ஹரித்வாரில் இந்துத்துவா தலைவர்களால் விடுக்கப்பட்ட இஸ்லாமிய இனவழிப்பு அறைகூவல்

29 Dec 2021

பல தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவோ அல்லது கைது செய்யவோவில்லை. அவர்களில் பலர் பாசகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

கடந்த டிசம்பர் 17 முதல் 19 தேதி வரை ஹரித்வாரில்  தர்ம சன்சத்அல்லதுமதப் பாராளுமன்றம்என்று அழைக்கப்பட்ட  நிகழ்ச்சியொன்று, நடைபெற்றது.இதில் முக்கிய மதத் தலைவர்கள், வலதுசாரி ஆர்வலர்கள், கடும்போக்கு அடிப்படைவாதிகள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர்  பங்கேற்றனர்இந்த மூன்று நாள் நிகழ்வு முழுவதும்  வெறுப்புப்  பேச்சுக்கள், வன்முறைக்கான அறைகூவல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு ஆகியவை மேலோங்கி காணப்பட்டது.

இந்நிகழ்வில், பாசக தலைவர் அஸ்வினி உபாத்யாய் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கோசமிட்டு வன்முறைக்கு  அழைப்புவிடுத்த கூட்டமொன்றை ஒருங்கிணைக்க துணை செய்ததாக ஒருமுறை  கைது செய்யப்பட்டவர் இவர். இப்போதைய டிசம்பர் நிகழ்வில் இவரோடு பா மகிளா மோர்ச்சா தலைவர் உதிதா தியாகியும் கலந்து கொண்டது, பாசகவின் ஆதரவோடும் ஊக்கத்தாலும் நடைபெற்றது தெளிவாகிறது.

The ‘Dharma Sansad’ organised at Haridwar in Uttarakhand on December 17-19 saw an assortment of leaders from the Hindutva ecosystem taking the stage to set a new benchmark for brazen hate speech in the country.

புது தில்லிடிசம்பர் 17-19 தேதிகளில் உத்தரகாண்டின், ஹரித்வாரில் நடைபெற்ற  ‘தர்ம சன்சத்’ நிகழ்வில், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பலர் மேடையேறி இந்த நாட்டில் வெறுப்பு பிரச்சாரத்திற்கான புதிய உச்சத்தை தொட்டனர்.

“நாம் முன்னேற்பாடுகளை  செய்ய வேண்டும்,” என்று உத்தரகாண்டின் வலதுசாரி அமைப்பான இந்து ரக்ஷா சேனாவின் தலைவர் சுவாமி பிரபோதானந்த் கிரி கூறினார். “அவை என்னென்ன ஏற்பாடுகள் என்பதை நான் உங்களுக்கு  தெளிவுபடுத்திச் சொல்கிறேன்.  இவை தான் தீர்வு, நீங்கள் இந்த தீர்வைப் பின்பற்றினால், உங்களுக்கான வழி பிறக்கும் … மியான்மரில், இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அரசியல்வாதிகளும், அரசும், காவல்துறையும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கழுத்தை அறுத்துக் கொல்ல ஆரம்பித்தார்கள், அதுமட்டுமின்றி தெருக்களில் வைத்து வெட்ட ஆரம்பித்தார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தாங்கள் வாழப் போவதில்லை,  சாகப் போகிறோம், என்று நினைத்தார்கள்.”

“இது தான் இப்போது நமது நிலையும்கூட. அதை தில்லி எல்லையில் பார்த்திருப்பீர்கள், அவர்கள் இந்துக்களைக் கொன்று தூக்கிலிட்டனர். இனி நேரமில்லை, இப்போதைய நிலை என்னவென்றால், நீங்கள் இறக்கத் தயாராகுங்கள், அல்லது கொல்லத் தயாராகுங்கள், வேறு வழியில்லை. அதனால்தான், மியான்மரைப் போல, இங்குள்ள காவல்துறையும், இங்குள்ள அரசியல்வாதிகளும், இராணுவமும்  மற்றும் ஒவ்வொரு இந்துவும் கையில் ஆயுதம் ஏந்த வேண்டும், நாம் இந்த தூய்மை இயக்கத்தை ( சஃபாய் அபியான் ) நடத்த வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை.”

இனச்சுத்திகரிப்பு மற்றும் இனவழிப்புக்கு அழைப்பு விடுக்கும் பிரபோதானந்தின் மேற்கூறிய பேச்சுக்களை  அவரது பாசக உறவுடன் இணைத்துப் பார்க்கும்போது இப்பேச்சின் ஆபத்து விளங்கும்.

இரண்டு சந்தர்ப்பங்களில், பிரபோதானந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

 

முதல் புகைப்படம்  ஜனவரி 2018 இல் எடுக்கப்பட்டது  , இரண்டாவது ஓர் ஆண்டுக்கு முன்பு ஆகஸ்ட் 2020 இல் எடுக்கப்பட்டது  இன்றும் அவரது முகநூல் பக்கத்தின் முகப்புப் படமாக அது தொடர்கிறது.

 

பிரபோதானந்த் பாசக வின் ஆதித்யநாத்துடன் மட்டும் தொடர்புடையவரல்ல. செப்டம்பர் 14, 2020 அன்று, ஹரித்வாரைச் சேர்ந்த முன்னாள் பாசக தலைவரும் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவருமான  நரேஷ் சர்மாவுடன் அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 12, 2021 அன்று உத்தரகாண்ட் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பாசக உறுப்பினர் ஸ்ரீ தன் சிங் ராவத்துடன் அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஜூன் 2021 இல், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும் பாசக உறுப்பினருமான தீரத் சிங் ராவத்துடன் ஒரு வாளைக் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

பிரபோதானந்தின் இஸ்லாமிய விரோதப் பேச்சு அண்மைக்கால நிகழ்வல்ல. 2017 ஆம் ஆண்டில் , “இந்துத்துவம், சமூகப் பாதுகாப்பில் பங்களிக்கும் நோக்கங்களுக்காக ”இந்துக்கள் எட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்ற அறிக்கை ஒன்றை அவர் பரவலாக வெளியிட்டார்.
2018 இல் ஷாம்லியில் ஓர் உரையில், இஸ்லாமியர்கள் மட்டுமே இந்துப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதாகவும் , இன்ன பிற இஸ்லாமியர்களுக்கு எதிரான வாதங்களோடு ‘லவ் ஜிஹாத்’ என்ற போலி பரப்புரையையும் மேற்கொண்டார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான யதி நரசிங்கானந் த் சரஸ்வதி உடனான காணொளியிலும் இனவழிப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், “முழுஉலகிலும் மனிதநேயம் நிலைத்திருக்க வேண்டுமானால், ஜிஹாதிகளை ஒழிக்கவேண்டும். இந்த பூமியில் ஜிஹாதிகளுக்கு தீர்வு கண்டு, முடிவு கட்டப்பட வேண்டும். இஸ்லாத்தில் பாலியல் வல்லுறவாளர்கள் பிறக்கிறார்கள், ஜிஹாதிகள் பிறக்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு ஒருவர் சொன்னார் – இதை நான் சில காலமாக சொல்லி வருகிறேன், ஒவ்வொரு இஸ்லாமிய வீட்டிலும் ஒரு ஜிகாதி மற்றும் ஒரு பயங்கரவாதி இருக்கிறார் … இந்து சமுதாயம் எழுந்து நின்று ஜிஹாதிகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். , இல்லையெனில் இந்த ஜிஹாதிகள் இந்துக்களுக்கு தீர்வு கண்டுபிடிப்பார்கள், நாம் வாழ்வதற்கு இந்த பூமியில் இடமே இருக்காது… ஒன்று நிச்சயம், ஓர் இஸ்லாமியர் என் இடத்திற்கு  வந்து அதை நான் கண்டுபிடித்தால், அவர் அங்கிருந்து வெளியே செல்ல முடியாது. நான் 14 ஆண்டுகள் ஜிகாதிகளுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன், நான் அவ்வளவு பலவீனமானவன் அல்ல… நரசிங்கானந்தோ அல்லது நானோ கொல்லப்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவர்கள் நினைக்கக் கூடாது. இங்கு பிணங்கள் குவியும், நாடு முழுவதும் நீங்கள் பிணங்களைக் காண்பீர்கள். இது உறுதி, யாரும் எங்களைத் தடுக்க முடியாது.
அனைத்து ‘ஜிஹாதிகளும்’ இந்து மதத்திற்குத் திரும்பி மன்னிப்புக் கேட்கும்படி அவர் கூறினார்.

ஹரித்வாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தர்ம சன்சத் மாநாட்டில் , நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஸ்வரரும் , இந்து மகாசபையின் பொதுச் செயலாளருமான பூஜா ஷகுன் பாண்டே என்ற சாத்வி அன்னபூர்ணாவும் ஆயுதம் தாங்கிய இனவழிப்புக்கு அழைப்புவிடுத்தார்கள்.

எந்த ஒளிவு மறைவுமின்றி இஸ்லாமியப் பெரும் படுகொலைகளுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தார்.

“ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் மக்கள்தொகையைக் குறைக்க விரும்பினால், அவர்களைக் கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரை (முஸ்லிம்களை) கொல்லத் தயாராக இருந்தாலும், நாம் ஜெயித்து சிறைச்சாலைக்கு செல்வோம்… [நாதுராம்] கோட்சேவைப் போல, நான் பழியை ஏற்கத் தயாராக இருக்கிறேன், ஆனால் எனது மதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒவ்வொரு அரக்கனிடமிருந்தும் இந்துத்துவாவைக்  காக்க நான் ஆயுதம் ஏந்துவேன்.” என்று அவர் கூறினார்.

‘விஷால்வியூஸ்’ எனப்படும் யூடூப் சேனல் தர்ம சன்சத் மாநாட்டில் எடுத்த ஒரு பேட்டியில் , “பெண்கள் ஒரு கையில் சப்பாத்திக் கட்டையுடன்  மறு கையில் வாள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனது தாய்மார்கள் தங்கள் மகன்களின் பலவீனமாக இருக்காமல் அவர்களின் பலமாக மாறுமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்காவது அதர்மம் நடந்தால் அவர்களை வெட்ட நானும் உன்னுடன் வருவேன் என்று சொல்லுங்கள். அதன் விளைவாய் சில நாட்களுக்கு சிறிய சிரமம் மட்டுமே இருக்கும். பெரிய வழக்குகள் எதுவும் இருக்காது. எங்களையும் அழையுங்கள், நாங்களும் உங்களுடன் இருப்போம்.”

காந்தியின் கொலையாளி கோட்சேவை சாத்வி பிரக்யா ஆதரித்ததற்கு 2019 இல் பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சன எதிர்வினை குறித்து கேட்டபோது, ​​மதச்சார்பற்ற அரசியலமைப்பின் காரணமாக மோடி சமரசம் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறினார். ஆனால் மோடியும் மோடியைப் போன்றோர்களும்தான்  கோட்சேவையும் காந்தியையும் கடந்த காலத்தில் எங்களுக்கு விளக்கினார்கள்  என்கிறார்.

பாண்டே இந்து மகாசபையின் முக்கிய தலைவர். முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருபவர். அண்மையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய ஓர் ஆண்டுப் போராட்டத்தை அடுத்து, மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யும் என்ற மோடி அறிவிப்பிற்கு, மோடிக்கு எதிராக “ ஜிஸ்கி ஏக் பாத் நஹி, உஸ்கா ஏக் பாப் நஹி”( தனக்கென்று ஒரு கருத்து இல்லாதவர், தனக்கொரு  தகப்பன் இல்லாதவன் ஆவான்) என்று கூறி, இந்து மகாசபையின் அலிகார் அலுவலகத்தில் இருந்த மோடியின் உருவப்படத்தை பாண்டே அகற்றினார் .

 ஏப்ரல் 2020ல், தப்லிகி ஜமாத் உறுப்பினர்களுக்கு எதிராக   வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து, மத அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், பொது அமைதிக்கு குந்தம் விளைவிக்கும் அறிக்கையை வெளியிட்டதற்காகவும் பாண்டே மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். மார்ச் 2021 ல், தஸ்னாவில் கோவிலுக்குள் சென்றதற்காக ஒரு இஸ்லாமிய சிறுவன் ஹிந்துத்வா ஆர்வலர் ஷ்ரிங்கி யாதவால் தாக்கப்பட்ட போது பூஜா சகுந்த், தஸ்னாவை போல மற்ற கோவில்களிலும் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

மே 2019ல், சாவர்க்கர் ஜெயந்தி அன்று பூஜா ஷகுன் சிறுமிகளிடம் கத்திகளை விநியோகித்தார். ஜனவரி 2019ல், பாண்டே மகாத்மா காந்தியின் கொடும்பாவியை சுட்டு கோட்சேவுக்கு  ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார். பின்னர் அவர் கொடும்பாவியை தீ வைத்து எரித்தார். பாண்டே உடனான தொடர்பை பாசக நிராகரித்தாலும், அவர் பாசக எம்பி சாத்வி பிரக்யா மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்ற கட்சியின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமியர்களைக் கொலை செய்ய அவர் வெளிப்படையாக அழைப்புவிடுத்த போதிலும், உ.பி. காவல்துறை இன்னும் பாண்டேக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மூன்றாவது மதத் தலைவர் சுவாமி ஆனந்த்ஸ்வரூப், அவரது வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பேச்சு போன்றவற்றை கடந்த காலங்களில் தி வயர் ஆவணப்படுத்தியது , மேலும்  அவர் பல இனவழிப்பு அழைப்புகளையும் விடுத்துள்ளார்.

“இந்த தர்ம சன்சத்தின் முடிவு கடவுளின் வார்த்தையாக இருக்கும், அதை அரசாங்கம் கேட்க வேண்டும். இல்லையென்றால், 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியை விட மிகக் கொடூரமான ஒரு போரை நாங்கள் நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

இஸ்லாமிய தெரு வியாபாரிகளை இந்துக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தனிப்பட்ட எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார். “நான் வசிக்கும் தெருவில், தினமும் காலையில் பெரிய தாடியுடன் ஒரு முல்லாவை [இஸ்லாமியரை இழிவுபடுத்தும் வார்த்தை] கண்டேன், இப்போதெல்லாம் அவர்கள் காவி தாடி வைத்திருக்கிறார்கள். இது ஹரித்வார், மகாராஜ். இங்கே இஸ்லாமிய வாடிக்கையாளர்கள் இல்லை, எனவே அவரை வெளியே எறியுங்கள்” என்று அவர் கூறினார்.

உத்தரகாண்டில் “நில ஜிகாத்திற்கு” எதிரான அஜேந்திர அஜய்யின் பரப்புரைக்கு சுவாமி ஆனந்த்ஸ்வரூப் ஆதரவு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  இந்துக்கள் அல்லாதவர்கள் உத்தரகாண்டிற்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று சுவாமி ஆனந்த்ஸ்வரூப் கோரினார் . “இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவைத் தடை செய்யாவிட்டால், இந்து மதக் குருக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள் ” என்று தனது முகநூல் கணக்கில் வெளியிட்ட காணொளியில் கூறியிருந்தார்.

“இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஒரு சலசலப்பை உருவாக்குகிறார்கள், அசைவத்தைப் பரப்புகிறார்கள், இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை கங்கையில் வீசுகிறார்கள். இதை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் இது காசுமீராக மாறிவிடும். இந்துக்களுக்கு ஒரு மாநிலமாவது இருக்க வேண்டும். உத்தரகாண்டிற்கு அயோத்தி மாதிரி வழக்கு தொடரப்பட்டால், அதில் இந்துக்கள் வெற்றி பெறுவார்கள்,” என்றார்.

“தி வயர்” இணையதளம், இந்துக்கள் அல்லாதவர் உத்தரகாண்டில்  நிலம் வைத்திருக்க  தடை செய்யப்பட வேண்டும் என்ற, ‘நிலம் ஜிகாத்’ குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பும் ஆனந்த்ஸ்வரூப்பின் கருத்துகளுடன் உடன்படுகிறாரா? என பாசக  சட்டமன்ற உறுப்பினர் அஜேந்திர அஜய்யிடம்  கேட்டபோது,  “நான் பெருமளவுக்கு அவருடன் உடன்படுகிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில், நாம் ஒரு எல்லை மாநிலமாக இருப்பதால் இது தேசிய பாதுகாப்பு குறித்த ஒன்று. இரண்டாவதாக, உத்தரகாண்ட் இந்துக்களுக்குப் புனிதமானது, ஏன் இந்துக்களுக்கான பிரத்யேக புனிதத் தலங்களை அங்கு நிறுவக்கூடாது?

சுவாமி ஆனந்த்ஸ்வரூப் , ஜனவரி 2021 இல் மீரட்டில் ‘இந்து பஞ்சாயத்து’ ஒன்றில் உரையாற்றியபோது, அ​​ந்தப் பரப்புரைகளின் நியாயத்தை தெளிவாக விளக்கிய போது, ஊடக  செய்திகளில் இடம்பெற்றார்.

“எனது வாதம் என்னவென்றால், நீங்கள் [இஸ்லாமியர்கள்] எங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பினால், நீங்கள் முதலில் குர்ஆனைப் படிப்பதை நிறுத்திவிட்டு, தொழுகையை நிறுத்த வேண்டும்,” என்று அவர் அந்த நிகழ்வில் கூறினார். பின்னர் அவர் இந்துக்களுக்கு ஒரு ‘தீர்வு’ அளித்தார்: “நீங்கள் இஸ்லாமியர்களிடம் எதையும் வாங்கமாட்டோம் என்று முடிவு செய்யுங்கள். சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களை அழித்துவிட்டால், அவர்கள் இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறத் தொடங்குவார்கள்” என்று அவர் கூறினார்.

“தி வயர்” இணையத்தளத்தில் டிசம்பர் 22 2021 அன்று வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

https://m.thewire.in/article/communalism/hindutva-leaders-dharma-sansad-muslim-genocide/amp

மொழிபெயர்ப்பு: சர்ஜோன்

 

கட்டுரையில் வரும் சுட்டிகள்:

https://thewire.in/communalism/ashwini-upadhyay-four-others-detained-after-anti-muslim-slogans-were-raised-at-jantar-mantar

https://www.rajyasameeksha.com/uttarakhand/18810-haridwar-naresh-sharma-joins-aam-aadmi-party

https://hindi.news18.com/news/uttar-pradesh/muzaffarnagar-prabodhand-giri-of-hindu-raksha-sena-controversial-statement-in-shamli-1224463.html

https://www.deccanchronicle.com/nation/current-affairs/010517/to-save-religion-hindus-should-follow-we-2-our-8-policy-religious-guru.html

https://www.youtube.com/watch?v=eC__NM2UC_Y

https://www.youtube.com/watch?v=RfFKvmuSyN0

https://www.bhaskar.com/local/uttar-pradesh/agra/news/hindu-mahasabha-leader-pooja-shakun-pandey-arrested-over-tablighi-jamaat-shot-statement-127125103.html

https://thewire.in/communalism/with-shringi-yadavs-bail-is-up-heading-towards-normalising-hindutva-violence

https://indianexpress.com/article/cities/delhi/muslim-boy-dasna-devi-temple-ghaziabad-yati-narsinghanand-7565160/

https://www.outlookindia.com/website/story/india-news-hindu-mahasabha-shoots-burns-mahatma-gandhis-effigy-on-his-death-anniversary/324588

https://thewire.in/government/uttarakhand-demographic-probe-property-deals-land-jihad

https://zeenews.india.com/hindi/india/up-uttarakhand/uttarakhand/haridwar-non-hindu-prohibited-from-entering-himalayas-government-should-bring-an-ordinance-sanatan-dharma-pcup/1016486

https://theprint.in/india/up-cops-probe-hindu-leader-as-video-shows-him-call-for-economic-social-boycott-of-muslims/584834/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW