இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!
சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்
தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து உண்ணவிரதம் இருந்து வருகின்றனர்.
‘சமவேலைக்கு சம ஊதியம்’ என்பது அனைத்து அரசு மற்றும் தனியார் துறையிலும் அவசியம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. ஆனால் அரசு நடத்தும் அனைத்து சேவை துறையிலும் ஊதிய பாகுபாட்டைக் கடைபிடிப்பது கொள்கையாகவே கொண்டுள்ளது.
ஒரே வேலையை செய்யும் பல்வேறு காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தில் உள்ள பாகுபாடு, நிரந்தர தொழிலாளிக்கும் ஒப்பந்த தொழிலாளிக்கும் ஊதியத்தில் உள்ள பாகுபாடு, நிரந்தர தொழிலாளிக்கும் சில சிறப்பு திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் உள்ள பாகுபாடு என அனைத்து அரசு துறைகளிலும் இவை நீடிக்கிறது.
இந்த இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பல போராட்டங்களைக் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.இவர்களின் போராட்டத்திற்கு இப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும் இப்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தெரிவித்து, தேர்தல் அறிக்கையிலும் நிறைவேற்றுவதாக நம்பிக்கை அளித்திருந்தார். எனவே காலதாமதமின்றி ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.
கொரோனாவிற்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏழை, நடுதர மக்கள் நம்பியிருப்பது அரசு பள்ளிகளைதான். மேலும் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு , நீட் என்று மைய அரசு பள்ளி கல்விதுறையின் பல்லைப் பிடுங்கி, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கானல் நீர் ஆக்கிவிடும் வேலையைச் செய்துவருகிறது. இதுபோதாதென்று ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் தொடர்ந்தால் குழந்தைகளின் கல்வி மேலும் பாதிக்கப்படும்.
தற்போது இப்போராட்டத்தில் 160 க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரின் உடல்நிலை மோசமாகி வருகிறது அதில் சரிபாதிக்கும் மேல் பெண்கள் என்பதை அரசும் கல்விதுறையும் கணக்கில் கொள்ள வேண்டுகிறோம்.
மேலும் அரசின் அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் ஒப்பந்த முறை ஒழிப்பு என்பதை அமலாக்குவது என்று கொள்கை முடிவு எடுத்து நடைமுறைபடுத்த வேண்டுகிறோம்.
அரவிந்தகுமார்
சோசலிச தொழிலாளர் மையம் SWC
9787430065/9500056554