குஜராத் இஸ்லாமிய இனப்படுகொலையை விசாரனைக்கு உட்படுத்தும் பிபிசியின் ஆவணப்படம்!
குஜராத் இஸ்லாமிய படுகொலை மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவோம்! – பாலன்

23 Feb 2023

”இந்தியா: மோடி கேள்வி” என்ற தலைப்பில் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மறக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து மீண்டும் விவாதத்தை துவக்கி வைத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையில் நடந்த கலவரமாக, வன்முறையாக சித்திரித்து கடந்து போன இந்திய சூழலில் பிபிசி ஆவணப்படம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தெகல்கா போன்ற ஊடகங்களும் தீஸ்தா செதல்வாத் போன்ற செயற்பாட்டாளர்களும் மெளனமாக்கப்பட்ட சூழலில் பன்னாட்டு ஊடகத்தில்தான் இப்படியான செய்தி வரக்கூடிய நிலைமை இருக்கிறது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த;பொழுது ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்புகளான பஜ்ரங் தள், விசுவ இந்து பரிசத் போன்றவை ’குற்றங்களுக்கு தண்டனை இருக்காது(Impunity)’ என்ற நம்பிக்கையில் நேரடியாக களமிறங்கி இஸ்லாமியர்களுக்கு எதிரானப் படுகொலையை நடத்தின என்பதை இந்த ஆவணப்படம் மோடியின் மீதான கேள்வியாக எழுப்பியுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகள் நடந்தபோது இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு விசாரணை நடத்தி இரகசிய அறிக்கை ஒன்றை இங்கிலாந்து அரசுக்கு கொடுத்துள்ளது. அவ்வறிக்கையில், இந்த படுகொலைகளுக்கு மோடியே பொறுப்பு என்றும் இனத் துடைப்புக்கான(ethnic cleansing) அனைத்து கூறுகளும் படுகொலையில் உள்ளன என்றும் குறிப்பிடப்படுள்ளது. மேலும், பிப்ரவரி 27 அன்று கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடந்த பிறகு அன்று மாலை நடந்த காவல் உயரதிகாரிகளின் கூட்டத்தில், ’கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம்’ என்று மோடி அறிவுறுத்தியதை அம்பலப்படுத்தும் சான்றுகளை பிபிசி ஆவணப்படம் முன்வைத்துள்ளது.

அந்தப் படுகொலைகள் அரங்கேறிய போது அப்போதைய தலைமை அமைச்சர் வாஜ்பாய், ’குஜராத்தில் இராஜதர்மம் மீறப்பட்டது’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் நிலவியது. 2002 இல் இருந்து 2014 வரை குஜராத் கலவரங்கள் மீதான விசாரணை நடை;பெற்றது. மேற்குலக நாடுகளில் சில மோடிக்கு பயணத்தடை விதித்திருந்தன. ஆனால், படுகொலைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் ‘வளர்ச்சி – குஜராத் மாடல்’ என்ற கோசத்துடன் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்பட்டார். பெரும் பண பலத்துடன் மோடி பற்றிய பிம்பம் ஊதிப் பெருக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாசக வெற்றிப் பெற்ற நிலையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். தமது வணிக நலனுக்காக அதே மேற்குலக நாடுகள் மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் நாடுகளுக்கு வரவேற்றன.

மோடிக்கு எதிராக சாட்சியம் வழங்கியிருந்த அப்போதைய உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003 ஆம் ஆண்டு ஐயத்திற்கு இடமான வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வழக்கில் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. 2012 ஆம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியையும் 63 உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடுப்பதற்கான போதிய சான்றுகள் இல்லை என்று சொல்லிவிட்டது. இதை எதிர்த்து குஜராத் வன்முறையில் கொல்லப்பட்ட காங்கிரசு எம்பி இசான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடும் கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவின் அதியுயர் நீதிமன்றம் குஜராத் படுகொலை தொடர்பில் மோடி அப்பழுக்கற்றவர் என சான்றிதழ் வழங்கிவிட்டது. இந்த மேல்முறையீட்டில் தன்னையும் இணைத்துக் கொண்ட மாந்த உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத், பொய்யான சான்றுகளை முன்வைத்ததாகவும் ஈசான் ஜாப்ரியின் உணர்வுகளைத் தன்னுடைய தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் தீஸ்தா மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்துச் சொன்னது. அடுத்த இரண்டு நாட்களில் அகமதாபாத் காவல்துறை தீஸ்தா மீதும் முன்னாள் காவல்துறை தலைவர் சிறிகுமார் மீதும் வழக்கு தொடுத்து சிறைப்படுத்தியது. சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பு மோடி மீதான குற்றச்சாட்டுக்கு சான்று தந்திருந்த காவல்துறை உயரதிகாரி சஞ்சீவ் பட் பழைய வழக்கொன்றில் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். சுருங்கக் கூறின், பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வாயடைக்கப்பட்டனர், நீதிக்காக போராடவும் நீதியின் பக்கம் நிற்கவும் முன் வந்தவர்கள் கொல்லப்பட்டனர், சிறைப்படுத்தப்பட்டனர்.

குஜராத் படுகொலைக்கான நீதி என்பது புதைக்கப்பட்டு அந்த புதைமேட்டில் புல் முளைக்கத் தொடங்கிய நேரத்தில்தான் பிபிசியின் காணொளிகள் உள்நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படுகொலைகளை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி அரசு ’குஜராத் மாடல்’ என்பதை வெறும் ‘வளர்ச்சி மாதிரியாக’ மட்டுமின்றி இஸ்லாமியர்களை இரண்டாம் குடிமக்களாக ஆக்கும் மாதிரியாக இந்தியாவெங்கும் செயல்படுத்தி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களுக்கு இந்தியாவின் சமூக அரசியல் வாழ்வின் அன்றாட வாழ்க்கையாக மாறிப்போய்விட்டது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவழிப்பு அறைகூவல் என்பது இந்தியாவின் ஏதோ ஒரு பெருநகரங்களில் இருந்து ஒலித்த வண்ணம் உள்ளது. குஜராத் படுகொலைகளுக்கான நீதி கோரும் போராட்டம் என்பது இனவழிப்பின் வாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.

பாசிசம் இந்தியாவின் புலனாய்வு நிறுவனங்களையும் நீதிப் பொறிமுறைகளையும் விழுங்கிவிட்ட நிலையில், குஜராத் படுகொலைகள் மீதான பன்னாட்டுப் புலனாய்வை நாம் கோர வேண்டும். இனவழிப்புக் குற்றத்தை விசாரிக்கவும் தண்டிக்கவும் இந்தியாவில் சட்டம் இல்லாத நிலையில் இனவழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான பன்னாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பன்னாட்டுப் புலனாய்வுக்கான கோரிக்கையை எழுப்பவேண்டும்.

இந்துதேசியம், இந்தியதேசியம், இந்திய இறையாண்மையின் பெயரால் இக்கோரிக்கையை எழுப்பத் தயங்குவது பாசிசத்தின் தேசியக் கூப்பாடுகளுக்கு ஒத்தூதுவதாக அமைந்துவிடும். வல்லரசிய முரண்பாடுகளை இந்திய ஆளும் வகுப்பு தன்னுடைய நலனில் இருந்து கையாள்கிறது. அமெரிக்காவுடன் மூலவுத்தி ரீதியான கூட்டணியில் இருந்தாலும் அமெரிக்க – இரசிய முரண்பாட்டைக் கையாண்டு கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. நாமும் இந்த முரண்பாட்டை மக்களின் பக்கம் நின்று கையாள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அவ்வகையில் இனவழிப்புக் கும்பலை நீதியின் முன் நிறுத்தவும் உள்நாட்டில் மட்டுமின்றி பன்னாட்டு அளவிலும் உள்ள சனநாயக ஆற்றல்களை நம் பக்கம் திரட்டுவதன் மூலம் பாசிச மோடி – அமித் ஷா கும்பலைத் தனிமைப்படுத்தவும் பாசிச பாசக ஆட்சியை வீழ்த்தவும் பிபிசி காணொளிகளைக் கருவியாக்குவோம்.

2002 இல் பிப்ரவரி 27,28 மற்றும் மார்ச் 1 ஆகிய நாட்களில்தான் குஜராத் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப் பட்டன. அந்நாட்களில் பிபிசி ஆவணப் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பின்வரும் கோரிக்கைகளை எழுப்பும் இயக்கத்தை முன்னெடுப்போம்.

குஜராத் இஸ்லாமிய இனவழிப்புக் குற்றவாளி மோடியே பதவி விலகு!

ஐநாவே,

குஜராத் இஸ்லாமிய படுகொலைகள் மீதான தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வை நடத்துக!

மோடியைக் கூண்டில் ஏற்ற உறுதியேற்போம்!

தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா. லெ.மா.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW