சனவரி 25 தமிழ் மொழிக் காப்பு ஈகியர் நாள்! வீரவணக்கம்!
தமிழ்நாடு 1938 அன்று முதல் இன்று வரை இந்தி ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகளைத் தக்க வைத்துள்ளது. இரண்டாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில்1964 சனவரி 25 அதிகாலை திருச்சி இயில்நிலையம் முன்பு தீக்குளித்து இறந்தார் கீழப் பளுவூர் சின்னச்சாமி. அவர் இறந்த சன 25ஐ திமுக மொழிப்போர் ஈகியர் நாளாக அறிவித்து மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். திமுகவிலிருந்து பிரிந்த கட்சிகளான அதிமுக, மதிமுக கட்சிகளும் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடெங்கும் நடத்தி வருகின்றன. நினைவூட்டும் சடங்காக நடத்தி வரும் திராவிடக் கட்சிகள் 1967 முதல் இன்று வரை ஆட்சி நடத்தி வருகின்றன. மொழிப்போர் ஈகியர் தாய்மொழித் தமிழைக் காக்கவே அதிகார இந்தித்திணிப்பை எதிர்த்து மாண்டனர், சிறை சென்றனர். 1965 மொழிப் போராட்டமே 1967இல் திமுக ஆட்சியைக் கைப்பற்ற பின்புலமாக இருந்தது. தற்காலத்தில் தமிழக மக்கள் மத்தியில் ஆங்கில மோகம் ஆழமாக உள்ளது. தமிழ்நாடெங்கும் ஆங்கில வழி நர்சரிப் பள்ளிகள் தெருவுக்குத் தெரு முளைத்து வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தமிழே கற்பிக்காத இந்தி, ஆங்கில வழி மட்டுமே கொண்ட இந்திய ஒன்றிய அரசின் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1938இல் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தில் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகத் தொடங்கிய தமிழ் மொழிப் பாதுகாப்பு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இன்றும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ் – கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக,
உயர்நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, வியாபார மொழியாக விளங்க போராட்டம் நடைபெறுவது தொடர்கிற நிலையில்தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் உள்ளன.
1938 தமிழ் காப்பு மொழிப்போரில் உயிர் நீத்த நடராசன், தாளமுத்து தொடங்கி, 1964இல் திருச்சியில்
தீக்குளித்த பழுவூர் சின்னச்சாமி, 1965இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன் என மடிந்த, சிறைச் சித்திரவதைகளை அனுபவித்த போராளிகளின் ஈகம் மகத்தானது. ஈகியரின் உணர்வுகளை உயர்த்திப்பிடித்து தாய்மொழித் தமிழைப் பாதுகாத்து அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நம்முன்னே சவாலாக உள்ளது.
இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் எனும் ஏமாற்றுக்குரல் இந்திய தேசிய வெறியர்களால் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியை தாய்மொழியாகக் கொண்ட இலட்சக்கணக்கானவர்கள் தமிழ்த்தேசம் நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருப்பது நகைமுரணாகும். தமிழ்த்தேசத்தில் அரசுப்பணியில் சேர தமிழ் கட்டாயம் எனும் சட்டம் கொண்டு வந்துள் தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம்.
தமிழர்கள் அனைத்து மொழிகளையும் மதிப்பவர்கள். தேவைப்பட்டால் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம். எந்த மொழித்திணிப்பிற்கு எதிராகவும் போராடுவோம். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ் வழியில் பெறத் தொடர்ந்து போராடுவோம். தமிழை ஆட்சி மொழியாக்க, தமிழ்த்தேசத்தின் உயர்நீதிமன்ற த்தில் தமிழில் வாதாடும் உரிமைக்காக, தமிழ்த்தேச வீதிகளில் வியாபார, விளம்பரப் பதாகைகளில் தமிழ் இடம் பெற, இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில்- வங்கி, இரயில்வே, அஞ்சல், எல்.ஐ.சி- தமிழ் தெரியாதவர்களை நியமிப்பதற்கு எதிராக, இந்திய அரசு நிறுவனங்களில் தமிழில் தேர்வு எழும் உரிமை பெறத் தொடர்ந்து போராடுவோம்!
ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைத் தேர்வு, இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பாசிச மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை நமது தமிழ் வழிக் கல்வியை, தமிழ்நாடு அரசு உரிமையைப் பறிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் கால் பதிக்கத் துடிக்கும் பாசக ஒன்றிய அரசு காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் அடிக்கடி தமிழ்க் கவிதைகளை ஒப்பிப்பது என நாடகமாடி வருகிறது. 1938 , 1965 உள்ளிட்ட தமிழ்மொழிப் பாதுகாப்பு அதிகார இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்ட உணர்வுகளை இன்றைய தலைமுறைக்குக் கடத்துவோம். தொடர்ந்து போராடுவோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051