அண்ணல் அம்பேத்கரைக் காவிமயமாக்கும் சங்கிகளின் முயற்சிக்கு கண்டனம் தமிழ்நாடு அரசே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கைது செய்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை

08 Dec 2022

 

திசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அன்று இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், அம்பேத்கர் காவிச் சட்டை, நெற்றிப் பட்டை , குங்குமப் பொட்டு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டிருந்தனர். தான் இந்துவாக சாகமாட்டேன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவற்றை கடவுளாக கருதி வழிபடக்கூடாது என்று சொன்னதோடு 10 இலட்சம் பேருடன் பெளத்தத்திற்கு மாறியவர். அதுமட்டுமின்றி, பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராக சனநாயகத்தை உயர்த்திப் பிடித்து உறுதியோடு போராடியவர். எல்லோரையும் விழுங்கியே பழக்கப்பட்ட சங் பரிவார சக்திகள் அம்பேத்கரையும் காவிமயப்படுத்த செய்த முயற்சியே அந்த சுவரொட்டி. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற திரிபுகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

இந்த சுவரொட்டி தமிழ்நாடெங்கும் உள்ள சனநாயக ஆற்றல்களிடையே அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆங்காங்கே போராட்ட அறிவிப்புகள், கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் கும்பேகாணம் மாவட்டப் பொறுப்பாளர் திருமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட வில்லை. இப்படி பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்ல அனுமதி பெறுகிறார். அம்பேத்கருக்கு காவி உடைப் போடக் கூடாது; திருநீறு பூசக் கூடாது; குங்குமப் பொட்டு வைக்கக் கூடாது; முழக்கங்கள் எழுப்பக் கூடாது என அர்ஜூன் சம்பத்தின் பித்தலாட்டத்தனத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது.  காவல்துறை புடைசூழ அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு செல்கிறார் அவர். அங்கே கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியினர் உள்ளிட்ட சனநாயக ஆற்றல்கள் அர்ஜூன் சம்பத்தின் வருகைக்கு எதிராய் முழக்கங்கள் எழுப்பியபோது அவர்களைத் தாக்கி கைது செய்துள்ளது காவல்துறை. குழப்பம் விளைவித்து தமிழ் மண்ணில் கலவரத்தைத் தூண்டி அமைதியை சீர்குலைக்க முயலும் சங் பரிவார சக்திகளுக்கு பாதுகாப்பு, சனநாயக ஆற்றல்கள் மீது அடக்குமுறையா?

1991 ஆம் ஆண்டு குமரி முதல் காசுமீர் வரை ரதயாத்திரை நடத்த பாசக முயன்றது. அதற்கு காசுமீரில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போதைய நரசிம்மராவ் அரசு பாசக தலைவர் முரளி மனோகர் ஜோசியை சிறிநகருக்கு அழைத்துச் சென்று இந்திய இராணுவம் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிற்க அங்கு அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். அன்று நரசிம்மராவ் அரசு அதில் தலையிடாமல் இருந்திருந்தால் ரத  யாத்திரை தோல்வி அடைந்திருக்கும்.  சங் பரிவார சக்திகளிடம் மென்போக்கைக் கடைபிடித்தவர்கள், இந்துத்துவ அரசியலுக்கும் சனநாயக அரசியலுக்கும் பொதுவாக நடக்க முயன்றவர்களையெல்லாம் சங்பரிவார சக்திகள் குப்புறத் தள்ளி குழி பறித்தது இன்றைக்கு வரையான வரலாறு.

அம்பேத்கரைக் காவிமயமாக்க முயன்று அவரது பேருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அர்ஜுன் சம்பத் மீது தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும், இந்துத்துவ ஆற்றல்களின் அடாவடி அரசியலுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்

மீ.த. பாண்டியன்,

தலைவர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW