மதுரை-ஒத்தக்கடை- காயாம்பட்டி, விருதுநகர்-பரளச்சி-இராஜகோபாலபுரம் பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

19 Jan 2023

புதுக்கோட்டை வேங்கைவயல் சாதிவெறிச் செயல் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் காயாம்பட்டி வாழ் பட்டியல் சமூக இளைஞர்களைத் தாக்கிய செயலும், விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகில் இராஜகோபாலபுரம் வாழ் பட்டியல் சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்கவாதிகள் மீது எஸ்.சி&எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்.

இரண்டு இடங்களிலுமே தாக்குதலுக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்ததற்கு எதிராக மீண்டும் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு, காவல் தமிழ்நாடு தலைமை உடனடியாகத் தலையீடு செய்ய வேண்டும்.

இராஜகோபாலபுரம் இரவியைத் தாக்கிய சாதி வெறியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பரளச்சியில் சாலைமறியல் செய்த இரவியின் மகள்களுக்குத் துணையாக ஆதரவு தெரிவித்து ஈடுபட்ட மள்ளர் சமூக வியாபாரிகளின் கடைகளைத் தாக்கியும், பள்ளப்பய, பறப்பயலுக ஒண்ணு சேர்ந்து எங்க மேல புகார் கொடுக்கிறீங்களா? எனக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட நாயக்கர் சமூகத்தினர் மறியல் செய்து காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

வழக்கமாக பட்டியல் சமூகத்தினர் பிரச்சனையில் மெத்தனம் காட்டும் ஒத்தக்கடை காவல்நிலைய அதிகாரிகளைத் தாண்டி பல்வேறு அமைப்புகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட, தாக்குதலுக்குள்ளான பட்டியல் சமூகத்தினர் மீதே வழக்குப் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. காவல்துறையின் சமரசப் போக்கைக் கைவிட வேண்டும்.

தென்மண்டல காவல்துறைத் தலைவர் உடனடியாக மதுரை-ஒத்தக்கடை, விருதுநகர்-பரளச்சி காவல்நிலையங்களுக்குப் பொறுப்பான காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதுடன், கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்…

மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW