கம்யூனிஸ்ட் புரட்சியாளர் தோழர் என்.கே.நடராசன் மறைவுக்கு செவ்வணக்கம்!
இகக (மா-லெ) விடுதலை அமைப்பின் மத்தியக்குழுத் தோழர், தமிழ் மாநிலச் செயலாளர் மூத்த தோழர் என்.கே.நடராசன் இன்று மாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் தொடங்கிய கம்யூனிஸ்ட் முழுநேர அரசியல் வாழ்க்கை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசைத்தறித் தொழிலாளர்களை அமைப்பாக்கும் கடினமான பணியில் ஈடுபட்டு ஏஐசிசிடியூ சங்கத்தைக் கட்டியமைத்தார். கோவையில் தனது தொழிற்சங்கப் பணியைத் தொடர்ந்தார். நீண்ட காலம் ஏஐசிசிடியூ சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாராக இயங்கினார்.
இகக (மா-லெ) விடுதலை அமைப்பில் இயங்கிய காலங்களில் மிகவும் நெருக்கமாக, அன்போடு பழகியவர்.
கடின உழைப்பாளி. வேர்க்கால்மட்ட வேலைகளில் முன்நின்றவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்சியின் மாநிலச் செயலாராகப் பொறுப்பேற்றவர், கடந்த மாநில மாநாட்டில் மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அமைப்பாக்குவதில் சவாலுக்குரிய, சாதி ஆதிக்கமுள்ள தறிமுதலாளிகள் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களை அமைப்பாக்கிய கடின உழைப்பு போற்றுதலுக்குரியது.
தோழர் என்.கே.நடராசன் மறைவு வர்க்கப்போராட்டக் களத்திற்கு,
பாசிச எதிர்ப்புப் போராட்டக் களத்திற்கு பேரிழப்பு!
எமது அமைப்பு சார்பில்
தோழருக்குச் செவ்வணக்கம்!
மீ.த.பாண்டியன்,
அரசியல் தலைமைக்குழு
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)