மலக்குழி மரணங்களுக்கு முடிவு எப்போது ? உரக்கப்பேசும் விட்னஸ் -சிறிராம்
சென்னை நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரியில் வாழ்ந்து வரும் விதவை தாயின் மகன் பார்த்திபன் மலக்குழியில் கட்டாயப்படுத்தி இறக்கப்பட்டு கொல்லப்படுகிறார். நீதி கேட்டு தாயும் அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்தும் போராட்டமே இந்த படம்.
சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ள இந்த சமூகத்தில் இம்மரணங்களில் அரசும் அதிகாரவர்க்கமும் தங்களை பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு எவ்வாறு கடந்து போகிறது என்பதை கள அனுபவத்தோடு உண்மையை உயர்த்திப்பிடித்து இறுதிவரை உறுதியாக நிற்கிறது ‘விட்னஸ்’.
இந்த ஆண்டு ஜனவரி 2022 முதல் இதுவரை மட்டும் சென்னை மண்டலத்தில் 10 க்கு மேற்பட்ட மலக்குழி மரணங்கள் நடந்துள்ளன. சென்னை குடிநீர் வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர், பெருங்குடி கிறீன் ஏக்கர்ஸ் கேட்டட் கம்யூனிட்யில் இருவர், கல்லுக்குட்டையில் வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட இருவர், கும்மிடிபூண்டி தொழிற்சாலையில் ஒருவர், காஞ்சிபுரம் ரிசார்ட் இல் மூவர் என பட்டியலும் மரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை தடைசெய்யும் சட்டம் ,கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தவேண்டிய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் என விரிவான விதிகள் இருந்தபோதிலும் இவையாவும் பின்பற்றப்படுவதில்லை என்பதையும் இதுவரை ஒரு வழக்கில்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதையும் பதிவு செய்கிறது இந்த படம். தனியார் குடியிருப்பு அசோசியேசன், ஒப்பந்ததாரர், மாநகராட்சி, குடிநீர் வாரியம், CMDA என ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை துறந்து இறுதியில் இறந்துபோன தொழிலாளியை குற்றம்சாட்டும் அதிகாரவர்க்க மனோநிலையை நீதிமன்ற காட்சிகளில் பதிவுசெய்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக ஒப்பந்ததாரரின் வாக்குமூலத்தில் ‘தொழிலாளர்கள் sub contract மூலம் வந்தவர்கள், அவர்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது’ என்று கூறுகிறார். உயிர் ஆபத்துள்ள்ள பணிகளில்கூட குறைந்த கூலிக்கு ஒப்பந்தமுறையில் தான் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் என்ற கேடுகெட்ட சுரண்டல் முறையை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்த இந்திராணி (ரோகினி) குடும்பம் ஏன் செம்மஞ்சேரி சென்றது என்ற கேள்விக்கு ‘நாங்க எங்க போனோம் ? முதல்ல குடுசைகள் எரிஞ்சுச்சு அப்புறம் எங்களை தூக்கி கொண்டுபோய் போட்டாங்க’’ என பதில் அளிக்கிறார். இரவுநேர தூய்மைப்பணி செய்து தனது மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கிறார் இந்திராணி. வாங்கிய கடனுக்கு வட்டிக்கட்ட முடியாமல் தவிக்கும் எண்ணற்ற குடும்பங்களில் இவரும் ஒருவர். 60,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை சென்னை நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பல குடும்பங்கள் செம்மஞ்சேரி போனதும் வாழ்வாதாரம் இழந்த நிலையில் பிள்ளைகள் படிப்பும் வாழ்க்கையும் சிதைந்து போவது மறுக்கமுடியாத உண்மை. இந்திராணி போன்றோரின் வாழ்க்கையில் இந்த கட்டாய இடம்பெயர்வு ஒரு பேரிடர் என்றே சொல்லவேண்டும். ஒருவேளை சென்னை நகரத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் பார்த்திபன் உயிரோடுகூட இருந்திருக்க கூடும்.
இந்திராணி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக தூய்மைப்பணி செய்துவருகிறார். குறைந்த கூலிக்கு கடினமான உழைப்பைக் கோரும் இந்த பணியில் மேலாளரின் தொடர் சீண்டலும் வசவுபேச்சும் இந்திராணிக்கு கோபம் வரச்செய்து மேலாளரிடம் சண்டையிட்டு வேலையைவிட்டு நிற்கச் செய்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக அவரின் பணி விவரங்கள் அனைத்தையும் கணினியில் இருந்து நீக்கிவிட்டு அவரது PF பணத்தை கொடுக்க மறுகின்றது நிர்வாகம். இந்த காட்சியின் பொருள் ஓர் அடிமட்டத்தில் உள்ள மேலாளர் நினைத்தால் பல ஆண்டுகள் வேலை செய்துவரும் ‘ஒப்பந்த’ தூய்மைப்பணி தொழிலாளர்களை வஞ்சிக்கவும் சுரண்டவும் வெளியேற்றவும் முடியும் என்பதாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 50,000 மேற்பட்ட ‘ஒப்பந்த’ தூய்மைப்பணியாளர்களின் உண்மைநிலை இது தான். பாதாளசாக்கடை சுத்தம் செய்யும் சென்னை மெட்ரோ வாட்டர் தற்காலிக தொழிலாளர்களுக்கோ இன்று வரை வருகை பதிவேடு கிடையாது, 30 நாள் வேலை செய்தால் 24 நாள் சம்பளம் மட்டுமே கிடைக்கும், மீதம் உள்ள 6 நாள் கூலியை அதிகாரியும் ஒப்பந்ததாரரும் திருடி பங்குபோட்டுக்கொள்வார்கள். உதயநிதி ஸ்டாலினின் சொந்த தொகுதியான சேப்பாக்கத்தில் பாதாளசாக்கடை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மண்டை ஓடு உடைந்த தொழிலாளி ஜானகிராமன், மெட்ரோ வாட்டர் போர்டு இடம் இழப்பீடு பெறுவதற்கு 10 மாதமாக அலைந்து வருகறார்.
தலைமுறை தலைமுறையாக இப்பணிகள் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீது திணிக்கப்பட்டு வந்துள்ளன. சமூகநீதியின்பால் அக்கறை கொண்ட அரசு ஒப்பந்த முறையை ஒழித்து பணிநிரந்தரம் செய்தால் தூய்மை தொழிலாளர்கள் வாழ்நிலை உயரும். அடுத்த தலைமுறை படித்து வேறொரு துறையில் வளர்த்து வரக்கூடும், சாதிய ஏற்றத்தாழ்வும் குறையும். ஆனால் இவை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை நகர ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டு பன்னாட்டு நிறுவனத்திடம் ஒட்டுமொத்த தூய்மைப்பணியை கொடுத்துவிட்டது. குறைந்த கூலிக்கு புதிய தொழிலாளர்களை அந்நிறுவனம் நியமித்துள்ளது. தற்போது சென்னையைப் போல் பிற மாவட்டங்களில் அமல்படுத்திட தமிழக உள்ளாட்சி துறை வெளியிட்டுள்ள அரசாணையில் இனி நிரந்தர பணி கிடையாது என்று பிரகடனப்படுத்திவிட்டது. இனி வாழ்நாள் முழுவதும் ஒப்பந்த முறையில் சுரண்டப்பட்டு பணி பாதுகாப்பு ஏதும் இல்லாமல் வாழ சொல்கிறது தமிழக அரசு. அத்தியாவசிய சேவைகளில் ஒப்பந்த முறை என்பது சமூக அநீதியே என்று உரக்கப் பேச வேண்டிய காலம் என ‘விட்னஸ்’ உணர்த்துகிறது.
தமிழகத்தில் மலக்குழி மரணங்களுக்கு முடிவுகட்ட ‘விட்னஸ்’ ஒரு கருவியாக இருக்கும் என்று கருதுகிறேன். மிக முக்கியமான பிரச்சனையைப் பற்றி யதார்த்தத்தில் இருந்து விலகாமல் காட்சிப்படுத்தி இருந்தாலும் திரைமொழியில் தொய்வு இன்றி திரைக்கதை நகர்கிறது. ஒரு திரைப்படமாகவும் நல்ல சினிமா அனுபவத்தை இப்படம் கொடுக்கிறது. சோனி லைவ் ஓடிடியில் வெளிவந்திருக்கும் இப்படத்தை இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சனநாயக ஆற்றல்கள் பங்காற்ற வேண்டும்.
இயக்குனர் தீபக், முத்துவேல் உள்ளிட்ட பட குழுவினருக்கும் சிறப்பாக நடித்துள்ள தோழர்கள் ரோகினி, ஜி செல்வா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்…