ஐ.ஐ.டி நிர்வாகமே ! ஜீவ காருண்ய தொண்டு நிறுவனத்திற்கு துணைபோகாதே! இதில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை பெற்றுக் கொடு!
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி என்பது ஒரு பிரம்மாண்டமாகும். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஒரு எட்டாக்கனி. இங்கே ஒடுக்கப்பட்ட சாதி,மத, பின் தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வரும் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது பரவலாக அறிந்த விடயம். அதே போல், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வேலை தேடி நகரத்திற்கு வந்த இளைஞர்களை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் ஆபத்தான வேலையில் ஈடுபடுத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஐ.ஐ.டி வளாகத்திற்குள் ஏராளமான மான்கள் வாழ்கின்றன. அவைகளை வெளியிலிருந்து வரும் தெரு நாய்கள் கடித்து கொன்று விடுவதால், நாய்களை பிடித்து பராமரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாகர்கோவிலை சேர்ந்த ஜீவகாருணியா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை (Jeeva Karunya Animals Welfare Trust) என்ற தொண்டு நிறுவனத்தை ஐ.ஐ.டி நிர்வாக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி உள்ளது. அதற்கான பராமரிப்பு செலவுகளை ஐ.ஐ.டி நிர்வாகம் வழங்கியும் வந்துள்ளது.
இந்த தொண்டு நிறுவனம் நாய்களை பராமரிக்க படித்த இளைஞர்களை ரூ15000 சம்பளத்தில் பணி அமர்த்தியுள்ளது. இந்த பணி குறித்த எந்த விபரமும், அதில் உள்ள ஆபத்து குறித்து முன்பே அவர்களுக்கு தெரிவிக்கவும் இல்லை. மேலும் பணியில் சேர்ந்தற்கான எந்த ஒரு பணி ஆணையும், அடையாள அட்டை போன்ற எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஐ.ஐ.டி வளாகத்திற்குள் தங்க இடம், உணவு மட்டும் அளித்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுள்ளது. அவர்களின் பணி என்பது நாய்களின் கழிவுகளை அள்ளுவது, குளிப்பாட்டுவது, உணவு அளிப்பது, மருந்து கொடுப்பது, அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது என்பது தான். நாய்களை பராமரிப்புதற்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை.
தெருவில் சுற்றிதிரிந்த நாய்கள் என்பதால் அவை மிகவும் ஆவேசமாக கடிக்கவருவதும், பாய்வதும் அச்சமூட்டும் வகையில் குரைப்பதும் என ஒவ்வொரு முறையும் நாய்களுக்கு உணவளிக்க உள்ளே செல்லும் போது இந்த இளைஞர்கள் அச்சத்தோடு வேலை பார்த்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் பணி செய்ய இயலாது. நாங்கள் வீட்டுக்கே செல்கிறோம் என்று கூறிய போது ஜீவகாருணியா அமைப்பானது குறைந்தது 60 நாட்களாவது வேலை செய்ய வேண்டும் அப்போது தான் பணியில் இருந்து விடுவிப்போம் என்று அடைத்து வைத்து கொத்தடிமைகள் போல் வேலை வாங்கியுள்ளனர். இவர்கள் சென்னை அல்லாத பிற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் , 20-23 வயதே நிரம்பியவர்கள் என்பதால் அதிலிருந்து வெளிவரவும் , பிறர் உதவியை நாடவும் முடியாமல் முடங்கியிருந்தனர். இந்த சூழ்நிலையில் பணியாளர்களில் ஒருவரை நாய் கடித்துள்ளது. அதற்காக ஐ.ஐ.டி வளாகத்திற்குள்ளேயே வெறிநாய்கடி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இப்படி பாதுகாப்பற்ற சூழலில் தான் அவர்கள் பணியாற்றியுள்ளனர். மேலும் 45 நாட்கள் கடந்த பின்னும் சம்பளம் தராமல் ஒவ்வொரு காரணம் சொல்லி நாளை, அடுத்தவாரம் என ஏமாற்றியும் வந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக செப்டம்பர் மத்தியில் வேலையை விட்டு செல்ல அனுமதி அளித்துள்ளனர்.
குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு வந்த படித்த இளைஞர்களை அவர்களுக்கு தொடர்பே இல்லாத ஆபத்தான நாய் பராமரிப்பில் அமர்த்தியது, அவர்களுக்கு தடுப்பூசி, பயிற்சி, பாதுகாப்பு சாதனங்கள் என எதுவும் வழங்காமல் இருந்தது, வெளியே செல்ல முடியாமல் தடுத்து வைத்தது, இப்போது வரை பார்த்த வேலைக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது என பார்த்தால் ஜீவகாருணியா தன்னார்வ நிறுவனம் என்பது வேலையின்மை சூழலை பயன்படுத்தி இளைஞர்கள் மீது இரக்கமற்ற சுரண்டலை நிகழ்த்தியுள்ளதும், அதனை ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனம் கண்டும் காணாமல் இருந்தது தெரியவருகிறது.
மேலும் நாய்களை பராமரிக்க ஐஐடி நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு, நாய்களுக்கு குப்பையில் போட்ட, கெட்டுபோன Canteen உணவுகளை வழங்குவது, கூட்டமாக அடைத்து வைப்பது, போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் பரவி அதற்கு தகுந்த மருத்துவம் செய்யாமல் விட்டதால் 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்தவிட்டன. அதை தொடர்ந்து Animal Husbandry Department, TN veterinary & animal sciences university மற்றும் Animal Welfare board of india போன்ற துறைசார்ந்த வல்லுநர்கள் கடந்த நவம்பர் 29, & 30 ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 34 நாய்கள் பிறருக்கு தத்து கொடுத்துவிட்டதாகவும், 57 நாய்கள் இறந்து விட்டதாகவும் கூறினர். எதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை மற்றும் இறந்த நாய்களுக்கு உடல் கூறாய்வு செய்யவில்லை என்பதும் ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர்.
தொடக்கத்தில் துறைசார்ந்த வல்லுநர்களையே ஆய்வு செய்வதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இப்போது நாய்களின் இறப்பு குறித்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 23 நாய்கள் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், ஐ.ஐ.டி வளாகத்திற்குள் நாய்கள் இல்லை என்று சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர். வெளியாட்களை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் உண்மை நிலையை கண்டறிய முடியவில்லை.
மேலும் அக்டோபர் 2020 ல் 186 நாய்கள் பராமரிப்பில் இருந்தாகவும், அதை பராமரிக்க 5 பணியாளர்களும் , ஒரு கால்நடை மருந்துவரும் 24 மணி நேரமும் பணியாற்றியதாக ஐ.ஐ.டி நிர்வாக தரப்பில் பத்திரிக்கை செய்தி வழங்கியுள்ளனர். இவை அனைத்து உண்மையில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வின் மூலமும் மற்றும் தொழிலாளர்கள் வழியாக நமக்கு தெரிய வருகிறது.
தொழிலாளர்களின் சம்பள பாக்கியை தரும்படி ஜீவகாருணியாவை தொடர்பு கொண்டால் எங்களுக்கு ஐ.ஐ.டி நிர்வாக காசோலை தரவில்லை, அதனால் சம்பளம் தர முடியாது, வேண்டும் என்றால் நாகர் கோவில் வந்து வாங்கி கொள்ளவும், என பேசிக்கொண்டு இருக்கும் போதே இணைப்பை துண்டித்துவிட்டனர்.
எனவே தமிழக அரசு , தொழிலாளர் நலத்துறை, மற்றும் தொழில் பாதுகாப்பு துறை உடனடியாக தலையிட்டு பின்வரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
1. ஜீவ காருண்ய தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. படித்த இளைஞர் மத்தியில் நிலவும் வேலையின்மை சூழலை பயன்படுத்தி நாய்கள் பராமரிப்பு போன்ற ஆபத்தான வேலையில் ஈடுபடுத்திய ஜீவ காருண்யா விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து தொண்டு நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
3. நாய்கள் பராமரிப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் தொண்டு நிறுவனத்தை அமர்த்தி விட்டு அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களின் பணிச்சுழல் பாதுகாப்புமின்மை, சம்பளமின்றி கொத்தடிமை போல தொழிலாளர்கள் நடத்தப்பட்டதை கண்டு காணாமல் இருந்த ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. ஐஐடி வளாகத்தில் நாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட ஆபத்தான வேலைகள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது மனிதனையும் கடித்துவிட்டது என்ற பழமொழியே போல மான்களை பாதுகாக்க , பின் நாய்களை பாராமரிக்க தொடங்கி இப்போது தொழிலாளியை கடித்துவிட்டது ஜீவ காருணிய தொண்டு நிறுவனம்.
இப்போது மான்களும், நாய்களும் பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் அதை பாதுகாத்து வந்த தொழிலாளர்களை தெருவில் நிறுத்தி இருக்கிறது ஜீவகாருணியா விலங்குகள் பாதுக்காப்பு அறக்கட்டளையும் அதற்கு துணை போன ஐ.ஐ.டி நிர்வாகமும்.
அரவிந்தன்
சோசலிச தொழிலாளர் மையம்
9787430065