முதலமைச்சர் தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் முன்னறிவிப்பு இன்றி வீடுகள் இடிப்பதை தமிழக அரசே நிறுத்திடு ! ஊடகச் செய்தி

14 Dec 2021
– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். கடந்த 10.12.21 அன்று சென்னை மாநகராட்சி ’இவ்விடம் நீர்நிலை ஆக்ரமிப்பு’ என்று சொல்லி வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் ஒருநாள் கழித்து, 12.12.21 அன்று காலை முதல் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளை புல்டவுசர் கொண்டு இடிக்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த சுற்றுவட்டாரத்தில் அவ்வை நகர் தான் முதன்முதலில் உருவான வாழ்விடப் பகுதியாகும். இதை சுற்றி கேகே நகர், குமரன் நகர் போன்ற கல்வீடுகள், மாடி வீடுகள் அடங்கிய அடர்த்தியான குடியிருப்புகள் உள்ளன. இப்போது கொளத்தூரையும் வில்லிவாக்கத்தையும் இணைக்கும் மேம்பாலம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த செப்டம்பர்(2021) மாத அளவில் இந்த மேம்பாலம் கட்டும் பொருட்டு அவ்வை நகரில் உள்ள வீடுகள் சில அகற்றப்பட வேண்டும் என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், பாலத்தின் அகலம் சுமார் 28 அடி மற்றும் சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 இல் இருந்து 20 அடி தேவை என்ற கணக்கின்படி சாலையின் மையத்தில் இருந்து இருபுறமும் ‘அளவுக் குறியீடு ( மார்க்கிங் – marking)’ செய்துள்ளனர். அதன்படி சாலையோரம் உள்ள வீடுகளில் சில பகுதி மட்டுமே இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் ஒரு வீடுகூட அகற்றப்படாது என்றும் சொல்லப்பட்டது (தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதியும் செய்யப்பட்டது) இந்த அடிப்படையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு கட்டுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர முன்வந்தனர். ஆனால், இப்போது மேம்பாலம், சர்வீஸ் ரோடு மற்றும் பூங்கா கட்டுதல் ஆகியவற்றிற்காக அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த வீடுகளும் அகற்றப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் சொல்கின்றனர். அதன்படி வரிசை வரிசையாய் உள்ள வீடுகள் அனைத்தும் இடிக்கப்படும்.
எங்கே இருக்கிறது நீர்நிலை?
கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் இங்கே வசித்து வரும் நிலையில், ஏரி, குளம், குட்டை என்ற எந்த நீர்நிலையையும் மக்கள் அங்கே கண்டதில்லை. இன்று அப்பகுதி முழுக்க, முழுக்க கான்கிரீட் வீடுகள் நிரம்பிய பகுதியாக காட்சித் தருகிறது. ஒரு நீர்நிலை இருந்ததற்கான எந்த சுவடும் அங்கே தெரியவில்லை. இப்பகுதிகளில் உள்ள வீடுகளை எல்லாம் இடித்துவிட்டு புதிய நீர்நிலைகளை உருவாக்குவதற்கான சூழலும் அங்கு இல்லை. உண்மை இப்படி இருக்க, மேம்பாலத்திற்காக இடம் தேவைப்படும் என்று முன்பு சொன்ன அதிகாரிகள் இப்போது ’பெருமாள் தாங்கல் நீர்நிலை’ மீதான ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி அவ்வைநகர் வீடுகள் அனைத்தையும் இடிக்கப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது. அவ்வைநகர் வீடுகள் ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்றால் ஏனைய கேகே நகர், குமரன் நகர் வீடுகள் ’நீர்நிலை ஆக்கிரமிப்பு’ என்ற வகையில் வராதா? அந்த வீடுகளும் இடிக்கப்படுமா? அப்படி இடிக்கப்பட்ட பின் கட்டப்படும் மேம்பாலம் நீர் நிலை ஆக்கிரமிப்பு என்ற வரையறையில் வராதா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றின் மீதான ஆக்கிரமிப்புகள் பற்றிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு பணித்திருக்கும் நிலையில், நீதிமன்றத்திற்கு கணக்கு காட்டுவதற்காக இதுபோன்ற இடங்களை ’நீர்நிலை’ என்று அடையாளப்படுத்தி வீடுகளை இடிக்க முனைகிறதா தமிழக அரசு? என்ற ஐயம் எழுகிறது. அவ்வை நகர் பகுதிவாழ் மக்களின் சார்பாக ஒரு பிரதிநிதி குழு அறநிலையத்துறை அமைச்சரும் துறைமுகம் எம்.எல்.ஏ. வுமான திரு சேகர்பாபுவை சந்தித்து இதன்தொடர்பில் முறையிட்டுள்ளனர். ஆனால், தங்களை அப்புறப்படுத்த வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை அமைச்சர் மறுத்துவிட்டார்.
2021 ஆம் ஆண்டு அமைந்திருக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு ’சமூகநீ’தியின் பாற்பட்டது என்றும் ’அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கானது’ என்றும் பேசப்படும் நிலையில் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள உழைக்கும் மக்கள் இப்படி வஞ்சிக்கப்படுவது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. சென்னை நகர பூர்வகுடி – உழைக்கும் மக்களின் குடியிருப்பு மற்றும் நிலவுரிமையை உறுதிசெய்திட தமிழக அரசு கொள்கை வகுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முதலமைச்சரே, தமிழக அரசே!
1. கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்திடு!
2. பாலம் கட்டுவதற்கு தேவையான இடத்தை மக்களோடு கலந்தாலோசித்து ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ‘அளவுக் குறியீடு ( மார்க்கிங் – marking)’ அடிப்படையில் திட்டத்தை அமல்படுத்திடு!
3. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிடு!
4. நிலத்தின் வகையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இம்மக்களுக்கு பட்டா வழங்கிடு!
இப்படிக்கு,
நகர்ப்புற குடியிருப்பு – நிலவுரிமைக் கூட்டமைப்பு
8015472337, 9500056554, 8939136163, 9384448044
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW