலை எழுப்ப முடிந்தது. அந்நிய ஏகபோக சக்திகளுடைய தாக்குதல் , இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான அறிக்கை என தேசிய உணர்ச்சியோடு அதை பேச முடிந்தது.. பொருளியல் நடவடிக்கையிலும் பித்தலாட்டம், அரசியல் தேசியம் என்பதிலும் பித்தலாட்டம் என பொருளீயலும் அரசியலும் புரட்டு வேலை வெளிப்படுகிறது.

ஒருபக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பினும் இன்னொருபுறம் அமெரிக்காவை சேர்ந்த பிளாக் ஸ்டோன உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், மேற்கு நாட்டு அரசுகளின் சாவரின் பண்ட்ஸ் போன்ற நிதிமுதலீடுகள் இன்றைக்கும் அதானி குழுமத்தில்– முதலீடு செய்யப்படுகின்றன. அதானியோ, இந்த முதலீடுகளைத் தன்னுடைய மூலதன விரிவாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டே தேச பக்தக் கூச்சலை எழுப்பிக் கொண்டிருக்கிறார்.. மேற்குலக ஏகாதிபத்தியமும் ஹிண்டன்பர்க் போன்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே அதானி குழுமத்தில் முதலீடு செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்த முரணான நிலையைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
அமெரிக்க எதிர் சீன – இரசிய முகாம்களுக்கு இடையிலான மோதல் என்பது சர்வதேச நிலையில் முக்கியமான விவகாரமாக இருக்கிறது. ஒருபக்கம் அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திற்கு சீன – இரசிய முகாமை எதிர்ப்பதற்கு இந்தியா ஒரு கூட்டாளியாகவும் தேவைப்படுகிறது. இன்னொருபக்கம் இரசிய, சீனாவோடு பேரத்திற்கு போகக்கூடிய இந்தியப் பெருமுதலாளிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் மேற்குலகிற்கு இருக்கிறது.
இப்போது உக்ரைன் போரில் இது வெளிப்படையாக தெரிகிறது. இந்திய வெளியுறவுத் துறைக்கும் மேற்கத்திய நாடுகளூக்கும் இடையே வெளிப்படையான் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். புதிய உலக ஒழுங்கு உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முரண்பாடுகளைப் புரிந்துகொள்வதும் பாசிச மோடி – அதானி கும்பலின் அரசியல் – பொருளியல் ஏகபோகம் என்ற ஆபத்தை எதிர்கொள்வதும் நமக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள அறைகூவலாகும்.
ஒருபக்கம் அமெரிக்க எதிர்ப்பு தேச பக்தியைக் காட்டிக்கொண்டு ஹிண்டன்பர்க் அறிக்கையை விமர்சிக்கும் இடதுசாரி தாராளவாத சக்திகளைப் பார்க்கிறோம். இவர்களது தேச பக்தி பாசிச குமபலின் தேச பக்திக்கு இணையாகவே இருக்கிறது.. இன்னொருபக்கம், இந்த சர்வதேச முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளாத அரசியல் பார்வையும் வெளிப்படுகிறது.

நம்மைப் பொருத்தவரை பாசிச ஏகபோக கும்பல் எல்லாவற்றையும் சூறையாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள், சிறுதொழில் செய்வோர், சிறுவணிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள், தேசிய இனங்களின் பொருளியல், அரசியல் அதிகாரங்களை முற்றிலும் பறிப்பதாக இருக்கிறது..அனைத்து சனநாயக நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாக தகர்ப்பதை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கிறது. தேச பக்திக் கூச்சலுடன் எல்லாவிதமான அத்துமீறலையும் துஷ்பிரயோகத்தையும் கடந்து போகலாம் என்று பார்க்கிறது. அண்மைக்காலமாக வெளிப்பட்ட ரபேல் ஊழல் விவகாரம், பெகாசஸ் ஒட்டுக்கேட்ட்பு விவகாரம், பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை என எதுவானாலும் தன்னுடைய தேசியக் கூப்பாடுகளின் மூலம் ஒன்றுமில்லாமல் செய்யலாம் என்று நினைக்கிறது. அதனூடாக எதிர்க்கட்சிகளே இல்லாத ஓர் இந்தியாவைக்கூட உருவாக்கலாம் என்ற முயற்சியில் இருக்கிறது.
அதே நேரத்தில், இந்த பாசிச கும்பலை ஏகாதிபத்திய சக்திகள் தன்னுடைய போட்டி நெருக்கடியில் இருந்து கையாளவும் செய்கிறது, மேற்சொன்ன எல்லா விமர்சனங்களையும் மீறி தன்னுடைய கூட்டாளிகயாக வைத்திருக்கவும் விரும்புகிறது. முதன்மையாக ஏகாதிபத்திய மேற்குலகம் பாசிசக் கும்பலுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. இவர்களுக்கு இடையிலான போட்டி, போராட்டம் என்பது இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. ஆகவே தேசப் பக்தி ஊளையிடல்களுக்கு எல்லாம் நாம் திசை திரும்பிவிடக் கூடாது.

மிக வெளிப்படையாக நம் முன்னால் நிற்கக் கூடிய இன்றைய முதனமை எதிரியான பாசிசக் கும்பலை அரசியல், பொருளியல் அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஹிண்டன்பர்க் அறிக்கை ஏகாதிபத்திய நலனில் இருந்து வெளிவந்திருந்தாலும்கூட மிக வெளிப்படையாக அத்துமீறல்களை அம்பலப்படுத்தி இருக்கிறது..
ஆகவே, ஹிண்டன்பர்க் அறிக்கையைக் கொண்டு தேச பக்தி பலூனும் மோடி – அதானி கும்பலுடைய ’திடீர் வளர்ச்சி’ என்ற ஊதி பெருக்கப்பட்ட பலூனும் உடைத்து அழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்துத்துவப் பாசிசத்தின் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது போல் அதன் நிதிமூலதன சிறுகும்பலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராட சனநாயக ஆற்றல்கள் முன்வர வேண்டும்.

நாம் பின்வரும் கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்ப வேண்டும்.

ஒன்றிய அரசே!
1. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அதானி மீது வழக்குப்போட்டு சிறையில் அடைத்திடு!

2. அதானி குழுமத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்!

மாநில அரசே!
அதானி குழுமத்துடன் போட்டுள்ள மக்கள் விரோத ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறு!

- பாலன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி( மா-லெ- மாவோ சிந்தனை)
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW